Google   www kalachuvadu.com

 

பார்வை

காவேரிக்கு வேண்டுமா அகத்திய நீதி?

யூ.ஆர். அனந்தமூர்த்தி
தமிழில்: நஞ்சுண்டன்

குடவர்களின் பண்பாட்டுச் சொத்தான படோ லெ பளமெ இப்போது ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பாகியுள்ளது. இதை முதலில் தொகுத்தவர் நாடிகேரியண்ட சென்னப்பா (1924). ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்துள்ளவர்கள் அவருடைய பேரக் குழந்தைகளான போவேரியண்ட நஞ்சம்மாவும் சென்னப்பாவும். மொழி பெயர்ப்புக்கு எழுதியுள்ள முன்னுரையில், இவர்கள் இந்தக் காலத்துக் குடகு இளைய தலைமுறையினருக்குக் கன்னட எழுத்தே தெரியாமலிருக்கலாம், அவர்களுக்காக இந்த மொழிபெயர்ப்பைத் தாங்கள் செய்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். இந்த நூலில் நமக்குக் காவேரி புராணம் கிடைக்கிறது. இந்தப் புராணத்தில் என்னை மிகவும் கவர்ந்த கதை இது.

காவேரன் என்னும் பிராமணன் ஒருவன் இருக்கிறான். மகரிஷி எனப் புகழ் பெற்ற இவன் குடகுக்கு வருகிறான். தனக்குக் குழந்தைகள் இல்லை என்று பிரம்மனை வேண்டித் தவம் செய்கிறான். அவனது தீவிரமான தவமே அக்கினியாகி அண்ட சராசரங்களையும் எரிக்கத் தொடங்குகிறது. எல்லாக் கதைகளையும் போல இங்கும் பிரம்மன் வரம் கொடுக்க வந்தேயாக வேண்டியிருக்கிறது. காவேரன் பிரம்மனை ஒரு குழந்தைக்காக வேண்டுகிறான். அப்போது, சாபத்துக்கு ஆளாகியிருந்த காவேரனிடம் பிரம்மன் கருணைகொண்டு தன் அன்பான வளர்ப்பு மகளாயிருந்த லோபமுத்திராதேவியையே காவேரனுக்கு வளர்த்துக்கொள்ளத் தருகிறான். லோபமுத்திரையும் தன் இன்னொரு வளர்ப்புத் தந்தையாகிவிட்டவனை அன்போடு கண்டு காவேரியம்மா என்னும் பெயரோடு அவனுடைய மகளாகிறாள். மனிதர்களின் பாவங்களைக் கழுவ, ஒரு நாள் தான் நதியாகப்போவதாக வளர்ப்புத் தந்தைக்கு வாக்களிக்கிறாள்.

தாய்-தந்தை இறந்த பிறகு பிரம்ஹாத்திரி மலையின் மேல் காவேரியம்மா தேவி அமைதியோடு வாழ்ந்து வருகிறாள். ஒரு நாள் சிவபெருமானைக் காண்பதற்கென்று அந்த மலையில் ஏறிய அகத்திய மகரிஷியின் கண்ணில் குமரியான இந்த அழகி காவேரி படுகிறாள். உடனே அவனுக்கு அவள்மேல் காதல் பிறக்கிறது. 'மனைவியில்லாமல் வாழ்வது மிகவும் கடினம். அதனால் நீ என் மனைவியாக வேண்டும்' என்று அகத்தியன் அவளைக் கேட்டுக்கொள்கிறான். இவன் தனக்குத் தக்க கணவன் என்று நினைத்துக் காவேரி ஒப்புக்கொள்கிறாள். குடவர் சம்பிரதாயத்தின்படி ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டு அவர்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள். ஆனால், திருமணத்துக்கு ஒப்புதல் தரும்போது காவேரி தன்னிடம் காதல்கொண்ட அகத்திய மகரிஷியிடம், 'என்னை விட்டு எங்கேயும் போகக் கூடாது. போனால், நான் நதியாகப் பாய்ந்து போய்விடுவேன்' என்று நிபந்தனை விதிக்கிறாள்.

