Google   www kalachuvadu.com

 

சென்னை சங்கமம் 

சாதனைகளும் போதாமைகளும்

அரவிந்தன்

இல்லாமைகளைப் பற்றிய புலம்பல்கள் சதா ஒலித்துக் கொண்டிருக்கும் தமிழ்ச் சூழலில் மாற்றத்தை முன்னெடுக்கும் முயற்சிகள் எதிர்கொள்ளப்படும் விதம் விசித்திரமானது. எதை இல்லை இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்களோ அது கண் எதிரில் வந்து நின்றாலும் தெரியாத அளவுக்கு அரற்றலை ஒரு தவம்போல நிகழ்த்திக்கொண்டிருக்கும் விசித்திரப் பிறவிகள் நிறைந்த சூழல் நம்முடையது. பிப்ரவரி 20-25 தேதிகளில் சென்னையில் நடத்தப்பட்ட சென்னை சங்கமம் நிகழ்வையும் அதற்கான எதிர்வினைகளையும் பார்க்கும்போது இந்த விசித்திரம் துலக்கமாகத் தெரிகிறது.

தமிழ்க் கலை வடிவங்களுக்குப் புத்துயிரூட்டி அவற்றின் மீதான மக்களின் கவனத்தைப் புதுப்பிக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட சென்னை சங்கமம், இயல், இசை, நாடகம் ஆகிய துறைகள் சார்ந்த கலைகளைச் சென்னையில் பெரும் திரளான மக்கள் முன்னிலையில் நிகழ்த்தியது. ஆண்டுதோறும் பொங்கல் திருவிழாவை ஒட்டி இந்நிகழ்வை நடத்தப்போவதாக இதைத் திட்டமிட்டு ஒருங்கிணைத்த தமிழ் மையம் அறிவித்திருக்கிறது.

பெருநகரங்களில் இதுபோன்ற கலைச் சங்கம நிகழ்வுகள் நடப்பது புதிதல்ல. பெங்களூரில் பெங்களுர் ஹப்ப என்னும் பெயரில் இது போன்ற கலை நிகழ்வுகள் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன. அப்னா உத்ஸவ் என்னும் பெயரில் மத்திய அரசு நடத்தும் கலை விழாக்களின் பிரதான நோக்கமும் இதுதான். இயந்திரமயமாகிவரும் நகர வாழ்வில் கலை முதலிய நுட்பமான விஷயங்களுக்கான ஆர்வமும் நேரமும் வெளியும் சுருங்கிவரும் நிலையில் இது போன்ற முயற்சிகள் காலத்தின் தேவைகளாகின்றன. வசதிகளும் பதற்றங்களும் நிரம்பிய பெருநகரத்து வாழ்வில் கலைகளுக்கான இடத்தைத் தொலைக்காட்சியின் பிம்பங்களும் திரைப்படங்களும் பிடித்துக்கொண்டிருக்கின்றன. கல்வித் துறையிலும் கலைக்கும் மொழிக்குமான இடம் குறைந்து தொழில்நுட்பத்திற்கான இடம் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் கலைகளுக்கும் பெருநகரத்து மக்களுக்கும் இடையேயான உறவில் சில சாதகமான சலனங்களை ஏற்படுத்துவதில் இது போன்ற சங்கமங்களின் பங்களிப்பு முக்கியமானதும் பொருள்மிகுந்ததுமாக அமையும்.

