சிங்கூர் பிரச்சினையில் மார்க்சிஸ்டுகள் போடும் இரட்டை வேடம் ஒன்றும் புதிய விஷயமல்ல. யாருடைய நலன்களைக் காப்பாற்றுவதற்காக மார்க்சிஸ்ட் முதல்வர் இந்தப் பாடுபடுகிறார் என்பது வெளிப்படையானது.
கார்ல் மார்க்ஸ், எங்கெல்ஸின் பாதையிலிருந்து இந்தியக் கம்யூனிஸ்டுகள் வெகுவாக விலகிச் சென்றுவிட்டனர். இழப்பதற்கு ஒன்றுமில்லை, பெறுவதற்கு ஒன்றிரண்டு தொகுதிகளைத் தவிர என்பதுதான் இன்றைய மார்க் சிஸ்டுகளின் முழக்கம். கம்யூனிஸ்டுக் கட்சிகள் ஆளும் மாநிலங்களிலுள்ள விவசாயிகளும் தொழிலாளர்களும் தான் வேறெந்த மாநிலத்தின் விவசாயிகளையும் தொழிலாளர்களையும்விட அதிகப் பாதிப்புக்குள்ளானவர்கள் என்பதை நாடே அறியும். வங்க தேசத்தின் பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரீனை கல்கத்தா விமான நிலையத்திலிருந்து விரட்டியடித்த பெருமை, பெண்ணியம் பேசும் மேற்கு வங்க ஆளும் மார்க்சிஸ்ட் கட்சித் தொண்டர்களுக்கு உண்டு. முஸ்லிம்களின் வாக்கு வங்கியைக் கைப்பற்றுவதற்காகக் கேரளத்தின் ஈ.எம்.எஸ். நம்பூதிரி பாட் போன்ற தலைவர்கள் புரிந்த அரசியல் சாணக்கியத்தனங்களை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். முல்லை பெரியாறு அணையின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் என்னும் தமிழக அரசின் கோரிக்கையையும் சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம் அமைப்பதற்கு ரயில்வே துறை மேற்கொண்டுள்ள முயற்சிகளையும் கேரள மார்க்சிஸ்டுகள் எந்த அளவுக்குப் பிடிவாதமாக மறுத்தும் எதிர்த்தும் வருகிறார்கள் என்பதும் அதற்குப் பின்னால் இயங்கும் 'பொதுவுடமை' மனோபாவமும் நாட்டு மக்கள் அறியாதவை அல்ல. மார்க்சிஸ்டுகளின் இன்றைய போக்கைப் பார்க்கும்பொழுது 'கம்யூனிஸ்டுகளிடமிருந்து கம்யூனிசத்தைக் காப்பாற்றுங்கள்' என முன்னாள் ருஷ்ய அதிபர் கோர்பசேவ் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.
கே. கணேசன்
கோவை-27
ரவிக்குமாரின் 'நீரால் எரியும் நெருப்பு' கட்டுரையில் உள்ள காவிரி நடுவர் மன்ற வரலாறு குறித்த தகவல்கள் பெருமூச்சுவிடவைக்கின்றன. இந்தியா என்னும் ஒரே அரசியல் வரைபடத்திற்குள் இருக்கும் மூன்று நான்கு மாநிலங்களுக்கிடையே நதிநீரைப் பங்கிட்டுக்கொள்வது தொடர்பான தகராறுகள் இவ்வளவு காலமும் தீர்வு காணப்படாமல் நீண்டுவருவது வியப்பளிக்கிறது. நதிநீர்ப் பங்கீடு குறித்த ஒருமித்த கருத்தை உருவாக்கத் தவறியதே பிரச்சினையின் தீவிரத்திற்குக் காரணம். நதிநீர் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது என்னும் கருத்தையும் பரஸ்பரப் புரிந்துணர்வையும் தொடக்கம் முதலே உருவாக்கியிருக்க வேண்டும். மாநில எல்லைகளைத் தாண்டி மக்களிடையே ஒருங்கிணைப்பை உருவாக்கியிருந்தால் பிரச்சினை தீவிரமடைந்திருக்காது.
முத்தம் செல்வக்குமார்
சேலம் - 636 111
'அவுட்லுக்' பிப்ரவரி 5, 2007 இதழில் 'புகைப்பவர்களைப் பறையர்கள் போல் உணரவைக்கிறது' என்று புகைப்பதைப் பற்றிய ஒரு செய்திக் கட்டுரையில் திரு. ரகு கர்னாட் குறிப்பிட்டிருந்தார். பறையன் என்ற சொல்லின் அவமானகரமான உபயோகம் நம் நாட்டில் மட்டுமல்ல, உலக அளவில் இருக்கிறது.
