வரலாறு
தலித்துகளுக்கு நவீனக் கல்வி:
வரலாற்றுக் குறிப்புகள்
பாரி. செழியன்
பிற்போக்கான சமூக மதிப்பீடுகளால் புறக்கணிக்கப்பட்ட தீண்டாதார் வாழ்வு மேம்பட, சென்னை மையப் பகுதிகளில் ஐந்து இடங்களில் தீண்டாதாருக்கெனத் தனிப் பாடசாலைகளை நிறுவி, மறுக்கப்பட்ட கல்வி உரிமையைப் பெற்றுத் தந்தவர் கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் (Colonel Henry Steele Olcott).
கர்னல் ஆல்காட், அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் உள்ள ஆரஞ்ச் என்னும் ஊரில் ஆகஸ்ட் 2, 1832இல் பிறந்தார். துவக்கத்தில் அவர் வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சியாளராகப் புகழ் பெற்றார். விவசாய வளர்ச்சி, மாதிரிப் பண்ணைகள், சீர்திருத்தச் சாகுபடி, விளைச்சலைப் பெருக்கும் வழிமுறைகள் பற்றி அவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், செயல் விளக்கங்கள் ஆகியவை The American Cyclopedia இதழில் வெளிவந்தன. The Mark Lane Express (லண்டன்), New York Sun முதலிய இதழ்களில் செய்தியாளராகவும் New York Tribune இதழின் பதிப்பாசிரியராகவும் பணியாற்றினார் ஆல்காட். அமெரிக்க உள்நாட்டுப் போர் நடந்தபோது, போர்த் துறையில் சிறப்பு ஆணையராகவும் பின்னர் கப்பல் படைத் துறையில் ஊழல் தடுப்பு அதிகாரியாகவும் செயலாற்றி கர்னலாகப் பதவி உயர்வு பெற்றார். பத்தாண்டுகள் தேர்ந்த வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட ஆல்காட்டுக்கு ருஷ்ய அரச குடும்பத்தைச் சேர்ந்த H.P. பிளாவட்ஸ்கி (H.P. Blavatsky) அம்மையாரின் சந்திப்பு, பிற்காலத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த செயல்பாடுகளுக்கு வித்தாக அமைந்தது. உலக மக்கள் மத்தியில் மதம் சார்ந்த மூட நம்பிக்கைகளை அகற்றவும் வேற்றுமையற்ற சகோதரத்துவத்தை வளர்க்கவும் சமய ஒருமைப்பாட்டை உருவாக்கவும் உலக அமைதியைப் போற்றவும் நவம்பர் 17, 1875ஆம் ஆண்டு நியூயார்க்கில் தியசாபிகல் சொசைட்டி (Theosophical Society) என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார்கள். கிரேக்க மொழியில் 'Theos' என்றால் தெய்வீகம், 'Sophia' என்றால் உயர் அறிவு. Divine wisdom என்ற பொருளுடையது இச்சொல். 'உயர்ந்த அறம் என்பது உண்மையைத் தவிர வேறில்லை' என்பதே இந்த அமைப்பின் கோட்பாடு. 'இனம், நிறம், சாதி ஆகிய வேறுபாடுகளற்ற மானிட சமுதாயத்தின் உலகளவிய சகோதரத்துவ மையம் ஒன்றை உருவாக்குவது தியசாபிகல் சொசைட்டியின் முதல் குறிக்கோள். ஆல்காட், பிளாவட்ஸ்கி அம்மையார் இருவரும் 1880இல் இலங்கை சென்று பௌத்தத்திற்கு மாறினார்கள். இலங்கையிலும் ஜப்பானிலும் இருந்த பௌத்த சமயத்தின் பிரிவுகளை எல்லாம் இணைத்து 'புத்த சமய வினா-விடை' (Buddhist Catechism) என்ற நூலை ஆல்காட் எழுதினார். இந்நூல் 44 முறை மறு பதிப்புச் செய்யப்பட்டது; 20 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டது. 1898இல் பண்டிதர் க. அயோத்திதாசர், பி. கிருஷ்ணசாமி இருவரையும் ஆல்காட் இலங்கைக்கு அழைத்துச் சென்று பௌத்தராக்கினார்.