சென்னை நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் இசை விழாவைத் தவிரப் பல்வேறு கலை நிகழ்வுகள் சிறிய அளவில் அவ்வப்போது நடந்துவருகின்றன. திட்டமிட்டபடி ஆண்டுதோறும் சென்னை சங்கமம் நடத்தப்பட்டால் அது மார்கழி இசைவிழாவைப் போலவே பெரியதொரு கலை விழாவாக மலரும். கலை விழாக்களும் கொண்டாட்டங்களும் பொருள் சார்ந்த வாழ்வின் அழுத்தத்திலிருந்து தனி மனிதர்களைச் சற்றேனும் விடுவித்து, வாழ்வுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவைப் புதுப்பிக்கும் வல்லமை படைத்தவை. மதம் சார்ந்த கொண்டாட்டங்களே அதிகம் நிகழும் ஒரு சூழலில் மதம் தவிர்த்த, மத எல்லைகளைத் தாண்டிய பொதுவான வெளியில் கலைகளை மையமாகக் கொண்டு இந்தக் கொண்டாட்டம் நடப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த வகையில் நிகழும் மிக அரிய முயற்சிகளில் ஒன்றாக இது அமைந்திருப்பதையும் சற்று யோசித்துப் பார்த்தால் உணர முடியும்.

n n n

அக்கறையோடும் செறிவோடும் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் ஒரு செயல்பாட்டை வலுப்படுத்தவே முடியும். ஒரு செயல்பாட்டில் இருப்பவற்றைக் காட்டிலும் இல்லாதவற்றைப் பற்றியே அதிகம் பேசும் பழக்கம் கொண்ட தமிழ்ச் சூழல் வழக்கம்போலத் தனது ஆகிவந்த விமர்சனங்களுடனேயே சென்னை சங்கமத்தை அணுகுகிறது. பெரும்பாலான விமர்சனங்கள், இந்த நிகழ்வை நடத்தியதில் முன்னணியில் நின்ற கனிமொழியையே இலக்காகக் கொண்டிருக்கின்றன. தமிழ்ச் சுற்றுலா வளர்ச்சித் துறை, பொது நூலகத் துறை ஆகிய அரசுத் துறைகளின் ஆதரவோடு தமிழ் மையம் என்ற அமைப்பு இந்த நிகழ்வை நடத்தியிருக்கிறது. கனிமொழி தமிழ் மையத்துடன் இணைந்து பணிபுரிபவர். அரசுத் துறைகளின் ஆதரவும் கனிமொழியின் முனைப்பும் முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களின் ஈடுபாடும் விமர்சனங்களை ஈர்ப்பதில் வியப்பேதும் இல்லை. அதிகார துஷ்பிரயோகம், நிதி முறைகேடு போன்றவைகளில் தொடங்கி, தமிழ் மையம் அமைப்பின் பொறுப்பாளர் அருட் தந்தை ஜகத் கஸ்பார் எல்.டி.டி.ஈ. ஆதரவாளர் என்பது வரை பலவிதமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.

அரசு ஒரு காரியத்தில் ஈடுபடும்போதும் அது வெற்றிகரமாக நடக்கும்போதும் இது போன்ற குற்றச்சாட்டுகள் எழுவது தவிர்க்க முடியாதது. அரசின் சகலவிதமான செயல்பாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் பொதுவான நோய்க்கூறுகள் அதன் பண்பாட்டுத் தளத்திலான செயல்பாடுகளிலும் பிரதிபலிக்கும் என்பதைச் சொல்ல ஒருவர் அரசியல் ஆய்வாளராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற விமர்சனங்கள் ஆதாரபூர்வமாக முன்வைக்கப்படுவதும் சம்பந்தப்பட்டவர்கள் அதற்குப் பதிலளிப்பதும் அத்தியாவசியமானவை. ஆனால், விமர்சனம் என்பது குறைகாண்பதில் அடையும் திருப்தியாக முடங்கிவிடக் கூடாது. கலைத் துறையில் ஆக்கபூர்வமான சலனங்களை ஏற்படுத்துவதற்காகச் சகல மட்டங்களிலும் முயற்சிகள் நடைபெற வேண்டும் என்று கோரிவரும் ஆளுமைகள் இந்தத் திசைவழியில் யாரேனும் ஒரு அடி எடுத்து வைத்தாலும் முதலில் அதைப் பாராட்ட முன்வருவதே அவர்களது அக்கறைகளுக்குப் பொருத்தமான எதிர்வினையாக இருக்கும். நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பல்வேறு மையங்களில் தங்கள் கலைகளை நிகழ்த்திக்காட்டியதையும் பெருந்திரளான மக்கள் அவற்றைக் கண்டு மகிழ்ந்ததையும் எண்ணிக் குறைந்தபட்ச திருப்தியும் சந்தோஷமும் ஏற்படாத அறிவுஜீவிகளின் கலை சார்ந்த அக்கறைகள் பற்றி நாம் எத்தகைய முடிவுக்கு வர முடியும்?