சென்ற மாதம் மியூனிக் நகரில் நடந்த, இந்தியா உட்பட்ட 250க்கும் மேற்பட்ட நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகள், ஆலோசகர்கள் கலந்துகொண்ட ஒரு மாநாட்டில் ருஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பேசும்போது அமெரிக்காவைக் கடுமையாகத் தாக்கினார். அமெரிக்காவின் அழிவுப் பாதை, இந்த உலகம் வாழ்வதற்கு ஆபத்தான இடம் என்ற நிலைக்குத்தான் இட்டுச் செல்கிறது என்று குறிப்பிட்டார்.
புதினின் இந்த உரை, ருஷ்யாவைப் பாதிக்கப்பட்ட நாடாகச் சித்தரித்து அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் குறைகூறும் தன்மையுடன் கடுமையான வசைகளை உள்ளடக்கியதாக இருந்தது. இது அமெரிக்காவைப் பறையர்கள் என்னும் நிலைக்குத் தள்ளிவிட்டது
(assiging America to pariah status) என்று செய்திகளை நிதானத்துடன் தரக்கூடியதென நம்பப்படும் ஒரு செய்தி நிறுவனம் எழுதியது.
ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில்
pariah என்ற சொல்லுக்குக் கீழ்க்கண்ட பொருள் சொல்லப்பட்டிருக்கிறது:
'இந்தியாவில் பறையர் என்றால் கீழ்ச் சாதியினர் அல்லது ஜாதியற்றவர், சமூகத்திலிருந்து விலக்கப்பட்டவர். பறநாய் என்றால் எஜமானற்ற கலப்பின நாய் என்று பொருள்.'
பறையர் என்ற சொல்லுக்கு அகராதியில் இப்படிப் பொருள் இருக்கும்வரை நம் நாட்டு ஊடகங்கள் மட்டுமல்ல, பன்னாட்டு ஊடகங்களும் பறையர் என்ற சொல்லை அவமானகரமாக உபயோகிப்பது தொடரவே செய்யும். எனவே அகராதியில் பறையர் என்ற சொல்லுக்குத் தரப்பட்டிருக்கும் அர்த்தத்தை நீக்குவதன் மூலமே இந்த அவலத்தைத் தடுத்து நிறுத்த முடியும்.
மி. ராஜூ
புதுச்சேரி
சாமானிய மக்களின் கலையான சதிர் என்னும் நடனத்திற்குப் பரதம் என்னும் ஆபரணத்தைப் பூட்டி மேட்டுக்குடிகளின் உடமையாகவும் அலங்கார அடையாளமாகவும் ஆக்கிவிட்ட பிறகு அக்கலை ஒரு கலாச்சார இறுக்கத்தில் சிக்கிவிட்டது. அதனாலேயே அது பொது மக்களிடமிருந்தும் வெகுவாக அந்நியப்பட்டுவிட்டது. அது நடனத்தின் தவறல்ல. ஒரு கற்பு நெறிபோல் அதை ஆக்கியவர்களின் தவறு. கற்பு இலக்கணத்தை மீறுபவர்கள் இங்கு பதிவிரதைகள் அல்லர். ஒதுக்கப்பட்டவர்கள் அல்லது விலக்கப்பட்டவர்கள். அவர்களில் ஒருவர்தான் சந்திரலேகா.
பத்மா சுப்பிரமணியம் வகையறாக்கள், ஏன், திரைப்பட நடிகைகளான திருவிதாங்கூர் சகோதரிகள், ஹேமாமாலினி எனக் கொண்டாடப்பட்ட அளவுக்குக்கூட வெகுஜன ஊடகங்கள் இவரைக் கொண்டாடத் தேவையில்லை; ஆனால் புறக்கணித்திருக்க வேண்டாமே. இவர் மறைவு குறித்துச் செய்திகள் வெளியானபொழுதுதான் இவரது பெயரே எனக்கு அறிமுகம் ஆயிற்று. நாட்டியத்தில் அவர் செய்த புதிய பரீட்சார்த்த முயற்சிகளையும் அவருடைய முழுப் பரிமாணத்தின் ஒரு சோற்றுப் பதத்தையும் தனது சிறிய கட்டுரையிலேயே அழகாகக் காட்டிவிட்டார் ந. முத்துசாமி. குறிப்பாக அந்த நிழற்படங்கள் சொல்லும் செய்தி, சந்திரலேகா மகா மகா துணிச்சல்காரர் என்பதைத்தான். வாழும்பொழுது புறக்கணித்துவிட்டு வாழ்க்கை முடிந்த பிறகு அஞ்சலி செலுத்துவது ஓர் இழிவுச் செயல் என்பதை ஊடகங்கள் இனியாவது உணர வேண்டும். அப்பொழுதுதான் எல்லாத் துறைகளிலும் ஒளிந்திருக்கும் சந்திரலேகாக்கள் வெளிச்சத்திற்கு வருவார்கள்.
