'அடையாளங்களை அழிக்கும் மொழிபெயர்ப்புகள்' கட்டுரை இக்காலச்
சூழலில் கவனிப்புக்குரியது. மேற்கத்தியக் கலாச்சாரத்தை எவ்வித கேள்விக்கும்
உட்படுத்தாமலே அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்போக்குதான் மொழி பெயர்ப்புகளின்
விஷயத்திலும் காணப்படுகிறது. கட்டுரையாளர் குறிப்பிடுவதைப்போல
மொழிபெயர்ப்புகளுக்குப் பின் வணிக நோக்கம் மிகுந்த காணப்படுகிறது.
மொழிபெயர்ப்பு மிகவும் கவனமாகக் கையாளப்பட வேண்டிய கடினமான பணி. அது படைப்பாளியின்
நோக்கத்தையும் அது படைக்கப்பட்ட காலத்தின் தேவையையும் கூட்டி, குறைத்து
வெளிப்படுத்தினால் அது மொழிபெயர்ப்பின் முக்கியத்துவத்தை இழந்துவிடுகிறது. இன்றைய
மொழி பெயர்ப்புகள் இத்தகைய கவனத்தைப் பெற்றிருக்கின்றனவா என்பது ஐயத்திற்குரியதே!
மொழிபெயர்பு என்பது வாழும் சூழலின் நியாயமான தேவைகளை ஒரளவாவது பூர்த்தி செய்வதற்கு
துணைபுரிவனவாக இருக்கவேண்டும். அவற்றால் புதிய சிந்தனைகளை, உந்துதல்களைப்
பெறுவதாகவும் இருக்கவேண்டும். மாக்சிம் கார்க்கியின் எழுத்துகள் (தாய் உட்பட) சேவின்
வாழ்க்கை வரலாறு போன்ற மொழிபெயர்ப்புகள் இன்றைக்கும் மூன்றாம் உலக நாடுகளில் பெரும்
தாக்கத்தை ஏற்படுத்திவருவதைப் போன்று இருக்க வேண்டும். இலக்கியங்களுக்குரிய சமூகக்
கடமைகளை இவற்றின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.
மொழிபெயர்ப்புகளால் நிகழ்ந்த அரசியல் தாக்கத்தைத் தமிழக அனுபவத்திலிருந்துகூடக்
காண்பிக்க முடியும். அறுபது, எழுபது, எண்பதுகளில் வட மாநிலங்களில் தலித்துகளின்
மத்தியில் எழுச்சி ஏற்படக்காரணமாய் அமைந்த தலித் இலக்கியங்கள் தொண்ணூறுகளில்
தமிழகத்தில் மொழிபெயர்க்கப்பட்டுப் பரவலாக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட தலித்
எழுச்சியை யாரும் மறுக்கவியலாது. குறிப்பாக அம்பேத்கரின் எழுத்துகள்
தலித்துகளுக்கான அரசியல் புலத்தை எல்லாத் தளங்களிலும உருவாக்கியது. இது தற்போது
தலித்தியம் பேசும் போலி ஆசாமிகளுக்கு வருவாயை பெருக்கிக்கொள்வதற்கான முதலீடாய்
இருப்பதும் இவர்களில் தலித்துகளும் தலித்தல்லாதவர்களும் அடக்கம் என்பதும் வேறு
விஷயம். எனவே மொழிபெயர்ப்புக்கு ஒரு சமூகக் கடமை இருக்கிறது என்ற உண்மையை மறந்த
நிலையில்தான் மொழிபெயர்ப்புகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
இது மட்டுமின்றி சாதி, மத வேற்றுமையுணர்வுகள் நவீன வடிவங்களில் இறுக்கம்
பெற்றிருக்கும் இக்காலச் சூழலில் அவற்றை மொழிபெயர்ப்பில் வெளிப்படுத்துவதற்கான
வாய்ப்புகளுக்கும் இடமிருக்கிறது (ப.ஜா.க. ஆட்சிக் காலத்தில் பாடத்திட்டங்களிலும்
இந்திய வரலாற்றை மறுவரைவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்குப்
பின்னாலிருந்த நோக்கத்தை இங்கே உதாரணமாய்க் கொள்ளலாம்).