II
போத்ரியா 1929இல் ரெய்ம்ஸில் பிறந்தார். தொடக்கக் காலத்தில் ஜெர்மன் பற்றி
போதிக்கும் ஆசிரியராக இருந்தார். நீட்ஷே, லூதர் ஆகியோர் பற்றி ஆய்வுரைகளை எழுதிய
போத்ரியா, ஹோல்டர்லின் படைப்புகள் குறித்து ஆர்வம் கொண்டிருந்தார்.
Les Temps Modernes என்ற புகழ்பெற்ற பத்திரிகையில் (1962-63) இலக்கிய விமர்சனக்
கட்டுரைகளை எழுதினார். புகைப்படக் கலையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரது
புகைப்படக் கண்காட்சிகள் பல இடங்களில் நடத்தப்பட்டுள்ளன. 60களில் பீட்டர் வெய்ஸின்
படைப்புகளை பிரெஞ்சில் மொழிபெயர்த்தார். பிரெக்டின் படைப்புகளும் அவரால்
மொழிபெயர்க்கப்பட்டன. ரோலான் பார்த், ஹென்றி லெஃபாப் (Henri
Lefebvre) ஆகியோரின் தாக்கத்தால் 60களில் சமூகவியலை நோக்கித் தனது
கவனத்தைத் திருப்பினார். மரபான இடதுசாரி இயக்கங்களுக்கு வெளியே, தனியே வெளிவந்த
Utopia, Traverse ஆகிய முற்போக்கு இதழ்களோடு 60களின் பிற்பகுதியில்
தொடர்பு கொண்டிருந்தார். 70களில் அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டார். அந்தப் பயண
அனுபவங்கள் அமெரிக்கா (1988) என்ற நூலாக வெளிவந்துள்ளன. பெர்லின், அர்ஜென்டீனா,
பிரேஸில் என அவரது பயணம் விரிந்தது. தனது நேரத்தில் பாதியை பிரான்ஸ் நாட்டுக்கு
வெளியே கழித்த போத்ரியா, பிரான்சின் முதன்மையான ஆறு அறிவுஜீவிகளில்,
சிந்தனையாளர்களில் ஒருவராக மதிக்கப்பட்டார்.
போத்ரியாவின் ஏராளமான படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது
படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் ஃப்ரெடரிக் ஜேம்சன் போன்றவர்களின் மதிப்புரைகளோடு
வெளியாகியுள்ளன. பிற்கால முதலாளித்துவத்தின் கலாச்சார வெளிப்பாடு எனப்
பின்நவீனத்துவத்தை மதிப்பிடும் ஜேம்சன் தனது கோட்பாட்டை விளக்க போத்ரியாவின்
எழுத்துக்களைப் பயன்படுத்துகிறார். போத்ரியாவை மிக முக்கியமான பின்நவீனத்துவச்
சிந்தனையாளராக விவரித்த டக்ளஸ் கெல்னர், பிறகு அதை மறுத்து, பின்நவீனத்துவத்துக்கு
எதிரானவையாக போத்ரியாவின் எழுத்துக்கள் அமைந்துள்ளன என்பதை ஒப்புக்கொண்டார்.
The System of Objects (1968), The Consumer Society (1970) ஆகிய நூல்களில் பார்க்கையில் மார்க்சியத்தின் பாதிப்புக்கு
ஆளானவராகத் தோன்றும் போத்ரியா தனது
The Mirror of Production நூலின் மார்க்சியத்தைக் கடுமையாக விமர்சிக்கிறார். அதன்
தொடர்ச்சியாக
Symbolic Exchange and Death (1976), For a Critique of the Political Economy of
the Sign (1981) ஆகிய நூல்கள் வெளிவந்தன. 1972 வரை அவர் மார்க்சியச்
சட்டகத்துக்குள் செயல்பட்டதாகத் தெரிகிறது. சமூக உருவாக்கத்தின் அடிப்படையாக
முதலாளித்துவ உற்பத்தி முறையை அவர் அக்காலத்தில் குறிப்பிட்டுவந்தார். ஆனால்
The Consumer Societyஇல் ஆடம்பரமும் நுகர்வும் சமூக அமைப்பில், கலாச்சார
வயப்படுதலில் முக்கியமான விளைவுகளை உண்டுபண்ணுகின்றன என்ற முடிவுக்கு போத்ரியா
வந்தார். இதே காலகட்டத்தில் அல்தூஸர் போன்ற மார்க்சியர்கள், சமூகத்தில்
வர்க்கங்களின் மறுஉற்பத்தி, குடும்பம், பள்ளி முதலான கருத்தியல் நிறுவனங்களுக்குள்
நடத்தப்படும் விதத்தை விளக்கிவந்தனர். போத்ரியா, நுகர்வின் சக்தியை, ஒடுக்குமுறைச்
சூழலை ரோலான் பார்த், ஹெர்பர்ட் மார்க்யூஸ், மார்ஷல் மெக்லூஹன் ஆகியோரது
சிந்தனைகளின் தாக்கத்தின் தொடர்ச்சியாக நின்று விவரித்துவந்தார்.