நக்கீரன்
நன்னிலம்
'வீடியோ மாரியம்மன்' சிறுகதையின் மூலம் வாசகர்களைச் சப்பாரத்துடன் கிராமத் தெருக்களில் சுற்ற வைத்துவிட்டார் இமையம். காவிரியைப் பற்றிய கட்டுரைகளும் நேர்காணலும் பிரச்சினையை நன்கு ஆராய்ந்து தீர்வு சொல்கின்றன. 'பாரதி 125, புதுமைப்பித்தன் 100, சுந்தர ராமசாமி 75' கருத்தரங்கப் பதிவுகள் அதில் கலந்துகொண்ட மனநிறைவைத் தருகின்றன. நூல் அறிமுகம் மற்றும் திரைப் பகுதிகளில் இடம்பெற்றிருந்த விமர்சனங்களும் சிறப்பு.
கொ.மா. கோதண்டம்
ராஜபாளையம்
2007 சனவரி இதழில் 'நாலடியார் பதிப்பு வரலாறு' என்னும் தலைப்பிலான எனது கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றி. அது தொடர்பாகச் சில தகவல்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
அக்கட்டுரையில் நயனப்ப முதலியார் நாலடியார்க்கு உரை வரையவில்லை என்றும் அவர் பெயரில் வழங்கும் உரையின் ஆசிரியர் தாண்டவராய முதலியார் என்றும் குறிப்பிட்டிருந்தேன். அது தவறு. அவ்வுரை நயனப்ப முதலியாருடையதுதான். அது கடலூர் சபாபதி முதலியாரின் வேண்டுகோளுக்கிணங்க புதுவை நயனப்ப முதலியாரால் எழுதப்பட்டது. வெளிவந்த ஆண்டு 1844. சுப்பராய முதலியார் மகன் முத்துச்சாமி முதலியார் தம் ரிக்கார்டு அச்சுக்கூடத்தில் அதனை அச்சிட்டார்.
நான் கட்டுரையை எழுதியபோது நயனப்ப முதலியாரின் உரையோடு கூடிய நாலடியார் பதிப்பு எனக்குக் கிட்டவில்லை. அண்மையில் ரோஜா முத்தையா நூலகத்திலிருந்து அதன் படியைப் பெற்றேன். வாசகர்கள் உண்மையை அறிய வேண்டும் என்பதற்காக இவ்விளக்கம் அளிக்கப்பட்டது.
நான் கட்டுரையில் தவறான தகவலைப் பதிவு செய்ததற்குரிய சூழலையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 1953இல் தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலையம் வெளியிட்ட நாலடியார் உரைவளத்தின் முன்னுரை ஆரம்பத்தில் உள்ள ஓர் அடிக்குறிப்பில் தாண்டவராய முதலியார் நாலடியார்க்கு உரை வரைந்தார் என்று காணப்படுகிறது.
"... என்று சென்னைக் கல்விச் சங்கத்துத் தமிழ்ப் புலவராகவிருந்த தாண்டவராய முதலியாரவர்களும் தமது நாலடி உரையில் கூறியிருப்பது காண்க" (நாலடியார் உரைவளம் 1953, முன்னுரை பக்கம் 10) என்பது பதிப்பாசிரியர் குறிப்பு.
'அச்சும் பதிப்பும்' என்ற நூலின் ஆசிரியர் மா.சு. சம்பந்தன், தாண்டவராய முதலியார் பற்றிக் கூறுகையில் அவர் 1839இல் பதவியுயர்வு பெற்றார் எனவும் தாம் வெளியிடுவதற்கு ஆயத்தமாய் வைத்திருந்த நாலடியாரையும் திவாகர நிகண்டு உரையையும் புதுவை நயனப்ப முதலியாரிடம் ஒப்படைத்துத்தம் சார்பாக வெளியிடுமாறு உரிமையளித்தார் என்றும் கூறிவிட்டுத் தொடர்ந்து 1844இல் நயனப்பர் நாலடியாரை வெளியிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார் (மா.சு. சம்பந்தன், அச்சும் பதிப்பும், மணிவாசகர் பதிப்பகம், இரண்டாம் பதிப்பு, 1997, பக்கம் 164-165). தாண்டவராய முதலியார் 1831இல் நாலடியார் மூலத்தை வெளியிட்டிருந்தார். எனவே இப்பொழுது நயனப்பர் வெளியிட்டது உரையுடன் கூடிய தாண்டவராயர் நூலாகவே இருக்கும் என்று உய்த்துணர்ந்து 19ஆம் நூற்றாண்டில் நாலடியார்க்குரிய முதல் உரையை வரைந்தவர் தாண்டவராய முதலியார் என்று முடிவு செய்துவிட்டேன்.
