தலையங்கம்
பாட்டாளிகளுக்கு எதிரான சர்வாதிகாரம்
மார்ச் இரண்டாம் வாரத்தில் மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் விவசாயிகள்மீது ஆளும் இடது முன்னணி அரசின் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்கு 14 பேர் பலியாகியிருப்பதும் பலர் காயமடைந்திருப்பதுமான நிகழ்வுகள் நாடெங்கிலும் உள்ள அரசியல் பார்வையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றன. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதே தனது பிரதான அரசியல் கடமை எனக் கூறிக்கொள்ளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடது முன்னணி அரசின் மறுபக்கத்தை அம்மாநிலத்தின் சமீபத்திய நிகழ்வுகள் அம்பலப்படுத்தியுள்ளன.
பன்னாட்டு மூலதனத்திற்கு ஆதரவளிப்பதும் தற்போதைய இடது முன்னணி அரசின் ஒரு குறிக்கோள் என்பது இந்நிகழ்வுகளின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. விவசாயிகளின் மீது காவல் துறை தாக்குதல் நடத்துவது இது முதல் முறை அல்ல. தமது வாழ்வுரிமைக்காகப் போராடும் விவசாயிகளைக் கொடூரமாகத் தாக்கி அவர்களைச் சமூக ரீதியில் ஊனப்படுத்துவது நமது அரசுகளுக்கு வழக்கமான 'நிர்வாக நடைமுறை'தான். சர்தார் சரோவர் அணைக்கட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்துவரும் விவசாயிகளின் போராட்டங்களை நசுக்குவதற்கு குஜராத் அரசுக்குப் பல அரசியல் கட்சிகளும் மாநில அரசுகளும் மைய அரசும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அளித்துவரும் ஆதரவைக் கவனித்துப்பார்த்தால் 'வளர்ச்சித் திட்ட'ங்கள் என்று வரும்போது சாமானிய மக்கள்மீதான ஆட்சியாளர்களின் ஒவ்வாமையைப் புரிந்து கொள்ள முடியும்.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கு மேற்கு வங்க விவசாயிகள் காட்டிவரும் கடும் எதிர்ப்பை ஆளும் இடது முன்னணி அரசு எதிர்கொண்ட விதம், அதன் பன்னாட்டு மூலதன ஆதரவு நிலைப்பாட்டின் ஒரு பகுதியே. அதற்காக எந்த விலையைக் கொடுப்பதற்கும் அது தயாராகிவிட்டதையே இந்நிகழ்வுகள் உணர்த்துகின்றன. ஆட்சிப் பொறுப்பை ஏற்றதுமே அதைக் கோடிகாட்டியிருந்தார் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா. அப்போது ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த புத்ததேவ் 'நாக்குப் பிறழ்ந்துபோய்' தான் ஒரு முதலாளித்துவவாதி என்று சொன்னதைச் சிலர் மறந்திருக்கலாம். தனது நடைமுறைகளின் மூலம் அதை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் முதல்வர்.
தொடர்ந்து அவர் எழுப்பிவரும் 'புரட்சிகர முழக்கங்'களைக் கவனித்தால், அவரும் அவருடைய அரசும் கட்சியினரும் இந்த விஷயத்தில் எந்த அளவுக்குத் தீவிரமாக இருந்துவருகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். "இனிமேல் வளர்ச்சிக்கு விவசாயத்தை நம்பியிருக்க முடியாது" என்னும் ஒரு பொன்மொழியையும் அவர் உதிர்த்திருந்தார். விவசாயிகளின் வாழ்வுரிமைக்கான போராட்டத்தை அராஜகவாதம் என வர்ணித்தவர் தனது அரசு அதை இரும்புக்கரம் கொண்டு நசுக்கும் எனச் சில நாட்களுக்கு முன்னதாக எச்சரித்திருந்ததை 'அவுட்லுக்' ஆங்கில வார இதழ் தனது கட்டுரை ஒன்றின் முகப்பில் பிரசுரித்திருந்தது.
நடைபெற்ற துப்பாக்கிச் சூடு தற்செயலானதல்ல என்பதற்கு முதல்வரின் மேற்குறிப்பிட்ட 'புரட்சிகர' எச்சரிக்கையைவிடவும் வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன. எதிர்ப்புத் தெரிவித்த விவசாயிகளைக் கலைந்துபோகச் சொல்வது மட்டும் காவல் துறையின் நோக்கமாகத் தெரியவில்லை. துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதற்கு முன்னால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. தடியடிப் பிரயோகம், கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளைப் புறக்கணித்துவிட்டு நேரடியாகத் துப்பாக்கியின் விசையைச் சுண்டியிருக்கிறது புத்ததேவின் 'செம்படை'. காவல் துறையினரின் துப்பாக்கிக் குண்டுகள் விவசாயிகளின் மார்பையும் தலையையும் குறிவைத்துத் துளைத்திருக்கின்றன. ஓடி ஒளிந்தவர்களைத் துரத்திச் சென்று தாக்கியதோடு, சில காவலர்கள் பெண்களைப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். இது போதாதென்று காவல்துறையினரோடு சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொண்டர்கள் பலரும் நந்திகிராமத்திற்கு 'அணிவகுத்து'ச் சென்றிருக்கிறார்கள்.
