வெளியீடு:
அம்ருதா பதிப்பகம்
எண் 5, 5ஆவது தெரு,
எஸ்.எஸ். அவென்யூ, சக்தி நகர், போரூர், சென்னை - 116.
முதல் பதிப்பு - 2006
பக். 234. ரூ. 120
இமையம்
இது மொழிபெயர்ப்புக் காலம். தமிழ் மொழியின் வளத்தைப் பெருக்குவதற்கும் தமிழன்னையின் கிரீடத்தில் வைரக் கற்களைப் பதிப்பதற்கும் தமிழ் எழுத்தாளர்கள் போட்டியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
மேலை நாட்டு இலக்கியப் படைப்புகளில் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் ஒழுங்குமுறையோ பொறுப்புணர்ச்சியோ இல்லாமல் மொழியாக்கம் செய்யலாம் என்ற கேலிக்கூத்து, தமிழில் அமோகமாக நடந்துகொண்டிருக்கிறது. கவனமோ அக்கறையோ இல்லாமல் செய்யப்பட்ட மொழியாக்கம்கூடச் சில நேரங்களில் வாசக கவனத்தை ஈர்த்துவிடும். அந்த வாசக கவனம் படைப்பின் வலுவால் நிகழ்வது. இந்நிலையில் திலகவதியால் மொழியாக்கம் செய்யப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ள 'சல்வடார் டாலி' சிறுகதைத் தொகுப்பு பல விதங்களில் முக்கியமான தொகுப்பாக இருக்கிறது.
'சல்வடார் டாலி' சிறுகதைத் தொகுப்பில் 21 சிறுகதைகள் உள்ளன. 20 இந்திய மொழிகளில் 21 பெண்கள் எழுதிய கதைகள். ஆண்களைப் பற்றி, ஆண்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றி, அவர்களால் உருவாக்கப்பட்ட இந்தியச் சமூகப் பண்பாட்டைப் பற்றி, புராண, இதிகாச ஐதீகங்களை, சாதி, மதங்களின் ஒழுக்க மதிப்பீடுகளைப் பற்றி, கோட்பாடுகளின் தயவில்லாமல், பெண்ணிய முகமூடி இல்லாமல், வாழ்க்கை அனுபவத்தைக் கதையாக்கியிருக்கிறார்கள்.
21 கதைகளையும் பெண்கள் எழுதியிருக்கிறார்கள். ஒரு கதையில்கூடப் புகார் இல்லை. வன்மம் இல்லை. குற்றச்சாட்டு இல்லை. முக்கியமாக ஒப்பாரியும் அழுகையும் இல்லை. அதனால்தான் இக்கதைகள் ஒப்புமை செய்ய முடியாதவைகளாக இருக்கின்றன. திறந்த மனத்துடன் இந்தியாவின் அசலான முகத்தையும் அதிலுள்ள உண்மைகளையும் சமூகத்தையும் வாழ்க்கையையும் உற்றுநோக்கியதன் விளைவுதான் இக்கதைகள்.
ஒரு கதைகூடப் பெண்ணியக் கோட்பாட்டின்படி, அரசியலின்படி வாழ்க்கையை அணுகவில்லை. வாழ்வனுபவத்திலிருந்து வாழ்க்கையையும் சமூகத்தையும் மதிப்பீடு செய்வதால் இக்கதைகள் கூடுதலான ஈர்ப்பைத் தருகின்றன. பிராந்திய மொழிகளில் எழுதுவதெல்லாம் குப்பை என்றும் எதார்த்தமாகப் புரியக்கூடிய வகையில் எழுதுவது இழிவானது என்றும் நடை முறையில் இருக்கக்கூடிய போக்கைத் தவறு என்று இக்கதைகள் நிரூபிக்கின்றன.
