சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் ஒரு பரிமாணமாக பூங்காக்களும் கடற்கரைகளும் கலையரங்கங்களாக மாறியிருந்தன. சென்னையின் அடையாளங்களில் ஒன்றான மயிலாப்பூர் லஸ் முனை அருகே உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் நாட்டுப்புறக் கலைகளும் கர்நாடக இசைக் கச்சேரிகளும் தினசரி காலையும் மாலையும் நிகழ்த்தப்பட்டன.
பாவைக் கூத்து, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், சிக்காட்டம், கழியலாட்டம் போன்ற தமிழக நாட்டுப்புறக் கலைகளோடு, களரி, செண்டை மேளம் போன்ற கேரளாவின் பாரம்பரியக் கலைகளையும் இணைத்து நிகழ்த்திக் காட்டினர்.
இவற்றோடு கர்நாடக இசையின் வாய்ப்பாட்டு, வாத்திய இசை போன்றவையும் இடம்பெற்றன. மேற்கத்திய வாத்தியக் கருவியான சாக்ஸபோனைக் கர்நாடக இசைப் பாணியில் கற்றுத்தேர்ந்த சாக்ஸபோன் சகோதரிகளின் கச்சேரியும் மேற்கத்திய இசை ஆல்பம் வெளியிட்ட இளம் கலைஞரான ஆல்ட்ரின் அலெக்சின் நிகழ்ச்சியும் இச்சங்கமத்தின் முக்கியமான பகுதிகள்.
கதைசொல்லிகளைக் கொண்டு குழந்தைகளுக்குப் பாரம்பரியக் கதைகளைச் சொன்ன என். பவுண்டேஷனின் நிகழ்ச்சியும் கவனத்தை ஈர்த்த ஒன்று.
கர்நாடக இசை உலகின் முன்னணிப் பாடகர்களான அருணா சாய்ராம், பாம்பே ஜெயஸ்ரீ, டி.எம். கிருஷ்ணா, ரவிகிரண், உன்னி கிருஷ்ணன் போன்றோரும் வளரும் கலைஞர்களான ஐஸ்வர்யா ராகவன், எம். பாலமுரளி கிருஷ்ணா, வயலின் அக்கரை சகோதரிகள் ஆகியோரும் இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். இசைப்பதற்கும் பயிலுவதற்கும் கடினமான வாத்தியக் கருவியான சாக்ஸபோனை வாசித்த எம்.எஸ். சுப்பலட்சுமியும் லாவண்யாவும் தம் பங்களிப்பைச் செய்தனர்.
ஒவ்வொரு நாளும் காலையில் தமிழ்நாடு இசைக் கல்லூரி மாணவர்களின் நாதஸ்வர இசையோடும் பக்திப் பாடலோடும் தொடங்கியது. தூக்கத்தின் சாயல் தென்படாத இளம் இசைக் கலைஞர்கள் தம் பங்களிப்பை மிகுந்த சிரத்தையோடு ஆற்றினர்.
நாகேஸ்வர ராவ் பூங்காவில் தினமும் காலையில் உடற்பயிற்சிக்காக வருகிற வயதான மற்றும் நடுத்தர வயது ஆண்கள்தான் காலை நிகழச்சிகளுக்கான பார்வையாளர்களாக இருந்தார்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் பெண்களும் இல்லாமலில்லை. இளம் இசைக் கலைஞர்கள் தயக்கத்தோடு தொடங்கினாலும் பிறகு இசையில் லயித்துப் பாடினார்கள்.
கர்நாடக இசைக் கலைஞர்களில் பெரும் புகழ் பெற்றிருக்கும் அருணா சாய்ராம், மிக நெருக்கமாக அமர்ந்தும் சுற்றி நின்றுகொண்டுமிருந்த கூட்டத்தைப் பார்த்துச் சற்றே திகைத்தாலும் ஆரம்பித்த விதமும் அதன் பின்பு தமது இசை ஆளுமையைப் பார்வையாளர்களிடம் படரச் செய்த விதமும் அற்புத அனுபவமாக இருந்தன.
