காலஞ்சென்ற தமிழ் எழுத்தாளர்கள் பதிநான்கு பேருக்கு அதிருஷ்டப் பரிசு அடித்திருக்கிறது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், தி.ஜ. ரங்கநாதன், மா. இராசமாணிக்கனார், சி. இலக்குவனார் உள்ளிட்ட பதினான்கு தமிழ்ச் சான்றோர்களின் நூல்களை நாட்டுடமையாக்குவதாகத் தமிழக அரசு கடந்த பிப்ரவரி 12 அன்று ஆணை பிறப்பித்தது. அதில் வை. கோவிந்தன், த.நா. குமாரசாமி போன்ற சில பெயர்களை இவ்வகையான அறிவிப்பில் முன்பே பார்த்த நினைவு சிலருக்கு இருக்கலாம். அது சரிதான். தேர்தலை ஒட்டிப் பிறப்பிக்கப்பட்ட அந்த அறிவிப்பு, சலுகை அறிவிப்பாகக் கருதப்பட்டதால் அரசு ஆணையாக மாறவில்லை. பரிவுத் தொகையும் வழங்கப்படவில்லை. ஓராண்டுக் காத்திருப்புக்குப் பிறகு, பரிவுத் தொகை ஐந்திலிருந்து ஆறு லட்சமாகியுள்ளது. காத்திருப்பின் பயன்! காப்புரிமைக்குரிய காலவரையறையைத் தாண்டிய பிறகு நாட்டுடைமையாக்கம் செய்வதால் பொது மக்கள் அடையப்போகும் புதிய பலன் ஏதுமில்லை. இப்பட்டியலில் பலர் இக்கால வரையறையைக் கடந்தவர்களே.
தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாவது பற்றிய இலட்சிய நிலை குறித்த எதிர்பார்ப்புகள் சாத்தியமற்ற கற்பனையாகச் சரிந்துகொண்டிருப்பதன் மற்றொரு சாட்சியமாகவே இந்த அறிவிப்பையும் காண முடிகிறது. எனினும் வரிச் சலுகை என்ற பெயரில் திரைத் துறையினர் மக்களின் பணத்தை அனுபவிக்கும் சூழலில் எழுத்தாளர் விஷயத்தில் மட்டும் இலட்சிய நிலையை விரும்புவது ஏளனத்திற்கு உரியதாகிவிடும். ஒப்பீடுகளில்தான் வாழ்க்கை மதிப்பீடுகள் நிர்ணயமாகும் சூழ்நிலையில் இந்தப் பதிநான்கு பேரின் முக்கியத்துவம், தகுதியின் தாரதம்மியங்கள் பற்றிய கேள்வி தமிழ்ச் சூழலில் பொருத்தமற்றது.
பெரும் அரசியல் பிரமுகர்களின் பரிந்துரைகள், பல இதழ்களின் வற்புறுத்தல்கள், எழுத்தாளர்களின் விருப்பங்கள், வாரிசுகளின் வேண்டுகோள்கள், திராவிட, தமிழ் இயக்க ஆதரவு வெளிப்பாட்டின் தேவைகள், மத நல்லிணக்கம், குரு பக்தி முதலிய பல புள்ளிகளின் ஒட்டு மொத்தக் கவர்ச்சிவிசையின் விளைவு இந்தப் பட்டியல்.
இந்தப் பரிவுத் தொகைப் பட்டியலில் உள்ள சான்றோர்களில் ஓரிருவரைத் தவிர பெரும்பாலான மற்றவர்களுக்குப் பரிவு தேவை இல்லை, தொகையும் முக்கியம் அல்ல. கௌரவம் என்ற நடுத்தர வர்க்கக் கவர்ச்சிப் பொறியில் மட்டுமே அவர்கள் சிக்குவார்கள். அது அவர்களுக்கு முழுவதும் கிடைத்துவிட்டதாகத் தெரியவில்லை. தனி அறிவிப்பையும் அறிவிப்பில் காணலாகும் அரசின் எழுத்து அங்கீகாரம் என்ற புகழ்ச் சொற்களே அவர்கள் விருப்பமாகும். ஏகப்பட்ட பெயர்கள் அடங்கிய பொதுப் பட்டியல் மாணவர்களின் தேர்ச்சிப் பட்டியலை நினைவுபடுத்துவதாக அவர்களுக்குப் படலாம்.
