Google   www kalachuvadu.com

பாரதியார் 125, புதுமைப்பித்தன் 100, சுந்தர ராமசாமி 75

பதிவு: உலகத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கம், கோவை 18-20 டிசம்பர் 2006

வானகம் திறந்து வழி விடட்டும்

மேதகு குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் ஆற்றிய தொடக்க உரை

பாரதியார் 125 ஆண்டுகளாக நம் உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். புதுமைப்பித்தன் அவர்கள் 100 ஆண்டுகளாகவும் சுந்தர ராமசாமி அவர்கள் 75 ஆண்டுகளாகவும் நம் நினைவில் இருக்கிறார்கள். சுந்தர ராமசாமி அவர்கள் காலச்சுவடு பதிப்பகத்தின் மூலகர்த்தா. காலச்சுவடு தன் காலடித் தடத்தைத் தமிழ் இலக்கியத்தில் எப்படிப் பதித்துக்கொண்டிருக்கிறது என்பதை வானவியல் இயக்கத்தின் மூலம் என் மனதில் இருப்பதைத் தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

உங்கள் எல்லோருக்கும் தெரியும். பூமி தன்னைத் தானே கோடிக் கணக்கான ஆண்டுகளாக இடை விடாமல் சுற்றிக் கொண்டிருக்கிறது, ஒரு சுற்று முடிவதற்கு ஒரு நாளாகும். பகல், இரவு எல்லாம் இந்த ஒரு நிகழ்ச்சியால் நமக்குக் கிடைத்த நன்மையாகும். அது மட்டுமல்ல, பூமி கதிரவனையும் சுற்றிக்கொண்டேயிருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் தெரியும். பூமி கதிரவனை ஒரு சுற்றுச் சுற்றி முடிப்பதற்கு ஒரு ஆண்டுக் காலம் ஆகிறது. அப்படி என்றால், நம் பாரதியார் அவர்கள் இப்பொழுது வாழ்ந்துகொண்டிருந்தால் 125 முறை கதிரவனைச் சுற்றி வலம் வந்திருப்பார். நமது புதுமைப்பித்தன் அவர்கள் 100 முறையும் சுந்தர இராமசாமி அவர்கள் 75 முறையும் சுற்றி வலம் வந்திருப்பார்கள்.

நம் எல்லோருக்கும் பூமி கதிரவனைச் சுற்றிவரும் நிகழ்ச்சி ஒரு சாதாரண நிகழ்ச்சியாகத் தெரிகிறது. காரணம், பூமியில் நம் வாழ்வு சுறுசுறுப்பான வாழ்வு. இங்கு கூடியிருக்கும் எல்லோரும் கதிரவனைச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். நான் கதிவனைச் சுற்றும் 76ஆவது சுற்றுப்பாதையில் இருக்கிறேன். அதாவது, என்னுடைய வயது 75. இங்கு கூடியிருப்போர் எல்லா வயதிலும் இருப்பார்கள். நாம் எல்லோரும் சேர்ந்து பாரதியாருக்கு அஞ்சலி செலுத்துவோம். புதுமைப்பித்தனின் கற்பனைத் திறனை வாழ்த்துவோம். சுந்தர ராமசாமி அவர்களின் காலச்சுவடின் பணிகளுக்கு நன்றி தெரிவிப்போம். இந்த நேரத்தில் எனக்கு பாரதியாரின் ஒரு அருமையான கவிதை நினைவுக்கு வருகிறது. அவர் 1910ஆம் ஆண்டு எழுதிய பாஞ்சாலி சபதத்தில் சரஸ்வதி வந்தனமாகப் பாடுகிறது.

இடையின்றி அணுக்களெலாஞ் சுழலுமென
     இயல்நூலார் இசைத்தல் கேட்டோம்
இடையின்றி கதிர்களெலாஞ் சுழலுமென
     வானூலார் இயம்புகின்றார்
இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப்
     பொருட்கெல்லாம் இயற்கை யாயின்
இடையின்றிக் கலைமகளே நினதருளில்
     எனதுள்ளம் இயங்கொணாதோ?

இதன் அறிவியல் கருத்து என்னவெனில், அணுக்களில் பரமாணுக்கள் ஒன்றையொன்று சுற்றிவருகின்றன. நம் பூமி கதிரவனைச் சுற்றிவருகிறது. இதுபோலக் கதிரவன், பூமி எல்லாமே சுழற்சியின் இயக்கத்தில் நமது அண்ட சராசரத்தில் சுழன்றுகொண்டே இருக்கின்றன. இச் சுற்றல்கள் ஓயாது ஒழியாது நடந்துகொண்டே இருக்கின்றன. அதே போன்று நாமும் ஓயாது, துவளாது முயற்சி செய்தால் இறையருளால் நம் நாடு மிக விரைவில் வளர்ந்த நாடாக உயரும் என்பதில் எள்ளளவும் ஐயமிலலை. பாரதியார் ஒரு விஞ்ஞானிபோல் கவிதை பாடுகிறார். நம் உள்ளங்கள் சிலிர்க்கின்றன.