குறை சொல்பவர்கள் அரசின் பங்கேற்புக் குறித்து அதிகம் பேசுகிறார்கள். புரவலர்கள் இல்லாமல் கலைகள் வளர முடியாது. அரசோ வர்த்தக நிறுவனங்களோ பொது நல அமைப்புகளோ பணம் படைத்த தனி நபர்களோ உதவாமல் பொது அரங்கில் எந்தச் செயல்பாடும் எப்போதும் சாத்தியமில்லை. கலைகளை வளர்க்க அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று ஒருபுறம் கோருபவர்கள் அரசு முன்வரும்போது அதைக் குறியீட்டு அளவிலான வெற்றி என்பதற்காகவேனும் பாராட்ட வேண்டும். அரசோடு நெருக்கமாக இருப்பவர்களுக்கு இந்த ஆதரவு எளிதில் கிடைப்பதை எண்ணிப் பொருமுவதைவிட, இது போன்ற ஆதரவை மற்றவர்களுக்கும் நீட்டிக்கும்படி கோருவதும் அதற்காகப் போராடுவதும் கலை ரீதியில் ஆக்கபூர்வமான செயல்பாடுகளாக இருக்கும். 

n n n

பெரிதாக ஒரு காரியம் நடக்கும்போது, அதன் குறைகளை மட்டும் பார்த்துக்கொண்டிருக்காமல் விருப்பு வெறுப்பற்ற, சமநிலையான விமர்சனத்தை முன்வைப்பதே சூழலின் வளர்ச்சிக்கு ஆற்றக்கூடிய பங்காக அமையும். இந்த நோக்கின் அடிப்படையிலேயே சென்னை சங்கமம் நிகழ்வுகளை விமர்சனப் பார்வையோடு ஆக்கபூர்வமாக அணுகும் பதிவுகள் வரும் பக்கங்களில் இடம்பெற்றுள்ளன. ஒட்டுமொத்த மதிப்பீடு என்ற முறையில் சென்னை சங்கமத்தின் வெற்றிகளையும் போதாமைகளையும் கோட்பாட்டளவிலும் நடைமுறை சார்ந்தும் இங்குத் தொகுத்துப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும்.

சென்னை சங்கமத்தில் நிகழ்த்தப்பட்ட பெரும்பாலான கலைகள் சமய நம்பிக்கைகளோடும் நடைமுறைகளோடும் தவிர்க்க முடியாத உறவு கொண்டவை. உதாரணமாக, காவடியாட்டத்திற்கும் முருகன் வழி பாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பு. இதுபோலவே திரௌபதை அம்மன் வழிபாட்டையும் பாரதக் கூத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. இதே வரிசையில் கரகாட்டம், ஒயிலாட்டம் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.

பின்னணிகளிலிருந்து பிரித்தெடுத்து இந்தக் கலைகளைக் கண்காட்சிப் பண்டங்களாக மாற்றுவது பண்பாட்டு ரீதியிலும் அழகியல் நோக்கிலும் எந்த அளவு பொருத்தமானதாக இருக்கும் என்பது ஒரு முக்கியமான கேள்வி. பெரும்பாலான நாட்டார் கலை வடிவங்களில் கலைஞர்களின் மனத்தோய்வு, அந்தக் கலை வடிவத்தின் ஆதாரமான ஒரு நம்பிக்கையை அல்லது நடைமுறையைச் சார்ந்திருக்கிறது. அந்த நம்பிக்கையிலிருந்தும் நடைமுறையிலிருந்தும் அந்தக் கலையைப் பிரித்து எடுத்துவிட்டால் கலைஞர்களின் மனத்தோய்வு எதைத் தன் ஆதாரமாகக் கொள்ளும்? உள்ளார்ந்து நின்று அவரை ஊக்குவிக்கும் உணர்வை எதைவைத்துப் பதிலீடு செய்வீர்கள்? கலை வெளிப்பாடு என்பது உடல்சார் பயிற்சி மட்டும் அல்லவே. 

