Google   www kalachuvadu.com

 

ரவிக்குமார்மீதான தாக்குதல்: எதிர்வினைகள்

சாதி வெறுப்பின் கொடுங்காயங்கள்
 

  சாதி உணர்வின் சாட்சியங்கள்

  குறுகிய மனங்கள், குறுக்கப்படும் மனவெளிகள்

  எழுத்தாளர் கண்டன அறிக்கை

  சாதி வெறுப்பின் கொடுங்காயங்கள்

தாக்குதல்கள் குறித்து அம்பேத்கரிய சிந்தனையாளர் ஆனந்த் அனுப்பிய தொடர் மின்னஞ்சல்களுக்கு உலகெங்கிலு மிருந்து கிடைத்த எதிர்வினைகளை சுருக்கப்பட்ட வடிவில் தருகிறோம். இவை தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்டன.

ஜனவரி 2 அன்று சேடப்பாளையம் கிராமத்தில் காட்டுமன்னார்கோயிலின் விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ. டி. ரவிக்குமார் மீது காவல் துறை நடத்திய அராஜகத் தாக்குதலைக் குறித்து எழுதுகிறேன். புத்தாண்டு தினத்தன்று கொலை செய்யப்பட்ட சிவா என்ற தலித் இளைஞரின் இறுதி ஊர்வலத்திலும் அவருக்கு நீதி கோரி நடந்த போராட்டத்திலும் திரு. ரவிக் குமார் பங்கேற்றிருந்தார். தன்னைத் தாக்கியவர்கள் எனத் திரு. ரவிக்குமார் அடையாளம் காட்டிய எஸ்.ஐ. திரு வேங்கடம் (டெல்டா போலீஸ்), எஸ்.ஐ. குமரேசன் (தமிழ் நாடு காவல் துறை) ஆகியோர்மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துகிறேன். சிவாவின் குடும்பத்தினருக்குத் துரிதமாக நீதி கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். சிவா கொல்லப்பட்ட சம்பவம் புத்தாண்டில் வரவிருப்பவைக்கு ஒரு தொடக்கம்போல் அமைந்துவிடாது என நம்புகிறேன்.

அருந்ததி ராய்

l

சேடப்பாளையத்தில் ஒரு தலித் இளைஞர் கொல்லப்பட்டதும் ரவிக்குமார் மீதான காவல் துறைத் தாக்குதலும் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்குக் கவலையளிப் பவை. தமிழகம் தன் மக்களை சமத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே நிர்வாகம் செய்யும் மாநிலம் என்னும் சர்வதேசப் புகழைத் தக்கவைத்துக்கொள்ள, முதல்வர் என்ற முறையில் சாதீயக் கொலைகளுக்கும் இது போன்ற அநீதியான காவல் துறை நடவடிக்கைகளுக்கும் தங்கள் எதிர்வினை அதிமுக்கியத்துவம் வாய்ந்தது. சம்பந்தப்பட்ட காவல் துறையினரைச் சட்டத்தின் முழு அதிகாரத்தையும் செலுத்தித் தண்டித்துத் தாங்கள் அவர்களது செயலைப் பகிரங்கமாகக் குற்றம்சாட்ட வேண்டும் எனவும் பலியானவரின் குடும்பத்திற்குத் துரிதமாக நீதி கிடைக்கச்செய்து மாவட்டத்தில் சாதிப் பதற்றம் அதிகரிக்காமல் தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.

டாக்டர் ரூபா விஸ்வநாத்
ஆய்வு மாணவர், லூசி கேவண்டிஷ் கல்லூரி
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், பிரிட்டன்

l

இப்புத்தாண்டின் தொடக்கத்திலேயே எம்.எல்.ஏ. திரு. ரவிக்குமார்மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம், நம் மாநிலத்தில் அமைதி நிலவுவதிலும் பலவீனமான நிலையிலுள்ள மக்களுக்கு நீதி கிடைப்பதிலும் அக்கறை கொண்டுள்ள அனைவருக்கும் மிகுந்த வருத்தத்தையும் கவலையையும் அளிப்பது.

