Google   www kalachuvadu.com

திரை: வெயில்

வெயிலின் சாயைகள்

என். ராஜசேகரன்

சிறு வயதில் வீட்டை விட்டு ஓடிப்போன தனது பால்ய நண்பன் முருகேசனை இருபதாண்டுகளுக்குப் பிறகு விருதுநகரின் புழுதி சூழ்ந்த தெருவொன்றில் சந்திக்கிறாள் பாண்டியம்மாள். ஓடிவந்து அவன் கைகளைப் பற்றிக்கொள்கிறாள். தன் வாழ்வின் தாள முடியாத சுமையை அவனுடன் பகிர்ந்தவளாகத் தீப்பெட்டி ஆபீசுகளின் கந்தக நெடி வீசும் தெருக்களினூடே நடந்து செல்கிறாள். இருவருமாக அவளுடைய சிதிலமடைந்த வீட்டை நோக்கி நடக்கிறார்கள். தீப் பெட்டிகளுக்கே வாழ்க்கைப்பட்டுப் போய்விட்டேன் போலிருக்கிறது எனப் பெருமூச்சு விட்டவாறே சிகையைக் கோதும் அவளது உள்ளங்கைகளுக்குள் இன்னும் ஆறாத ஒரு கொப்புளம். ஓரிரு வினாடிகளே தோன்றும் அந்த ஷாட் தமிழ் சினிமாவின் வரலாற்றில் மிக முக்கியமானது.

ஒரு கலை என்னும் ரீதியில் தமிழ் சினிமா அடைந்திருக்கிற முதிர்ச்சியின் அடையாளம் அது. அந்தத் தருணத்தில் அவளுடைய முகத்தில் கைத்த புன்னகை ஒன்று அரும்பி உதிரும். குவிந்து விரியும் கைகளுக்குள் தென்படும் கன்றிப்போன அந்தக் கொப்புளத்தின் பக்கவாட்டுத் தோற்றத்தைக் கவனிக்கும் ஒரு பார்வையாள ருக்குள் உருவாகக்கூடிய அதிர்வுகள் மிகத் தீவிரமானவை. தீப்பெட்டிகளோடு பிணைக்கப்பட்ட தெற்கத்திப் பெண்களின் துயரார்ந்த வாழ்வை அந்த ஒரே ஷாட்டின் வாயிலாகச் சொல்லிவிடுகிறார் வசந்தபாலன்.

ஒளிப்பதிவு, பின்னணி இசை, கலை எனத் திரைப்படக் கலையின் பல கூறுகளை நுட்பமாகவும் செறிவாகவும் உள்வாங்கியிருக்கும் இத்திரைப்படம் பல தருணங்களில் தமிழ் வாழ்வின் அசைவுகளை மிக நம்பகத்தன்மையுடன் பதிவு செய்திருக்கிறது. தொடக்கக் காட்சியில் ஒலிக்கும் உறுமியின் ஓசை பார்வையாளனின் புலன்களுக்குள் ஊடுருவிச் செல்லும் ஆற்றல் கொண்டது. உலர்ந்து கிடக்கும் கந்தக பூமியின் தகிக்கும் வெயிலுக்குள் வெடித்துப்போன பாதங்களுடன் அலைந்து திரியும் முருகேசன், பெருமழை பொழியும் ஒரு நாளில் தன் எதிரிகளைத் தேடிச் செல்லும் ஒரு பயணத்தினூடாகத் தனது கதையைப் பார்வையாளர்களுக்குச் சொல்வதாக அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை, தமிழ் சினிமாவின் தளைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதற்குப் பெரும் பிரயத்தனப்பட்டிருக்கிறது.