சென்னை சங்கமத்தில் தமது கலைகளை நிகழ்த்திய சில குழுவினர் இந்துக் கடவுள்களுக்குப் பதில் இயேசு பிரானைத் துதிக்கும் பாடல்களுடன் தமது மரபுக் கலைகளை நிகழத்தினர். இது சமய ரீதியில் கலைஞர்களிடையே நிகழ்ந்துள்ள மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. கலைகளில் 'சமய நீக்கம்' செய்வது வேறு; ஒரு சமயத்தை இன்னொரு சமயத்தால் பதிலீடு செய்வது என்பது வேறு. இதில் சென்னை சங்கமத்தின் பார்வை என்ன? 

சமயப் பின்னணி மட்டுமின்றிச் சமூகம் மற்றும் தொழில் சார்ந்த பின்னணியும் நாட்டார் கலைகளுக்கு இருக்கிறது. வேளாண் சமூகங்களில் இக்கலைகளுக்கு முக்கியமான இடம் இன்றளவும் உள்ளது என்கிறார் பல ஆண்டுகளாக நவீன நாடகத் துறையில் செயல்பட்டுவரும் ப்ரஸன்னா ராமஸ்வாமி. யாரேனும் சிலரிடம் அல்லது சில அமைப்புகளிடம் நிதி உதவி பெறாமல் எந்த நிகழ்வும் சாத்தியமில்லை என்பதால் சென்னை சங்கமத்தில் புழங்கிய நிதியைப் பற்றிக் கேள்வி எழுப்புவதில் அர்த்தமில்லை என்று சொல்லும் அவர், கலையைப் பற்றிய அக்கறைகள்தான் முதன்மையானவை என்கிறார். கலைகளை அவற்றின் பின்னணிகளிலிருந்து பிரித்துப் பார்ப்பதோ பின்னணிகளையைப் பற்றிக் கவலைப்படாமல் இக்கலைகளை ஊக்குவிக்க முயல்வதோ கலை வடிவங்களின் முழுமைக்கு நியாயம் செய்வதாக ஆகாது என்பது அவர் கருத்து. 

நகர்ப்புற மக்களுக்கு மரபுக் கலை வடிவங்களை எடுத்துச் செல்வது என்ற உரிமைகோரலே ஆட்சேபத்திற்கு உரியது என்பது ப்ரஸன்னாவின் பார்வை. நகர்ப்புற மக்கள் என்றால் யார் என அவர் கேள்வி எழுப்புகிறார். நகர்ப்புறத்தில் இருக்கும் பல்வேறு மக்களிடையே ஏற்கனவே மரபுக் கலை வடிவங்கள் புழக்கத்தில் இருக்கின்றன என்றும் ஆடி, மார்கழி போன்ற மாதங்களில் அவற்றைப் பார்க்கலாம் என்றும் சொல்கிறார். சென்னைக்கு வெளியே புழக்கத்தில் இருக்கும் கலைகளை, அவை வாழ்ந்துவரும் இடங்களிலேயே அவற்றின் பின்னணிகளோடு வளர்த்தெடுப்பதற்கான முயற்சிகளை மேற் கொள்வதே கலைகளை வளர்க்க உதவும் என்கிறார் ப்ரஸன்னா. அதற்கான உள்கட்டமைப்பு வசதிகளையும் கலைஞர்களின் வாழ்வாதாரங்களையும் மேம்படுத்துதல் முதலான பல செயல்பாடுகளை இதற்காக மேற்கொள்ள வேண்டும் என்கிறார் அவர். மாறாக, நகரை நோக்கி, நகர்ப்புற மக்களை நாடி, எடுத்துவரப்படும் கலைகள் தமது ஆதாரமான அடையாளங்களை இழந்து நகர மக்களின் நுகர்வுக்கான பண்டங்களாக மாறிவிடும் என்பது அவரது கருத்து. "இது சென்னை சங்கமம் குறித்த விமர்சனம் மட்டுமல்ல. நமது மரபுக் கலைகளைக் காட்சிப் பொருள்களாக வெளிநாடுகளுக்கு எடுத்துச் சென்றபோதும், அப்னா உதஸவ் போன்ற நிகழ்வுகளை ஒட்டியும் இதே போன்ற விமர்சனங்களை நான் முன் வைத்திருக்கிறேன்" என்கிறார் ப்ரஸன்னா.