மார்க்ஸின் அணுகுமுறையை விமர்சித்த போத்ரியா பயன் மதிப்பினைப் பரிவர்த்தனை
மதிப்போடு முரண்படுத்திப் பார்ப்பதை விடவும், குறியீட்டு மதிப்பைப் பண்ட மதிப்போடு
முரண்படுத்திப் பார்ப்பதே முக்கியமெனக் குறிப்பிட்டார்.
நவீன சமூக வளர்ச்சியென்பது ஒழுங்கற்றது. அது முதலில் கலையை, அரசியலை,
கலாச்சாரத்தைப் பாதிக்கிறது. பிறகு பொருளாதாரத்தைப் பாதிக்கிறது. முதலாளித்துவ
உற்பத்தி முறை என்ற கட்டத்தைக் கடந்த பிற்பாடு பொருளாதாரமானது ஒரு
முரண்தர்க்கத்துக்குள் நுழைகிறது. அங்கு மூலதனம், அடித்தளம், மேற்கட்டுமானம் என்கிற
படிநிலைகளைச் சிதைக்கிறது. உற்பத்தி, மறுஉற்பத்தி, உழைப்பு, மூலதனம்
ஆகிவற்றுக்கிடையிலான பிரிவினைகளும் தகர்ந்துவிடுகின்றன என்கிறார் போத்ரியா.
போத்ரியாவின் அணுகுமுறையிலுள்ள இரண்டு விஷயங்களை நாம் பரிசீலிக்கலாம்: முதலாளித்துவ
உற்பத்தி முறைக்குள் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி அவர் குறிப்பிடும் விஷயங்கள்.
அடுத்து, முதலாளித்துவத்துக்கும் குறியீட்டு அமைப்புக்கும் இடையிலான உறவு.
போத்ரியாவைப் பொருத்தவரை ஆதிசமூகம் உற்பத்தி முறை எதையும் கொண்டிருக்கவில்லை.
மதிப்பின் அமைப்பு விதிகள் சமூக அமைப்பின் கூறுகளைத் தாக்கும்போது விதிமுறைகளே
தீர்மானகரமான பங்கைச் செலுத்துகின்றன என்றார் அவர்.
வர்க்கப் போராட்டமே வரலாற்றை நிர்ணயிக்கிறது என்ற அல்தூஸரிய நிலைப்பாட்டுக்கு
மாறாக, மறுஉற்பத்தி என்பது மேலாண்மை செலுத்தும்போது உழைப்பு, உற்பத்தி ஆகியவற்றின்
அர்த்தங்கள் மாறிவிடுகின்றன. அவை ஒரு நோக்கத்தோடான வேலை என்கிற தர்க்கத்தை
இழந்துவிடுகின்றன. வேலையென்பது வேலையின் மறுஉற்பத்தி என்பதற்காகவே மறுஉற்பத்தி
நடக்கிறது. இது நடக்கும் போது சமூக அமைப்பின் அனைத்துக் கூறுகளும்
பாதிக்கப்படுகின்றன. பாட்டாளி வர்க்கம் சமூக ஒழுங்குக்குள் உள்வாங்கப்படுகிறது.
தொழிற்சங்கங்கள், வேலை நிறுத்தங்கள், போராட்டங்கள் யாவும் நீதிக்கானவை,
புரட்சிக்கானவை என்ற தமது தன்மையை இழந்துவிட்டன. சமூக அமைப்பின் உள்முரண்களை
அடிப்படையாகக் கொண்டு எதிர்ப்பு, புரட்சி என்பனவற்றை விளக்கிய மார்க்சின்
அணுகுமுறையிலிருந்து விலகி விலக்கம், ஒதுக்கம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு
எதிர்ப்பை விளக்கிய தர்கைம், மாஸ் ஆகியோரது அணுகுமுறைகளை உள்வாங்கி போத்ரியா தனது
நிலைப்பாட்டை உருவாக்கிக் கொண்டார்.
I I I
"முதலாளித்துவம் தனது முரண்தர்க்க அடிப்படையில் வளர்ந்துள்ளது என்பதில்
சந்தேகமில்லை. அது பாட்டாளி வர்க்கத்தால் தோற்கடிக்கப்படலாம். ஒரு கற்பனையான
அர்த்தத்தில் சொன்னால், மார்க்ஸின் ஆய்வு முறை இன்னமும் குறை கூற முடியாத
ஒன்றுதான். ஆனால், தனது இருப்புக்கு ஆபத்து வரும்போது மூலதனம் தன்னை அரசியல் கடந்த
நிலைக்கு மாற்றிக்கொண்டுவிடும். உற்பத்தி உறவுகளுக்கு அப்பாற்பட்ட, அரசியல்
முரண்பாடுகளைத் தாண்டிய ஒரு சூழல் பாதைக்குள் தன்னைச் செலுத்திக் கொண்டுவிடும். ஒரு
சுயேச்சையான நிலையில் தனது பிம்பத்தை ஒத்ததாக இந்த உலகைத் திரட்டிக்கொண்டுவிடும்
என்பதை மார்க்ஸ் முன்னுணரவில்லை" என்றார் போத்ரியா.