தலைவராகவும் எம்.எல்.ஏ.வாகவும் உள்ள அவர்மீது காவல் துறையினர் நடத்திய கொடூரமான தாக்குதல், ஒரு நல்ல தலைவர் தனது கடமைகளை நிறைவேற்றுவதைத் தடுக்கும் வகையில் வாயடக்கி அச்சுறுத்தும் நோக்கத்தைக் கொண்ட காட்டுமிராண்டித்தனமான செயல் என்று கண்டிக்கப்பட வேண்டும். தவறிழைத்த காவல் துறையினரை ஒழுங்குபடுத்த அவர்கள்மீது எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பேராசிரியர் தயானந்தன்
பணியில்லாப் பேராசிரியர்
சென்னை கிறித்தவக் கல்லூரி

l

இந்த ஆண்டின் முதல் நாளில் ஒரு தலித் இளைஞர் கொல்லப்பட்டதையும் அதையடுத்து எம்.எல்.ஏ. ரவிக்குமார் காவல் துறையினரால் தாக்கப்பட்டதையும் கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். நாம் நாகரிக உலகில் வாழ்வதாகக் கூறிக்கொள்கிறோம், ஆனால் சமூகத்தினர் மட்டுமின்றி அரசாங்கத்தில் பங்குவகிப்பவர்களும் இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வது தொடர்கிறது. நமக்கொரு அரசியல் சாசனம் இருக்கிறது, ஆனால் தலித்துகளைப் பொருத்தவரை சட்டத்தின் அதிகாரம் என்பது கானல் நீராகவே இருக்கிறது.

தமிழகத்தில் தங்கள் விருப்பம்போல் தலித்துகளைக் கொன்று குவிக்குமளவுக்கு அத்துமீறிவிட்டிருக்கும் சாதிய சக்திகளின் காட்டுமிராண்டித்தனமான நடத்தைக் கண்டனம் செய்கிறோம். சட்டம், ஒழுங்கின் பாது காவலர்களாக இருக்க வேண்டிய காவல் துறையினரே சாதீய மனப்பான்மையுடன் செயல்படுவது பரிதாபம்.

பாதிக்கப்பட்டவருக்குப் போதுமான நஷ்ட ஈடு வழங்கி, சாதீயச் சக்திகளும் அரசு ஊழியர்களும் தலித்துகள்மீது மேற்கொண்டு அராஜகமான செயல்கள் ஏதும் செய்யாமல் தடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

எம்.சி. ராஜ், ஜோதிராஜ்
பூசக்தி கேந்திரா, தலித் ஆசிரமம்
தும்கூர் தாலுகா, கர்நாடகா

l

கொலம்பியா பல்கலைக்கழகத்தில் என் மாணவர்களுக்குத் தமிழக சாதி ஒழிப்பு இயக்கம் பற்றி மிகவும் பெருமையுடன் கற்றுக்கொடுக்கிறேன். இந்த இயக்கத்தில் தாங்களும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க பங்காற்றிவருகிறீர்கள்.

உண்மையாகவே சாதிகளற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான தமிழ்நாட்டின் பெரும் போராட்டத்தில் மிகச் சமீபத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு தொடர்பான தலைப்புச் செய்தி ஒன்றைப் படித்தபோது மிகவும் துயரமடைந்தேன். முதலாவதாக, சேடப்பாளையம் கிராமத்தில் சிவா என்ற தலித் இளைஞர் மிருகத்தனமாகக் கொல்லப்பட்டார். இரண்டாவதாக, சர்வதேச அளவில் மதிக்கப்படும் அறிவுஜீவியும் எழுத்தாளருமான எம்.எல்.ஏ. டி. ரவிக்குமார் முரட்டுக் காவல் துறை அதிகாரிகளால் தாக்கப்பட்ட துயரச் சம்பவம் நடந்தது. அமைதியான இறுதி ஊர்வலம் சாதி மோதலாகாமல் தடுக்கவே ரவிக்குமார் முயன்றுகொண்டிருந்தார்.

