Google   www kalachuvadu.com

 

ஊடக வெளி

அழிபடும் அந்தரங்கம்

அ. ராமசாமி

பிரசாத் என்ற பெயருக்கு முன்னால் 'கன்னட' என்ற சொல்லை அவரே சேர்த்து வைத்திருந்தாரா அல்லது தமிழ் அச்சு ஊடகங்கள்தாம் சேர்த்துச் சொல்கின்றனவா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அந்தப் பெயரைச் சுற்றி எழுப்பப்படும் புனைவுகளுக்கும் எழுதப்படும் கதைகளுக்கும் வண்ணங்கள் வழங்க வேண்டும் என்று என்னிடம் கேட்டால், நான் பரிந்துரை செய்வன பச்சையும் நீலமும் கலந்த செஞ்சுடர் இருட்டு என்பதுதான்.

செஞ்சுடர் இருட்டாகப் பரவி விரியும் காட்சிகளில் மிளிரும் பச்சை வண்ணமும் நீல வண்ணமும் உண்டாக்கும் உணர்வுகள் எப்படிப்பட்டவை, அவை பார்வையாளர்களின் மனத்தில் எழுப்பும் உணர்வுத் தூண்டல்கள் என்ன வகையானவை என்பதை விளக்குவதற்குப் புள்ளியியல் விவரங்கள் தேவையில்லை. வண்ணங்கள் பற்றிய பாரம்பரிய அறிவேகூடப் போதும்஢. ஆனால் காட்சிச் சாதனங்களுக்குச் சற்றும் குறையாமல் எழுத்தும் உணர்வுத் தூண்டலைச் செய்யும் வல்லமை உடையது என்பதைத் தர்க்கபூர்வமாக விளக்க வேண்டும் என்றால் புள்ளிவிவர ஆய்வொன்றை மேற்கொள்ளத்தான் வேண்டும். அந்த ஆய்வு வெறும் புள்ளியியல் துறையோடு நின்றுவிடாமல், மருத்துவ உளவியல் துறையையும் இணைத்துக்கொண்ட புள்ளியியல் ஆய்வாக இருந்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கக்கூடும். தமிழின் அச்சு ஊடகங்கள் உண்டாக்கும் உணர்வுத் தூண்டல்கள் பலவிதங்களில் நோய்க் கூறுகள் கொண்டவை என்பதால் தான் மருத்துவத் துறையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறேன். 

முதன்மை வண்ணங்களோடு துணை வண்ணங்களைக் குழைத்து வண்ணக் கலவையை உருவாக்குவதும் அதன் உதவியால் வரையப்படும் காட்சிகளால் பார்வையாளர்களின் ஆழ்மனப் பரப்பிற்குள் புகுந்து, உணர்வுகளைக் கிளறிப் பரவசப்படுத்துவதும் ஓவியக் கலைஞர்களின் முன் உள்ள சவால். ஆனால் ஓவியம், புகைப்படம், சிற்பம் போன்ற காட்சிச் சாதனங்களால் மட்டுமே நேரடியான உணர்வுத் தூண்டல் சாத்தியம் என்பதல்ல. மொழியைப் பயன்படுத்தி எழுதப்படும் புனைவுகளுக்கும் அத்தகைய உணர்வுத் தூண்டல்கள் சாத்தியம்தான் என்பதை நமது வாராந்தரிகள் - குறிப்பாகப் புலனாய்வு இதழ்கள் - சரியாகத் தெரிந்துவைத்திருக்கின்றன.

தமிழ்ப் புலனாய்வு இதழியலின் முன்னோடி எனச் சொல்லிக்கொள்ளும் ஜூனியர் விகடனுக்கு இது வௌ஢ளி விழா ஆண்டு. தமிழ் மக்களின் நாடித் துடிப்பு என அட்டையில் அச்சிட்டுக்கொண்டு வாரத்திற்கு இரண்டு முறை வெளிவரும் அந்த இதழ் வெள்ளி விழாக் கொண்டாட்டத்திற்காகத் தன் வாசகர்களுக்குத் தந்துள்ள சிறப்புப் பரிசு 'ரெட்லைட் ராஜாவின் கதை' என்ற தொடர். விபச்சாரத் தொழிலை அனைத்து வித நவீனத் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி நடத்திவந்த பிரசாத்தின் லீலைகள் பற்றியது. எழுதுபவர் அதன் மூத்த உதவி ஆசிரியர்களுள் ஒருவரான எஸ். சரவண குமார். முகம் மறைக்கப்பட்ட பெண்களின் வண்ணப்படத்தோடு விரியும் அந்தக் கட்டுரை(கதை)த் தொடர் உருவாக்கும் உணர்வுகள் என்னவாக இருக்கும்? வாசகர்களிடம் கேட்டுப் பார்த்தால் மட்டும் போதாது. அவர்களது நாடியையும் பிடித்துப் பார்க்க வேண்டும். 