மரபு சார் கலைகளை மீட்டுருவாக்கம் செய்வது குறித்துப் பேசும்போது ஒரு சில கலைகள் சாதி அமைப்புடன் அழுத்தமாகப் பிணைந்திருப்பதையும் கவனிக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு கலையைப் பேணும் அல்லது நிகழ்த்தும் பொறுப்பு ஒரு குறிப்பிட்ட சாதிக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம். சாதி அடுக்கின் கீழ்த் தட்டுக்களில் உள்ள பிரிவினைப் பொறுத்தவரை இந்தப் 'பொறுப்பு' சாதியமைப்பின் களங்கமாகவே அவர்கள்மீது படிந்துள்ளது. கூத்தாடிகள் என்னும் பிரிவினர் 'பேணி'வரும் ஆட்டக் கலையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இதுபோன்ற கலைகளை மீட்டுருவாக்கம் செய்வது சாதியமைப்பைக் காப்பாற்றும் முயற்சியாகவும் உருப்பெறும் அபாயம் உள்ளது. குறிப்பிட்ட சாதியோடு அடையாளம் காணப்படும் ஒரு கலையைப் பயிலவும் அதைத் தமது வாழ்க்கையோடு இணைத்துக்கொள்ளவும் பிற சாதியினர் முன்வருவார்களா? அதிலும் அந்தக் கலை 'கீழ்ச்சாதி'யோடு அடையாளப்படுத்தப்பட்டிருக்கும்போது இது எப்படிச் சாத்தியமாகும்? சென்னை சங்கமம் அமைப்பாளர்கள் மட்டுமின்றி, மரபுக் கலைகளை மீட்டுருவாக்கம் செய்வது குறித்துப் பேசிவரும் அனைவரும் எதிர்கொள்ள வேண்டிய கேள்வி இது.

இயந்திரமயமான பெருநகர்ப்புற வாழ்வில் கலை ரீதியான சலனங்களை ஏற்படுத்துவது அவசியம்தான். ஆனால் மரபுக் கலைகளை மீட்டுரு வாக்கம் செய்வதற்கு நகர்ப்புற மக்களிடையே அவற்றுக்கான ஆதரவைப் பெருக்க வேண்டும் என்னும் அணுகுமுறை தன்னளவிலேயே பலவீனமானது. தப்பாட்டத்தையும் ஒயிலாட்டத்தையும் பார்த்துத் தென் சென்னையின் நடுத்தர வர்க்கப் பிரதிநிதிகள் பிரமிப்பதன் மூலம் அக்கலைகள் வளர்ந்துவிடமாட்டா. இவர்களது கவனத்தை இவற்றின்பால் திருப்புவது முக்கியம்தான். ஆனால், இவர்களது அங்கீகாரம் மட்டுமே இந்தக் கலைகளை வளர்க்க உதவாது. நகரின் கேளிக்கையின் ஒரு பகுதியாக இது அவர்கள் பார்வையில் உருமாறுவதற்கு அதிக நாட்கள் ஆகாது.