வால்டர் பெஞ்சமின்,
The Work of Art in the Age of Mechanical Reproduction என்ற தனது கட்டுரையில் மறு
உற்பத்தியின் விளைவுகள் என்னவென்பது குறித்து ஆராய்ந்தார். உற்பத்தியின்
செயல்பாட்டை மறுஉற்பத்தி தனக்குள் உறிஞ்சிக்கொள்கிறது. அதன் மூலம் உற்பத்தியின்
இலக்கை மாற்றிவிடுகிறது. இதன் விளைவாக உற்பத்தி செய்யப்பட்ட பொருளுடைய நிலையும்
உற்பத்தி செய்தவரது நிலையும் மாறிவிடுகின்றன என விளக்கினார் பெஞ்சமின். கலை,
சினிமா, புகைப்படம் முதலான களங்களில் இந்த நிலையை அவர் எடுத்துக்காட்டினார். இன்று
எல்லா விதமான பொருளுற்பத்தியும் இதே நிலையில்தான் உள்ளன. தொழில்நுட்பமானது,
பொருளின் பயன் மதிப்பு என்கிற செய்தியின் மீது மட்டுமின்றி உழைப்புச் சக்தியின்
மீதும் தனது ஆளுமையைச் செலுத்துகிறது. உழைப்புச் சக்தி என்பது உற்பத்தியின்
புரட்சிகரமான விளைபொருளாக மாற்றப்படுமென மார்க்ஸ் எதிர்பார்த்தார். ஆனால் அது
தொழில்நுட்பத்தின் மேலாண்மையின் கீழ் சிக்கிக்கொண்டுவிட்டது. இந்த வகையில்
தொழில்நுட்பத்தை உற்பத்திச் சக்தியாகப் பார்க்காமல், அதை ஒரு ஊடகமாகப் பார்த்த
முதல் சிந்தனையாளராக வால்டர் பெஞ்சமினைக் குறிப்பிடலாம். அவருக்குப் பிறகு இப்படிச்
சிந்தித்தவர் மெக்லூஹன். அவர்கள் இருவரது ஆய்வு முறைகளும் மறுஉற்பத்திக்கும்
பாவனைக்குமான எல்லையில் நிற்கின்றன எனக் குறிப்பிட்டார் போத்ரியா. அவற்றை அடுத்த
நிலைக்கு அவர் விரித்துச் சென்றார்.
மார்க்ஸின் அணுகுமுறை, பொருளுக்கு இரு விதமான மதிப்புகள் இருப்பதாகச் சொல்கிறது.
ஒன்று பயன் மதிப்பு, மற்றது பரிவர்த்தனை மதிப்பு. முதலாவது, நுகரப்படும் பண்டத்தின்
ஸ்தூலமான செயல்பாட்டை விளக்குகிறது. இரண்டாவது, எந்தவொரு பண்டத்தையும் எந்தவொரு
பண்டத்தோடும் பரிவர்த்தனை செய்துகொள்ளலாம் என்கிறது. இந்த அணுகுமுறை மார்க்ஸின்
ஆய்வு அனைத்திலும் இயங்கியல் அடிப்படையில் தொடர்ந்து வருகிறது. குறி பற்றிய சசூரின்
அணுகுமுறையும் இதே விதத்தில் அமைந்ததுதான்.
இந்த மரபான பார்வைக்கு மதிப்பு பற்றிய புதிய பார்வை முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.
இங்கே மதிப்பு என்பது சுயேச்சையானதாக மாறிவிட்டது. இதனை நாம் பாவனை எனக்
குறிப்பிடலாம். இனிமேல் குறிகள் ஒன்றுக்கொன்று பரிவர்த்தனை செய்துகொள்ளப்படும்.
உண்மையான ஒரு பொருளுக்கு மாற்றாக அவை இனி பயன்படுத்தப்படாது. அப்படி பயன்படுத்தவும்
முடியாது. குறியின் விடுதலையானது அதை எதையாவது ஒன்றை குறிப்பீடு செய்தே தீர
வேண்டுமென்கிற நிலையிலிருந்து, பொறுப்பிலிருந்து, சுமையிலிருந்து அதை
விடுவித்துவிட்டது. இதே விதச் செயல்பாடு உழைப்புச் சக்தி என்ற தளத்திலும்
நடந்துள்ளது. உற்பத்தியின் இலக்கு என்பது அழிக்கப்பட்டதன் மூலம் உற்பத்தி முறை
என்பது சங்கேதமாக மாற்றப்பட்டுள்ளது. "மார்க்ஸோ, சசூரோ இந்த நிலையை முன்னுணரவில்லை.
