ஒற்றைத் தன்மையுடைய பொதுவான தளத்தை நிறுவ முயற்சி செய்யும் 'நவீன ஈழத்துத் தமிழ் இலக்கியம்' என்னும் கதையாடலை நிராகரித்து, 'ஈழத்துத் தமிழ் இலக்கியங்கள்' என்னும் பன்முகத் தன்மையுடன் கதையாடல் வேண்டும் என்னும் அறிவிப்புடன் வெளியீட்டைத் தொடங்கியிருக்கிறது 'பெருவெளி' காலாண்டிதழ்.
தலையங்கப் பகுதியைத் தொடர்ந்து, 'மூதூர்: வரலாற்றில் இன்னுமொரு கறுப்புப் பக்கம்' என்னும் தகவல் பதிவுக் கட்டுரை இடம் பெற்றுள்ளது. மேலும், நேர்காணல், கட்டுரைகள், பத்திகள், புத்தக மதிப்புரைகள் என வழக்கமான சிற்றிதழ்ப் பகுதிகள் 'பின்நவீன'ப் பார்வையில் முன் வைக்கப்பட்டுள்ளன.
அப்துல் றஸாக்கின் சிறுகதை, றியாஸ் குரானா, மஜீத், முழுமதி எம். முர்தளா, நவாஸ் சௌபி, அத்தீக் ஹாஸன் போன்றோரின் கவிதைகள் படைப்பாக்கங்களாக இடம் பெற்றுள்ளன.
கலை, இலக்கிய, சமூகச் செயல்பாட்டாளர் சிராஷ் மஷ்ஹீருடனான நேர்காணல், றியாஸ் குரானாவின் 'சுந்தர ராமசாமி சிந்தனையும் எழுத்தும் - ஒரு பின்நவீன வாசிப்பு' எம்.ஐ.எம். றஊபின் 'மு. பொன்னம்பலத்தை முன்னிறுத்தி முரணும் முரணிணையும்' ஆகிய கட்டுரைகள் சொல்லும் முறையிலும் கருத்தாடல் ரீதியிலும் விரிவான தொடர் விவாதங்களுக்குரியவை.
'பெருவெளி' முன்வைக்கும் இன்றைய ஈழத்து அரசியல், நவீன இலக்கியப் போக்கு சார்ந்த கருத்தாக்கங்களுடன் உடன்படுபவர்களுக்கு மட்டுமல்லாமல் முரண்படுபவர்களின் கருத்தாக்கங்களுக்கும் இடமளித்தால், எழுபதுகளில் ஈழத்திலிருந்து வெளிவந்த 'அலை' போன்றதொரு வித்தியாசமான இதழாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
தனி இதழ்: ரூ. 60
ஆண்டு சந்தா: ரூ. 200 (உள்நாடு), $10 (வெளிநாடு)
தொடர்புக்கு: பெருவெளி
மாவடி ஜங்சன், அக்கரைப்பற்று - 06, ஸ்ரீலங்கா
மின்னஞ்சல்: peruveli@hotmail.com
தொலைபேசி: 071433188