1974இல் தமிழ்க் கல்லூரியில் படிப்பு முடிந்து
எல்லோரையும் போல் நானும் வேலைக்கு முயன்றுகொண்டிருந்த காலம். செல்வாக்கு
உள்ளவர்களும் அண்டிப் பிழைக்கத் தயங்காதவர்களும் ஆசிரியர்களாகப்
பதவிபெற்றுக்கொண்டிருந்தனர். அந்நிலையில் சுயமரியாதையுடன் வயிறு பிழைக்க விழைந்த
நான் தஞ்சாவூர் கீழவாசல் சரபோஜி அங்காடியில் என் தந்தையார் நடத்திவந்த முட்டைக்
கடையிலேயே என் வாழ்வை நடத்திக்கொள்ளும் பணியை மேற்கொண்டுவிட்டேன். அன்றாட
வாழ்க்கைக்குப் பத்து இருபது என்று வருமானம் கிடைக்க ஆரம்பித்து, கடையில் வியாபாரம்
நடப்பது காலையில் 2 மணி நேரமும் மாலையில் 2 மணி நேரமும்தான். மீதமிருக்கும்
நேரத்தை எப்படிப் போக்குவது என்ற நிலை இருந்தது. வாசிப்பதில் ஆர்வம் சென்றது.
தமிழ்ப் புலவர் வகுப்பிற்கான பாடத் திட்டங்கள் என்பது தமிழ் மொழியின் தன்மையை
ஓரளவில் புரிந்துகொள்ளும் நிலையில்தான் இருந்தது. தமிழ் மொழியில் புலமை நிறைவடைய
வேண்டுமானால், மேலும் வெகுதூரம் பயணிக்க வேண்டும் என்பது புரிந்தது. அதற்குத் தமிழ்
இலக்கண இலக்கியங்களை அவற்றின் உரைகளுடன் பயில வேண்டியது அவசியம். இவற்றை
எம்முறையாகப் படிக்க வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். உ.வே.சா.
போன்றவர்களின் வாழ்க்கையைப் படித்தபோது, தமிழ் இலக்கணத்தைப் புரிந்துகொள்ள
வேண்டுமானால் ஓஇலக்கணக் கொத்துஔ, ஓபிரயோக விவேகம்ஔ, ஓதொல் காப்பியச் சூத்திர
விருத்திஔ போன்ற நூல்களைப் பயில வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததைப்
பார்த்தவுடன் இந்நூல்களைத் தேடத் தொடங்கினேன். கல்லூரி வாழ்க்கையில் இந்நூல்களைக்
கேள்விப்பட்டதுகூட இல்லை. ஒருவழியாகத் தேடியதில் ஆறுமுக நாவலர்ஒ பதிப்பித்த
இலக்கணக் கொத்தைப் படித்துவிட்டேன். ஆவலுடன் வாசிக்கத் தொடங்கினால் நூலின் முக்கால்
பாகம் புரியவில்லை. பிரயோக விவேகம் நூலைப் பார்க்கவே முடியவில்லை. தொல்காப்பியச்
சூத்திர விருத்திஒ திருவாவடு துறை வெளியீடு கிடைத்தது. அதில் பல்வேறு கூடுதல்
குறிப்புகள் இருந்ததால் நூலின் பெரும்பகுதி நன்றாகப் புரிந்தது. இந்த நூலைப்
புரிந்துகொள்ளுவதென்பது ஒரு வகையாகத் தொல்காப்பியத்தைப் புரிந்துகொள்வதுதான். மற்ற
இரு நூல்களை எப்படிப் புரிந்துகொள்வது?
எனக்குத் தெரிந்த தமிழாசிரியர்கள், பேராசிரியர்கள் என்று யாரைக் கேட்டாலும் இந்த
நூல்களைக் கேள்விப்பட்டதுகூட இல்லை என்கிறார்கள். 34 வருடங்களுக்குப் பின்பு இன்று
செம்மொழி அந்தஸ்து பெற்ற பின்னரும்கூட இந்த நிலையில் சிறிதுகூட மாற்றம் இல்லை
என்பது குறிப்பிடத் தக்கது மட்டுமல்ல, தமிழனின் பெருமையும் அதுதான்.