மதிப்பின் சுயேச்சைத் தன்மை உண்டாக்கிய அதிர்ச்சியில் அது தொடர்பு
படுத்தப்பட்டிருந்த உண்மையான பொருளென்பது செத்துவிட்டது" என்றார் போத்ரியா.
மார்க்ஸின் Commodity
Law of Value என்பதற்குப் பதிலாக
Structural Law of Value என்பதை முன்வைக்கிறார் போத்ரியா.
மார்க்ஸின் அணுகுமுறை சமமான மதிப்புள்ள பண்டங்களைச் சமமாக வைத்து மதிப்பிடுகிறது.
ஆனால் Structural Law of Value ஒவ்வொரு கணத்தினதும்
நிர்ணயிக்க முடியாத தன்மையைக் குறிக்கிறது.
உழைப்பின் முடிவு, உற்பத்தியின் முடிவு, அரசியல் பொருளாதாரத்தின் முடிவு, அறிவை,
அர்த்தத்தைக் குவித்த குறிப்பான குறிப்பீடு என்பவற்றுக்கு இடையிலான இயங்கியலின்
முடிவு, நேர்க்கோடு போன்ற சொல்லாடல்களின் முடிவு, பண்டத்தின் ஒற்றைப் பரிமாணத்
தன்மையின் முடிவு, உற்பத்தி யுகத்தின் முடிவு. இந்த முடிவுகளை ஏற்படுத்தியது
எந்தவொரு புரட்சியுமல்ல. மூலதனம்தான் இதைச் சாதித்துள்ளது. அதுவே தற்போதைய
அமைப்பின் அனைத்து யுக்திகளையும் கட்டுப்படுத்திவைத்துள்ளது.
இவ்விதத்தில், பாவனையின் யுகமென்பது இதற்கு முன்பு முரண்பட்டதாக, எதிரெதிரானதாகச்
சொல்லப்பட்டிருந்தவற்றின் பரிவர்த்தனைகளால் அறிவிக்கப்படுகிறது. "ஃபாஷன் என்கிற
தளத்தில் அழகானவற்றுக்கும் அசிங்கமான வற்றுக்கும் இடையிலான பரிவர்த்தனை; அரசியலில்
இடது சாரிக்கும் வலதுசாரிக்கும் இடையிலான பரிவர்த்தனை, தொடர்புச் சாதனங்களின்
செய்திகளில் உண்மைக்கும் தவறுக்கும் இடையிலான பரிவர்த்தனை, எல்லா விஷயங்களுமே
முடிவுசெய்யப்பட முடியாத நிலையை அடைந்து விட்டன. சங்கேதத்தின் ஆதிக்கத்தினுடைய
விளைவாக மாறிவிட்டன. இது மூலதனத்தின் பொதுமைப்படுத்தப்பட்ட விபச்சார விடுதி. இந்த
விடுதி விபச்சாரத்துக்கானதல்ல, மாற்றீடு செய்வதற்கானது. கொடுத்து வாங்குவதற்கானது"
எனக் குறிப்பிடும் போத்ரியா, இத்தகைய செயல்பாடு நீண்ட காலமாகக் கலாச்சாரத் தளத்தில்
கலை, அரசியல் போன்ற தளங்களில் நடைமுறையிலிருந்ததைச் சுட்டிக்காட்டி, தற்போது அது
பொருளாதாரத்தையும் பாதிக்கிறது என்றார். இங்கேயும் நிர்ணயமற்ற தன்மை கோலோச்சுகிறது.
எனவே பொருளாதாரம் என்பதை நிர்ணயிக்கிற ஒரு காரணியாக நாம் கருத முடியாதுபோகிறது.
மனித உழைப்போடு தொடர்புபடுத்தப்பட்டிருந்த மதிப்பு என்பதை நாம் அறிவோம். அதை அளக்க
முடியும். அதுபோலவே உபரி மதிப்பையும் அளந்துவிட முடியும்.
"ஆனால் இன்று எல்லாமே மாறிவிட்டது." நாம்
Commodity Law of Value இலிருந்து
Structural Law of Valueவிற்கு மாறி
வந்துவிட்டோம். "இந்த மாற்றத்தோடு உற்பத்தி என்கிற சமூகச் செயல்பாடும்
அழிந்துவிட்டது" என்கிறார் போத்ரியா. நாம் இன்னும் முதலாளித்துவ முறைக்குள்தான்
இருக்கிறோமோ எனக் கேட்கும் அவர், இயல் கடந்த முதலாளித்துவ முறை அல்லது வேறு ஏதோ ஒரு
முறை என இதை அழைக்கலாம் என்கிறார்.