பாம்பே ஜெயஸ்ரீ, தான் தொழில் முறை இசைக் கலைஞர் என்பதை அனாயாசமாக நிரூபித்தார். ரவிகிரணும் டி.எம். கிருஷ்ணாவும் இது போன்ற இசை நிகழ்ச்சிகள் மக்களிடம் நேரடியாகச் சென்றடைவது குறித்து உணர்ச்சிவயப்பட்டவர்களாக இருந்தார்கள். "கர்நாடக இசையைச் சாதாரண மக்களிடம் எடுத்துச் சென்றிருக்கிறீர்கள்" என்று உணர்ச்சி பொங்க ரவிகிரண் கூறியதும் நிகழ்ச்சியின் தொனியும் அவர்களது மனவோட்டத்தைக் கூறின.
நாகேஸ்வர ராவ் பூங்காவில் கடைசியாக நடந்த நரேந்திர ராவின் அவிக்னா குழுவின் ஏசு துதிப்பாடல் மற்றும் நடன நிகழ்ச்சி அனைவரின் ஏகோபித்த பாராட்டுகளையும் பெற்றது.
கலைஞர்கள் மிக அற்புதமாக நிகழ்ச்சிகளை நடத்தினர். தொழில் ரீதியான அணுகுமுறையும் கட்டுப்பாடும் தென்பட்டன. தப்பாட்டம், செண்டை மேளம், பெரிய மேளம் போன்ற தாள வாத்தியக் கலைஞர்கள் தாளகதியின் வேகத்தில் தங்களை மறந்து இசைத்து, கூடியிருந்த மக்களையும் தம் நிலை மறக்கச் செய்தார்கள்.
பூங்காவில் நடந்த இந்த நிகழ்வுகளுக்கு வந்திருந்தோர் நடுத்தர மற்றும் மேல் நடுத்தர மக்கள்தாம். குடிசைப் பகுதியிலிருப்போரும் அதற்கு வசதியற்றோரும் மிகச் சிலர்தான் வந்திருந்தனர். குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சீருடை அணிந்த கன்னியாஸ்திரீகள் வந்திருந்தனர்.
கடலோரப் பகுதியிலிருந்து வந்த சில குழுவினர் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்தவர்கள். இந்தக் கலையோடு பிணைந்திருக்கும் கடவுள் துதியை இவர்கள் கவனத்துடன் நீக்கியிருந்தனர்.
நாட்டுப்புறக் கலைக் குழுக்களில் சிலவற்றைத் தவிர மற்றவையெல்லாம் கிறிஸ்தவப் பாதிரிகள் மற்றும் சிவப்புச் சிந்தனையாளர்களின் தலைமையில் இயங்கி வருவது இந்தப் பூங்கா நிகழ்வுகளில் வெளிப்பட்டது.
பெரும் வர்த்தக நிறுவனங்களின் நிதி உதவியோடு நடந்த சென்னை சங்கமத்தின் சில நிகழ்வுகளில் இடது சாரி முழக்கங்கள் இருந்ததை, ஒருவேளை இந்த நிறுவனங்களின் முதலாளிகள் அடையாளம் கண்டிருந்தால் முகம் சிவந்துபோயிருக்கலாம்.
னீனீனீ
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. பனிரெண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆறு நாட்களில் தினமும் ஆறு வெவ்வேறு நிகழ்வுகள் பல கலைக் குழுக்களோடும் இசைக் கலைஞர்களோடும் நடத்தப்பட்டன. குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட கலைஞர்கள் சென்றடையச் செய்து நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக்கியது அசாதாரணமான பணிதான்.
