Google   www kalachuvadu.com

 

பாரதி 125, புதுமைப்பித்தன் 100, 
சுந்தர ராமசாமி 75

காற்றில் கலந்த பேரோசை

அ.கா. பெருமாள்

உலகத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கின் இரண்டாம் நாள் (20 டிசம்பர் 2006, புதன்கிழமை) மதிய உணவிற்குப் பின் தொடங்கிய முதல் அமர்வில் முனைவர் செ. யோகராசா சிறப்புரை நிகழ்த்தினார். 

நவீனத் தமிழின் மூன்று ஆளுமைகளும் இலங்கையின் நவீனத் தமிழ் இலக்கியத்தைப் பாதித்ததைப் பற்றிச் சுருக்கமாக நோக்குவதே என் உரை என்று யோகராசா ஆரம்பித்தார்.

பாரதியாரை விளங்கிக்கொள்வது என்பது தமிழின் நவீனத்தன்மையை விளங்கிக்கொள்வதற்குச் சமமானது. இத்தகைய ஆளுமையை உடைய பாரதி இலங்கை நவீனத் தமிழ் இலக்கியத்திற்குப் பிரதான உந்து சக்தியாக இருந்தார் என்பது பின்னோக்கிப் பார்க்கும்போது புரிகிறது.

இந்த நேரத்தில் இலங்கையின் நவீனத் தமிழ் இலக்கியப் பின்னணியைப் பார்ப்பது அவசியம். இலங்கையில் 1942ஆம் ஆண்டில் உருவான மறுமலர்ச்சிச் சங்கத்தையும் அது வெளியிட்ட சஞ்சிகையையும் முக்கியமாகக் கருத வேண்டும். தமிழகத்தில் 1950களின் ஆரம்பத்தில் நன்கு அறியப்பட்ட மார்க்சியப் படைப்பாளர் செ. கணேஷை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'பாரதி' என்ற சஞ்சிகையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கையில் நவீன இலக்கியத்தின் பிரதானமான கிளை ஊற்றெடுக்கக் காரணம் இது.

ஏற்கனவே எழுச்சியுற்றிருந்த இலங்கைச் சிறுகதையும் இந்த மறுமலர்ச்சிக் குழுவுடன் சேர்ந்துகொண்டது. நவீன விமர்சனமும் இத்துடன் துளிர்விட்டது. இவ்வாறாக முதன்மை பெற்ற நவீனக் குழுவின் சிந்தனை ஊற்று பாரதியை அடியொற்றி இருந்தது. 

'பாரதி' சஞ்சிகை கொழும்பிலிருந்து வெளிவந்தது. 'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்' என்னும் வரி இந்தச் சஞ்சிகையை அலங்கரித்தது. இலங்கை நவீனத் தமிழ் இலக்கியச் சிந்தனைப் போக்கிற்கு பாரதி உத்வேக புருசராக விளங்கினார்.

ஈழத்து நவீனத் தமிழ்க் கவிதையின் ஊற்றுக்கண் பல்வேறு காலங்களில், பல்வேறு சூழ்நிலைகளில், பல்வேறு மட்டங்களில் நெறிப்பட்டிருக்கிறது.

1920இன் தொடக்கத்தில் சுவாமி விபுலானந்தர், மேடைப் பேச்சின் ஊடாகவும் கட்டுரைகளின் ஊடாகவும் கவிதைகளை விமர்சித்ததை முன்னோடியாகக் கொள்ளலாம்.

1930களிலேயே பாரதியின் கவிதைப் பக்கங்கள் மறுவிமர்சனம் செய்யப்பட்டன. பாரதியின் மேதா விலாசத்தில் மட்டும் அவரது புகழ் இலங்கையில் பரவவில்லை. இலங்கையில் பரவலாக இருந்த தேசிய உணர்ச்சி, கலை ஈடுபாட்டிற்கும் பாரதி தேவைப்பட்டார். அதாவது இலங்கைக் கவிஞர்களுக்குத் தேசியம் சார்ந்த விஷயங்களுக்கு ஆதர்சமாக 'வாராது போல் வந்த மாமணி'யாக பாரதி விளங்கினார்.