மதிப்பு பற்றிய அமைப்பில் உண்டான புரட்சி, "புரட்சி" என்பதன் அடிப்படையை
அழித்துவிட்டது. ஏனெனில் உழைப்பு என்பது இப்போது சக்தியாக இல்லை. அது வேறு பல
குறிகளுள் ஒன்றாக மாறிவிட்டது. மற்ற குறிகளைப் போல அதுவும் தன்னை உற்பத்தி
செய்கிறது. உட்கொள்கிறது. உழைப்பு, உழைப்பற்றவற்றோடு பரிவர்த்தனை செய்யப்படுகிறது.
ஓய்வோடு உழைப்பு மாற்றிக்கொள்ளப்படுகிறது. தினசரி வாழ்வின் மற்ற பல பகுதிகளோடு அது
பரிவர்த்தனைக்கு உள்ளாகிறது. அது குறிகளால் கட்டுப் படுத்தப்படுகிறது. குறியின்
செயல்பாடு, அது தன்னையே பிரதி செய்துகொள்வதுதான்.
பயன் மதிப்புக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்கவில்லை. மாறாக உபரி உற்பத்தியின் மூலமாக
இந்த அமைப்புதான் பயன் மதிப்பை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது. ஏராளமான பொருட்கள்
உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. குவிக்கப் பட்டுள்ளன. ஆனால் அவற்றை ஒருபோதும்
பயன்படுத்த முடியாது. ஏராளமான செய்திகள், சங்கேதங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. ஆனால்
அவற்றை ஒருபோதும் வாசிக்க முடியாது. ஏராளமான அறிக்கைகள், செய்திகள், ஆவணங்கள் -
ஆனால் ஒரு சிந்தனையும் தோன்றவில்லை. ஏராளமான திட்டங்கள், முடிவுகள் - ஆனால் ஒன்றும்
நிகழவில்லை. ஏராளமான நவீன ஆயுதங்கள் - ஒரு யுத்தமும் அறிவிக்கப் படவில்லை. இந்தத்
தேக்க நிலை, இந்த உபரி உற்பத்தி -இதுவே பயன் மதிப்பை முடிவுக்குக் கொண்டுவந்தது.
அரசியல் பொருளாதாரத்தின் முடிவு பற்றி மார்க்சியம் கனவு கண்டது. வர்க்கங்களின்
அழிவு பற்றி அது கற்பனை செய்தது. "அத்தகைய கனவு இன்று தேவையில்லை. ஏனெனில் நம்
கண்ணெதிரே அரசியல் பொருளாதாரம் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது. அது இயல் கடந்த
பொருளாதாரமாகத் தன்னை உருமாற்றிக்கொள்கிறது. இவ்விதமாக அது குறிகளின் விளையாட்டாக
மாறிக்கொண்டிருக்கிறது. அரசியல் பொருளாதாரத்தின், வர்க்கங்களின் முடிவு நாம் முன்பு
எதிர்பார்த்ததுபோல் நடக்கவில்லை. மாறாகத் தனது தர்க்கத்தைக் கிளறிக்கிளறி சுய
எள்ளல் என்கிற நிலைக்குக் கொண்டுசெல்வதன் மூலம் அது தன்னை முடித்துக்கொள்கிறது"
என்று விவரிக்கிறார் போத்ரியா.
மார்க்சியத்தின் மீது போத்ரியா வைக்கும் விமர்சனங்களில் முக்கியமான இன்னொன்று,
உயிர்ப்பு மிக்க உழைப்பின் மீது இறந்த உழைப்பு செலுத்தும் மேலாண்மை குறித்ததாகும்.
இந்தப் பிரச்சினை குறித்து மார்க்ஸ் உணர்ந்தே இருந்தார். அதனால்தான், மூலதனத்தின்
ஒரு கட்டத்தில் மனிதன், உற்பத்தி நடைமுறையின் பிரதான காரணியாக இருப்பதிலிருந்து
விலகி உற்பத்தி நடைமுறையின் ஓரத்துக்குச் சென்றுவிடுகிறான் என்பது மார்க்ஸ்
கொண்டிருந்த நம்பிக்கை. விஞ்ஞானம் பற்றியும் தொழில்நுட்பச் செயல்பாடுகள் பற்றியும்
அவர் கொண்டிருந்த நம்பிக்கை மிகவும் தவறானதாகும். இது இறந்த உழைப்பின் அடியில்
தங்கியிருந்த சாவு என்ற கூறைச் சரியாகக் கணிக்காததால் வந்ததாகும். ஏனெனில்
எந்திரங்களின் யுகத்தில் உற்பத்திச் செயல் என்பது உழைப்புச் செயலாக இருப்பதில்லை.
அங்கே, எந்திரங்கள் சமூக இலக்குகளை நேரடியாக உற்பத்தி செய்கின்றன. அதன் வழி
உற்பத்தியை அவை உற்பத்தி செய்கின்றன.