1882ஆம் ஆண்டு தியசாபிகல் சொசைட்டி உலக அமைப்பின் தலைமை அலுவலகம் சென்னையிலுள்ள அடையாறுக்கு மாற்றப்பட்டது. 1886இல் ஆல்காட்தான் சேகரித்த நூல்களைக் கொண்டு நூலகம் ஒன்றை அடையாறில் துவக்கினார். நூலகத் தொடக்க விழாவிற்குப் பல்வேறு சமயத் தலைவர்களையும் அழைத்திருந்தார்.
1894 மே மாதம் ஒரு நிலத்தைப் பார்வையிட அடையாறுக்கு அருகிலிருந்த ஒரு கிராமத்திற்குச் சென்ற ஆல்காட், அக்கிராமத்திலுள்ள வறிய மக்களின் வாழ் நிலையைக் கண்டு மனம் கலங்கினார். அம்மக்கள் தங்கள் சேரிக்குள் நுழைந்த ஆல்காட்டைப் பார்த்து அதிசயித்தார்கள். அவர்கள் பொதுக் கிணறுகளில், குளத்தில் குடிநீர் எடுக்க, பொதுப் பாதையில் நடக்க, கோவில்களில், பொதுப் பள்ளிகளில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை அறிந்து ஆல்காட் வருந்தினார். அவர்கள் தங்கள் குழந்தைகள் கல்வி பயில வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர். ஒட்டிய வயிறு, ஒடுங்கிய கன்னம், ஒரு வேளைக் கஞ்சிக்குக்கூட வக்கற்ற அக்குழந்தைகள்மீது ஆல்காட் பரிவுகொண்டார். தீண்டாமைக் கொடுமையில் துயருற்று வாழ்ந்த அவர்கள் முன்னேறப் பணவுதவி வழங்குவதைவிட அவர்கள் கல்வி கற்க வாய்ப்பளிப்பதே அவர்கள் சுயமரியாதையுடன் வாழ வழிவகுக்கும்; அதற்காகத் தன் சொந்தச் செலவிலேயே அங்கு ஒரு பாடசாலையை நிறுவ வேண்டுமெனத் தனது 'பழைய நாட்குறிப்பு ஏடுக'ளில் (Old Diary Leaves) அவர் பதிவுசெய்துள்ளார்.
கிராமவாசிகளுக்கு உறுதி தந்ததுபோல, 1894 சூன் மாதத்தில் ஆல்காட் தன் சொந்தச் செலவில், பனையோலை வேய்ந்த ஒரு மண் குடிசையில், 45 தலித் மாணவர்களோடும் ஒரு ஆசிரியருடனும் ஒரு பள்ளியைத் தொடங்கினார். இந்தியாவில் முதன்முதலாகத் தலித்துகளுக்கெனத் தொடங்கப்பட்ட தனி இலவசப் பள்ளி அதுவேயாகும். துவக்கத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்புவரை கற்பிக்கப்பட்டது. தமிழ் எழுதவும் படிக்கவும் ஆங்கிலம் பேசவும் கணிதம், சமையல், வீட்டு நிர்வாகம், வீட்டைப் பராமரிப்பது, வீட்டு வரவு செலவு பார்ப்பது போன்றவைதான் கற்பிக்கப்பட்டன. இத்தகுதிகள் அமெரிக்க, ஐரோப்பியர்கள் வீடுகளில் வேலை செய்வதற்குப் பயன்படுமென அவர் எண்ணினார். அவ்வேலையின் மூலம் அவர்கள் சுயமரியாதையுடன் வாழ முடியுமெனவும் அவர் கருதினார்.
அப்பள்ளியின் கற்கும் நேரம் மாணவர்கள் வசதி கருதி நிர்ணயிக்கப்பட்டது. வீட்டு வேலை செய்பவர்கள், ஆடு மாடு மேய்ப்பவர்கள், வெளி வேலைகளுக்குச் செல்பவர்கள் ஆகியோரும் கல்வி பயில வேண்டும் என்ற குறிக்கோளுடன், பாடம் கற்பிக்கும் நேரம் வகுப்புப் பிரிவு வேளைக்கு அப்பாற்பட்ட வேளையிலும், அதாவது இரவு நேரத்திலும் கற்பிக்கப்பட்டது. தலித் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் முறையை எளிதாக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. பஞ்சம பள்ளி ஆசிரியர்களுக்கெனத் தனிப் பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கெனப் பயிற்சி, விளக்க ஏடுகள் ('How We Teach the Pariah') வழங்கப்பட்டன. ஆல்காட்டின் பஞ்சம பாடசாலையின் பயனாக, தென்னிந்தியாவில் உள்ள 'இந்து' தலித்துகள் முதன்முதலாகக் கல்வி கற்கத் துவங்கினார்கள்.