இலங்கை நவீனக் கவிதையின் மற்றொரு கிளை மலையகச் சார்பு உடையது. ஈழத்து முதல் பெண் கவிஞர் மீனாட்சி அம்மா நடேசய்யர், பாரதி பாடல்களை இசையுடன் பாடினார். பாரதி பாடல்களின் மெட்டில் தாமும் பாடல்கள் இயற்றினார். தொழிலாளர் மத்தியில் இயற்றிய இந்தப் பாடல்கள் மலையகப் பிரதேசத்தின் கவிதைகளில் இன்னொரு மாற்றத்தை ஏற்படுத்தியது.

மலையகத் தோட்டத் தொழிலாளர் மத்தியில் கோவிந்தசாமி, பெரியசாமிப்பிள்ளை என்னும் இரண்டு மக்கள் கவிஞரும் உருவாகத் தொடங்கியது பாரதியின் தாக்கத்தால்தான். தமிழக ஆய்வாளர் ஆ. இரா. வேங்கடாசலபதியின் வார்த்தையில் கூறினால் இவர்களை 'முச்சந்தி இலக்கிய' வாரிசு என்று கூறலாம்.

இலங்கை மலையகத் தொழிலாளர்களின் அவலங்களை முதல்முதலில் இனம் காட்டியவர் சி.வி. வேலுப்பிள்ளை. இவரது ஆங்கில நெடுங்கவிதையின் உருவாக்கத்திற்குப் பாரதியின் 'கரும்புத் தோட்டத்திலே' என்னும் கவிதை காரணமாக இருந்தது. இவரும் பாரதி புகழ் பரப்பியவர். இலங்கையில் பாரதி புகழ் பரப்பியவர்களில் இவர் முக்கியமானவர்.

இலங்கை விடுதலை பெற்ற 1950க்குப் பின் முக்கியக் கவிஞரான புரட்சி கமாலின் 'பாரதி வழி' என்ற கவிதை அப்போது முதன்மைப்படுத்தப்பட்டது.

ஐம்பதுகளில் உள்ள மற்றொரு கவிஞர் முருகையன். இவரைத் தொடர்ந்து 60 வரை இலங்கைக் கவிஞர்கள் பாரதியைப் பின்பற்றி வந்துள்ளனர்.

இலங்கைக் கவிதையில் பாரதி பாதகமான விளைவுகளையும் ஏற்படுத்தியுள்ளார். பாரதி தன் கவிதைகளைத் தேசியம், சமூகம், தத்துவம் என்னும் தலைப்புகளில் அமைத்திருந்தார். இலங்கையிலிருந்து வெளிவந்த கவிதைகளும் இதுபோலவே வகைப்படுத்தப்பட்டிருந்தன. அதோடு இலங்கைக் கவிஞர்களும் இதே தலைப்புகளில் கவிதைகள் எழுத முனைப்புக் காட்டினர். வேறு சமூகச் சிந்தனை பற்றி இவர்கள் சிந்திக்காமல் இருந்தனர்.

ஐம்பதுக்குப் பின் இலங்கையில் இருந்த தமிழ் மொழி எழுச்சி உணர்வின் தேவையை நிரப்ப பாரதிதாசன் வந்தார். அவரின் செல்வாக்கு இதனால் வளர்ந்தது. இத்தகைய மொழி வளர்ச்சியின் ஓட்டம் அறுபதுவரை இருந்தது.

அறுபதுக்குப் பின் வானம்பாடி மரபு பாதிக்கத் தொடங்கியது. மேத்தா பாணிக் கவிஞர்கள் பரம்பரை இக்காலத்தில் உருவானது. இந்த ஆரோக்கியமற்ற சூழல் பின்னர் உடைந்துபோனது. இந்தக் காலங்களில் நுஃமான், மு. பொன்னம்பலம், சண்முகம் சிவலிங்கம், அண்மையில் காலமான சு. வில்வரத்தினம் போன்றோர் வந்தனர்.

n n n

இலங்கையில் 30 - 60களில் புதுமைப்பித்தன் நன்கு அறியப்பட்டவராக இருந்தார். மணிக்கொடி பத்திரிகைக்கென்று இலங்கையில் வாசகர்கள் இருந்தார்கள். மணிக்கொடியில் இலங்கையர்கோனின் 7 கதைகள் பிரசுரம் ஆயின.