உயிர்ப்பு மிக்க உழைப்பின் மீது இறந்த உழைப்பின் மேலாண்மை நிறுவப்படுவதோடு
உற்பத்தியின் இயங்கியல் தகர்ந்துவிடுகிறது. இதன் தொடர்ச்சியாக மார்க்சியம் தனது
இயக்கத்திற்கு அடிப்படையாகக் கொண்டிருந்த எல்லா முரண்களும் உண்மை
x பொய், தோற்றம் x யதார்த்தம், பயன் மதிப்பு
x பரிவர்த்தனை மதிப்பு என எல்லா எதிரிணைகளும்
முடிவுக்கு வந்துவிடுகின்றன.
உழைப்பு என்பது தனது எதிரியான மூலதனத்தை உற்பத்தி செய்ததன் மூலமாக மட்டுமே
உற்பத்திக் குணம் கொண்டதாக இருக்க முடியுமென மார்க்ஸ் கூறியதைத் தர்க்கபூர்வமாக
நீட்டித்தால், உழைப்பு தன்னைத் தானே மறுஉற்பத்தி செய்துகொள்ளும் இன்றைய நிலையில்
அது தனது உற்பத்திக் குணத்தை இழந்துவிட்டது என்ற முடிவுக்கு வந்து சேர்வோம்.
இன்று எல்லா விதமான உழைப்பும் சேவை உழைப்பு என்ற வகைப்பாட்டிற்குள் வந்துவிட்டன
எனக் குறிப்பிடும் போத்ரியா, இங்கே சேவை உழைப்பு என்பது நிலப்பிரபுத்துவ
அர்த்தத்தில் கூறப்படவில்லை எனவும் வலியுறுத்துகிறார்.
இந்த விதத்தில் உழைப்பு என்பது பிற செயல்பாடுகளிலிருந்து வேறுபடுத்திப்பார்க்க
முடியாததாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஓய்வு நேரத்திலிருந்து உழைப்பை வேறு
படுத்திப்பார்க்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இப்படிப் பார்க்கும்போது
தொழிலாளிகள் உற்பத்தியின் முகவர்களாக மாறிவிட்டதை நாம் உணரலாம். உற்பத்தியின்
முகவர்கள் என்பது எதையும் உற்பத்தி செய்யாதவர்கள் என்ற நிலையைக் குறிக்கிறது.
தொழிலாளர்கள் உற்பத்தி செய்யாதவர்கள் என்ற நிலையை அடைவது, உற்பத்தியின்
செயல்முறையில் ஓரத்துக்குச் சென்றுவிடுவார்களெனத் தொழிலாளர்கள் குறித்து மார்க்ஸ்
குறிப்பிட்ட அந்த நிலையை அடைவதாகும்.
I V
மூலதனம் தனது இயக்கப் போக்கில் உழைப்புச் சக்தியைக் குறைத்துவிடுமென்பதையும்
அதற்குப் பதிலாக இறந்த உழைப்பை அது பயன்படுத்தும் என்பதையும் மார்க்ஸ்
உணர்த்திருந்தார். உயிர்ப்பு மிக்க உழைப்பே மூலதனத்தின் அவசியமான அடிப்படை என்பதால்
அதைக் குறைப்பதன் மூலம் முதலாளித்துவம் தனக்கான சவக்குழியைத் தானே
தோண்டிக்கொள்கிறது என அவர் குறிப்பிட்டார். ஆனால் இன்று இறந்த உழைப்பு மூலதனமாகவும்
உயிர்ப்பு மிக்க உழைப்பாகவும் தன்னைப் பிரித்துக்கொண்டு செயல்படுகிறது. இப்படி
நிர்ணயிக்க முடியாத களத்தில்தான் மூலதனத்தின் உண்மையான மேலாண்மை இப்போது
தங்கியிருக்கிறது என்பது போத்ரியாவின் கணிப்பு.
இந்நிலையில் இந்த அமைப்பைத் தோற்கடிக்க நாம் யதார்த்தம் என்கிற தளத்தில் போராடக்
கூடாது. நாம் எல்லாவற்றையும் குறியீட்டுத் தளத்துக்கு மாற்றியாக வேண்டும். இந்த
அமைப்பு வழங்கும் மரணத்துக்கான எதிர்வினையாக அதனினும் மேம்பட்டதொரு மரணத்தை நாம்
அதற்கு வழங்க வேண்டும். இந்த அமைப்பின் அதிகார விதிகளை அதற்கு எதிராகத் திருப்புவதே
ஒரே வழியாகும்.