ஒருமுறை அகத்திய ரிஷி கனகே என்னும் நதிக்குக் குளிக்கப் போக வேண்டிவருகிறது. காவேரியை ஒரு தங்கக் கமண்டலத்தில் அடைத்து 'இவளைப் பாதுகாப்பாக வைத்திருங்கள்' என்று தன் சீடர்களின் கையில் கொடுத்துவிட்டுப் போகிறான். 'ஒரு தங்கக் கமண்டலத்தில் என்னை அடைத்துவிட்டானே இந்த மகரிஷி, என் பேச்சைக் கேட்காத இந்தக் கணவன்' என்று காவேரி கோபப்படுகிறாள். தங்கக் கமண்டலத்தைப் பாதுகாப்பாக எடுத்துக்கொண்டு போன பிராமணப் பையன் காவேரியின் தவ பலத்தால் இடறிவிழுகிறான். கமண்டலம் தங்கமானால் என்ன? அது கீழே விழுந்ததும், காவேரி தன் பெண் வடிவத்தைத் துறந்து நதியாகப் பாய்ந்துவிடுகிறாள்.

அகத்தியனுக்கு இது தெரிந்ததும், அவன் பயந்து பாய்ந்துகொண்டிருந்த காவேரிக்கு மத்தியில் வந்து அவளைத் தடுப்பதற்காக நிற்கிறான். அப்போது காவேரி வலப்பக்கமாகத் திரும்பிவிடுகிறாள். அதனால் வலம்புரியாகிவிடுகிறாள். இந்தக் காரணத்தால், குடவர் பெண்கள் இடுப்பில் வலப்பக்கமாக முந்தானையைச் சொருகிப் புடவை உடுத்துகிறார்கள்.

n n n

காவேரி இப்போது செய்தியில் அடிபடுகிறாள். அவள் இப்படி அதிகாரம் செலுத்திய கணவனைத் துறந்து பாயும் வரைக்கும் அவளை நமக்குத் தேவையான அளவு மட்டும் பிடித்துவைத்துக்கொள்ளலாம். நம்மையும் மிஞ்சி அவள் பாய்வதால் தமிழ்நாட்டுக்காரர்களும் அவளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். இப்படிக் கிடைப்பது, எஞ்சுவது, பொங்குவது, வறண்டுவிடுவது எல்லாம் அவளது கருணையே. இந்த நதியின் கதை அற்புதமானது. இது பெண் விடுதலையின் கதையாகவும் ஆகியிருப்பதால், என் வார்த்தைகளுக்குக் காவேரியின் தயவினால் அதிகமான அர்த்தம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

n n n

காவேரி பூமியின் மேல் மட்டும் பாயவில்லை. நிலத்தடியிலும் ஓடுகிறாள். உயரத்திலிருக்கும் நம் மாநிலத்தில் வேகமாக இறங்குமுகமாகப் பாய்கிறவள் கீழேயிருக்கும் தமிழ்நாட்டில் சற்று நிதானமாகப் பாய்ந்து நமக்கு இருப்பதைவிட அதிக நிலத்தடி நீராகிறாள். கஷ்ட காலத்தில் தமிழ்நாட்டுக்காரர்கள் மேலுக்குத் தெரியாதவளை அவளது தயவினால் பூமிக்கடியிலும் தேடி அடைகிறார்கள்.

இவற்றையெல்லாம் மறந்து கண்ணுக்குத் தெரியும் காவேரியில் யாருக்கு எவ்வளவு பங்கு என்று தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. எதிர்காலத்தில் கேரளத்துக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீர் தற்போதைக்குத் தமிழ்நாட்டுக்குச் சேரட்டும் என்று தீர்ப்பு. கைபிடித்த கணவனே தன்னைத் தடுக்க வந்தபோது, அதை நிராகரித்த காவேரி நம் ஆணைக்குக் கண்டிப்பாக அடிபணியமாட்டாள். அகத்தியனைப் போலவே பிரிட்டிஷ்காரர்களும் காவேரியைத் தடுத்து நிறுத்த முற்பட்டார்கள். 