இந்தத் தமிழ்ச் சான்றோர்களின் பேரக் குழந்தைகள் தமிழ் படித்திருக்குமா என்றும் அப்படியே இருந்தாலும் பிழைப்புக்கு ஆதாரமாகத் தமிழைக் கொண்டிருக்குமா என்பதும் புலன் விசாரணை நடத்திக் கண்டறிய வேண்டிய உண்மைகள் அல்ல. இந்தப் பேரக் குழந்தைகளில் பெரும்பாலானவர்களின் சிலமாத வருமானம் இந்தப் பரிவுத் தொகை. சட்ட வாரிசுகள் அனைவருக்கும் பிரிக்கும்போது, ஒரு நாள் 'ஷாப்பிங்' செலவுத் தொகையாக இந்தப் பரிவுத் தொகை உருக் குறைந்துவிடும்.
நமக்குத் தெரிந்து இந்தப் பரிவுத் தொகை மிகவும் பயன்படும் ஓரிரு குடும்பங்களும் இந்தப் பட்டியலில் உண்டு. ஒன்று, பதிப்பாளர் வை. கோவிந்தன் குடும்பம். இரண்டாவது, எழுத்தாளர் தி.ஜ.ர. குடும்பம். இலக்கியச் சிற்பிகள் வரிசையில் படைப்புப் பல படைத்தவராக எண்ணப்பட முடியாவிட்டாலும் தமிழ்ப் பதிப்புலகின் அரிதான முன்னோடி வை. கோவிந்தன். நவீனத் தமிழ்ப் புத்தக முகத்தை வடிவமைத்ததில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு. வளமையின் உச்சியில் வாழ்ந்து, வறுமையின் பள்ளத்தில் வீழ்ந்து முடிந்தது அவரது வாழ்வு. அவரது குடும்பத்திற்குத் தமிழரின் பரிவும் தொகையும் மிகவும் தேவை. தி.ஜ.ர.வின் நிலையும் அதுவே.
செத்த பிறகு கிடைக்கும் இந்தக் கௌரவமும் வருமானமும் ஒரு புறம் இருக்க, மதிப்புக்குரிய பல எழுத்தாளர்கள் வாழும்போது பட்ட அவமானங்கள் அருவருப்பூட்டும் அடையாளச் சின்னங்களாக வரலாற்றில் நிற்கின்றன.
தயவுசெய்து பக்கத்திலுள்ள இந்தப் புகைப்படத்தைக் கொஞ்சம் பாருங்கள். இதில் இருப்பவர்கள் வயதான தம்பதியர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள். குடும்பப் படம். முதியவர் வெள்ளை உடை அணிந்திருக்கிறார். அநேகமாகக் கதராக இருக்கலாம். காங்கிரஸ்காரர்! தலை நரைத்துவிட்டது. வயது 70க்கு மேல் இருக்க வாய்ப்பு. மீசை இல்லை, பிராமணராக இருக்கக்கூடும். கைகளில் ஏதோ பிடித்துக்கொண்டிருக்கிறார். சிலேட்டு. அதில் ஏதோ எழுதியிருக்கிறது. ஆண்டிமான்ய தோட்டம் 98 என்பது முதலிரு வரிகள். அடுத்த வரி '156698' என்ற எண். சாக்பீசால் எழுதப்பட்ட சிலேட்டைப் பிடித்துக் கொண்டு தன் குடும்பத்தவர் புடை சூழ, புகைப்படத்திற்குக் காட்சி தருகிறார் அந்தப் பெரியவர். இதன் பின்னணியில் தெரிவன வீடு, வீட்டு எண், மாடி இருக்கும் வீடு என்பதை உணரவைக்கும் படிக்கட்டுகள்.