உழைப்புச் சக்தியென்பது மரணத்தில் பொதிந்துள்ளது. உழைப்பு, சக்தியாக மாற
வேண்டுமெனில் ஒரு மனிதன் செத்தாக வேண்டும். இந்தச் சாவை அவன் சம்பளமாக
மாற்றுகிறான். உழைப்பு என்பது மெதுவாக நடக்கும் மரணம். உடல் ரீதியாகச் சோர்ந்து,
தீர்ந்துபோவதோடு வைத்து இதைப் புரிந்துகொள்வது வழக்கம். இது இன்னொரு விதத்திலும்
புரிந்துகொள்ளப்பட வேண்டும். உழைப்பு என்கிற மெதுவான மரணம் வாழ்வின் நிறைவுக்கு
எதிரானதாக வைத்துப் பார்க்கப்படுகிறது. அதற்கு மாறாக, உழைப்பு என்பது வன்முறையான,
வேகமான மரணத்துக்கு எதிர் நிலையில் வைத்துப் புரிந்துகொள்ளப்பட வேண்டும். அதுவே
குறியீட்டு யதார்த்தம். உழைப்புக்கு மாற்று ஓய்வு நேரமல்ல. மாறாக, உழைப்புக்கு
மாற்று, தியாகம், பலி.
அடிமையின் வரலாற்றைப் பார்த்தால் இது புலப்படும். முதலில் போரில் பிடிக்கப்படும்
கைதி உடனே கொல்லப்பட்டான். பிறகு அவன் கொல்லப்படாமல் யுத்தத்தின் அடையாளமாகப்
பாதுக்காக்கப்பட்டான். வென்றவனின் பெருமிதத்தின் சின்னமாகக் கருதப்பட்டான். அதன்
பிற்பாடுதான் அவன் உழைக்கும் அடிமையானான். அவன் சாவிலிருந்து விடுவிக்கப்பட்டது
உழைப்பதற்காக. தள்ளிப்போடப்பட்ட மரணத்திலிருந்தே உழைப்பு தனது அர்த்தத்தை,
அடையாளத்தைப் பெறுகிறது. உழைப்பு என்பது வாழ்வால் தீர்மானிக்கப்படுகிறது. மூலதனம்
தொழிலாளியைச் சுரண்டிக் கொலை செய்வதில்லை. மாறாக, அவர்களுக்குச் சாவை மறுப்பதன்
மூலம் மிகப் பெரும் கேட்டினை உண்டாக்குகிறது. சாவை மறுத்து அடிமைகளாக்கி உழைப்பில்
ஈடுபடுத்து கிறது. எஜமானனின் அதிகாரம் மரணத்தைத் தள்ளிப்போடும் சக்தியில்
அடங்கியுள்ளது. கொல்வதில் இல்லை அதிகாரம். வாழ அனுமதிப்பதில்தான் இருக்கிறது
அதிகாரம். இந்த அதிகாரம், வாழ அனுமதிக்கும் அதிகாரம், அடிமையிடம் கிடையாது.
மரணத்தை அப்புறப்படுத்துவதன் மூலம் குறியீட்டுப் பொருட்களின் சுழல்
வட்டத்திலிருந்து அடிமையை எஜமானன் அப்புறப்படுத்துகிறான். அங்குதான் அதிகாரத்தின்
ரகசியம் தங்கியுள்ளது. உழைப்பு, உற்பத்தி, சுரண்டல் எல்லாமே அதிகாரத்தின்
அவதாரங்கள்தாம். அதிகாரமென்பது ஒன்றைப் பெற்றுக்கொள்ளாமல் ஒன்றை அளிப்பது. இது
உணர்த்துவது என்ன? எஜமானன் அளித்த வாழ்வைத் திரும்ப அவனுக்கே தருவதுதான் அதிகாரத்தை
எதிர்த்த செயல்பாடாகும். உயிரோடு இருந்துகொண்டு அதிகாரத்தை நாம் அழிக்க முடியாது.
தள்ளிப்போடப்பட்ட மரணத்துக்கு எதிராக உடனடி மரணத்தை வைப்பதுதான் எதிர்ப்புக்கான
வழி. இதுவே அதிகாரத்தை அழிப்பதற்கான வழி. அடிமையானவன் தனது மரணத்தைக் கையில்
எடுத்துக்கொள்ளாமல் எஜமானனை வெல்ல முடியாது. உழைப்பின் சுருக்குக் கயிற்றில், மெல்ல
மெல்லச் சாவதில் அடிமையானவன் விடுதலை பெற முடியாது. தள்ளிப்போடப்பட்ட,
தாமதப்படுத்தப்பட்ட, தவணை முறையிலான மரணத்துக்கான எதிர்வினை கொடூரமான உடனடி
மரணமேயாகும். அதிகாரமற்ற நிலையை மகிழ்ந்து அனுபவிப்பது அதிகாரத்தை அழிக்காது.
இதையே உற்பத்திச் செயல்பாட்டின் பின்புலத்தில் வைத்துப் பார்ப்போம். உழைப்பின்
மூலம் சுரண்டப்படுபவன், தனது உயிரைச் சுரண்டுபவனுக்கு அளிக்கிறான். ஆனால்
சுரண்டுபவனோ கூலியின் மூலம் அந்தக் கொடையிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்கிறான்.
