செ.ச. செந்தில்நாதன்
பதிப்பாளர், ஆழி
காலச்சுவடு மார்ச் இதழில், ஆழி வெளியிட்ட தமிழ்க்கொடி 2006, ஆண்டுத் தொகுப்புக்கான விமர்சனத்தைக் கண்டோம். எங்கள் புதிய முயற்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து விமர்சனம் வெளியிட்டதற்கு நன்றி கூறிக்கொள்கிறோம். எனினும், அந்த விமர்சனத்தில் கூறப்பட்டுள்ள சில விஷயங்கள் விமர்சனம் என்ற எல்லையைத் தாண்டிப் பல கட்டுரையாளர்களின் மனதைப் புண்படுத்தியிருக்கிறது என்பதைத் தங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்.
எமது வெளியீடும் அதில் எழுதியிருப்பவர்களும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. நூலை விமர்சித்த திரு. பழநிவேளுக்கு சப்ஜெக்ட்டிவாகச் சில கருத்துகளைச் சொல்ல உரிமை உண்டு என்பதையும் ஏற்றுக் கொள்கிறோம். எனினும், அவரது விமர்சனம் ஆரோக்கியமான விமர்சனம் என்ற எல்லையை மீறித், தனிநபர் தாக்கு தலாகவும் பொறுப்பற்ற விளாசலாகவும் மாறியிருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டியே ஆக வேண்டும்.
இந்த நூலின் முன்னுரைகளில் பதிப்பாசிரியரும் நூல் தொகுப்பாளரும் கூறியிருந்த விவரங்களை விமர்சகர் படிக்கவில்லையோ என ஐயப்பட வேண்டியிருக்கிறது. 2006ஆம் ஆண்டின் அரசியல், சமூக, கலை, இலக்கிய வெளிகளில் நடந்த நிகழ்வுகள், ஏற்பட்ட போக்குகள் குறித்த பதிவுகளைச் செய்வதே இந்த நூலின் நோக்கம். எனவே, அதன் கட்டுரையாளர்கள் பதிவுசெய்வதிலேயே கவனம் செலுத்தியிருக்கிறார்கள். போக்குகளையும் நிகழ்வுகளையும் குறித்து அந்தப் பதிவுகளினூடாக விமர்சனங்கள் செய்யப்பட்டுள்ளன என்றாலும், பதிவுக்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறோம்.
அதைப் புரிந்துகொள்ளாத பழனிவேள் சுசி. திருஞானத்தின் கட்டுரை மிகவும் மோசமாக எழுதப்பட்டிருக்கிறது என்றும் ஜெயந்தி சங்கர், மணி மணிவண்ணன் போன்றோர் பள்ளி மாணவர்களைப் போல எழுதியிருக்கிறார்கள் என்றும் கூறியிருப்பது அதிர்ச்சி தரத்தக்க அளவுக்கு அருவருப்பாகவே உள்ளது. திருஞானமோ மணி மணிவண்ணனோ நாங்கள் எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டோ மோ அதற்கு முக்கியத்துவம் தந்தே எழுதியிருக்கிறார்கள். இயற்கை வேளாண்மை குறித்து எழுதுபவர்கூட இலக்கிய விமர்சகரின் நடையில் எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது முதிர்ச்சியற்ற அணுகுமுறை.
போகிற போக்கில் அ. ராமசாமி குறித்தும் சி. மோகன் குறித்தும் அவர் எழுதியிருப்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா என்று வாசகர்களே முடிவுசெய்வார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, ஸ்ரீநேசன் குறித்த விமர்சனம் நியாயமே அற்றது. அவர், 2006ஆம் ஆண்டின் கவிதைகளையும் கவிஞர்களையும் பதிவுசெய்வதற்காக மிகவும் உழைத்துத் தனது கட்டுரையை எழுதியிருக்கிறார். அதில் விடுபடல்கள் இருந்தால் அதைச் சுட்டிக்காட்டியிருக்கலாமே ஒழிய, அவர் டெலிபோன் டைரக்டரிபோல கவிஞர்களின் பெயர்களைப் பட்டியலிட்டிருக்கிறார் என்று குற்றம்சாட்டுவதற்குப் பின்னால் எத்தகைய மனப்பாங்கு இருக்கிறது?
இந்தத் தொகுப்பு குறித்து விமர்சகர் சாதகமான விஷயங்களையும் சொல்லியிருக்கிறார் என்பதற்காக ஏற்றுக் கொள்ளவியலாத இந்த விஷயங்களைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது.
விமர்சனங்கள் எவ்வளவு கனமாக இருந்தாலும் வரவேற்கத்தக்கவையே. அவதூறுகள் எவ்வளவு லேசானதாக இருந்தாலும் எதிர்க்கத்தக்கவையே. மீடியாவில் ஜனநாயகம் பற்றிப் பேசும் காலச்சுவடு இவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் ஆக வேண்டும். தமிழில் இது ஒரு முதல் முயற்சி என்று பலராலும் வரவேற்கப்பட்ட 'தமிழ்க்கொடி 2007'ஐ விமர்சனம் செய்வதென்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அந்த முயற்சியையே நிராகரித்துவிடக்கூடிய ஒன்றாக அது மாற்றப்படுவதை ஏற்றுக்கொள்ள வியலாது.