இந்தச் சங்கமத்திற்கு அரசின் ஆதரவு பல்வேறு விதங்களில் தேவையான அளவிற்கு இருந்தது. தங்களது இருப்பு யாருக்கும் பரபரப்பையோ தொந்தரவையோ ஏற்படுத்திவிடாத வகையில் காவல் துறையினரின் பாதுகாப்புப் பணி இருந்தது. தமிழ் மையத்தின் நிறுவனர் ஜெகத் கஸ்பாரின் சுறுசுறுப்பு, பேச்சுத் திறன், கலைஞர்களை அணுகிய விதம் யாவும் பாராட்டும்படியாக இருந்தன. சென்னை சங்கமத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்த கவிஞர் கனிமொழி, நிகழ்ச்சி நடைபெறும்போது வந்திருந்து, கலைஞர்களைப் பாராட்டிச் சென்றது உண்மையில் கலைஞர்களுக்குப் பெரிய ஊக்குவிப்பாக இருந்தது.
மயிலாப்பூர் போன்ற பகுதியில் வசிப்போருக்கு நாட்டார் கலைகளைப் பார்க்கவும் ரசிக்கவும் தெரிந்துகொள்வதற்குமான வாய்ப்பு ஏறக்குறைய இல்லாமலிருந்திருக்கும். கிராமங்களில் இவைபோன்ற கலைகள் உயிர்ப்புடன் இருப்பதை இந்நிகழ்வு நகரவாசிகளுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறது. இசையென்றால் கர்நாடக இசை, சினிமா இசை, என்பதைக் கடந்து மிகப் பல இசை வடிவங்கள், நடன முறைகள், இந்த மண்ணின் கலாச்சாரத்தோடு, வாழ்வோடு பின்னிப் பிணைந்திருப்பவை என்பதை இந்த நிகழ்வு காட்டியிருக்கிறது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல கலைஞர்கள் வறுமையிலிருப்போர் என்பது, நிகழ்ச்சி முடிந்து கரகோஷங்களைப் பெற்று மகிழ்ந்து மேடையை விட்டு இறங்கியபோது முகப்பூச்சையும் ஒப்பனையையும் மீறி அவர்களது முகத்தில் வெளிப்பட்ட ஆதங்கத்தாலும் கவலையாலும் புரிந்தது. குறிப்பாகத் தெருக்கூத்து நடத்திய குழுவினரைச் சொல்லலாம். இக்குழுவை நடத்துபவர் கலைமாமணிப் பட்டம் பெற்று ஆறாவது தலைமுறையாகத் தெருக்கூத்துக் கலையைத் தொடர்ந்து உயிர்வாழச் செய்துகொண்டிருப்பவர். இந்தக் குழுவில் இளைஞர்கள் இல்லை.
வரும் தலைமுறைக்கு நாட்டுப்புறக் கலைஞர்களை இதுபோல அறிமுகப்படுத்தப் போறோமா அல்லது இதுபோன்ற நிகழ்வுகளைப் படம்பிடித்துக் குறுந்தட்டுகளாகத் தர நேரிடுமோ? இது பற்றி அரசும் மக்களும் சிந்திக்க வேண்டும். மரபுக் கலைகளுக்கு உயிர்கொடுத்துக்கொண்டிருக்கும் இந்தக் கலைஞர்களின் வாழ்வில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவிற்காவது நம்பிக்கையைத் தரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
|
சென்னை சங்கமம் குறித்த பல்வேறு கேள்விகளைத் தமிழ் மையம் அமைப்பைச் சார்ந்த அருட் தந்தை ஜெகத் கஸ்பார் அவர்களிடம் அளித்து பதில் தருமாறு கேட்டிருந்தோம். இதழ் அச்சுக்குச் செல்லும்வரை பதில்களைப் பெற இயலாததால் கேள்வி-பதில்கள் இந்த இதழில் இடம் பெறவில்லை.
இந்தப் பதிவுகளில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களைத் தந்துதவிய தமிழ் மையம் அமைப்பாளர்களுக்கு நன்றி.
- ஆசிரியர் குழு
|