முனைவர் எ. தட்சிணாமூர்த்தி
தஞ்சை
இதழ் 87 விவாதம் பகுதியில் இடம்பெற்ற மதுரை க.சி. அகமுடைநம்பியின் 'முப்பாலைப் பாதுகாப்போம்' என்னும் தலைப்பிலான கடிதம் முற்றிலும் சரியான பார்வையில் எழுதப்பட்டிருந்தது. தமக்குத் தோன்றியதை எழுதித் தமது சொந்தச் செலவில் நூலாக வெளியிடுவது எவருக்கும் எளிது. உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு ஒவ்வொருவரும் தமது மனம் போனபடி உரையெழுதுவதைச் சகித்துக்கொள்ள முடியாத நிலையில் சாலமன் பாப்பையா போன்றவர்கள் செய்ததுபோக க.ப. அறவாணன் தனது பங்குக்குச் சிதைத்துக்கொண்டிருப்பதைத் திருக்குறள்மீது பற்றுகொண்ட யாராலும் ஏற்க முடியாது. குறளின் மூலக் கருத்துகளும் சொல்லாட்சியும் சிதையாத வகையில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சிகளை வரவேற்கலாம். இது போன்ற முரணான அதிகார வரிசை எந்த வகையில் குறளுக்கு நியாயம் செய்கிறது?
மூ. முரளீதரன்
சென்னை 67
இதழ் 86இல் பிரசன்னா ராமஸ்வாமியின் 'ஆரார் ஆசைப்படார்' என்னும் ஆவணத் திரைப்படத்திற்கான மதிப்புரையையொட்டி அவர் தெரிவித்திருந்த கருத்துகளை 'எதிர்வினை' பகுதியில் படித்தேன்.
விஸ்வாமித்திரன் தனது விமர்சனத்தில் சஞ்சயின் மற்ற முகங்கள் குறித்த சித்தரிப்புகளையும் படம் வழங்கியிருந்தால் இன்னும் கூர்மையுடன் இருந்திருக்கும் என்று குறிப்பிட்டிருக்க, அதற்கு, 'என் வத்தக் குழம்பு, என் புடவை, உன் கவிதையை நீ எழுது' போன்றவை பதில்கள் அல்ல. இது விமர்சனப் பார்வைகளையே ஓரங்கட்ட நடக்கும் உதாசீன முயற்சியே.
மேலும் படத்தில் தான் சொல்ல மறந்ததையும் காட்சிகள் சொல்லாத உள்ளீடுகளையும் வார்த்தைகளில் இந்த எதிர்வினை மூலமாக இயக்குநர் வெளிப்படுத்தியுள்ளார். ஆனந்த்சாமியின் பாத்திரப் படைப்பு குறித்த இயக்குநரின் விவரங்கள் 'எதிர்வினை'யில் மட்டுமே உள்ளன.
உதாரணமாய் ஆனந்த் பாத்திரம் தில்லானாவின் ஒலிநாடாவைத் தன் சிநேகிதிக்குக் கொடுப்பதாய் இயக்குநர் கூறுவது படத்தில் இயல்புத் தன்மையுடன் பதிவாகவில்லை. இயக்குநரின் மனதில் இருந்ததை அவரது காட்சிச் சட்டகங்கள் கூறத் தவறியுள்ளன. அதை அவர் தற்பொழுது தன் வார்த்தைகளால் நியாயப்படுத்த முயற்சிக்கிறார். ஆனந்தின் பாத்திரப் படைப்பு படத்தின் சிதறிய பிம்பங்களை ஒன்றிணைக்கும் கொலாஜ் முயற்சியாகவே உள்ளது.