கடந்த முப்பது முப்பந்தைந்து ஆண்டுக் காலத்தியத் தமிழ் வாழ்வின் அக மற்றும் புறக் கூறுகளை இப்படம் பிரதிபலித்திருக்கும் விதம் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒன்று. எம்.ஜி.ஆர். படம் பார்ப்பதற்காகப் பள்ளிக்கூடத்திற்குக் 'கட்' அடிக்கும் முருகேசனை அவனுடைய தந்தை அவனது கை கால்களைக் கட்டிப் போட்டுக் கொளுத்தும் வெயிலில் நிர்வாணமாக வீசிவிடுகிறார். பட்ட அவமானத்திற்குப் பழிதீர்க்கும் ஆவேசத்துடன் தாயின் நகைகளைத் திருடிக்கொண்டு நள்ளிரவில் வீட்டைவிட்டு வெளியேறி வருகிறான் முருகேசன். ஒரு சிற்றூரின் தியேட்டர் ஒன்றின் முன்பாகப் போஸ்டரில் தென்படும் எம்.ஜி.ஆர். மீண்டும் அவனைப் பார்த்துச் "சிரிக்கிறார்". சிரித்து, விசிலடித்து, ஆட்டம்போட்டுவிட்டுக் குதூகலத்துடன் திரும்பி வந்து படுக்கும் முருகேசனுக்குக் கைப்பையில் இருந்த வாழ்க்கை காணாமல் போய்விடுகிறது. பிறகு அவனுக்கு அடைக்கலம் கொடுப்பதே சினிமாக் கொட்டகைதான் என்றாகிவிடுகிறது. தியேட்டரைக் கூட்டிப் பெருக்கும் சிறுவன் வளர்ந்து நிற்கும் தருணத்தில் ரஜினியின் உருவப் படத்தைப் பார்த்துத் தனது மீசையைத் திருத்திக்கொள்கிறான். ஆபரேட்டர் அறைக்கு வெளியே நிலவறையில் நின்றவாறே உலகைப் பார்க்க வாய்கிறது அவனுக்கு. நிலவறைக்கு எதிரே அவனது பார்வையில்படும் பெண்ணுருவைக் காதலிப்பவன் ஆபரேட்டர் அறையினுள்ளிருந்து ஒளிக்கற்றை வெளியேறும் துளையினூடாகக் காதலைப் பறிமாறிக்கொள்கிறான். அவளது உள்ளங்கைக்குள் திரைப்பட நாயகனையும் நாயகியையும் ஓடிப் பிடித்து விளையாடச்செய்கிறான். தனது புரஜெக்டரிலிருந்து வெளியேறும் ஓளியும் நிழலுமான பிம்பங்களின் அசைவில் கிளர்ச்சியுற்றுத் தனது காதலியோடு ஆபரேட்டர் அறையில் சல்லாபத்தில் ஈடுபடுகிறான்.

ஆனால் அவனுடைய யதார்த்தத்திற்கும் அவன் உலவ விடுகிற பிம்பங்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் போய்விடுகிறது. தமிழ் சினிமாவின் நாயகர்களைப் போல அவனால் தனது எதிரிகளை வீழ்த்திவிட்டுக் காதலியை அடைய முடியவில்லை. முருகேசனின் இருபதாண்டுக் கால வாழ்வின் பயணத்தையும் அதன் தோல்வியையும் பற்றிச் சொல்லும் இக்காட்சிகளை அரசியல், பண்பாடு உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளோடு கலாபூர்வமாகத் தொடர்புபடுத்திப் பார்க்க முடியும்.

காலத்தின் அடையாளம் படத்தில் நேர்த்தியாக வெளிப்பட்டுள்ளது என்றாலும் திரைக்கதையில் பிரதிபலிக்கப்படும் காலம் சற்றே குழப்பத்தைத் தருகிறது. முருகேனும் அவன் தம்பி கதிரும் சமகாலத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா என்னும் சந்தேகம் எழுகிறது.

