காலச்சுவடு அறக்கட்டளையும் கிருஷ்ணா ஸ்வீட்ஸும் இணைந்து நடத்திய
உலகத் தமிழிலக்கியத் கருத்தரங்கைத் தொடங்கிவைத்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின்
துவக்கவுரையும் அதைத் தொடர்ந்து கமலம் துரைசாமி கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற
தமிழிலக்கியக் கருத்தரங்கில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும்
வந்திருந்த பேச்சாளர்களின் சொற்பொழிவுகளும் என் இதயத்தைத் தொட்டன. தங்களது முயற்சி
மேன்மேலும் சிறக்கட்டும்.
K. கணேசன்
கோவை-27
கோவை கருத்தரங்கில் எழுத்தாளர், பேராசிரியர் எனப் பலரும் பாரதியார், புதுமைப்பித்தன்,
சுந்தர ராமசாமி ஆகியோரைப் பற்றி முன்வைத்த கருத்துக்கள் முதுகலை மாணவியாகிய எனக்கும்
என்னைப் போன்ற கல்லூரி மாணவ மாணவியருக்கும் பயனுள்ள வகையில் அமைந்திருந்தன.
கௌசல்யா M.
சித்தூர் அரசு கலைக் கல்லூரி
கேரளா
ஒரு பத்திரிகைக்கு வாசகன் எவ்வளவு முக்கியம் என்பதனை நன்கு உணர்ந்திருக்கிறது
காலச்சுவடு. ஒரு நாட்டின் மூத்த குடிமகன், அதுவும் ஒரு விஞ்ஞானி, நாட்டின் மீது
வைத்திருக்கும் தொலைநோக்கு பார்வை, இளம் மாணவர்கள்மீது வைத்திருக்கும் நம்பிக்கை,
மிக அதிக நாட்டுப் பற்றுகொண்ட, அரசியல் கலவாத தலைவர், இலக்கியத்தின் மீது
அபரிமிதமான காதல் எனப் பல முகங்களைக் கொண்டவரும் இன்றைய இளைய சமுதாயத்தின் நம்பிக்கை
நட்சத்திரமுமான மேதகு அப்துல் கலாமை நான் சந்திப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.
காலச்சுவடு மூலமாக ஒரு தன்னலமற்ற பெருந்தலைவரை 18.12.06 அன்று கோவையில் நமது
விழாவில் சந்தித்தது மறக்க முடியாத நிகழ்வாகும். இதற்கு முன்பு நான் ஆரம்பப் பள்ளி
படிக்கும் சமயத்தில் காமராசரைப் பார்த்ததுதான் என் வாழ்வின் பேறு என்று
எண்ணியிருந்தேன். தற்போது அப்துல் கலாம் அவர்கள். காலச்சுவடின் வாசகர்கள் அனைவரின்
சார்பாகவும் எனது மனமார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
மந்தணை பாரதிமைந்தன்
கோவை-17
உலகத் தமிழிலக்கியக் கருத்தரங்கத்தில் கல்லூரி மாணவர் என்கிற முறையில் கலந்துகொள்ள
எனக்கு வாய்ப்பளித்த காலச்சுவடு அறக்கட்டளைக்கும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸுக்கும்
இதற்கு ஏற்பாடு செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி சொல்லப் பெரிதும்
கடமைப்பட்டிருக்கிறேன்.
கவிஞர் மு. பிரேம்குமார்
செங்கம்
கோயம்புத்தூரில் நடைபெற்ற உலகத் தமிழிலக்கியக் கருத்தரங்கம் மிகவும் சிறப்பாக
இருந்தது. இக் கருத்தரங்கத்தில், நவீனத்துவத்தைத் தொடங்கிவைத்த பாரதி,
புதுமைப்பித்தன், தன் படைப்புகளில் தனக்கென ஒரு மொழிநடையை ஏற்படுத்திக்கொண்ட சுந்தர
ராமசாமி ஆகிய மூவரைப் பற்றிய எழுத்தாளர்கள் கூறிய கருத்துக்கள் செம்மையாகவும்
பயனுள்ளவையாகவும் இருந்தன. மூவரின் புத்தகங்களும் எங்களுக்குப் பாடப் பகுதியாக
இருப்பதால் அவர்களைப் பற்றி எழுத்தாளர்கள் ஆற்றிய உரையில் பல அரிய கருத்துக்கள்
கிடைத்ததில் மிக்க மகழ்ச்சி. இக்கருத்தரங்கத்தின் மூலம் எங்கள் பாடப் பிரிவைச்
சேர்ந்த ஆசிரியர்களைச் சந்திக்க நேர்ந்ததும் காலச்சுவடு இதழைச் சேர்ந்த அனைவரையும்
சந்திக்க நேர்ந்ததும் எங்கள் பாக்கியமே. எனவே காலச்சுவடு அறக்கட்டளைக்கு மனமார்ந்த
பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மகேஸ்வரி பா.
சித்தூர் அரசு கலைக் கல்லூரி