அவள் இதுவரைக்கும் நம் எல்லோரையும் வளர்த்துவந்திருக்கிறாள். ஆனால், தண்ணீர் குறைவாக இருக்கும்போது, விவேகமிக்கவர்களாக இருக்கும் அளவுக்கு, தண்ணீரைக் கொண்டு எவற்றை விளைவிக்க வேண்டுமென்னும் ஞானம் இல்லாதவர்களாகத் தெரிகிறோம். பயன்படுத்த வேண்டிய நீரைவிட அதிக நீரைப் பயன்படுத்திப் பயிரிட்டதையே மீண்டும் மீண்டும் பயிரிட்டு மண்டியாவில் நிலம் சத்தற்றுப் போகுமளவுக்கு ரசாயன உரங்களைக் கலந்து நாம் நிலத்துக்கும் அநியாயம் செய்கிறோம்; தண்ணீருக்கும் அநியாயம் செய்கிறோம். இன்னமும் தமிழ்நாட்டுக்காரர்கள் மூன்று போகம் எடுத்து, அதுவும் அதிகம் தண்ணீர் தேவைப்படும் பயிர்களைப் பயிரிட்டு, தங்களுக்குக் கிடைக்கும் காவேரி நீர் எதுவும் போதாது என்று ஆர்ப்பரிக்கிறார்கள். பெங்களூர் 'கிரேட்டர்' ஆகிக்கொண்டு போவதாலும் குடி பெயர்ந்து வரும் தமிழர்கள் அதிகரித்துக்கொண்டு போவதாலும், இங்குக் கர்நாடக மாநிலத்தில் தாகம் கொண்டவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. காவேரிப் பிரச்சினையை விவேகத்தால் தீர்க்க வேண்டும். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தத் தமிழ்நாடும் கற்க வேண்டும். நாமும் கற்க வேண்டும். பரம்பரையாக வந்த இந்த விவேகம் எல்லா விவசாயிகளின் ஞானத்திலும் இருக்கவே இருக்கும். தேவையான அளவே வகை வகையான பயிர்களைச் சுழற்சி முறையில் பயிரிட்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாகரிகமாக இந்தத் தேசம் நிலைத்திருக்குமாறு காப்பாற்றியவர்கள் நம் முன்னோர்கள். ஆனால், இயற்கை தன் தாராளத்தனத்தால் நமக்கு எப்படியும் அள்ளி வழங்கிக்கொண்டேயிருக்கும் என்று நாம் பிரமை கொள்ளும்போது மட்டும் இந்த விவேகம் மறைந்துவிடுகிறது. ஆகவே, காவேரியின் கஷ்டம்-நஷ்டம் இரண்டையும் அனுபவிக்கும் கர்நாடக விவசாயிகளும் தமிழ்நாட்டு விவசாயிகளும் கூடி அமர்ந்து யாருக்கு எவ்வளவு தண்ணீர், என்னென்ன விளைவிக்கலாம் முதலானவற்றை விவாதிக்க வேண்டும். கர்நாடகத்தில் அமைச்சராயிருந்த ஹெச்.என். நஞ்சே கவுடர் போன்றவர்களுக்கு இவையெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்கின்றன. விவசாயிகள் தலைவரான புட்டன்னையாவுக்கு விவசாய வாழ்க்கையின் கஷ்டங்களும் தெரிந்திருக்கின்றன. பெரியவரான மாதேகவுடருக்கு நியாயமான ஆதங்கம் இருக்கிறது. அப்படிப்பட்டவர்கள் இப்போது தலைமையேற்க வேண்டும். 

தமிழ் சினிமாக்களையும் பத்திரிகைகளையும் தடைசெய்வதில் பயனில்லை. சாலை மறியல், ரயில் மறியல், கொடும்பாவி எரிப்பு இவற்றால் மக்கள் சலித்துப்போயிருக்கிறார்கள். செய்திக்காக ஆலாய்ப் பறக்கும் ஊடகங்களுக்கு மட்டும் இவற்றால் பயனுண்டு. கர்நாடகத்தில் இருந்துகொண்டு காவேரித் தண்ணீரைப் பயன்படுத்தும் தமிழர்களும் கர்நாடகத்துக்கு மேலும் அதிகமான காவேரித் தண்ணீர் வேண்டுமென்று கேட்கிறார்கள் - இது இயற்கைதான். காவேரி தோன்றுவது மேற்குத் தொடர்ச்சி மலையில். கர்நாடகத்தைச் சேர்ந்த நாங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் தற்போது நடத்திவரும் கொள்ளை இப்படியே தொடர்ந்தால் காவேரித் தாய் வற்றி, வறண்டுபோகும் அபாயம் இருக்கிறது.