இந்நிலையில் தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூல்நிலைய வெளியீடாக இந்த இரு நூல்களும்
வெளியிடப்பட்ட தகவல் அறிந்தேன். ஆவலுடன் சென்று அந்நூல்களைப் பார்த்தேன். எனக்கு
விளங்காமல் இருந்த பல இடங்கள் நன்றாக விளக்கப்பட்டிருந்தன. அந்த விளக்கங்களை
எழுதியவர் ஓபண்டித வித்வான் தி.வே. கோபாலய்யர்.ஔ அந்தக் காலத்தில் ரூ. 15/- என்று
விலை குறிப்பிடப்பட்டிருந்த நூல்களை வாங்கும் சக்தி எனக்கில்லை. சில மாதங்கள்
முயன்று பணம் திரட்டி அந்த இரு நூல்களையும் வாங்கிவிட்டேன். வேகமாகப் படிக்கத்
தொடங்கினேன். ஐந்தெழுத்தால் ஒரு பாடையென்று அறையவும் நாணுவர் அறிவுடையோரேஒ என்று
சுவாமிநாத தேசிகர் என்ற சூத்திர வெள்ளாளப் புலவரால் தமிழ் இழிவுபடுத்தப்பட்டு,
சமஸ்கிருதம் போற்றப்பட்டிருந்தாலும் அந்நூலில் உள்ள பல செய்திகள் தமிழ் இலக்கண
நுட்பங்களைத் தொகுத்து விளக்குவதாக அமைந்திருந்தன. அந்நூலைத் தமிழ் இலக்கண
நுட்பங்களைத் தொகுக்கும் ஒரு கலைக் களஞ்சியம் போல் கருதத் தோன்றியது. நூலில்
மூன்றில் இரண்டு பகுதிகள் கோபாலய்யரின் விளக்கங்களால் நிறைந்திருந்தன. இதே போன்று
இலக்கண விளக்கமும் பிரயோக விவேகமும் கோபாலையரால் விளக்கங்கள் அளிக்கப்பட்டு
இருந்தன. பல ஆண்டுகள் இதற்காகப் பணிசெய்த இவருக்கு எவ்விதமான ஊதியமும் அவர்
பெற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது அந்த நூல்களைத் தமிழ் தெரிந்த
எவரும் எளிதில் பயின்று, தமிழ் இலக்கண நுட்பங்களை அறிந்துகொள்வதற்குப் பெரும்
வாய்ப்பினை அளித்தது.
கோபாலையரின் ஆராய்ச்சி விளக்கங்களுடன் வெளியிடப்பெற்ற மற்ற முக்கியமான இலக்கண
நூல்கள் ஓவீர சோழியம், மாறன் அலங்காரம், இலக்கண அகராதி பதினாறு பாகங்கள்ஔ ஆகும்.
என்னுடைய பேராசிரிய நண்பர்கள் சில நேரங்களில் என்னிடம் அனுப்பிவைக்கும் ஆய்வு
மாணவர்களுக்கும் அவர்களுடன் சேர்ந்து வருகின்ற மற்ற பல மாணவர்களுக்கும் சுமார்
அரைமணி நேரத்தில் வேண்டிய ஆய்வுத் தகவல்களைக் கொடுத்து அனுப்பி இருக்கின்றேன்.
அதற்கு எனக்கு உதவியாக இருந்த நூல்களில் பல கோபாலையர் நூல்கள்தாம். தொல்காப்பிய
எழுத்ததிகாரத்திற்கும் சொல்லதிகாரத்திற்கும் உள்ள உரைகளை விளக்கத்துடன் இவரும்
இவருடைய தம்பி தி.வே. கங்காதரனும் எழுதி அளித்த நூல்கள் (சுமார் 1500 பக்கங்களுக்கு
மேல் உள்ளவை) இரண்டு சுமார் மூன்று வருடங்களாகத் தஞ்சாவூர் சரஸ்வதி மஹால் நூல்
நிலைய வெளியீட்டுப் பகுதியில் உறங்கிக்கொண்டுள்ளன. தமிழ்நாட்டில் தொல்காப்பியத்தைப்
புரிந்துகொண்டிருப்பவர்கள் கோபாலையர், பாவலர் ச. பாலசுந்தரம் போன்ற இரண்டொருவர்தான்
என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் கோபாலையர் பதிப்பித்துள்ள நூல்களை அவரைத் தவிர
வேறொருவர் செய்திருக்க முடியுமா என்றால் முடியாது என்றுதான் பதில் கூற
வேண்டியிருக்கும்.
தமிழ் இலக்கியப் பரப்பின் பெரும்பகுதியைக் கணினி போன்று மனத்தில் பதியவைத்திருந்த
கோபாலையர் தன்னுடைய இலக்கிய, இலக்கண ஆக்கங்களின் செழுமைக்கு அதனைச் செம்மையாகவே
பயன்படுத்தினார். மாறன் அலங்காரம், இலக்கண விளக்க அணியியல் போன்ற நூல்களில் உள்ள
முன்னுரைகளும் பிற்சேர்க்கைகளும் இதனை உறுதிப்படுத்தும் சான்றுகளாக உள்ளன. இந்தப்
பகுதிகளைப் படிக்கும் ஒருவர் மற்ற தமிழ் அணியிலக்கணச் செய்திகளுடன் வடமொழி
அணியிலக்கணப் பற்றிய பல்வேறு செய்திகளையும் ஒப்புமைகளுடன் புரிந்து தெளிவு
பெறுவார்கள் என்பது திண்ணம். இதே போன்று இலக்கண விளக்கம் நூலில் உள்ள செய்யுளியல்,
பாட்டியல் போன்ற பகுதிகளுக்கும் பெருத்த விளக்கங்களுடன் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளுடன் சமஸ்கிருதத்தையும் ஓரளவு பயின்றிருந்த
கோபாலையர் ஷி.ஸி. பாலசுப்ரமணியத்தின் ஓசோழர் காலக் கலைப்பணிஔ என்ற நூலைத் தமிழில்
மொழிபெயர்த்தார். ஆலன் டேனியல் பெயரில் வந்துள்ள மணிமேகலைஒ ஆங்கில மொழிபெயர்ப்பு
கோபாலையர் செய்ததுதான். தொல்காப்பியம் சேனாவரையம் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு இவருடைய
உதவியுடன் வெளியிடப்பட்டதாகும். 2005இல் கலிபோர்னியாவில் வெளிவந்த சீவக சிந்தாமணி
1-1165 பாடல்களின் மொழிபெயர்ப்புக்குப் பேரளவு உதவியதவர் கோபாலையர்தான் என்று அதன்
ஆசிரியர் ஜேம்ஸ் டி ராயன் குறிப்பிடுகிறார். இணை ஆசிரியர் என்று கோபாலையரைக்
குறிப்பிட விரும்பியதாகவும் அதனை அவர் மறுத்துவிட்டதாகவும் ராயன்
குறிப்பிடுகின்றார்.
