1980களில் கவியரங்கம் என்னும் மேடை வடிவம் சிறிது
சிறிதாகப் பலவீனப்பட்டு, அதன் இறுதிக்கட்டத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.
இளங்கலைத் தமிழ் இலக்கிய மாணவனாக நான் இருந்த, 1985-86ஆம் கல்வியாண்டில் இலக்கிய
மன்றத்தின் சார்பாகக் கவியரங்கம் நடத்த முடிவுசெய்தோம். அப்போது ஈரோடு காமராசர்
மேல் நிலைப்பள்ளியில் தலைமையாசியராகப் பணிபுரிந்து கொண்டிருந்த கவிஞர்
முருகுசுந்தரத்தைக் கவியரங்கத் தலைமைக்கு அழைத்தோம். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள்
தமிழகத் கவியரங்க மேடைகளில் முக்கிய இடம் பெற்றிருந்த கவிஞர் அவர். பாரதிதாசன்,
சுரதா ஆகியோரைப் பின்பற்றி மரபுக் கவிதைகள் எழுதியவர். பணித்துளிகள், கடைதிறப்பு
ஆகியன அவரது கவிதை நூல்கள்.
ஆற்றோரம் கீற்றுதட்டால் முத்தந் தந்தாய்
அல்லிப்பூச் சுனை போலக் குளிர்ச்சி தந்தாய்
சேற்றுத்தா மரைப்பூவே அணைக்கும் போது
சேல்கெண்டை போலின்று குதிக்க லாமா?
என்னும் பாணியில் விருத்தப்பாக்கள பலவற்றைக் கொண்ட தொகுப்புகள் அவை. கவியரங்களில்
வாசிக்கப்பட்ட பாக்களும் இத்தொகுப்புகளில் உள்ளன.
நாங்கள் அவரைச் சந்தித்தபோது மரபுமிக்க விதையிலிருந்து விடுபட்டுப் புதுக்கவிதை
எழுதிக்கொண்டிருந்தார். 'தீர்த்தக் கரையினிலே' என்னும் தொகுப்பு ஒன்றை 'அன்னம்'
வெளியிட்டிருந்தது. புதுக்கவிதைக்கு வந்த பிறகுதான் யார் பாதிப்பும் இல்லாமல்,
தன்னியல்பில் கவிதை எழுதுவதாக அவர் உணர்ந்திருந்தார். 'நான் நானாக எழுதுகிறேன்'
என்று அதை அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோலக் கவியரங்கத்தின் மீதும்
வெறுப்புற்றிருந்தார். 'புகழ் மயக்கம் தரும் போதை கவியரங்கம்' என்று கருதினார்.
'கட்டுப்பாட்டுக்கும் கட்டாயத்துக்கும் உட்பட்டுப் பாடியதால் தரமில்லாத படைப்புகள்
தோன்றின. கவிதை சொற் சிலம்பமாகியது' என்று அவர் சுயவிமர்சனமாக எழுதியிருந்தார்.
தமது அறுபதாம் வயதை எட்டிக்கொண்டிருந்த தருணத்தில் ஒருவர் இத்தகைய
சுயவிமர்சனத்திற்கு ஆட்பட்டுத் தம்மை மாற்றிக்கொள்ள முடிந்தது ஆச்சரியம்தான்.
பாரதிதாசனோடு கிட்ட இருந்து நெருங்கிப் பழகிய அவர். அத்தனை காலம் பாரதிதாசனின்
பாதிப்பிலிருந்து விடுபட முடியவில்லை. விடுபட்டுப் புதுக்கவிதைக்கு வந்தபின்னும்
யாப்பை விட முடிந்ததே தவிர, கவிதை பாணியை மாற்றிக்கொள்ள இயலவில்லை. 'நான் தனவான்;
இல்லாதார்க்கு அள்ளிக் கொடுக்கும் வள்ளல் பெருமான்' எனக் 'கச்சு' (பெண்களின்
உள்ளாடை) பற்றி எழுதியிருக்கிறார்.
கவிதை நாடகங்கள் எழுதுவதிலும் அவருக்கு ஈடுபாடு இருந்துள்ளது. ஆனால், அவரது கவிதை
தொடர்பான செயல்பாடுகள் அனைத்தும் தமிழாசிரியர் ஒருவரின் செய்யுள் இயற்றும்
திறனாகவும் பாரதிதாசனின் செல்வாக்குக்கு ஆட்பட்ட சொல்முறையாகவும் மட்டுமே இருந்தன.
கவிஞராக அவர் மலர்ச்சி பெறவில்லை என்றே சொல்லலாம். உரை நடை எழுதுவதிலும் கவனம்
செலுத்தியுள்ளார். வள்ளுவர் வழியில் காந்தியம், தமிழகத்தில் குறிஞ்சி வளம் எனப்பட்ட
நூல்கள் சிலவற்றை எழுதியுள்ளார். சுவாரஸ்யம் கொண்டவை என மலரும் மஞ்சமும் என்னும்
கட்டுரைத் தொகுப்பையும் அன்னம் விடு தூது இதழில் 'சில நேரங்களில் சில கவிஞர்கள்' என
எழுதிய தொடரையும் கூறலாம்.
