Google   www kalachuvadu.com

 

அறிவு நாணயம்: ஒரு சோறு பதம்

ஆ. சிவசுப்பிரமணியன்

அண்ணா, பாரதிதாசன் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கியவர்கள் பெரியாரின் நூல்களை இன்றுவரையிலும் நாட்டுடைமை ஆக்காதது ஏன்" என்ற ப்ரவாஹனின் வினாவுக்கு விடை கூறுவதாக நினைத்துக்கொண்டு திண்டுக்கல் பாலமுருகன் "கோயிலில் உருண்டை கட்டிக் கொடுக்கிற விசயமல்ல இது. இலவசமாக எதையும் கொடுக்காதே, வாங்காதே என்பது தி.க.வின் கொள்கை" என்கிறார். பெரியார் திரைப்படத்துக்கு நிதி உதவி என்ற பெயரில் தமிழக அரசு கொடுத்துள்ள 95 லட்சத்திற்கு இலவசம் என்பது இல்லாமல் வேறு என்ன பெயர்?

தனக்குத் தெரியாத விஷயத்தைப் பற்றித் தெரிந்ததைப் போலப் பேசுவது அறிவு நாணயம் அல்ல. அப்படி இருக்கும் போது, நாட்டுடைமை ஆக்கம் என்றால் என்ன என்று தெரியாத பாலமுருகன், தம் அறியாமையை வெளிப்படுத்தியிருக்கிறாரே தவிர அறிவு நாணயத்தை அல்ல. ஒரு பானைச் சோற்றைப் பதம் பார்க்க ஒரு கரண்டி சோறு போதும். 

நாட்டுடைமை ஆக்குவதென்பது இலவசமாகக் கொடுப்பதல்ல. நூல்களின் காப்புரிமையைத் தனியார் வசம் விட்டுவிடாமல் பொதுவாக ஆக்கி அதன் மூலம் அடக்க விலைக்கோ அதிக விலைக்கோ யாரும் அச்சடித்து விற்க முடியும் என்ற நிலையை உருவாக்குவதுதான் நாட்டுடைமை. அவ்வாறு நாட்டுடைமை ஆக்கும்போது அப்படைப்புகளின் பதிப்புரிமையை வைத்திருப்பவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை (பல லட்சங்களை) மக்களின் வரிப் பணத்திலிருந்து அரசே நன்கொடையாக அளித்துவிடும். இவ்வாறாக அக்கருத்துகளைப் பரவலாக்குவதற்கு வழிவகை செய்வதே நாட்டுடைமை ஆக்குவதன் நோக்கம். ஓர் இயக்கத் தலைவரின் வாழ்க்கையைத் திரைப்படமாக்க அரசின் உதவியைப் பெற்றுக்கொள்வதுதான் இலவச அறிவிப்புக்கு இணையானதே தவிர அத்தலைவர்களின் நூல்களை நாட்டுடைமை ஆக்குவது இலவச அறிவிப்பல்ல. 

"பெரியாரியல் என்பது வாழ்வியல் நெறி. ஓர் அரசு ஒரு நெறியைக் காப்பாற்றுவது என்பதே ஒரு கேலிக்கூத்தான விஷயம்" என்கிறார் பாலமுருகன். அரசு உதவியுடன் பெரியார் திரைப்படம் எடுப்பது என்ன என்பதை அவர் விளக்கட்டும். மேலும் அ.தி.மு.க. ஆட்சியின்போது அரசிடமிருந்து பெரும் தொகை ஒன்றை வல்லம் பெரியார் கல்லூரிக்காகப் பெற்றுக்கொண்டது இலவசம் அல்ல என்றால் வேறு எந்தச் சேவைக்கான கைம்மாறு? 

