Google   www kalachuvadu.com

 

பத்தி: தமிழரின் தாவர வழக்காறுகள்

எள் 

ஆ. சிவசுப்பிரமணியன்

மழை குறைவான வானம் பார்த்த விளையும் புன்செய்ப் பயிர்களுள் எள்ளும் ஒன்று. சங்க இலக்கியங்களிலும் இடைக்காலக் கல்வெட்டுக்களிலும் எள் குறிப்பிடப்பட்டுள்ளது. எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயையும் நெய் என்று அழைத்ததால். எள் + நெய் = 'எள்நெய்' என்றாகி "எண்ணெய்" என்று மறுவியதாகக் கூறுவர். வடமொழியில் 'தைலம்' என்ற சொல் எள்ளைக் குறிக்கும். 'திலா' என்ற சொல்லில் இருந்தே முதலில் உருவானதாகக் குறிப்பிடும் கோசாம்பி, இந்தியத் தாவர எண்ணெய்களில் பரவலாகப் பயன்பட்டது எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்தான் என்று குறிப்பிடுவார்.

எண்ணெய் (எள்நெய்) என்ற சொல், எல்லா எண்ணெய்களையும் குறிக்கத் தொடங்கிய பின்னர் 'நல்லெண்ணெய்' என்ற பெயரால் எள்நெய் அழைக்கப்படலாயிற்று. புத்திக்குத் தெளிவு, கண்களுக்குக் குளிர்ச்சி, மனதிற்கு மகிழ்ச்சி, உடலுக்கு வலிமை, அழகு, இளமை ஆகியவற்றை நல்லெண்ணெய்க் குளியலைக் குறிப்பதாக ஆகிவிட்டது. இறந்தவர்களுக்குச் செய்யும் சிரார்த்தச் சடங்கில் எள் முக்கிய இடம் பெறுகிறது. பிதுர்க்களை நிறைவுசெய்யும் பொருட்களில் ஒன்றாகக் கருட புராணத்திலும் மனுதர்மத்திலும் எள் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருவருடன் உறவை முறித்துவிட்டதைக் கோபமாக வெளிப்படுத்தும்போது அவனுக்கு "எள்ளும் தண்ணியும் இறைச்சிட்டேன்" என்று கூறும் வழக்கமும் உண்டு. எள்ளை ஆட்டி எண்ணெய் எடுக்கும் செக்கார்கள் பிரம்மதேயக் குடியிருப்புகளில் இருக்கக் கூடாது என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை பல்லவர் மற்றும் பிற்காலச் சோழர் கல்வெட்டுக்கள் வாயிலாக அறிய முடிகிறது. நெய்யைப் பயன்படுத்தியதால் எண்ணெய் தேவையில்லை என்ற காரணத்தினாலோ, எள் ஆட்டுபவனிடம் தானம் வாங்கக் கூடாது, எண்ணெய் ஆட்டுவோன் பத்து கசாப்புக்காரர்களுக்கு இணையானவன் என்று மனுதர்மம் (4:84-85) குறிப்பிட்டுள்ளது என்பதாலோ இக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்க வேண்டும்.

நல்லெண்ணெய் மட்டுமின்றி அதைத் தயாரிக்கும்போது உருவாகும் எள்ளுப் பிண்ணாக்கும்கூட மருத்துவக் குணம் வாய்ந்தது. கன்று ஈன்ற பசுவிற்கு எள்ளுப் பிண்ணாக்கை இடித்துத் தண்ணீரில் கலக்காமல் அப்படியே உண்ணக் கொடுப்பர். இதன் மூலம் பசுவின் கருப்பையிலுள்ள அழுக்குகள் வெளியேறிவிடும் என்பது நம்பிக்கை. இதே நம்பிக்கையில்தான் இறைச்சி உணவு சாப்பிடுபவர்கள், முதற் பூப்பெய்திய பெண்ணுக்குத் தொடர்ந்து ஐந்து அல்லது ஏழு நாட்களுக்கு ஒரு முட்டையோட்டில் நல்லெண்ணெய் ஊற்றிக் குடிக்கக் கொடுப்பார்கள். தாவர உணவு சாப்பிடுபவர்கள் உழுந்தங்களியை நல்லெண்ணெயில் முக்கிச் சாப்பிடச்செய்வார்கள். வெயிலில் நடந்து களைத்து வரும் ஏழை எளியவர்கள் தம் களைப்பையும் தாகத்தையும் போக்க ஒரு துண்டு எள்ளுப் பிண்ணாக்கைத் தின்று தண்ணீரைக் குடிப்பது வழக்கம். ஓலைச் சுவடிகளை எள்ளுப் பிண்ணாக்கிற்குப் பண்டமாற்று செய்துகொள்ளும் பழக்கம் பதினெட்டாம் நூற்றாண்டில் தென் மாவட்டங்களில் இருந்துள்ளது. எமனது கணக்குப் பிள்ளையாகக் குறிப்பிடப்படும் சித்திரகுப்தனை மையமாகக் கொண்டு நிகழும் "நயினார் நோன்பு" என்ற நோன்பில் முக்கிய படையல் பொருளாக எள்ளுப் பிண்ணாக்கு அமைகிறது. பிள்ளையாருக்கு அவர் பிறந்த நாளன்று படைக்கப்படும் படையல் பொருள்களில் எள்ளுருண்டை முக்கியமானது. கல் இல்லாத புதுக் கருப்பட்டியையும் எள்ளையும் உரிய விகிதத்தில் கலந்து இடித்துத் தயாரிக்கப்படும் எள்ளுருண்டை பசியைப் போக்குவதுடன் மலச் சிக்கலையும் நீக்கும் தன்மையது. உடல் இளைத்தவர்கள், எள்ளுருண்டையைத் தொடர்ந்து உண்டுவந்தால் உடல் பருக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இதன் அடிப்படையிலேயே "இளைத்தவனுக்கு எள்ளு" என்ற சொலவடையும் உண்டு.

வீட்டில் வளர்க்கக் கூடாது என்று விலக்கப்பட்ட தாவர வகைகளுள் எள்ளும் ஒன்று. இறந்தவர் நினைவாக மேற்கொள்ளப்படும் பிண்டம் கரைத்தல் என்ற சடங்கிலும் சிரார்த்தச் சடங்கிலும் எள் பயன்படுத்தப்படுவதால் எள்ளையும் மரணத்தையும் தொடர்புப்படுத்தி இத்தடை உருவாகியிருக்கிறது.

உள்ளடக்கம்

Google Ads.....


Google