மணிக்கொடி வெளிவந்த காலத்தில் இலங்கையில் புதுமைப்பித்தனின் வாசகர்களாகப் பல எழுத்தாளர்கள் இருந்தனர். அவர்கள் தங்கள் சிறுகதைக்குள் புதுமைப்பித்தனைப் பிரவேசிக்க விடவில்லை. இதற்கு ஏற்புடைத்தான காரணங்கள் உண்டு.

ஆரம்பகாலச் சிறுகதையாசிரியர்கள் சமூக நோக்கில் சிறுகதை எழுதியவர் அல்லர். பலர் புகழுக்காக எழுதினார்கள். மணிக்கொடியைவிடக் கலைமகள் பத்திரிகையின் கடாட்சத்தை விரும்பியவர்களே அன்று அதிகம்.

பின்னர் எழுதியவர்களின் மையப்பொருளாக இருந்த ஆண் - பெண் உறவு, விடுதலை, துயரம் போன்றவைகூட கு.ப.ரா. பாதிப்பால் வந்தவை.

நாற்பதுகளின் பின்பகுதியில் 'பித்தன்' என்ற எழுத்தாளர் இலங்கையில் இருந்தார். இவர் புதுமைப்பித்தனின் பாதிப்பால் 'பித்தன்' என்று பெயர் வைத்துக் கொண்டவர். நாற்பதுகளில் புதுமைப்பித்தனை நேரில் கண்ட அனுபவத்தை இலங்கை மக்களுடன் இவர் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இவர் விளிம்புநிலை மக்களின் வாழ்வைச் சிறுகதையில் எழுதியதற்குப் புதுமைப்பித்தனே காரணமாக இருந்திருக்கிறார்.

ஐம்பதுகளில் எழுதிய வ.அ. ராசரத்தினம் கிராம வட்டார மணம் கமழ எழுதியதற்கும் திருநெல்வேலி வட்டார மணம் கமழ எழுதிய புதுமைப்பித்தனே காரணம். ராசரத்தினத்தின் பூர்வீகமும் தமிழகத்தின் திருநெல்வேலிப் பகுதிதான். புதுமைப்பித்தனின் 'அகலிகை', 'சாப விமோசனம்' ஆகிய கதைகள் இலங்கைப் படைப்பாளிகளை வெகுவாகப் பாதித்திருக்கின்றன. தொன்மங்களை மறுவாசிப்புச் செய்ய இந்தக் கதைகள் கைகொடுத்திருக்கின்றன. மு. தளையசிங்கம் முதல் ராகவன் வரை 'அகலிகை' கதையைத் தொட்டுப் பார்த்ததற்குப் புதுமைப்பித்தனின் இந்தக் கதைகள் காரணமாயிருந்தன.

ஆனால் பாரதியைப் போல் புதுமைப்பித்தன் இலங்கை எழுத்தாளர்களிடம் ஆழமான தடம் பதிக்கவில்லை. இதற்குப் போதிய காரணம் உண்டு.

கலைமகள் பத்திரிகையும் கல்கியும் தி.மு. கழக எழுத்தாளர்களும் சோவியத் நூற்களும் பிரேம்சந்த் படைப்புகளும் இலங்கைப் படைப்பாளிகளிடம் பெற்ற செல்வாக்குதான் இந்தக் காரணம்.

n n n

இலங்கையில் ஆரம்பகாலத்தில் சுந்தர ராமசாமியைப் பரவலாக இனம்காட்டியது 'செம்மீன்' மொழிபெயர்ப்பு நாவல்தான். பின்பு 'ஒரு புளியமரத்தின் கதை' சு.ரா.வைப் பற்றிய அபிப்பிராயத்தை உருவாக்கியது.