இந்தியக் குடும்ப அமைப்புக்குள் பெண் வேலைக்காரியாகவும் தாதியாகவும்தான் வருகிறாள். மனைவி, தாய் என்பதுதான் அவளுடைய அடையாளமாக இருக்கிறது. சுய கௌரவமும் தன்மானமும் இல்லாமல் பெண்கள் வாழ்வதற்குக் காரணம் கணவனோ குடும்பமோ மட்டும் அல்ல; இந்தியக் கலாச்சாரப் பண்பாட்டுக் கூறுகள், புராணிக மதிப்பீடுகள், வரலாறுகள் போன்ற எல்லாமும்தான். இன்றைய நவீன விஞ்ஞான காலத்திலும்கூடப் பெண்களின் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருப்பதற்கான காரணங்களை ஆராய முயன்றுள்ளன இக்கதைகள்.
ஒரு குழந்தை வளர்கிற விதம் முக்கியமானது. ஆனால் இந்தியக் கலாச்சாரத்தில் ஆண் குழந்தைகள் ஒருவிதமாகவும் பெண் குழந்தைகள் வேறொரு விதமாகவும் வளர்க்கப்படுகிறார்கள். பெண் குழந்தைகளுக்குப் புழங்கும் இடமும் பழகும் மனிதர்களும்கூட வரையறுக்கப்பட்டவையாகத்தான் இருக்கின்றன. அவர்களுடைய கனவுகளும் ஆசைகளும்கூடத் திருமணத்தை மையமாகக் கொண்டவையாகத்தான் இருக்கின்றன. எந்த அளவுக்குக் கட்டுப்பாடுகளும் ஒழுக்க விதிகளும் பெண்ணுக்கு இருக்கிறதோ, அதைவிடப் பன்மடங்கு சுதந்திரமும் அதிகாரமும் ஆணுக்கு இருக்கிறதே என்று அலட்டல் இல்லாமல் கேட்கிறது 'வழுக்கியவள் கதை'.
சாதி, மதக் கட்டுப்பாடுகள், சமூக அற மதிப்பீடுகள், ஒழுக்க நெறிமுறைகள் போன்றவை பெண்களை மட்டும் வதைப்பது ஏன்? பெண்களிடம் மட்டும் எதிர்பார்க்கப்படுவது ஏன்? குடும்பத்தில் வரும் இழப்பு, துன்பம், துயரம், கவலை அனைத்தும் பெண்களைத்தான் பாதிக்கின்றன. ஒரு வேளைச் சோற்றுக்காகப் பெற்ற உடனேயே குழந்தையை விற்கிற அவலம் ('தேவகி' கதையில்) நாகரிகச் சமூகம் என்கிற நம் முகத்தில் மலத்தைக் கொட்டுவதாக இருக்கிறது.
உடல் பருமனாக இருப்பதால், கருப்பாக இருப்பதால், குள்ளமாக இருப்பதால், உயரமாக இருப்பதால், அதிகம் படித்திருப்பதால், வேலைக்குப் போவதால், திருமணத்திற்கு முன் காதலிப்பதால், வரதட்சிணை கொடுக்காததால், குழந்தைப்பேறு இல்லாததால் ... என்று பெண்களை மட்டுமே பாதிக்கக்கூடிய, அவர்கள் மட்டுமே சந்திக்கக்கூடிய சிக்கல்களை, பிரச்சினைகளை வெறும் கோஷங்களாக இல்லாமல், பதியும் தகவல்களாக இல்லாமல் மிகவும் தெளிவாகவும் நுட்பமாகவும் வாழ்க்கை அனுபவங்களாகச் சொல்கிறது இத்தொகுப்பு.
கதைகளில் தலையீடு இல்லாமல் மொழியாக்கம் செய்திருப்பதால் அலுப்பு இல்லாமல் கதைகளைத் தொடர்ந்து படிக்க முடிகிறது. தொகுப்பின் தலைப்பைத் தவிர பிற அம்சங்கள் மதிக்கும்படியாக இருக்கின்றன.
திலகவதியின் எழுத்து வாழ்க்கையில் 'சல்வடார் டாலி' - சிறுகதைத் தொகுப்புக்கு முக்கிய இடம் உண்டு.
குறிப்பு: 6.01.2007இல் அம்ருதா பதிப்பக நூல் வெளியீட்டு விழாவில் - 'சல்வடார் டாலி' நூலை வெளியிட்டுப் பேசிய உரை