ஜூனியர் விகடனுடன் எல்லா விதத்திலும் போட்டி போடுவதாக நம்பும் நக்கீரன், பிரசாத் தொடர்பாகவும் தனது போட்டியை உறுதிசெய்துள்ளது. ஜூனியர் விகடனைவிட ஒரு படி மேலே போய்க் கன்னட பிரசாத் எழுதும் நிஜத் தொடரான 'இருட்டு உலகம் 'என்பதன் மூலம் அது வெளிச்சத்தைப் பரப்பிக்கொண்டிருக்கிறது. உண்மை, துணிவு, உறுதி என்ற முழக்கத்தை தன் அடையாளமாகக் கொண்டுள்ள நக்கீரன், நிஜத் தொடர்களின் ஆர்வலன் என்பது வரலாறு. ஆட்டோ சங்கர், சந்தன வீரப்பன், சிவகாசி ஜெயலட்சுமி என அதன் புகழ்பெற்ற நிஜக் காவியங்கள் ஒரு பானைச் சோற்றில் சில பதங்கள்தான்.

ஜூனியர் விகடன், நக்கீரன் அளவுக்குப் பிற புலனாய்வு இதழ்கள் தொடர்களை வௌதயிடவில்லை என்றாலும், தனிக் கட்டுரைகளைப் படங்களோடு வெளியிடத் தவறவில்லை. இருட்டை வெளிச்சம் போட்டுக் காட்டும் எழுத்துப் புனைவுகளைப் புலனாய்வு இதழ்களின் இதழியல் பணி/பாணி என்பதாகச் சுருக்கிவிட வேண்டியதும் இல்லைதான். புலனாய்வு இதழ்களை வெளியிடும் அதே நிறுவனங்களின் வாரப் பத்திரிகைகளும்கூட அக்கறை காட்டும் விசயங்கள்தான் அவை. வெளிப்படுத்தும் அக்கறைகளில் குமுதத்திற்கும் ஆனந்த விகடனுக்கும் குங்குமத்திற்கும் சின்னச் சின்ன வேறுபாடுகள் இருக்கின்றனவே ஒழிய, இந்தப் போக்கிலிருந்து விடுபட்ட ஒரு வார இதழையோ புலனாய்வுப் பத்திரிகையையோ தமிழ் அச்சு ஊடகங்களுக்குள் அடையாளப்படுத்திவிட முடியாது. 

பல நேரங்களில் நாளிதழ்களும்கூட அந்த நோய்ப் பரப்பலைத் தவற விடுவதில்லை. சரவணபவன் ஹோட்டல் அதிபர் கைதானபோது, அவரோடு தொடர்புடைய பெண்களின் கதைகளை ஒட்டுமொத்தத் தமிழ் வாசகப் பரப்பிற்கும் விருந்தாக்கியவை நமது அச்சிதழ்கள் என்பது மறந்துவிடக்கூடியதல்ல. இன்று வட்டார எல்லைக்குள் சுருங்கிக்கொண்டுவிட்ட நாளிதழ்கள் இந்தப் பரபரப்பை வேறு தளங்களுக்கு நகர்த்திக்கொண்டுவிட்டன. மைய நீரோட்டச் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத முறை மாறிய காதல் உறவுகள், கள்ளக் காதல் ஜோடிகளின் தற்கொலைகள் அல்லது கொலைகள் என அவை நகர்ந்துவிட்டன. தமிழின் 'நம்பர் ஒன்' இடத்திற்குப் போட்டியிடும் இதழ்கள் இதனை வாசக ஈர்ப்பு உத்தியாகவே பயன்படுத்துகின்றன. 