சு.ரா.வின் கவிதைகள் இலங்கை வாசகர்களையோ கவிஞர்களையோ ஈர்க்கவில்லை என்று சொல்லலாம். முக்கியமாக இலங்கைக் கவிஞர்களுக்குக் கவிதை பற்றிய சு.ரா.வின் கருத்தாக்கம் ஈர்க்கவில்லை. அவர்கள் அன்றாடப் பிரச்சினையை நேரடியாக அறிமுகப்படுத்துவது கவிதை என்று நினைத்தனர்.

இலங்கையில் எண்பதுகளுக்குப் பின் ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகளும் மாற்றங்களும் இலக்கியத்தில் புதுமைத் தேடலுக்குத் தடையாக இருந்தன. சமகாலப் பிரச்சினைகளையே இலக்கியமாகப் படைத்தனர். இக்காலங்களில் நடைமுறை வாழ்க்கை பற்றிய பன்முக விமர்சனங்களையோ, அச்சாணியான மனித உறவுகளையோ எழுத்தாளர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. படைப்பின் மொழிச் செழுமையிலும் அவர்கள் அக்கறை கொள்ளவில்லை.

அந்நியனான ஜே.ஜே. அந்நியனாகவே எமது படைப்பாளிகளுக்குத் தென்பட்டதில் வியப்பில்லை. சு.ரா.வின் மொழி வீச்சாற்றல் வியப்புக்குரியதாக மட்டுமே இவர்களிடம் தாக்கம் பெற்றது. என்றாலும் இலங்கை எழுத்தாளர், வாசகர் ஆகியோரிடம் பாரதி, புதுமைப்பித்தன் உட்பட வேறு சிலரும் ஏற்படுத்த முடியாத முக்கியமான பாதிப்பை சு.ரா. ஏற்படுத்தியிருந்தார். அவரது ஆளுமையே இதற்குக் காரணம்.

இலங்கைப் படைப்பாளிகள், வாசர்களுடன் சு.ரா. கொண்டிருந்த நேசமும் அதன் அகலமும் ஆழமும் விரிந்துபட்டவை. சகஎழுத்தாளருடன் நேசிப்பை ஏற்படுத்துவது, கலைஞன் ஒருவனுக்கு இருக்க வேண்டிய சமூகப் பொறுப்பு எனில் அவ்விதத்தில் சு.ரா. இலங்கையில் ஏற்படுத்திய பாதிப்பு இயல்பானது.

சுருங்கக் கூறின் இலங்கை எழுத்துகளில் பாரதி ஏற்படுத்திய பாதிப்பு குறிப்பிட்ட காலம்வரை கணிசமானது.

புதுமைப்பித்தன் ஏற்படுத்திய பாதிப்பு குறைவானது.

சுந்தர ராமசாமி ஏற்படுத்திய பாதிப்பு வித்தியாசமானது. அது காற்றில் கலந்த பேரோசை போன்றது. 

n n n

20.12.2006 புதன் காலை அமர்வு பற்றி ராஜநாயகம் கருத்துரை வழங்கினார்.

சினிமா பற்றிய புதுமைப்பித்தனின் தொடர்பு தெளிவாகப் பதிவாயிருக்கிறது. சு.ரா.வுக்கும் சினிமாவிற்குமான தொடர்பு பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.

ஒருமுறை 1989இல் தருமு சிவராமுவைச் சந்தித்தபோது அவர் 'அக்கிரகாரத்தில் கழுதை' என்ற சினிமாவில் பேராசிரியாக நடிக்க சு.ரா. ஆசைப்பட்டார், பின் அது ஏனோ தடைப்பட்டது என்றார். நான் இது பற்றி சு.ரா.விடம் 2004இல் கேட்டபோது சிரித்தார், அவ்வளவே. 2002இல் அவர் ஒரு மலையாளப் படத்தில் அப்பா ரோலில் நடிக்கப்போவதாகக் கேள்விப்பட்டேன்; அதுவும் நடக்கவில்லை.

பாரதியின் கருத்துலகத்தைவிட மு. தளையசிங்கத்தின் கருத்துலகம் உயர்வானது என்று எடுத்துச் சொன்னவர் சு.ரா. என்றார் ராஜநாயகம்.

உள்ளடக்கம்

Google Ads.....


Google