Google   www kalachuvadu.com

திரை: வேற்று மொழிப் படங்கள்

கடவுளின் சதி

குவளைக்கண்ணன்

n  திரை: வேற்று மொழிப் படங்கள்

பண்டைய பாபிலோனியாவில் சொர்க்கத்தை அடைவதற்காக மனிதர்கள் விண்ணை முட்டும் கோபுரம் ஒன்றைக் கட்டுகிறார்கள். தனது இடத்தை அடைய நினைத்த மனிதர்களின் திமிரைக் கண்ட கடவுள், மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாதபடி செய்து அவர்கள் சொர்க்கத்தை அடையவிடாமல் செய்துவிடுகிறார். மனிதர்கள் கட்டிய அந்தக் கோபுரத்தின் பெயர் பேபல். இந்தக் கதை ஆதியாகமத்தின் 11ஆம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டுள்ளது.

சிறுவர்களின் விளையாட்டுத்தனமான செயலால் விளையும் அசம்பாவிதத்தில் தொடங்குகிற திரைப்படம், இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்களான வட ஆப்பிரிக்காவின் மொராக்கோவிலுள்ள, மேய்ச்சலை ஜீவாதாரமாகக் கொண்ட குடும்பம், மொராக்கோவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சாண்டியாகோவைச் சேர்ந்த ஓர் அமெரிக்கத் தம்பதி, அந்தத் தம்பதியின் குழந்தைகளைப் பராமரிக்கும் மெக்சிகத் தாதி, முன்பொரு சமயம் மொராக்கோவிற்கு வேட்டைக்கு வந்து வேட்டையில் உதவிய மொராக்கருக்கு வின்செஸ்டர் துப்பாக்கியைப் பரிசளித்துச் சென்ற ஜப்பானியர், அந்த ஜப்பானியரின் காது கேளாத, வாய் பேச முடியாத பெண் என்று பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த மக்களையும் அவர்களது வாழ்வில் தவறான புரிதல்களால் ஏற்படும் சிக்கல்களையும் சேர்த்துக் காட்டியுள்ளது இந்தத் திரைப்படம். தனிநபர்களுக்கிடையேயும் கலாச்சாரங்களுக்கு இடையேயும் தவறான புரிதல்களால் ஏற்படும் விளைவுகள் கடுமையானவை. தவறான புரிதல்களே இந்தப் படத்தில் சித்தரிக்கப்படும் பல்வேறு சம்பவங்களுக்கும் மையச் சரடாக உள்ளன.

இந்தத் திரைப்படத்தின் இயக்குநரான அலெஹாந்த்ரோ கொன்ஸாலஸ் இனாரிட்டுவின் முந்தைய இரண்டு திரைப்படங்களான அமொரஸ் பெரோஸ், 21 கிராம் ஆகிய படங்களிலும் இதே வகையாக ஒரு சம்பவமும் அந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய பல்வேறு நபர்களுடைய வாழ்வு சார்ந்த சித்தரிப்புகளும் ஒரு மையச் சரடோ டு இணைக்கப்பட்ட நான் லீனியர் காட்சி அமைப்புகளைக் கொண்ட படங்களே. இவரது முதல் படமான அமொரஸ் பெரோஸில் வெளிப்பட்ட வேகமும் அலட்சியமும் அடங்கி, இந்தப் படத்தில் ஒருவித முதிர்ச்சி வெளிப்படுகிறது. அமொரஸ் பெரோஸ் வகையான திரைப்படம் ஒன்று மணிரத்னம் என்னும் இயக்குநரால் இந்தியிலும் தமிழிலும் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டு ரசிக்கப்படாமல் ஓடிற்று.