தி.மு.க. அரசு சிவாவைக் கொன்றவர்களைத் துரிதமாக விசாரணை செய்தும் காவல் துறையில் இருந்து கொண்டே கண்டிக்கத்தக்க முறையில் ரவிக்குமார்மீது தாக்குதல் நடத்திய சட்டவிரோத சக்திகளைக் கட்டாயமாக ஒழுங்குபடுத்தியும் சாதியக் கொடுமைகளுக் கெதிரான நீதியில் தனக்குள்ள பற்றுறுதியை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

நத்தானியல் ராபர்ட்ஸ், பிஎச்.டி.
மானுடவியல் துறை, கொலம்பியா பல்கலைக்கழகம்
ஆய்வு மாணவர், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ்

l

ரவிக்குமார் காவல் துறையினரால் தாக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். சிவா என்னும் தலித் இளைஞர் அநீதியாக, அராஜகமாகக் கொல்லப்பட்டதற்கு இரங்கலைத் தெரிவிக்கச் சென்றபோது இது நடந்திருப்பது இச்சூழலை மேலும் மோசமாக்குகிறது.

அந்த மிருகத்தனமான கொலையையும் தலித் தலைவரும் மக்கள் பிரதிநிதியுமான ரவிக்குமார்மீதான தாக்குதலையும் வன்மையாகக் கண்டிக்கும் அதே நேரம், தவறிழைத்த காவல் துறையினர்மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கொல்லப்பட்ட சிவாவுக்கு நீதி கிடைக்க வழிசெய்யும்படியும் வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாட்டில் தலித்துகளின் உரிமைகள் மிதித்தழிக்கப்படுவதை இனிமேலும் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்பதை உங்கள் துரித நடவடிக்கை அனைவருக்கும் எடுத்துக்காட்டட்டும்.

சேவியர் ஆரோக்கியசாமி
தேசிய ஒருங்கிணைப்பாளர்
சோஷியல் ஈக்விட்டி ஆடிட்

l

திரு. ரவிக்குமார் தமிழ்நாடு காவல் துறையினரால் தாக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

ரவி தமிழக தலித்துகள் மற்றும் ஏழை மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றத்திற்காக உழைத்துவருகிறார். அவர் சமூகப் போராளியாகவும் எழுத்தாளராகவும் நாடெங்கும் அறியப்படுகிறார்.

ஒரு தலித் எம்.எல்.ஏ., தலித்துகளுக்கு ஆதரவாக நிற்பது காவல் துறையின் பார்வையில் இன்னும் பெரிய குற்றம்போலும். ரவிமீதான தாக்குதல் வேண்டுமென்றே நடத்தப்பட்டதால், அத்தாக்குதலில் ஈடுபட்ட காவல் துறையினரை எஸ்.சி./எஸ்.டி. சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் அவர்களை உடனடியாக இடைநீக்கம் செய்து இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை தொடங்க வேண்டும் எனவும் கோருகிறேன். காவல் துறைக்கு எதிராக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாவிட்டால், அரசு காவல் துறையிலுள்ள உயர்சாதியினருக்குத் தவறான சமிக்ஞை அனுப்பியதாகிவிடும். இதனால் சாதாரண தலித்துகள் மீதான் வன்முறை அதிகரிக்கவே செய்யும்.

கே. சத்யநாராயணா
மாநிலச் செயலாளர், சாதி ஒழிப்பு மன்றம்
ஆந்திரப் பிரதேசம்

l

திரு. ரவிக்குமாரைப் போன்ற ஒருவரைக் காவல் துறையில் சிறு பதவிகளில் இருப்பவர்களால் சர்வ சாதாரணமாகத் தாக்க முடியும் என்றால், அது காவல் துறையின் தலித் விரோத மனப்பான்மையையே காட்டுகிறது. உங்கள் அதிகாரிகளும் உள்ளூர் நிர்வாகமும் இச்சம்பவங்களின் தீவிரத்தைக் குறைத்துக் காட்டுவதில் முனைப்பாக இருக்கிறார்கள். மூத்த அதிகாரிகளும் அமைச்சர்களும் திரு. ரவிக்குமாரைத் தொலைபேசியில் அழைத்து அந்த "துரதிர்ஷ்டமான சம்பவ"த்திற்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கும் "மன்னிப்போம், மறப்போம்" என்றே போதிக்கிறார்கள்.

இந்த ஆண்டின் அம்பேத்கர் விருதுக்குத் விடுதலைச் சிறுத்தைகளின் திரு. தொல். திருமாவளவனை உங்கள் அரசே தேர்ந்தெடுத்துள்ளபோது, விருது வழங்கும் விழா 2007 ஜனவரி 8 அன்று நடக்கவிருக்கும்போது, கடலூர் மாவட்டத்தில் பதவியில் இருக்கும் ஒரு விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ.மீதும் தொண்டர்கள்மீதும் இத்தகையதொரு தாக்குதல் நடந்திருப்பது விநோதம்.