பிற்பகுதிக் காட்சிகள் முருகேசனின் துயரத்தையும் வீரத்தையும் தியாகத்தையும் மிகையாக உருவகிக்கின்றன. படத்தின் மிக முக்கியமான பலவீனம் இது. ஓலங்களும் கண்ணீரும் நிரம்பிய அக்காட்சிகள் படத்தின் தரத்தை வெகுவாகப் பாதிக்கின்றன. அவனுடைய தந்தை, இறந்து கிடக்கும் முருகேசனின் பாதங்களில் விழுந்து கதறுவதையும் அந்தத் தருணத்தில் திருப்புக் காட்சிகளாக இடம்பெறும் சில ஷாட்களையும் சகித்துக்கொள்ளவே முடியவில்லை.

பாடல்களும் அவற்றுக்கான நடனக் கோவைகளும் அற்புதமானவை. ஒளிப்பதிவு வெயிலின் பல்வேறு சாயைகளைப் பிரதிபலிக்கிறது. பாண்டியம்மாள் நடந்து போகும் தெருவின் கந்தக வாடையைப் பார்வையாளனின் நாசிகளுக்குக் கொண்டுவந்து சேர்க்கிறார் ஒளிப்பதிவு இயக்குநர். எல்லாத் தெருக்களிலும் சிலர் ஓயாமல் சாக்குப் பைகளை உதறிக்கொண்டிருக்கிறார்கள். தூசிப் படலத்தாலும் புகை மூட்டத்தாலும் நமக்கு மூச்சு முட்டுகிறது. அவர்கள் யார், அந்தச் சாக்குப் பைகளுக்குள் இருந்தவை என்ன, எதற்காக அப்படி உதறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைக் குறித்து ஒரு தகவலையும் சொல்லவில்லை இயக்குநர். இது போன்ற காட்சித் துண்டுகளால் இத்திரைப்படம் ஒரு தேர்ந்த இலக்கியப் படைப்பின் சாயலைப் பெறுகிறது எனச் சொல்லலாம்.

நடிப்பின் பல பரிமாணங்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை இதன் எல்லா நடிகர்களுக்கும் அளித்திருக்கிறது இத்திரைப்படம். பசுபதி, பரத், ஸ்ரேயா, பிரியங்கா, பாவனா மட்டுமின்றி மிகச் சிறு பாத்திரங்களை ஏற்றிருக்கும் கலைஞர்களும் தமது பங்கினைச் சிறப்பாக ஆற்றியிருக்கிறார்கள். எனினும் கதையாடலின் தேவைக்கு மீறிய பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் உறுத்துகின்றன. பரத், பாவனா சம்பந்தப்பட்ட காட்சிகள் மேலோட்டமானவையாக இருப்பினும் படத்தின் இறுக்கத்தைத் தளர்த்துகின்றன.

வசூல் வேட்டையைக் குறிவைத்துப் படத்தின் பிரதானப் பாத்திரத்திற்கான நடிகரைத் தீர்மானிக்கும் இயக்கு நர்களுக்கிடையில் பாத்திரத்திற்கும் நடிகனுக்குமுள்ள உறவு குறித்த சரியான புரிதலுடன் பசுபதியை நாயகனாக்கியிருக்கிறார் வசந்தபாலன். தேர்ந்த நடிப்பில் அவரது நம்பிக்கையைக் காப்பாற்றியிருக்கும் பசுபதி இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் மகா நடிகர்களைப் பதற்றமில்லாமல் எதிர்கொண்டிருக்கிறார்.

பழி தீர்க்கும் ஒரு பயணத்தினூடாகச் சொல்லப்படும் இப்படம், வாழ்வின் முன்பாக மனிதனின் கையறு நிலையைப் பற்றியும் அதன் முன்பாகக் குற்ற உணர்வுடன் நிற்க வேண்டிய நிலையைப் பற்றியும் பேசுவதாகக் கருதலாம். திரைப்படத்தை வாழ்வுக்கு மிக நெருக்கமாகக் கொண்டுவர முயன்றிருக்கிறார் வசந்தபாலன். அந்த அர்த்தத்திலும் இது ஒரு முக்கியமான படைப்புதான்.

உள்ளடக்கம்

Google Ads.....


Google