எழுத்தார்வம் உடையவர்கள் ஏதாவது ஒருவிதத்தில் தவிர்க்க இயலாதவர்களாகத் தம்மை
வரலாற்றில் பதிவு செய்துகொள்கின்றனர். அவ்வாறு வரலாற்றுப் பதிவான நான்கு நூல்கள்
மூலம் முருகுசுந்தரத்தின் முக்கியத்துவம் உறுதிப்பட்டுள்ளது. அவை பாரதிதாசன்
பற்றியவை. 'பாவேந்தர் நினைவுகள்', 'அரும்புகள் மொட்டுகள் மலர்கள்'; 'குயில்
கூவிக்கொண்டிருக்கும்', 'புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்' ஆகியன. இவை நான்கும்
'பாவேந்தர் - ஒரு பல்கலைக் கழகம்' என ஒரே நூலாகவும் வெளியாகியுள்ளன.
பாரதிதாசனுடன் நெருங்கிப் பழகிய காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களைத் தம் நினைவிலிருந்து
தொகுத்துத் தரும் நூல் 'பாவேந்தர் நினைவுகள்'. நாட்குறிப்பு வடிவத்தில்
எழுதப்பட்டுள்ள இந்நூலில் பாரதிதாசன் பற்றிய சிறுசிறு தகவல்கள் வியப்பூட்டும்
வகையில் பதிவாகியுள்ளன. அவரது வாழ்க்கைச் சம்பவங்களை அவர் வாயாலேயே கேட்டுக்
குறித்துவைத்திருந்து பின்னர் முருகுசுந்தரம் பதிவாக்கியுள்ளார். பாரதிதாசனின்
சென்னை வாழ்க்கை, திரைப்படத்துறை, அரசியல் தொடர்புகள், தமிழறிஞர்களோடு கொண்டதுமான
பதிவு இந்நூல்.
பாரதிதாசன் குறித்த எல்லாவகைச் செய்திகளையும் திரட்டிக்கொடுக்க வேண்டும் என்னும்
தீரா ஆவலின் வெளிப்பாடாக மற்ற மூன்று நூல்களை முருகுசுந்தரம் தந்துள்ளார்.
பாரதிதாசனுடன் பழகியவர்கள் பலரைச் சந்தித்து அவர்களிடம் கட்டுரைகளாக எழுதி வாங்கித்
தொகுக்கப்பட்டவை அவை. திரட்டுவதில் ஏற்பட்ட சங்கடங்களையும் முருகுசுந்தரம்
எழுதியுள்ளார். திராவிட இயக்கத்தவர் பலர் பாரதிதாசன் பற்றி மேடையில் பேசும்
அளவுக்கு உள்ளூர அவர்மீது மதிப்புக் கொண்டவர்களாக இல்லை என்பதையும்
தெரிவித்துள்ளார். தமிழ்ச் சமூகம் பதிவுகளில் அக்கறை காட்டாத இயல்பு கொண்டது என்பதை
இவ்விஷயத்தில் நேரடியாக உணர்ந்தவர் முருகுசுந்தரம். ஆனால், தளராமல் முயன்று பலரிடம்
கட்டுரை பெற்றுள்ளார். பாரதிதாசன் ஆப்பம் சாப்பிடும் கடைப் பெண், பாரதிதாசன்
சவாரிசெய்யும் குதிரை வண்டிக்காரர் என முருகுசுந்தரத்தின் தேடல் விரிவானது.
பாரதிதாசன் வரலாற்றுக்கு முருகுசுந்தரத்தின் பங்களிப்பு மிகச் சிறப்பானது. ஆனால்,
பாரதிதாசன்மீது பற்றும் அபிமானமும்கொண்ட எவரும் முருகுசுந்தரத்தின் இறப்பைப் பதிவு
செய்ததாகத் தெரியவில்லை. குறைந்தபட்சம், பாரதிதாசன் பற்றிய அந்த நூல்களுக்கு உரிய
மதிப்பளித்துப் போற்றலாம்; நல்ல பதிப்பாக வெளியிடலாம். இருபது நூல்களுக்குமேல்
எழுதியுள்ள முருகுசுந்தரத்தின் படைப்புகளை இன்றைய திராவிட ஆட்சி
நாட்டுடமையாக்கலாம். இவற்றை முருகு சுந்தரத்திற்காக அல்ல எனினும்
பாரதிதாசனுக்காகவேனும் செய்யலாம்.
பாரதிதாசனின் 'சஞ்சீவி பர்வதத்தின் சாரல்' காப்பியத்தின் 'குயில்
கூவிக்கொண்டிருக்கும்' எனத் தொடங்கும் முதலடியைத் தம் நூலொன்றுக்குப் பொருத்தமான
தலைப் பாக்கினார் முருகுசுந்தரம். பாரதிதாசன் இறந்தபோது 'கூவிய மாங்குயில்
குரலொடுங்கியதே' எனப் புலம்பினார். முருகுசுந்தரம் புகழ் வெளிச்சத்தில் தன்முகம்
காட்டாமல் ஒதுங்கி வாழ்ந்த ஒரு கருங்குயில்தான்.
உள்ளடக்கம்