இச்சம்பவம் நடந்த ஒரு நாளுக்குள் நீங்கள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டால் அது பாராட்டுக்குரியது. எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனில் இப்பிரச்சினையை மனித உரிமைக் காவலர்களுக்கான ஐ.நா. தலைமைச் செயலரின் சிறப்புப் பிரதி நிதியான செல்வி ஹினா ஜிலானியிடம் கொண்டுசெல்வது தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை. ஏனெனில் திரு. ரவிக்குமார் எம்.எல்.ஏ. மட்டுமின்றி மனித உரிமைக் காவலராகப் பல ஆண்டுகளாக நாடெங்கும் மதிக்கப்படுபவர்.

ஹென்றி திஃபேன்
நிர்வாக இயக்குநர்
பீப்பிள்ஸ் வாட்ச், மதுரை

l

ரவிக்குமார்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தமிழ் நாடு காவல் துறை சம்பந்தப்பட்டிருப்பதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ஒரு ஜனநாயக அரசின் காவல்படை இதில் ஈடுபட்டிருப்பது கண்டனத்திற்குரியது, ஏற்க முடியாதது.

தங்கள் மாநிலத்தில் ஒரு தலித் இளைஞர் கொலை செய்யப்பட்டார். பின்னர் அவரது இறுதி ஊர்வலத்தின்போது அதில் பங்கேற்றவர்கள்மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. இதுவும் மனித உரிமைகள் மீதும் ஒரு ஜனநாயக மாநிலம் மற்றும் நாட்டின் அனைத்து அறங்களுக்கு எதிராகவும் நடத்தப்பட்ட ஏற்க முடியாத தாக்குதல்.

ஆகவே இச்சம்பவத்திற்குக் காரணமான காவல் துறையினர்மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, கொல்லப்பட்ட சிவாவுக்கும் எழுத்தாளர், சமூகப் போராளி, பதிப்பாளர் டி. ரவிக்குமாருக்கும் நீதி கிடைக்க வழிசெய்யும்படி வலியுறுத்துகிறேன்.

டாக்டர் கரீன் போலிட்
மானுடவியல் துறை, சவுத் ஏஷியா இன்ஸ்டிட்யூட்
ஹெய்டல்பர்க் பல்கலைக்கழகம், ஜெர்மனி

l

மத்தியப் பல்கலைக்கழங்களில் பணிபுரியும் தலித் ஆசிரியர்களான நாங்கள் எம்.எல்.ஏ. டி. ரவிக்குமார் மீதான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். சிவா என்னும் தலித் இளைஞர் கொல்லப்பட்டதற்கும் வருந்துகிறோம். தமிழகத்தின் தலைமைச் செயல் அலுவலர் என்ற முறையில் தாங்கள் பொது நீதியில் முன்னுதா ரணமாக விளங்கி, தவறிழைத்த காவல் துறையினருக்கு எதிராக உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை மேற் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.

பொது நடத்தையில் தங்கள் கட்சி பிற மாநிலங்களுக்கும் பிராந்தியங்களுக்கும் மிக உயர்ந்த தரநிலைகளை அமைத்திருக்கிறது. தங்கள் நலனுக்காகவும் தங்கள் கட்சியின் நலனுக்காகவும் தாங்கள் உடனடியாகச் செயல்பட்டு, நாடெங்கும் உள்ள தலித் போராளிகள் மற்றும் தலைவர்கள் மத்தியில் தங்களுக்குள்ள நற்பெயரைக் காத்துக்கொள்ள வேண்டும்.