வெளியில் தெரிவதற்கு மாறாக, தொழிலாளிக்கு மூலதனம் உழைப்பைக் கொடுக்கிறது.
உழைப்புக்குத் தரப்படும் கூலி, உழைப்பவனை நுகர்வோ னாக மாற்றுகிறது. எல்லா வித
மேலாண்மையும் திரும்பப் பெறப் பட வேண்டும். மீட்கப்பட வேண்டும். இது முன்பு பலியின்
மூலம் நடத்தப்பட்டது. அதிகாரத்திற்குச் சரியான பதில் அது நமக்கு எதைக் கொடுக்கிறதோ,
அதைத் திரும்ப அதற்குக் கொடுத்துவிடுவதுதான். மரணத்தின் மூலமாக மட்டுமே இது
குறிப்பீட்டுத் தளத்தில் சாத்தியப்படும்.
அதிகாரமானது நாம் தருவதைத் காட்டிலும் அதிகமாக நமக்குத் திருப்பித் தருவதன் மூலம்
நம்மை மேலும் சேவகம் செய்யவைக்கிறது. நமது அழிவின் மூலம் சில நபர்கள் அல்லது ஒரு
சமூகம் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். நாம் தவணை முறையிலான மரணத்தினூடாக
வாழ்கிறோம். இந்த வன்முறையை ஒரு கொடூரமான மரணத்தின் மூலமே நாம் எதிர்க்க முடியும்.
மரணத்தை நாம் கைக்கொள்கிற இந்தச் செயல்பாடு பற்றிய கனவைக்கூட அதிகாரத்தால்
பொறுத்துக்கொள்ள முடியாது.
V
கார்ல் மார்க்ஸின் எழுத்துக்களை விரும்புபவர்கள் போத்ரியாவை நேசிக்காமல் இருக்க
முடியாது. 'முதலாளித்துவம் தனக்கான புதைகுழியைத் தானே தோண்டிக்கொள்ளும்' என்று
ஆவலோடு நாம் காத்துக்கொண்டிருந்தபோது நமக்கான கல்லறைகளை அது கட்டி
முடித்துவிட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்துபோனோம். 'ஏகாதிபத்தியத்தை
முதலாளித்துவத்தின் உச்சகட்டமாக' மதிப்பிட்ட லெனினியக் கோட்பாடும்கூட இப்போது
பொருத்தமற்றதாய் ஆகிவிட்டது. மார்க்சியக் கோட்பாடுகளை ஆரூடங்களாக
நம்பிக்கொண்டிருந்தவர்கள் இப்போது காஸ்ட்ரோ, ஷாவேஸ் என்று புதிய ஹீரோக்களிடம்
ஆறுதல் கொள்கிறார்கள். இன்றைய சூழலை விளங்கிக்கொள்ளவோ, மாற்றவோ இத்தகைய 'ஆறுதல்கள்'
உதவப்போவதில்லை.
மார்க்சியத்தை இன்றைய சூழலுக்கு ஏற்றபடி பொருள் பொதிந்ததாக மாற்ற வேண்டுமென்றால்
நாம் அவசியம் போத்ரியாவைக் கற்க வேண்டும். செப்டம்பர் 11 தாக்குதலைப் பற்றியும்
வளைகுடா யுத்தத்தைப் பற்றியும் அபு குரைப் சிறைச்சாலைகளில் கொடுமைப்படுத்தப்பட்ட
கைதிகளைப் பற்றியும் போத்ரியா எழுதியிருக்கிறார்.
சமகாலப் பண்பாட்டை ஓயாமல் விமர்சனத்துக்குட்படுத்திவந்த போத்ரியா, இன்றைய நுகர்வுப்
பண்பாட்டையும் பிம்பங்களின் அரசியலையும் புரிந்துகொள்வதற்கு உதவக்கூடிய
கருத்தாக்கங்களை வழங்கிச் சென்றிருக்கிறார். "அரசியல்தான் இப்போது முதன்மை
பெற்றிருக்கிறது. அரசியல் விமர்சனம் என்பது இன்று அவ்வளவாகப் பயன் தரக்கூடியதல்ல.
மற்ற தளங்களில் என்ன நடக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்" என்ற போத்ரியாவின்
சொற்கள் நம்மை அழைக்கின்றன. "அவநம்பிக்கையை, மறுப்பை எனது நிலைப்பாடாகக்
கொண்டிருப்பவன் நான். அதுவே எனது முற்போக்கான அம்சமெனக் கூறிக்கொள்ளலாம்" என்று
கூறியவர் போத்ரியா. "பதில்களே இல்லாத கேள்விகளை, தீர்வுகளே இல்லாத பிரச்சினைகளைக்
கொண்டிருக்கிற நாட்களே மகிழ்ச்சியானவை" என்ற போத்ரியாவின் பட்டியலில் "நம்பிக்கையே
இல்லாத போராட்டங்கள்" என்பதையும் சேர்த்துக்கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. றீ
உள்ளடக்கம்