கதையையோ கவிதையையோ படிப்பதைப் போலவே புகைப்படத்தைப் படிப்பதும் ஒரு கலைதான். சமூக, வரலாற்று, கலாசாரச் சூழலில் வைத்துப் படிக்கும்போது அது உணர்த்தும் அனுபவமும் புரிதலும் பெரியவை.
வறுமை தெறிக்கும் படம். அமர்ந்திருக்கும் நிலையும் காட்சி தரும் பின்னணியும் ஏதோ ஒரு தேவைக்காக எடுக்கப்பட்டது என்பதைப் புலப்படுத்துகின்றன. வறுமையாளர்களின் குடும்ப எண்ணிக்கை எப்போதும் கூடுதலாகவே இருக்கிறது. பின்னால் நினைந்து அசைபோட உதவும் படமல்ல இது. வரவேற்பறையை அலங்கரிக்கக்கூடிய படம் இல்லை. பிறகு என்ன படம் இது? இவர் யார்?
லூயி ஃபிஷர் ஆங்கிலத்தில் எழுதிய காந்தி வாழ்க்கை எனும் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தது உட்பட, கட்டுரை, சிறுகதை, குழந்தை இலக்கியம் ஆகியவற்றிலும் பெரும் பங்களிப்பு செய்த தமிழ் எழுத்தாளரும் பத்திரிகையாசிரியருமான தி.ஜ. ரங்கநாதன்(தி.ஜ.ர.)தான் சிலேட்டைக் கையிலேந்தியிருக்கிறார்.
25க்கு மேற்பட்ட படைப்புகள் அவருடையவை; 1947-74வரை மஞ்சரி ஆசிரியராக இருந்தார்; அதற்கு முன் சக்தி, சுதந்திரச் சங்கு, ஊழியன், சமரச போதினி ஆகியவற்றில் பணி. எழுத்தாளர்களின் நலன் நாடியவர்; சம கால வாழ்வைக் கட்டுரைகளில் மெலிதான நகைச் சுவையுடன் பதிவுசெய்தவர் தி.ஜ.ர.வாகத்தான் இருக்க முடியும். ஜெயகாந்தன் நூலுக்கு எழுதப்பட்ட ஒரே அணிந்துரையின் ஆசிரியர். மொழி வளர்ச்சி என்ற நூலில் தமிழுக்கு எதிராக, பொது மொழியாக ஹிந்திக்கு ஆதரவாக வைக்கப்பட்ட கருத்துகளைக் கடுமையாகத் தாக்கி எழுதினார்; இவ்வளவு சாதுவான தோற்றம் தருபவரா ஹிந்தி ஆதரவாளர்களை இப்படித் தாக்கினார் என்று நமக்குத் தோன்றும்.
இத்தகைய பெருமைக்கும் மதிப்பிற்கும் உரிய எழுத்தாளர்தான் அந்த சிலேட்டை ஏந்தி நிற்கிறார்.
காலனி ஆதிக்க மனோபாவங்களில் ஒன்று அதனோடு தொடர்புகொள்ளும் தனிமனிதனை நம்பாமல் இருப்பது. காலனிய மரபுகளில் தொடங்கி விடுதலைக்குப் பின்னும் இன்றும் விடாமல் தொடர்வது. தான் மேலாக நின்று, குறிப்பிட்டவனைக் கீழாக நடத்துவது அரசின் வழக்கம். குடிசை வாரியக் குடியிருப்பில் கல் வீடு ஒதுக்கிக் கொடுத்த வாரியம் (1973), அலுவலகக் கோப்பின் தேவையை ஒட்டிய நடைமுறையைப் பின்பற்றி எடுத்த படமே இது. ஒதுக்கீடு பெற்றவர் தி.ஜ.ர. என்பதால் வழங்கப்பட்ட குடியிருப்பின் அலுவலகக் கோப்பு எண்ணைச் சிலேட்டில் எழுதி அவரையே பிடிக்கவைத்திருக்கிறது.