அதனால் மேற்குத் தொடர்ச்சி மலையின் வளத்தைப் பேராசையோடு பார்த்து, அதன் அடியிலேயே எதை வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளும் பெருங் கடல் இருப்பதாக நினைத்து, வெப்பத்தை உண்டாக்கும் முன்னேற்றத் திட்டங்களை அங்கே மேற்கொண்டால், அது நம்மை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும். மேற்குத் தொடர்ச்சி மலையில் எந்த முன்னேற்றத் திட்டத்தையும் மேற்கொள்வதில்லை என்னும் தியாக உணர்வு நமக்கு வேண்டும். தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, முடிந்த அளவு மட்டும் பயிரிடுவோம் என்னும் பொறுமையைத் தமிழ்நாடு கடைபிடிக்க வேண்டும். இதற்கு மாறாக, காவேரி பாயும் பகுதியில் அடுத்த தேர்தலில் ஓட்டு வாங்க எவ்வளவு ஆர்ப்பாட்டத்தோடு தாங்கள் கத்த வேண்டும் என்னும் அரசியல்தான் இப்போது நடக்கிறது. காவேரித் தீர்ப்பாணையம் இந்த அடிப்படைக் கேள்விகளைப் பற்றி அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. ஆகவே, இந்தத் தீர்ப்பால் நமக்கும் பயன் இல்லை; தமிழ் நாட்டுக்கும் பயன் இல்லை. தண்ணீரே இல்லாமல் போகும்போது, நாம் எதைத் தான் பங்கிட்டுக்கொள்ள முடியும்? அதனால் காவேரி ஆணையத்தின் தீர்ப்பை நாம் மரியாதையோடு நிராகரிக்க வேண்டும். 

'தமிழ்நாட்டுக்கு நாங்கள் தண்ணீரே விட மாட்டோம்' என்னும் போராட்டம் முன்பு தொடங்கியபோது, அப்போதைய முதலமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா பாதயாத்திரை மேற்கொண்டார். பலரையும் போல நானும் அவருடன் போயிருந்தேன். தொலைக்காட்சி ஒன்று, 'நீங்கள் ஏன் இதில் சேர்ந்துகொண்டீர்கள்?' என்று என்னைக் கேட்டது. 'தண்ணீரைத் திறந்துவிட வேண்டிய அளவு திறந்துவிடும் சுதந்திரம் இந்த மாநிலத்தின் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும். அவருக்கு அந்தச் சுதந்திரத்தைக் கன்னட மக்கள் வழங்க வேண்டும்' என்று நான் சொன்னேன். 'நாம் ஒரு சொட்டுத் தண்ணீர்கூட விடமாட்டோ ம்' என்று முட்டாள் தனமாகப் பேசிவிட்டு, அதன் பிறகு நீதிமன்ற ஆணையால் தண்ணீர் விட்டேயாக வேண்டிய நிலை வந்தால் திடுக்கிடக் கூடாது. அல்லது மக்களுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாகத் தண்ணீர்விடக் கூடாது. நாம் நாகரிகமான சமுதாயம் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளும் கடமை நம்முன் உள்ளது. அரசியலால் எதை வேண்டுமானாலும் சாதித்துவிடலாம் என்று நினைக்கும் தமிழ்நாட்டுச் சாணக்கியர்களின் முன்பும் இந்தக் கடமை உள்ளது. ஜே.ஹெச். பாட்டீல் சொன்னது நினைவுக்கு வருகிறது. கருணாநிதியும் இருந்த அவையில் அவர் சொன்னது இது: 'கர்நாடகத்தின் முதலமைச்சராக நான் தமிழ்நாட்டு விவசாயிகளின் நலனைப் பற்றி யோசிக்க வேண்டும். தமிழ்நாட்டின் முதலமைச்சராகக் கருணாநிதி அவர்கள் நம் விவசாயிகளின் நலனைப் பற்றி அக்கறை காட்ட வேண்டும்.' 

இப்படித்தான் இந்தப் பிரச்சினையை நாம் தீர்த்துக்கொள்ள முடியும். இந்த விவேகம் நம் நாட்டு மக்களின் மனசுக்குள் இருக்கிறது. காவேரி நிலத்தடியிலும் இருப்பதைப் போல.

உள்ளடக்கம்

Google Ads.....


Google