இக்காலகட்டத்தில் தமிழகத்தில் கிறித்துவ மிஷனரிகள், சமூகத்தால் உதாசீனம் செய்யப்பட்ட தீண்டாதாரிடம் மனித நேயத்தோடு பழகினார்கள். மதம் மாறிய தலித்துகளுக்குக் கல்வி, மருத்துவம், நிலம், தொழில் போன்ற வசதிகளை முன்னின்று செய்தார்கள். ஃப்ரீ சர்ச் ஆஃப் ஸ்காட்லண்ட் (Free Church of Scotland) என்னும் மிஷனரி இயக்கத்தினர், திருவள்ளூரில் 1857ஆம் ஆண்டில் ஒரு பள்ளியைத் தொடங்கி தலித்துகளுக்குக் கல்வி கற்க வாய்ப்பளித்தனர். அருட்தந்தை வில்லியம் கௌடி 7 மாணவர்களுடன் 1884இல் ஈகாட்டில் ஒரு பள்ளியும் 1891இல் ஒரு விடுதியையும் கட்டினார். அருட்தந்தை டி. ஜான் ரத்தினம் 1886இல் சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் வெஸ்லியன் மிஷன் பள்ளியை நிறுவினார். செங்கல்பட்டு வட்டத்தில் அருட்தந்தை ஆடம் ஆண்ட்ரூ 1892இல் ஒரு மரத்தடி நிழலில் ஒரு பள்ளியைத் தொடங்கினார். அவர் பின்னர் விடுதிகள் கூடிய பல பள்ளிகளை நிறுவினார். கிறித்துவ மிஷனரிகள் போலத் தீண்டாதாரிடம் மத மாற்றம் போன்ற எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் ஆல்காட் எந்த மதம், எந்த இனம் என்ற பார்க்காமல் தன் அமெரிக்க நண்பர்களின் நன்கொடை உதவியால் தலித்துகளுக்கான பாடசாலையை நடத்தினார். எட்டு உறுப்பினர்கள்கொண்ட ஒரு நிர்வாகக் குழு அமைக்கப்பட்டு, அதன் ஆலோசனைப்படி பள்ளி இயங்கியது. பள்ளிச் செயல்பாடுகள் அனைத்தும் அவ்வப்போது சுற்றறிக்கைகள் மூலம் நன்கொடையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டன. ஆல்காட் துவங்கிய முதல் பள்ளிக்கு அவர் பெயரே சூட்டப்பட்டு, 'ஆல்காட் பஞ்சம இலவசப் பள்ளி' என்று அழைக்கப் பெற்றது. இன்று அப்பள்ளி எல்லா வசதிகளும் பெற்று Olcott Memorial High School என்னும் பெயரில் மிகப் பெரிய கட்டிடத்தில் செயல்படுகிறது. 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கிறார்கள்.
ஆல்காட் பஞ்சம இலவசப் பாடசாலையில் தலித்துகளுக்குக் கல்வி கற்பிக்க ஆசிரியர்கள் தயங்கினார்கள். அமெரிக்காவிலிருந்து வந்த கருணை உள்ளம் கொண்ட ஆசிரியை பால்மோர் 12 ஆண்டுகள் அர்ப்பணிப்போடு பணியாற்றினார். அவர் அங்கு ஆரம்பக் கல்வி முறையை அறிமுகப்படுத்தினார். சிகாகோவிலிருந்து வந்த ஆசிரியர் கோர்ட்ரைட் பள்ளியின் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்தார். இவர் காலத்தில்தான் மாணவர்களுக்கு அறிவு வளர்ச்சியோடு நல்ல உடல் வளர்ச்சியும் மன வளர்ச்சியும் அடைவதற்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டன. வேளாண்மை, நூல் நூற்பு, களிமண் பொருட்கள், பனவோலைப் பொருட்கள், ஓவியம், வண்ணம் தீட்டுதல் போன்றவை கற்பிக்கப்பட்டன. ஆசிரியர்கள் இ. ஒரர், சி. கோபெல் ஆகியோர் 13 ஆண்டுகள் பணியாற்றினார்கள். ஆல்காட் பஞ்சம இலவசப் பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு இலவச மதிய உணவாகப் பாசிப் பயறும் கஞ்சியும் வழங்கப்பட்டன. பள்ளிகளில் முதன்முதலில் இலவச மதிய உணவு வழங்கியது ஆல்காட்தான். அதோடு சீருடையும் பள்ளிப் பாடப் புத்தகங்களும்கூட இலவசமாக வழங்கப்பட்டன.