சிலேட்டு, எழுத்து ஆகியவற்றுக்கு அறிவின் அடையாளங்கள் என்ற படிமம் உண்டு. அவற்றை எழுத்தாளரின் கையில் கொடுத்து, படம் எடுக்கும்போது கேவலத்தின் அடையாளமாக அவை மாறிவிடுகின்றன. திருடிய பொருளோடு திருடனைப் பிடித்து அவனை முக்கால் நிர்வாணமாக்கி ஜட்டியுடன் நிற்கவைத்துக் காவல்துறை படம் எடுத்துப் பத்திரிகைகளில் வெளியிடுவது நினைவுக்கு வருகிறது.
சிலேட்டைத் தவிர்த்திருக்கலாம். சிலேட்டுதான் முக்கியம் என்றால் அந்தப் படத்திலேயே அவர் கைகளைத் தவிர பதிநான்கு கைகள் இருக்கின்றன. காந்தியின் வரலாற்றை, தமிழின் மேன்மையை எழுதிய கைகளைச் சாக்பீஸ் கிறுக்கிய இந்த சிலேட்டைப் பிடிக்க வைத்திருக்க வேண்டாம். மனித மேன்மையை, எழுத்தாளனின் மேன்மையை விரும்பும் எவருக்கும் உவப்பளிக்கும் படம் அல்ல இது.
தி.ஜ.ர.வின் கையிலிருக்கும் சிலேட்டை, நம் வயதான ரத்த உறவின் கையில் கொடுத்துக் கற்பனை செய்துபாருங்கள். சுயமரியாதை குறைந்த நமக்கு அப்போதும் புரியவில்லை என்றால், நமது கவி அரசர்கள், கவி வேந்தர்கள் கையில் கொடுத்துக் கற்பனையில் படம் எடுத்துப்பாருங்கள். நீங்கள் ரொம்பவும் மதிக்கும் ஒருவரின் கையில் இச்சூழலில் சிலேட்டைக் கொடுத்துக் கற்பனை செய்துபாருங்கள், புரியலாம். இந்த நாட்டில் சிறிதாவது கௌரவமாக வாழ வேண்டுமானால் சினிமா நடிகராக இருக்க வேண்டும் போலும்.
தி.ஜ.ர. அடக்கத்திற்குப் பேர்போனவர். அதனால் இந்த சிலேட்டு விஷயத்திற்கு ஒத்துப்போயிருக்கலாம். நண்பர்களின் வற்புறுத்தலுக்கும் இணங்கியிருக்கலாம். எழுத்துலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கியவர் என்றாலும் வறுமையையே ஆடையாக உடுத்தவர். அவரது வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அரசும் நண்பர்களும்தான் உதவியிருக்கிறார்கள். அவர் உடல் நலம் குன்றி இருந்தபோது கி.வா.ஜ.வின் முயற்சியில் அப்போதைய முதல்வர் கலைஞர் நிதி உதவிசெய்திருக்கிறார். அவரது 60 ஆண்டு நிறைவைப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பழநியப்பா பிரதர்ஸ் செட்டியார் முன்னின்று நண்பர்கள் உதவியுடன் நடத்தியிருக்கிறார்; வீடு இன்றித் தவித்தபோது, அரசு வாரியத்தின் தலைவர் அரங்கண்ணல் தவணை முறைக் கட்டண அடிப்படையில் குடிசை மாற்றுக் குடியிருப்பில் ஒரு மாடி வீடு கொடுத்திருக்கிறார். கலைஞரின் விருப்பத்திலேயே இது நடந்திருக்கலாம்.
எப்படியோ, சிலேட்டைக் கையில் கொடுத்த அரசாங்கச் சகடம், இப்போது பரிவுத் தொகையாக ஆறு இலட்சத்தை அப்படத்தில் இருக்கும் வாரிசுகளின் கையில் கொடுக்கிறது. எப்போதும் எழுத்தாளர்கள் வாங்கும் நிலையிலேயே இருக்கிறார்கள். சிலேட்டையோ பரிவுத் தொகையையோ.