Google   www kalachuvadu.com

திறந்த வெளி

உடைக்கப்பட்ட பெரியார்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் எதிரில் திராவிடர் கழகம் சார்பில் திறப்பு விழா நடத்திய, நிறுவப்பட்டிருந்த பெரியார் சிலையை இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் உடைத்ததையடுத்துத் தமிழகம் முழுவதும் பரவலாக வன்முறைகள் நடந்தன.

பெரியார் சிலை உடைக்கப்பட்டது கண்டனத்திற்குரியதுதான். ஆனால் கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை என்று பிரச்சாரம் செய்துவந்த பெரியார் காலத்திலேயே அவரது சீடர்களாக அல்லது தொண்டர்களாகத் தங்களைச் சொல்லிக்கொள்பவர்களும் அவர்களின் உடன்பிறப்புகளும் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று சொல்லிப் பெரியாரை உடைத்தார்கள். பெரியாரின் சொத்துக்களுக்கு வாரிசான திராவிடர் கழகத் தலைவரும் அவ்வப்போது பெரியாரை உடைப்பது உலகறிந்ததுதான். 1991 தமிழக சட்டமன்றத் தேர்தல் நடை பெறுவதற்கு முன், யார் ஆட்சிக்கு வருவது என்பதைவிட யார் வரக்கூடாது என்பதுதான் முக்கியம் என்று சொல்லி ஜெயலலிதாவுக்கு எதிராக நின்ற வீரமணி, தேர்தல் முடிந்து ஜெயலலிதா வெற்றி பெற்றபின் அவரது காலடியிலேயே கிடந்தார். தான் ஒரு பாப்பாத்தி என்று சட்டமன்றத்திலேயே அறிவித்துக்கொண்ட ஜெயலலிதாவுக்கு 'சமூக நீதி காத்த வீராங்கனை' பட்டம் சூட்டிப் பெரியாரை உடைத்தார்.

தமிழகத்தில் கற்பு பற்றிய விவாதங்கள் எழும்போதெல்லாம் நமது தலைவர்கள், கற்பு பற்றிப் பேசும் தகுதி தனக்கு இருக்கிறதா என்று யோசிக்காமல் கற்புக்கெனப் பிறப்பெடுத்தவர்கள்போல 'கற்பை இருபாலருக்கும் பொதுவில் வைப்போம்' என்று பேசுவார்கள். ஆண்கள் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக்கொண்டால் பெண்கள் மூன்று வைப்பாட்டன்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்று பகிரங்கமாகச் சொன்னவர் பெரியார். அவரைத் தமது தலைவராகச் சொல்லிக்கொள்பவர்கள் அவர் சொன்ன பெண் விடுதலையைப் பேசினால் கற்பின் காவலர்களாக மாறிப்போகிறார்கள்.

சி.என். அண்ணாதுரை, பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளை நாட்டுடைமையாக்கியவர்கள் பெரியாரின் நூல்களை இன்றுவரையிலும் நாட்டுடைமையாக்காதது ஏன் என்கிற வினாவும் கேட்கப்பட வேண்டியதாகிறது. பெரியாரின் பெயரால் மடம் நடத்தி வருகின்றவர்களின் வியாபாரம் கெடாமல் இருப்பதற்கான ஏற்பாடா இது?

ராமர் சிலைகளுக்குச் செருப்பு மாலை அணிவிப்பதாக இருந்தாலும் பிள்ளையார் சிலைகளை உடைப்பதாக இருந்தாலும் பார்ப்பனர்களின் பூணூலை அறுப்பதாக இருந்தாலும் அவற்றை அறிவித்துவிட்டுச் செய்தார். ஆனால் இன்றைக்கு அவர் சீடர்கள் செய்துகொண்டிருப்பது என்ன? ரகசியமாகக் கோயில்களில் நுழைந்து சிலைகளை உடைத்தார்கள். பூசாரியின் குடுமியையும் பூணூலையும் அறுத்தார்கள். பெரியார் சிலை உடைப்பில் சம்பந்தப்படாத பலருக்கும் இன்னல் ஏற்படும் வகையில் சென்னை அயோத்தியா மண்டபத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசினார்கள். இவை ஆத்திரத்தில் அறிவிழந்து செய்யப்பட்டவை. பெரியார் எப்போதுமே சட்டத்திற்கு உட்பட்டே எதையும் செய்தார்.

பெரியார் விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொண்டார்? மேடையில் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது அவர் மீது செருப்பு வீசப்பட்டாலும்கூட, ஒரு செருப்பைத்தான் வீசியிருக்கிறீர்கள், மற்றொன்றையும் வீசினால் பயன்படும் என்பார். பெரியாரின் படத்தைச் செருப்பால் அடிக்கப்போவதாக அறிவித்த ஒரு அமைப்பினருக்கு வேண்டுகோள் விடுத்தார் பெரியார். அவர்களுக்காகத் தன் படத்தை அச்சடித்துவருவதாகவும் அதன் விலை ரூபாய் ஒன்று என்றும் அதை வாங்கிச் செருப்பால் அடிக்கலாம் என்றும் பகிரங்கமாக அறிவித்தார்.

உணர்ச்சிவயப்பட்டு அறிவிழப்பதற்கு எதிராகப் பகுத்தறிவை முன்னிறுத்தினார் பெரியார். அவரது பெயரால் ஆட்சி நடத்துபவர்கள் என்ன செய்தார்கள்? ஆறு மாதங்களுக்கு முன்னர் பெட்ரோல் விலையை மைய அரசு தொடர்ந்து உயர்த்திவந்தபோது, கோட்டைக்கு வெளியே பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வரிடம் ஜெயா தொலைக்காட்சி நிருபர், பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து மத்திய அரசுக்குக் கொடுத்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்வீர்களா என்று வினா எழுப்பியபோது, "நீ எந்த டி.வி.? ஜெயா டி.வி.யா? நீயும் நானும் சேர்ந்து பொது இடத்துல பெட்ரோல் ஊத்திக் கொளுத்திக்கலாமா? இது மாதிரி அநாகரீகமாகக் கேள்வி கேட்டால் இதுபோலத்தான் பதில் வரும்" என்று சொன்னார். ஒரு மாநில முதல்வராக இருந்துகொண்டு, பொது மக்களை பாதிக்கிற ஒரு பிரச்சினை குறித்து நிருபர் ஒருவர் கேட்பதற்கு இப்படிப் பதில் சொல்வதுதானா பகுத்தறிவு!

பெரியாரின் நூல்களுக்குப் பதிப்புரிமையை வைத்திருப்பதைப் போல, பெரியாரை உடைக்கும் உரிமையும் எங்களுக்கு உண்டு என்பதைத்தான் சொல்லாமல் சொல்கிறார்களோ.

ப்ரவாஹன்
காஞ்சிபுரம்

உள்ளடக்கம்

Google Ads.....


Google