டாக்டர் பி. திருமால், ஹைதராபாத் பல்கலைக்கழகம்
டாக்டர் கே. ஒய். ரத்னம், ஹைதராபாத் பல்கலைக்கழகம்
சத்ய நாராயணா, சிஐஇஎஃப்எல், ஹைதராபாத்
டாக்டர் கேசவ் குமார், பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
டாக்டர் குருராம் ஸ்ரீனிவாஸ்,
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், புதுதில்லி
குஸுமா சங்கர், ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம்
ரஞ்சித் டி.,
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம், புதுதில்லி

l

விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ.வும் மகாராஷ்டிரத்தில் தலித் இயக்கத்தில் உள்ள நாங்கள் பெரிதும் மதிக்கும் அறிவுஜீவியுமான ரவிக்குமார்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தமிழ்நாடு காவல் துறை சம்பந்தப்பட்டிருப்பது வருந்தத்தக்கது. தலித் இளைஞர் சிவா கொலை செய்யப்பட்டதும் இறுதி ஊர்வலத்தில் வன்முறை நடந்ததும் வருந்தத்தக்கவை. ரவிக்குமார்போல் சமூக அந்தஸ்துள்ள ஓர் அறிவுஜீவியைக் காவல் துறையினர் தாக்க முடியும் என்றால் சிவாவின் கிராமத்தில் உள்ள தலித் குடும்பங்களின் நிலைமையைக் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. தவறிழைத்த காவல் துறையினர்மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, கொலை செய்யப்பட்ட சிவாவுக்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும் என நானும் சாவித்ரி பாய் புலே பெண்ணியக் குழுவின் உறுப்பினர்களும் வலியுறுத்துகிறோம்.

சர்மிளா ரெகெ
பேராசிரியர், சமூகவியல் துறை, புனே பல்கலைக்கழகம்

l

நான் ஓரளவு கவனம் பெற்ற எழுத்தாளன். நான் திரு. ரவிக்குமாரின் நண்பனும்கூட. கடலூர் காவல் துறையினர் அவர்மீது வேண்டுமென்றே நடத்திய தாக்குதல் அதிர்ச்சியளிப்பது மட்டுமல்ல. அது ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் எழுத்தாளராக இருந்தால் வீட்டிலேயே இருப்பது நலம். வெளியே வந்தாலும் செல்வாக்கு மிக்க பல்வேறு கட்சிகளின் புகழ் பாடுவதற்காக மட்டுமே வரலாம். நிராதரவான, தொடர்ந்து கொல்லப்படும் மக்களின் சார்பாகப் போராடுவதற்காக வெளியே போனால் எழுத்தாளரின் தலையைத் தமிழ்நாடு காவல் துறை உடைக்கும் அபாயம் இருக்கிறது. அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும்கூட. குறைந்தபட்சம் அவர் படுகாயத்துடனாவது வீடு திரும்புவார்.

ரவிக்குமார், வெறுக்கப்படும், ஒடுக்கப்படும் ஒரு குழுவைச் சேர்ந்த எம்.எல்.ஏ. மட்டுமின்றி அவர் மதிப்பிற்குரிய ஓர் எழுத்தாளரும்கூட என்பதைத் தெரிந்து வைத்திருக்கும் அளவிற்குத் தமிழக கான்ஸ்டபிள்கள் படித்தவர்களா என்று என்னால் நிச்சயமாகக் கூற முடியவில்லை. ரவிக்குமாரை அவர்கள் தாக்கியபோது இந்த உண்மைதான் அவரை அச்சுறுத்தியது என அவரிடமிருந்து தெரிந்துகொண்டேன். இப்படியாக, அவர் மீதான தாக்குதல் குடிபோதை தலைக்கேறிய யாரோ சில கான்ஸ்டபிள்கள் செய்த காரியமல்ல; அது தலித்துகளுக்கு ஆதரவாக அர்த்தமுள்ள வகையில் பேசும் குரல்களை அடக்க விரும்பும் ஒரு சக்தி செய்த காரியம் என்று ஊகிப்பதில் நியாயமிருக்கிறது. பாரபட்சமின்றி விசாரணை நடத்தினால் உண்மை வெளிவரும்.

சக எழுத்தாளன் என்ற முறையில், உங்கள் அளவிற்கு அதிர்ஷ்டமான இடத்தில் இல்லாத, ஆனால் குரல் அற்ற மக்களுக்காகக் குரலெழுப்ப விரும்பும் மற்ற தமிழ் எழுத்தாளர்களின் தலையையும் உடலுறுப்புகளையும் பாதுகாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பி.ஏ. கிருஷ்ணன்

(பி.ஏ. கிருஷ்ணனின் கடிதம் நேரடியாக முதல்வருக்கு அனுப்பப்பட்டது)

தமிழில்: திவாகர் ரங்கநாதன்

உள்ளடக்கம்

Google Ads.....


Google