23.01.2001 செவ்வாய்க்கிழமை காலை 11:35
இடம்: சாந்தா க்ரூஸ்
காலையிலிருந்தே மப்பாக இருந்தது. மழை இருளும் மந்தமுமாக இருந்தது. காலையில் எழுந்த உடனேயே வடக்கில் ஈர நைப்பைக் கவனித்தேன். மழையின் மின்வெட்டு ஒத்திகையொன்று அதிகாலை நடந்திருக்க வேண்டுமென்று தோன்றியது. மழையை எதிர்பார்த்து அதன் வருகையை உணர்ந்த நிமிஷம் துள்ளத் தொடங்கும் மனதைக் கற்பனை செய்தவாறு காத்துக்கொண்டிருந்தேன். பதினோரு மணி வாக்கில் மழையின் முதல் தோற்றம் அரங்கேற்றம் ஆரம்பமாகியிருக்க வேண்டும். நான் அதன் பிரவேசத்தைப் பார்க்கவில்லை. வேறு கனவில் மனம் ஆழ்ந்து கிடந்ததில் கண்கள் வெளியை - வடக்கையும் வடக்குக்கு வெளியே காடு போன்ற மரக்கூட்டங்களையும் வடக்கையொட்டி நின்ற இலைகளை முற்றாக இழந்திருந்த உடல் முழுவதும் குச்சிகளாகிவிட்டதில் மனக்கஷ்டம் கொண்ட சில செடிகள் நின்றுகொண்டிருந்தன. இலை உதிர்ந்து நின்ற ஒரு செடியில் மட்டும் காய்கள் தொங்கிக்கொண்டிருந்தன. அந்தச் செடியின் மனநிலையைப் பிறவற்றுடன் ஒப்பிட்டுக் கற்பனை செய்ய என்னால் முடியவில்லை.
மழை என்றால் மிக சாத்வீகமான தூறல். இலைகளற்ற குச்சிகளுக்கு - காய்ந்தவை போல் காட்சி தரும் - நீர் முத்துக்களை அளிப்பது மட்டும்தான் தன் தோற்ற நியாயம் என்று மழை நம்புவதுபோல்பட்டது. நீர் முத்துக்களும் நகைகளுக்குச் சற்றும் குறைந்ததல்ல. வடக்கிலிருக்கும் கூரையற்ற குறுக்குச் சட்டங்களில் நீர் முத்துக்கள் கோர்த்து நிற்கின்றன. சூழலில் சிறிது சங்கடம் உறைந்து கிடப்பது தெரிந்தது.
06.02.2001 செவ்வாய் காலை 10 மணி
நேற்று Visions தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தேன். வராண்டாவிலும் வீட்டிற்குள்ளேயும் இரண்டு தடவை நடைப்பயிற்சி மேற்கொண்டேன். பிற்பகல் படுத்ததும் மனநிலை மோசமாயிற்று. வழக்கமாக நிம்மதியாகப் படுத்துக்கொண்டிருப்பது கூட நடக்கவில்லை.
அனாவசியமான கற்பனைகளை முடிந்தவரையிலும் தவிர்க்க வேண்டும். இந்தக் குறிக்கோளை எட்ட மேலும் தீவிர முயற்சி எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. என் இருதயத்தைப் பற்றி நான் கவலைப்படத் தேவையில்லை.
1. டாக்டர் ராஜ் சிங் பார்த்துவிட்டு மிகவும் நல்ல அபிப்பிராயம் சொன்னார்.
2. Tradmill Testஐப் போன தடவை செய்ததைவிடவும் இந்தத் தடவை நன்றாகச் செய்திருக்கிறேன்.
3. தைலா வீட்டில் தினமும்
Tradmill பயிற்சி மேற்கொண்டேன். நான்கு மைல் வேகத்திலும் ஐந்து நிமிடங்கள் போனேன்.
4. Gate வரையிலும் தினமும் நடந்துகொண்டிருந்தேன். கடுமை யான மேடு. அதில் ஏறிவந்தபோது எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை.
5. மருந்துகளை மிக ஒழுங்காகச் சாப்பிட்டுவருகிறேன்.
6. இங்கு தங்குவின் வீட்டிற்கு (Detroit) வந்த பின்பும் நடைப் பயிற்சி செய்ய மிக நல்ல வராண்டா கிடைத்திருக்கிறது. சூடேற்றப்பட்ட இடம். தினமும் இந்த வராண்டாவில் 20/25 நிமிடங்கள் - சாத்தியப்படுகிற நாட்களில் இரு முறை - நடைப்பயிற்சி மேற்கொள்ளப்போகிறேன்.
7. ஒரு அவசரத்திற்கு வீட்டிற்குள்ளும் நடக்க வசதி இருக்கிறது.
8. எளிய உடற்பயிற்சியும் இன்று முதல் செய்யப்போகிறேன்.
9. என் இதயத்தைப் பற்றி வெறும் கற்பனையான கவலைகளை வளர்த்துக்கொண்டு மனச்சோர்வு அடைந்து என் உடல் நிலையை நானே மோசமாக்கிக் கொள்ளக்கூடாது.
10. தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் நான் இருக்க வேண்டும்.
நேற்றிரவு தைலாவுடன் போனில் பேசினேன். இது சந்தோஷத்தைத் தந்தது. காலையில் வெளி வராண்டாவில் 25 நிமிஷம் வேகமாக நடந்தேன். வெளி வராண்டாவில் நடக்கிறபோது சாத்தியிருக்கும் பக்கத்து வீட்டுக் கதவுகள் - எண்ணிக்கையில் அவை மூன்று - நிம்மதியின்மையைத் தருகின்றன. எந்த நிமிஷத்திலும் அந்தக் கதவைத் திறந்துகொண்டு யாரேனும் வெளிப்படலாம் என்ற சாத்தியக்கூறு நிம்மதியைப் பாதிக்கிறது. அவ்வாறு யார் வந்தாலும் சரி அவர்கள் நாம் நடந்துகொண்டிருப்பதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் - சிறிது பொருட்படுத்தினாலும் அதை நிச்சயமாக வெளியே காட்டிக்கொள்ளாமல் - போய்விடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருந்தாலும் ஒரு நிம்மதியின்மை ஏற்படத்தான் செய்கிறது.
சிறிது உடற்பயிற்சியும் செய்து 25 நிமிடங்கள் நடைப் பயிற்சியும் மேற்கொண்டதில் நிறைய வியர்வை அரும்பிற்று. இவ்வாறு நடக்கச் சாத்தியமாவது எனது உடல் பலத்தையே காட்டுகிறது. இந்த உடல் பலத்தை நான் உணர்ந்து நிம்மதி அடைய வேண்டும் என்பதுதான் முக்கியமானது.