மரபான நம்பிக்கைகளின்படியும் நடைமுறையில் இருக்கும் சட்டங்களின்படியும் குற்றவாளிகள் எனக் கருதத்தக்க சில தனிநபர்களின் வாழ்க்கைக் கதையை இந்தப் பத்திரிகைகளின் பக்கங்களில் எழுதிக்காட்டுவதன் நோக்கம் என்னவாக இருக்கும்? பின்பற்ற வேண்டிய முன்மாதிரிகளாக இவர்கள் முன்னிறுத்தப்படவில்லை என்பது உறுதி. அதே நேரத்தில் ஒதுக்கப்பட வேண்டிய முன்மாதிரிகள் என்று வலியுறுத்துவதும் இல்லை என்பதும் உண்மை. அவர்கள் அறியாமல் குற்றம்செய்துவிட்டார்கள் என்று வாதிடுவதும் அவர்கள் செய்த குற்றங்களுக்கு அவர்கள் மட்டுமே காரணமல்ல என வலியுறுத்துவதையும்கூட அந்தக் கட்டுரைகளோ தொடர்களோ தெளிவாக வெளிப்படுத்துவதில்லை. அதற்குமாறாக வேறொரு நோக்கத்தைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. மனித உயிரின் அந்தரங்க வெளிக்குள் தற்காலிகப் பிம்பங்களை அலையவிட்டு, அடக்கி வைக்கப்படும் பாலியல் தூண்டல்களைக் கிளறிவிடும் வேலையைச் செவ்வனே செய்வதுதான் அந்த நோக்கம்.

கடந்த ஒரு மாத காலமாக அச்சடிக்கும் பெயராகக் கன்னட பிரசாத் என்னும் பெயர் இருக்கிறது என்றாலும் அவரோடு சேர்த்து மெல்லப்படும் பெரும்பாலான பாத்திரங்களுக்குப் பெயர்கள் சொல்லப்படுவதில்லை. அந்தப் பாத்திரங்களில் ஆண்கள் என்றால் அவரது பதவி அடையாளம் அல்லது கட்சி அடையாளம் சொல்லப்பட்டுப் பெயர் மறைக்கப்படுகிறது. பெண்கள் என்றால், உடல் அடையாளங்கள் விவரிக்கப்படுகின்றன. அதிலும் நடிகைகள் என்றால் பலரை நினைவூட்டும் குறிப்புகள் திட்டமிட்டுத் தரப்படுகின்றன. பிரசாத், டாக்டர் பிரகாஷ், பாதிரியார் யோபு சரவணன் போன்ற ஆண்மையத் தொடர்களிலும்கூடப் பெண்களின் உடலே முக்கியக் காட்சிப் பொருளாக எழுதிக் காட்டப்பட்டது.

பணத் தேவை காரணமாகப் பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறுவதில் தொடங்கி, அதற்கெனத் தனியான உடை, ஒப்பனைகள் செய்வது, ரகசியக் குறியீடுகளைப் பயன்படுத்துவது, ரகசியப் பயணங்களையும் சந்திப்புகளையும் மேற்கொள்வது, எல்லை மீறிய பாலுணர்வு ஆசைகளின் வெளிப்பாடு, உடல் உறவுக்காக அலைதல், குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு அல்லது எதிர்ப்பு எனப் பெண்களை மையப்படுத்தி எழுதும் பகுதிகளே கூடுதல் இடத்தைப் பிடித்துள்ளன என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. 

கட்டுப் பெட்டியான நாயகிகளைக் கொண்ட திரைப்படம் ஒன்றில் கனவுப் பாடலாகவோ நினைவுப் பாடலாகவோ இடம்பெறும் காமரசம் கொப்பளிக்கும் வார்த்தை மொழிகளையும் உடல் மொழியையும் கொண்ட பாடலில் ஆட்டம்போடும் கவர்ச்சி நடிகைகள், பார்வையாளனின் அந்தரங்க வெளிக்குள் தற்காலிகமாக நுழைந்து வெளியேறுவதைவிட ஆபத்துகள் நிரம்பிய நுழைவுகள் இவை என்பதை நமது அச்சு ஊடகங்கள் உணர்ந்துள்ளனவா என்று தெரியவில்லை. வாசகனின் அந்தரங்க வெளிக்குள் பச்சையும் நீலமும் கலந்த நிழல் பிம்பமாக, பெயரில்லாக் கதாபாத்திரங்களாகப் பெண்களும் குறியீட்டு அடையாளத்தோடு ஆண்களும் உலவும் அந்த உலகம் வாசகனின் மனத்தில் உண்டாக்குவது நோய்க்கூறு நிரம்பிய மனநிலையைத்தான் என்பதை ஆய்வுசெய்து விளக்க வேண்டியதில்லை. 