பொதுவான திரைப்படங்களில் பார்வையாளர்களை அதிரவைப்பதற்காகவும் உருகவைப்பதற்காகவும் வலிந்து உருவாக்கப்படும் காட்சியமைப்புகள்போலில்லாமல் ஒருவர் வாழ்வில் நேரிட்டுக் கடந்துசெல்பவை என்பதாகக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. கேமரா, எடிட்டிங், இசை போன்றவை இருப்பது தெரியாத அளவிற்கு இருந்து இந்தப் படத்திற்குத் தங்களது பங்களிப்பைச் சரியாகச் செய்துள்ளன. இந்தப் படத்தின் பல காட்சியமைப்புகளும் சற்றே பிசகினாலும் கேவலமாக அமைந்துவிடக்கூடிய தன்மையிலானவை. இவற்றைக் கவனமாகக் கையாண்டதில் இயக்குநரின் முதிர்ச்சி வெளிப்படுகிறது.

காது கேளாத, வாய்பேச முடியாத, அரவணைப்பு தேவைப்படுகிற தாயற்ற ஜப்பானியப் பெண் தவறான புரிதலோடு ஆண்களைக் கவர்வதற்காகச் செய்யும் பல செயல்களும் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தி, அவளுக்குத் தேவைப்படுவது அரவணைப்புதான் என்ற புரிதலைப் பார்வையாளருக்கு ஏற்படுத்திவிடுகிறது. ஆழமான பாதிப்பை உண்டாக்கும் இந்தக் காட்சிகள் மற்றபடி கிளுகிளுப்பை ஏற்படுத்திவிடக்கூடியவை. குண்டடிபட்ட பெண் அசைய முடியாமல் தனது ஆடையிலேயே சிறுநீர் பெய்துவிட்டு மீண்டும் வருவதாகக் கூறும்போது, ஒரு பாத்திரத்தில் பெய்வதற்குக் கணவன் உதவும் காட்சியும், குறிப்பாக இந்தக் காட்சியின் ஒலியமைப்பும் நுட்பமானவை. அமெரிக்கத் தாதி தனது மகனுடைய திருமணத்திற்குப் போகவேண்டிய கட்டாயத்தில் மெக்சிகோவுக்குக் குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துப் போய்த் திரும்பும்போது, சரியான அனுமதி இல்லாததால் அமெரிக்க எல்லையில் பிரச்சினையாகிப் பாலைவனத்தில் குழந்தைகளைத் தொலைத்துவிட்டு அலைகிற காட்சிகளில் தாதி வேடமேற்றிருப்பவரின் நடிப்பு அபாரமானது. வானுரசும் இன்றைய பேபல் ஒன்றின் மீது ஜப்பானியப் பெண்ணுக்குப் புரிதல் ஏற்படும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மனதை நெகிழ்த்தும் இந்தக் காட்சியில் அந்தப் பெண் நிர்வாணமாக நிற்கிறாள். இது வேறு நிர்வாணம்.

மெக்சிக இயக்குநரான அலெஹாந்த்ரோ இனாரிட்டுவின் இந்தப் படத்தில் பிராட் பிட், கேட் பிளான்ச்செட் ஆகிய முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்கள் பிரதான பாத்திரங்களாக நடித்துள்ளனர். வெகுஜனத் திரைப்படங்கள் மூலம் நட்சத்திர அந்தஸ்து பெற்ற முன்னணி நட்சத்திரங்கள் மாற்றுத் திரைப்படங்களிலும் நல்ல திரைப்படங்களிலும் நடிப்பது தொலைவில் இருக்கும் ஹாலிவுட்டிலும் அருகில் இருக்கும் கேரளாவிலும் சாத்தியமாகிறது.

கடவுள், மனிதர்கள் ஒருவரை ஒருவர் தவறாகப் புரிந்துகொள்ளும்படிச் செய்யாதிருந்திருந்தால் மனிதர்களுக்கு இப்போதுள்ள பிரச்சினைகளும் சிக்கல்களும் துன்பங்களும் இருந்திருக்காது. ஆனால் மனித வாழ்விலுள்ள சுவாரசியமும் இருந்திருக்காதே.

மனிதர்களாகிய நாம் பேபல் கோபுரத்தைக் கட்டி முடித்துவிடவில்லை, கட்டுவதைக் கைவிடவுமில்லை. ஆண்டவரே, நீர் எமக்குச் செய்த சதிக்கு நன்றி.

உள்ளடக்கம்

Google Ads.....


Google