இந்நிகழ்வுகளுக்குக் கண்டனம் தெரிவித்தும் புத்ததேவின் பதவி விலகலை வலியுறுத்தியும் போராடிவரும் அரசியல் கட்சிகள் விவசாயிகளின் போராட்டங்களுக்குப் பின்னால் உள்ள நியாயங்களைப் பற்றி விவாதிப்பதில் அக்கறை காட்டவில்லை. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் விவசாயிகளை ஓட்டாண்டிகளாக்குவதோடு தொழிலாளர்களுக்குச் சட்டபூர்வமாக இருந்துவரும் பாதுகாப்புகளை அழித்து அவர்களை நடுத்தெருவில் நிறுத்திவிடக்கூடிய அபாயங்களைக் கொண்டது. தொழிலாளர் நலன்களை அடியோடு புறக்கணிப்பதோடு தேசத்தின் அரசியல், பொருளாதார நலன்களைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடகுவைப்பது போன்ற உண்மைகளை மூடி மறைப்பதில் எல்லா அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. இவை புத்ததேவின் அரசு 'தார்மீக அடிப்படைகளைப் புறக்கணித்துவிட்டு'ச் செயல்படுவதாக மட்டுமே குற்றம் சுமத்துகின்றன. குஜராத் மற்றும் தமிழ்நாடு போன்ற சில மாநிலங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்குவதிலும் உலகமயமாக்கல் சார்ந்த பன்னாட்டு மூலதனத்தின் திட்டங்களுக்குச் செயல்வடிவம் கொடுப்பதிலும் கடைப்பிடித்துவரும் 'விவேக'த்தையும் 'கண்ணிய'த்தையும் முன்மாதிரிகளாகக் கொள்ள வேண்டும் எனப் போதிப்பதன் மூலம் பிரச்சினையின் அடிப்படைகளைப் பற்றிய விவாதங்களிலிருந்து மக்களைத் திசை திருப்ப முயன்றுகொண்டிருக்கின்றன.
சிங்கூர் மற்றும் நந்திகிராம் விவசாயிகள் பிரச்சினையை வெறும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான பிரச்சினையாக மட்டும் பார்ப்பது அபாயகரமானது. உலகமயமாக்கலின் நேரடியான விளைவுகள் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்ட சாதாரண மனிதர்களின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கிக்கொண்டிருக்கின்றன. ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் 'காய்கறிக் கடை வைத்துப் பிழைத்துக்கொள்ளலாம்' என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டவைபோல் மூலைக்கு மூலை கடை திறந்துகொண்டிருக்கின்றன. லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட மாபெரும் வர்த்தக நிறுவனங்கள் எளிய மனிதர்களின் அன்றாடப் பிழைப்புக்கான வழி முறைகளை அபகரிக்கும் முயற்சிகளே இவை.
மேற்கு வங்க விவசாயிகளின் மீது நடத்தப்பட்ட இக்கொடூரமான தாக்குதல் ஒரு வகையில் உலகமயமாக்கலின் தீய விளைவுகள் குறித்தும் அவற்றிற்குத் துணை போகும் அரசு மற்றும் அரசியல் கட்சிகளைப் பற்றியுமான விவாதங்களைத் தூண்டிவிட்டிருக்கிறது. ஊடகங்களில் சிறிய அளவிலேனும் விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன (தமிழ் ஊடகங்களுக்குக் 'கன்னட' பிரசாதின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவது போன்ற வேறு வேலைகள் இருப்பதால் அவை இது பற்றியெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை). புதுச்சேரியில் துறைமுக விரிவாக்கப் பணிகளுக்கெதிராக மீனவர்கள் கொதித்தெழுந்திருக்கிறார்கள். புதுவைத் துறைமுக அலுவலகத்தைத் தாக்கிச் சூறையாடியிருப்பதோடு தொடர் போராட்டங்களுக்கும் திட்டமிட்டிருக்கிறார்கள். இவற்றில் மேற்கு வங்க விவசாயிகள் நடத்தும் போராட்டத்தின் தாக்கம் சிறிய அளவிலேனும் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. அத்தகைய விவாதங்களையும் போராட்டங்களையும் சரியான திசை வழியில் எடுத்துச் செல்ல வேண்டியது பொது நலனில் அக்கறை கொண்டுள்ளவர்களின் கடமை.
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொள்ளும் ஒரு கட்சியின் அரசு அவர்களுக்கெதிரான ஒடுக்குமுறைகளை மேற்கொண்டிருப்பது குறித்தே பலரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். கோட்பாடுகளைத் துறந்த அரசியலில் எதுவும் நடக்கலாம். குறிப்பாக இந்த உலகமயமாக்கல் யுகத்தில்.
உள்ளடக்கம்