மக்களுக்கு நன்மை செய்பவர்கள் பார்ப்பனரா, சூத்திரரா என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை என்ற அடிப்படையில்தான் ஜெயலலிதா ஆட்சியைத் தி.க. ஆதரித்ததாகவும் அதுதான் தங்கள் நிலைப்பாடே தவிர யார் காலடியிலும் விழுந்து கிடந்து அரசியல் லாபமடைய தி.க.விற்கு ஒன்றும் கேடு வரவில்லை என்றும் பாலமுருகன் எழுதியுள்ளார். ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, "யார் ஆட்சிக்கு வருகிறார்கள் என்பது முக்கியமல்ல; யார் வரக் கூடாது என்பதுதான் முக்கியம்" என்று ஜெயலலிதாவுக்கு எதிராகத் திரு. கி. வீரமணி கூறியதை யாரும் மறைத்துவிட முடியாது. தங்கள் மிரட்டலையும் ஏச்சுகளையும் மீறி ஒருவர் ஆட்சிக்கு வந்ததும் அவரிடம் சரணாகதி ஆகிவிடுவதற்கு உவமை சொல்வதென்றால் "கற்பழிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள முடியவில்லை என்றால், நடப்பது நடக்கட்டும். முழுமையாக அனுபவித்துக்கொள்ளுங்கள்" (If you can't prevent rape, lie down and enjoy) என்று சொல்வது போன்றதுதான். (இதனைவிடப் பொருத்தமான உவமை கிடைக்கவில்லை என்பதால் இதனைப் பயன்படுத்தியுள்ளேன். மன்னிக்கவும்.)

ஒரு கடிதத்திற்குள் எத்தனை முரண்பாடுகள்! ஓரிடத்தில் பாலமுருகன் கூறுகிறார்: "தங்கள் பதவி ஆயுளைக் காத்துக்கொள்ள அரசியல்வாதிகள் செய்யும் அயோக்கியத்தனங்கள் எண்ணிலடங்கா. அவர்களா பெரியாரைக் காப் பாற்றுவார்கள்?" (அத்தகைய அரசியல்வாதிகளில் இன்றைய ஆளும் கட்சியினரும் அடக்கம் என்பதை ஒத்துக் கொள்வாரா என்பதுகூட முக்கியமல்ல.) இதே பாலமுருகன் கடிதத்தின் தொடக்கத்தில், "ஒரு தனிமனிதனின் ஆசைகள் தான் கொண்ட கொள்கைப் பற்றின் பரவலாக்கத் தன்மையை மக்களிடம் எளிமையாகக் கொண்டு சேர்ப்பதற்கும் அதன் மூலம் வெளிப்படும் புகழ்ச்சியை ஏற்றுக்கொள்வதி லும் தவறேதும் இல்லை என்ற நோக்கோடு தி.மு.க. அணி பிரிந்தது" என்றும் குறிப்பிட்டுள்ளார். மேற்கண்ட இரு விதமான கருத்து வெளிப்பாடுகளுக்குள்ளும் எத்தனை முரண்பாடுகள்! தி.க.விலிருந்து தி.மு.க. அணி பிரிந்த செயலே அரசியல் அயோக்கியத் தனத்தின் முதல் அத்தியாயம்தான் என்று சொல்லவருகிறாரா அல்லது நாத்திகம் என்ற பெரியாரின் கொள்கையை "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற முழக்கத்தின் மூலம் பரவலாக்கம் செய்ய முடிந்திருக்கிறது என்று சொல்லவருகிறாரா? 

அதுபோலவே, "சினிமா என்ற அயோக்கியத்தனத்தை" (பெரியாரின் சொற்களைப் பயன்படுத்தியுள்ளேன்) ஒழித்துக்கட்டுவதற்கு வழி பெரியார் பற்றி சினிமா எடுத்து அந்தக் கொள்கையைப் பரவலாக்கி அதன் மூலம்தான் சினிமாவையே ஒழிக்க முடியும் என்று கூட பாலமுருகன் சொல்வாரோ?

பெரியார் திரைப்படத்துக்கும் தி.க.வுக்கும் நேரடித் தொடர்பில்லை என்று பாலமுருகன் கூறுவார் என்றால் இந்த முயற்சிக்குத் தி.க. எதிர்ப்புத் தெரிவிக்காது ஒத்துழைத்தது ஏன்? 

எஸ்.ஆர். சந்திரன்
சென்னை - 44

உள்ளடக்கம்

Google Ads.....


Google