இப்பள்ளியின் சிறப்பு, சென்னை முழுவதும் பேசப்பட்டது. த மெட்ராஸ் மெயில் (The Madras Mail) இதழ் பாராட்டி எழுதியது. அதனால் ஆல்காட்டின் கல்விச் சேவை, மக்களின் நலன் கருதிச் சென்னையில் ஐந்து இடங்களில் விரிவாக்கம் செய்யப்பட்டது. கோடம்பாக்கம் தோல் பதனிடும் தொழிற்சாலையில் பஞ்சமர்கள் பெரும் எண்ணிக்கையில் பணிபுரிந்ததால் 1898இல் ஆல்காட் தன் நண்பர் பிளாவட்ஸ்கி அம்மையார் நினைவாக அங்கு தனது இரண்டாம் பள்ளியை நிறுவினார். மூன்றாவது பள்ளியைத் தேனாம்பேட்டையில், ஆறு ஆண்டுகள் தன்னோடு பணியாற்றிய இந்திய நண்பர் தாமோதர் கே. மாவ்லங்கர் நினைவாக 1899இல் நிறுவினார். 1901இல், அடையாறு தலைமை அலுவலகத்திலிருந்து 4 மைல் தூரத்தில் உள்ள மைலாப்பூரில் திருவள்ளுவர் பெயரில் தனது நான்காவது பள்ளியை நிறுவினர். துப்புரவுத் தொழிலாளர்கள் அதிகம் வாழும் கிருஷ்ணாம்பேட்டையில் 1906ஆம் ஆண்டு மே மாதம் தனது ஐந்தாம் பள்ளியை தியசாபிகல் சொசைட்டி நண்பர் அன்னி பெசன்ட் பெயரில் துவங்கினார்.
தீண்டாதார் சுயமரியாதையுடன் வாழ, நல்ல குடிமக்களாக மேம்பட உழைத்த ஆல்காட் அடையாறில் பிப்ரவரி 17, 1907 அன்று மறைந்தார். ஜாதி, மதம், இனம், நாடு கடந்து மனிதநேயம் காட்டிய ஆல்காட்டின் அரிய பணிகள் 100 ஆண்டுகள் கடந்தும் நினைவுகூரப்படுகின்றன.
சமூகச் சீர்திருத்தம், சுயமரியாதை, தலித் விடுதலை போன்ற கருத்தாக்கங்கள் உருவாகாத காலத்தில், தீண்டாமை, காணாமை கொடூரமாகக் கோலோச்சிய காலத்தில் ஆல்காட் தலித்துகளோடு பரிவுடனும் கருணையோடும் நெருங்கிப் பழகினார். தலித் மாணவர்களோடு பொழுதைக் கழிப்பதை மகிழ்ச்சியான நேரமாகக் கருதினார். தன் வாழ்நாள் இறுதிவரை திரிவேதி என்ற ஒரு தீண்டாதாரையே தன் உதவியாளராக நியமித்து, தலித் விடுதலைக்கு அங்கீகாரம் வழங்கினார். ஆல்காட்டின் பஞ்சம இலவசப் பாடசாலையில் பயின்ற மாணவர்களே சென்னையில் அறிவார்ந்த தளங்களில் செயல்பட்டார்கள்; தமிழில் இதழ்கள் நடத்தினார்கள்; அரசியல் அமைப்புகளைக் கட்டினார்கள்; சமூகச் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பினார்கள்.
நன்றி: அடையாறு ஆராய்ச்சி நூலக மையம், சென்னை.
குறிப்பு: ஏப்ரல் மாதம் தலித் வரலாற்று மாதமாக தலித் இயக்கங்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.
உசாத் துணை
1. Olcott Memorial High School, Centenary Souvenir - 1975
2. Olcott Memorial Schools Platinum Jubilee Programme - 1970
3. Olcott Hairjan Free Schools, Adyar - 1954
4. Reminiscences of Colonel H.S. Olcott (2006)
உள்ளடக்கம்