கர்நாடக இசையைச் சபாக்களின் மேடைகளிலிருந்தும் கோவில் சன்னதிகளிலிருந்தும் நகர்த்தி, பூங்காக்களிலும் கடற்கரைகளிலும் கொண்டுவந்தது புதுமைதான். இதுவரை இது போன்ற இசை நிகழ்வுகளை நேரில் பார்த்திராத பலர் அனுபவிக்க வாய்ப்புக் கிடைத்தது என்பது உண்மைதான். ஆனால், ஏற்கனவே சபாக்கள் நிறைந்த தென் சென்னைப் பகுதியி஫ல்யே கர்நாடக இசை நிகழ்வுகள் நடந்தன. சென்னை நகரில் ஏற்கனவே நிலைபெற்றிருக்கும் சாதி மற்றும் வர்க்கப் பிரிவுகளை ஓரளவு கணக்கில் எடுத்துக்கொண்டே நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டிருப்பதாக எண்ண இடமிருக்கிறது. இதுபோன்ற சங்கமங்கள் நிலைபெற்ற சாதி-வர்க்க வரைபடத்தைக் கலைத்துப்போடுவதாகத்தானே இருக்க வேண்டும்?

பெருமளவில் தமிழ்க் கலைகளை முன்னிறுத்தி நடத்தப்பட்ட இந்த நிகழ்வுகளுக்கான விளம்பரங்களைத் தமிழ் இதழ்களில் அதிகம் காண முடியவில்லை. கலை இலக்கியத் துறைகளில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் பல அமைப்புகளுக்கும் இதழ்களுக்கும் சிறப்பு அழைப்பு எதுவும் இல்லை. நிகழ்வுகளில் பங்கு பெற்ற கலைகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரைத் தேர்வு செய்யுமுன் உரிய ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தத் துறைகளில் பல ஆண்டுகளாக இயங்கிவரும் ஆளுமைகள் கலந்தா லோசிக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. தமிழ்ச் சங்கமம் நிகழச்சி நிரலைப் பார்க்கும்போது இது அப்பட்டமாகத் தெரிகிறது. தேர்வுகளுக்கு அடிப்படையான அளவுகோல்களையும் வெளிப்படையாக முன்வைப்பது ஜனநாயகபூர்வமான ஒரு கடமை. இது போன்ற போதாமைகள் தவிர்த்திருக்கப்படக்கூடியவை என்பது மட்டுமல்ல. சென்னை சங்கமத்தின் அறிவிக்கப்பட்ட நோக்கங்களுக்கு முரணானவை.

n n n

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் 'மிகை நாடி மிக்க கொளல்' என்ற வகையில் சென்னை சங்கமத்தை வரவேற்கலாம். அதே சமயம் அதன் போதாமைகளும் அலட்சியப்படுத்தக்கூடியவை அல்ல. கலைகளுக்கும் மக்களுக்கும் இடையேயான உறவைச் செழுமைப்படுத்தக்கூடிய எந்த நிகழ்வும் முக்கியமானது என்பதால் சென்னை சங்கமம் அதன் குறைபாடுகளை மீறி முக்கியத்துவம் பெறுவது இயல்பானதே. குறைகளை மட்டும் மையப்படுத்துபவர்கள் நிறைந்த ஒரு சூழலில் நம்பிக்கையோடு இயங்குவது எளிதல்ல. விமர்சனங்களை ஆக்கபூர்வமாக எதிர்கொள்வதும் அப்படியே. அரிதான இந்தப் பண்புகள் சென்னை சங்கமம் அமைப்பாளர்களுக்கு இருக்கின்றனவா என்பது தெரிய அடுத்த ஆண்டுவரை காத்திருக்க வேண்டும்.

உள்ளடக்கம்

Google Ads.....


Google