ஆங்கிலத்தில் வாயரிசம் (voyeurism) என்றொரு வார்த்தை உண்டு. மற்றவர்களின் அந்தரங்க உறுப்புகளைக் காண்பதன் மூலமாக உண்டாக்கப்படும் பாலியல் தூண்டல்களைக் குறிக்கும் சொல் அது. ஆண் குறியையும் பெண் குறியையும் புகைப்படமாகக் காட்டுவது மட்டுமல்ல; உடலுறவுக் காட்சிகளைப் படமாகக் காட்டும்போது தூண்டப்படும் பாலியல் தூண்டல்களையும் சுட்டுவதற்கு அந்தச் சொல்லே பொருத்தமானது. இந்த அர்த்தத்தை முழுமையாகத் தரக்கூடிய ஒரு சொல் தமிழில் இல்லை என்றுதான் நினைக்கிறேன். அச்சு ஊடகங்களில் பணியாற்றும் பலர் பெண்ணுடலையும் ஆண்-பெண் உறவையும் எழுதிக் காட்டப் பயன்படுத்தும் மொழியையும் வர்ணனைகளையும் குறிக்க அந்தச் சொல்லையே பயன்படுத்தலாம் என்று தோன்றுகிறது. 

அந்த எழுத்து முறைக்குள் அந்தரங்க ஆசைகளுக்கான தீனியோடு, பெண்கள்மேல் ஆணாதிக்க மனோபாவம் வெளிப்படுத்தும் அச்சுறுத்தலும் இணைந்தே வெளிப்படுகிறது. இந்த வெளிப்பாடு இரண்டு நோக்கங்களைக் கொண்டது. ஒன்று, புதிய வெளிக்குள் பயணத்தைத் தொடங்கிய பெண்கள், எல்லாக் கட்டுப்பாடுகளையும் உதறித் தள்ளிய, எதற்கும் தயாரான பெண்கள் என்று வெளிச்சம்போட்டுக் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தும் நோக்கம் கொண்டது. இன்னொன்று அச்சுறுத்தலை ஏற்று அவள் தனது வெளிப்பாடுகளை நிறுத்திக்கொண்டு குடும்ப வெளிக்குள் திரும்பவும் ஒடுங்கிவிட வேண்டும் என்ற நோக்கம் கொண்டது. 

இந்த இரண்டு நோக்கங்களையும் அடிப்படையாகக்கொண்டு எழுதப்படும் இந்த எழுத்து முறையைக் குறிக்க வாயரிசம் என்னும் வார்த்தையும் அது தரும் அர்த்தமும் கூடப் போதாது என்றே தோன்றுகிறது. பொருத்தமான வார்த்தையைத் தமிழ் கூறு நல்லுலகம் உருவாக்கிப் பயன்படுத்துவதாக. இந்த இடத்தில் ஊடகங்களைப் பற்றி யாரோ ஒரு அறிஞன் சொன்னதை மட்டும் சொல்லி முடித்துவிடலாம்: 

விரிக்கப்பட்டுள்ள வலைப் பின்னல்களின் வழியே தகவல்கள் வந்து குவிந்துகொண்டே இருக்கின்றன. வாய் மொழியாகவும் அச்சு வடிவிலும் காட்சிப் படிமங்களாகவும் அலையும் பிம்ப அடுக்குகளாகவும் வாசகனின் புலன்களைத் தாக்கும் தகவல்களை அர்த்தப்படுத்திக்கொள்ள அவனுக்கு உள்ள ஒரு மூளை போதாது.

உள்ளடக்கம்

Google Ads.....


Google