Google   www kalachuvadu.com

 

பதிவு

படைப்பு, படைப்பாளி, விமர்சனம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் செயல்படத் தொடங்கியுள்ள அம்பேத்கர் மையம் சார்பில் தொடர் சொற்பொழிவுகள் மூன்று திங்கட் கிழமைகளில் தொடர்ந்து நடைபெற்றன. தொடர் சொற்பொழிவுக்கான பொதுத் தலைப்பு, 'நானும் எனது எழுத்துக்களும், அவரும் அவர்தம் எழுத்துக்களும்' என்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. 

முதல் சொற்பொழிவை (பிப்ரவரி 26) தமிழியல் துறையின் தலைவர் பேரா. தொ. பரமசிவன் தொடங்கி வைத்துத் தலைமையுரையாற்றினார். அவரது உரை தலித் இலக்கியச் செயல்பாடுகளின் தொடக்கம் குறித்தும் அதன் இன்றைய செயல்பாடுகள் முன்னெடுத்துச் செல்லும் பரிமாணங்கள் குறித்ததாகவும் இருந்தது. 

பின்னர் நிகழ்ந்த அமர்வில் காலச்சுவடின் நிர்வாக ஆசிரியரும் விமர்சகருமான அரவிந்தன் இமையத்தின் படைப்புகள் பற்றிக் கட்டுரை வாசித்தார். வாழ்வின் அசலான பதிவுகளும் யதார்த்தமான பாத்திர வார்ப்புகளும் வட்டார வழக்கின் துல்லியமான பதிவுகளும் இமையத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணங்கள் எனச் சுட்டிக்காட்டினார். பின்னர் ஸ்டாலின் ராஜாங்கம் சோ. தர்மனின் குறிப்பிடத்தக்க சிறு கதைகளை எடுத்து மற்ற படைப்பாளிகளிலிருந்து அவர் எப்படி வேறுபடுகிறார் என விளக்கினார்.

இரண்டாம் சொற்பொழிவு (மார்ச், 5) கே.ஏ. குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் பேரா. காசி. மாரியப்பன், அழகிய பெரியவனின் கதைகளில் அமைந்துள்ள 'நகர்ப்புறம்' எனும் சிந்தனையையும் 'சிகப்பு' எனும் கருத்தியல் அனைத்துக் கதைகளிலும் பரவலாக்கப்பட்ட விதத்தையும் சுட்டிக் காட்டினார். பின்னர் தேவிபாரதி, ஜே.பி. சாணக்யாவின் கதைகளின் கூறுகளையும் அவை கட்டமைத்துக் காட்டும் பின்புலங்கள் பற்றியும் எடுத்துக் கூறினார்.

மூன்றாம் சொற்பொழிவை (மார்ச், 12) பேரா. தி.சு. நடராசன் தலைமை ஏற்று நடத்தினார். சங்க இலக்கியம் தொடங்கி ஒடுக்கப்பட்ட மனிதர்களின் குரல் பதிவுசெய்யப்பட்டுள்ள விதத்தை விவரித்தார். தொடர்ந்து கவிஞர் மதிவண்ணனின் கவிதைகளின் அழகியலையும் பேச்சு மொழியின் வழக்காறுகள் கவிதையில் செயல்படும் விதத்தை எடுத்துக்காட்டினார் யாதுமாகி ஆசிரியர் லெனா. குமார். பின்னர் ந. முருகேச பாண்டியன் சுகிர்தராணியின் கவிதைகளில் உடல் மொழியின் வெளிப்பாடுகளும் தலித்திய வெளிப்பாடுகளும் இணைந்தே இருப்பதை விளக்கினார். இவ்விரு தன்மைகளுக்கும் உள்ள வேறுபாட்டினைக் கூறிப் பொதுக் கட்டமைப்பு உருவாகும் விதத்தைப் பற்றிய தன் பார்வையை வைத்தார் முருகேசபாண்டியன்.

தொடர்ந்து மூன்று வாரங்கள் நாவல், சிறுகதை, கவிதை எனும் பொருள்களில் சமகால தலித் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகள் பற்றிய விமர்சனங்கள் பதிவுசெய்யப்பட்டன. திறனாய்வாளர்களின் கட்டுரை வாசிப்பைப் படைப்பாளிகளும் உடனிருந்து கேட்டனர். பின்னர் தங்கள் படைப்புகளின் நுட்பங்களை உரை வாயிலாக மாணவர்களிடம் வெளிப்படுத்தினர். முதல் வாரத்தில் நாவலாசிரியர்கள் இமையமும் சோ. தர்மனும், இரண்டாம் வாரம் அழகிய பெரியவனும் ஜே.பி. சாணக்யாவும், மூன்றாம் வாரம் மதிவண்ணனும் கலந்துகொண்டனர். கவிஞர் சுகிர்தராணி கலந்துகொள்ள இயலவில்லை.

தம் படைப்புகளுக்கும் தமது வாழ்வனுபவங்களுக்கு இடையிலான உறவு பற்றிப் படைப்பாளிகள் விரிவாகப் பேசினார்கள். வாசிப்பின் முலம் பெற்ற படைப்பூக்கம் பற்றிய அனுபவங்களையும் சாணக்யா பகிர்ந்துகொண்டார். படைப்பு குறித்த தனது பார்வைகளைப் பற்றி சோ. தர்மன் விளக்கமாகப் பேசினார். உரைகளுக்குப் பிறகு பார்வையாளர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்கள் உயிர்ப்புடன் இருந்தன.

இந்த அமர்வுகளை ஒருங்கிணைத்த மையத்தின் இயக்குநர் பேரா. அ. ராமசாமி நன்றி கூற, சொற்பொழிவுகள் நிறைவுபெற்றன. இந்த அமர்வுகளில் பல்கலைக்கழகத் துறைகளின் மாணவர்களோடு பிற கல்லூரிகளிலிருந்து வந்த மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

சேக் அப்துல்லா

உள்ளடக்கம்

Google Ads.....


Google