அத்துடன் மாளவிகா சருக்கை, அகிலாவின் நடனம் படத்திற்கு அப்பாற்பட்டு நிற்கின்றன என்னும் விமர்சனத்திற்கு ஆனந்த்சாமியின் தேடல் மூலமாய் இணைப்புகளை உருவாக்கிப் பதிலளித்துள்ளார். மல்லாரியின் வடிவம் குறித்த ஆனந்தின் தேடல்தான் மாளவிகாவின் நடனத்தை ஆனந்த் காணச் செல்கிறார் என்பதற்கான ஆதாரம் காட்சியாகப் பதிவாகவில்லை. இத்தகைய இணைப்புப் புள்ளிகள் மாயைகளாகவே உள்ளன. மாயைகளுக்குக் கற்பிதம் சொல்லும் இயக்குநரின் பதில் அவரது 'எதிர்வினை'யில் கோர்வை விளக்கமாக மட்டுமே நின்றுவிடுகிறது. படத்திலும் அதற்கான பரப்பு இருக்கும் பட்சத்தில்தான் பார்வையாளர் ஏற்க முடியும்.
இயக்குநர் எதிர்வினையில் விளக்கியுள்ள ஆனந்தின் பாத்திரப் படைப்பு, காட்சிகளுக்கான உள்ளோடும் காலம் போன்றவை அவர் எடிட்டிங் மேசையில் உருவாக்கிக்கொண்ட அர்த்தங்களாய் இருக்கின்றன. அவை படத்தின் நகர்வில் எங்குமே வெளிப்படவில்லை.
தமிழில் சினிமா குறித்த நடுநிலை விமர்சனமும் விமர்சனங்களும் ஏற்கனவே மிகவும் குறைவு. இத்தகைய 'எதிர்வினை'களை அமுக்கிவைப்பதன் வாயிலாக அவை மேலும் குறைந்துவிடுவதற்கான வாய்ப்பே அதிகம். இத்தகைய நடுநிலை விமர்சனங்கள் பெருகுவதும் அவற்றைப் பக்குவத்துடன் இயக்குநர்கள் அணுகுவதும்தான் சினிமாவின் தரத்தை மேம்படுத்தக்கூடியதாக அமையும். விமர்சனக் கலைமீதான இத்தகைய அர்த்தமற்ற எதிர்வினைகள் மற்ற இயக்குநர்களிடமிருந்தும் வெளிப்படும் அபாயம் உள்ளது.
நேரடிப் பேச்சிலும் தொலைபேசியிலும் கிடைக்கும் உற்சாகத்தை மட்டும் நம்பாமல் அக்கறையான விமர்சனப் பதிவுகளை ஏற்பதே நம் படைப்புகளை மேம்படுத்தும் வழி. விமர்சனத்தை எதிர்கொள்ளத் தயங்கும் மனப்பான்மையை மட்டுமின்றி விமர்சனத்தையே எதிர்க்கும் நிலையை வைக்கும் இந்த எதிர்வினை ஆபத்தானது.
மு. பிரசாத்
சென்னை
'அன்பின் வழி அது' என்ற தலையங்கம் பயங்கரவாதத்தின் வரலாற்றுக்குப் பின் ஒளிந்துள்ள பிழைபட்ட திட்டம் இன்னும் காலங்காலமாகத் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டுவரும் பிழையைச் சுட்டுகிறது.
கோகுலக் கண்ணனின் 'நெடுஞ்சாலையெங்கும் / கடவுள் தொலைத்த/ ஒற்றைச் செருப்புகள்...' வாழ்க்கையின் அலுத்த பயணத்தில் எஞ்சியிருக்கும் மனப்பதிவாய் எனக்குள் வெளிச்சமிட்டது.
குடிமக்கள் குழுவினரின் இடைக்கால அறிக்கை, சிங்கூர்-நந்திகிராம் ஆகியவற்றிலுள்ள இடங்களுக்கு சமூக மனச் சாட்சியுள்ள எந்தப் பார்வையாளரையும் இட்டுச்செல்ல வல்லது. 'கிராமப்புற உள்நாட்டுப் போர்' எச்சரிக்கையும் ஆளுவோரின் அலட்சியப் பார்வைக்கு உள்ளாகிவிடக் கூடாது. பாலாஜி உணர்வுபூர்வமாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.
'ஊடக வெளி'யில் அ. ராமசாமி கேட்டிருக்கும் கேள்விகள், நம் மக்கள், இயக்க அடிப்படையிலும் எதிர்ப் பிரச்சார அடிப்படையிலும் நகர்த்தப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.
'பெருமை உடைத்து இவ்வுலகு', தனித்தன்மையை நிறுவிய கலையரசியைக் குறித்த தூய்மையான அஞ்சலி.
தேவமைந்தன்
புதுச்சேரி