இவருடைய தமிழ் இலக்கணப் பணிகளைத் தவிர, இலக்கியப் பணிகளில் குறிப்பிடத்தக்கவை
தேவாரம் ஏழு திரு முறைகளுக்கான செம்பதிப்பும் தேவார ஆய்வுத்துணை என்ற பெயரில்
தேவாரம் பற்றிய பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய நூலும். திவ்வியப் பிரபந்தத்தில்
திருமங்கை ஆழ்வார் பாடிய பெரிய திருமொழி உள்ளிட்ட ஆறு பிரபந்தங்களுக்கான
பெரியவாச்சான் பிள்ளையின் மணிப்பிரவாள உரை விளக்கத்தின் தமிழ் ஆக்கமும் ஆகும்.
எடுத்துக்காட்டாகத் தேவாரத்தில் உள்ள முதல் திருமுறையில் 103ஆம் பதிகம் 1113ஆம்
பாடலில் உள்ள ஓகேணவல்லான்ஔ என்ற சொல்லுக்கு ஓசிதைக்க வல்லவன்ஔ என்று பொருள்
எழுதுகிறார். இத்தகைய சொற்கள் தமிழ்ப் பேரகராதி போன்றவற்றில் இடம்பெறவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.
கோபாலையரிடம் உள்ள போற்றத்தக்க பண்புகளில் ஒன்று, தான் எடுத்துக்கொண்ட நூலில்
என்னென்ன பகுதிகள் தெளிவாக்கப்பட்டுள்ளன. எந்தப் பகுதிகள் விரிவான விளக்கங்கள்
பெற்றுள்ளன என்று குறிப்பாரே தவிர, தனக்கு முன்னர் பதிப்பித்தவர்களைக்
குறைகூறுவதில்லை. குறிப்பாக வீரசோழியம் நூல் இவருடைய பதிப்பில் பெரும் மாற்றங்களைப்
பெற்றுள்ளது. 102ஆம் காரிகையும் அதன் உரைப்பகுதியும் முந்தைய பதிப்பிலிருந்து
பெரிதும் வேறுபட்டுச் செம்மை அடைந்திருக்கும். (இவருடைய பதிப்பில் 102 என்று
குறிப்பிடப்பட்டு இருக்கும் காரிகை எண், இவருக்கு முந்தைய பதிப்பில் 100ஆகக்
குறிப்பிடப்பட்டு இருக்கும்.)
தமிழை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்களையும் தமிழ் மக்களை வஞ்சித்து வாழும்
அரசியல்வாதிகளையும் சீரழிவுக் கலாச்சாரத்தின் சின்னங்களாகிய நடிகர்களையும்
முன்னிறுத்திப் பிழைப்பு நடத்தும் பத்திரிகைகளும் ஊடகங்களும் கோபாலையர் போன்ற
உண்மையான தமிழ் அறிஞர் ஒருவரின் மறைவைக் கண்டுகொள்ளாதது ஒன்றும் வியப்பானதல்ல.
ஆனால் இத்தகைய மனிதரை இனங்கண்டு சுமார் 28 ஆண்டுகளாக அவரைத் தங்கள் நிறுவனத்தின்
ஆய்வாளராகப் போற்றி வைத்துக் காப்பாற்றி, நிறுவன விதியை அவருக்கு ஓய்வளிக்கத் தேவை
இல்லை என அவருக்காக மாற்றி, அவரிடமிருந்து தமிழுக்கு மேன்மை தரும் பல ஆக்கங்களை
உருவாக்கி, அதனைத் தமிழகத்திலேயே வெளியிட்டுக்கொள்ள அனுமதியும் வழங்கிய, பிரான்ஸ்
நாடு புதுச்சேரியில் நடத்தும் பிரெஞ்சு ஆய்வுப் பள்ளியைப் பார்த்துக் கொஞ்சம்
சுரணையுள்ள தமிழர்கள் வெட்கப்படத்தான் வேண்டும்.
உள்ளடக்கம்