இன்று தொடங்கி மூன்று நாட்கள் தமிழ் மணம் உலக அளவில் உயர்ந்து நிற்கும். பல்லாயிரம் காலங்களாக வளர்ந்து பரவிய தமிழ் மொழி இன்னும் புதுமையாக, இளமையாக இருக்கிறது. பற்பல நாடுகளில் தமிழ் மொழி கொழிக்கிறது; தமிழர்கள் சிறக்கிறார்கள் பல்வேறு துறைகளில்; அவர்களின் மொழியன்பு தமிழை மேலும் மேலும் ஜொலிக்கவைக்கிறது. இணைய தளங்களில் தமிழ் இலக்கியம், சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், பாடல்கள் என்று பரிமாணிப்பதைப் பார்ப்பது புது மகிழ்ச்சியைத் தருகிறது.

'திரைகடலோடியும் திரவியம் தேடு' என்பது தமிழர்களுக்குத் தாரக மந்திரம். அதையே மகாகவி பாரதி 'சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்' என்று ஊக்கம் விளைவிக்கிறார்.

திரவியத்தோடு கலைச் செல்வங்களும் முக்கியம். அதைத் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கும் தமிழர்களின் நலனும் முக்கியம். ஏராளமான தமிழர்கள் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் பல இடங்களில் பணியாற்றுகிறார்கள். நிறைய இடங்களில் தமிழ்ச் சங்கங்கள் இருக்கின்றன. தமிழ் மொழிப் புத்தகங்கள், தொலைக்காட்சிகள், தமிழிசைக் குறுநாடாக்கள், ஒலி நாடாக்கள் ஆகிய பல்வேறு விதமான தமிழ்ச் சேவைகள் பல நாடுகளில் வாழும் தமிழர்களைத் தமிழ் மொழியுடன் இணைத்திருக்கின்றன.

நான் ஜூலை 7, 2005 ஆண்டில் வாஷிங்டனில் நடந்த பன்னாட்டுத் திருக்குறள் மாநாட்டிற்கு மல்டிமீடியா டெலிகான்பரன்ஸ் மூலமாக ராஷ்ட்ரபதி பவனிலிருந்து ஓர் கருத்துரை வழங்கினேன். அதில் வழங்கிய கருத்துரையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

என்னுடைய ஆசிரியர்களில் ஒருவரான, புரொபஸர் சதீஷ் தவான் 1970களில் இஸ்ரோவின் தலைவராகப் பணியாற்றிவந்தார். அப்போது அவர் இஸ்ரோவுக்கான ஒரு முக்கியமான திட்ட இலக்கை ஏற்படுத்தினார். பிறகு அந்த இலக்கை அடையத் தேவையான நிதி மற்றும் பிற வளங்களையும் வசதிகளையும் ஏற்படுத்தி அத்திட்டத்தை என்னிடம் ஒப்படைத்தார். அத்திட்டம், இந்தியாவின் செயற்கைக் கோளை விண்ணில் ஏவும் ராக்கெட்டைச் சொந்தமாக இந்தியாவிலேயே வடிவமைத்துக் கட்டுமானம் செய்யும் பெரும் பொறுப்பாகும்.

அந்தத் திட்டத்தை வழிநடத்தி நிறைவேற்றுகிற பொறுப்பை என்னிடம் கொடுக்கும்போது அவர் சொன்னார், "கலாம், நாம் எந்தப் பணியையுமே செய்யாமல் இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் ஏதாவது ஒரு குறிக்கோளை முனைப்பாகக் கையில் எடுத்துக்கொண்டு அதை நிறைவேற்ற முற்பட்டால், அந்தக் குறிக்கோளை அடைவதற்குள் பல இடையூறுகளும் பிரச்சினைகளும் தோன்றும். ஆனால் இந்த இடையூறுகளும் பிரச்சினைகளும் நம்மை ஆக்கிரமித்து, நம்மை வழிநடத்திச் செல்ல நாம் அவற்றை அனுமதிக்கக் கூடாது. மாறாக, இந்தப் பிரச்சினைகளைச் சமாளித்து, அதைக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து நாம் விரும்பிய குறிக்கோளை, இலக்கை அடைய வேண்டும்ஔ என்றார்.

என்ன ஆழமான அறிவுரை! எனக்கு ஒரு வாழ்க்கைக் கல்வியாக என்னை நானே உணர்ந்து, உய்விக்க வந்த அறிவுரை. உடனே எனக்கு ஒரு திருக்குறள் நினைவுக்கு வந்தது. இந்த அற்புதமான இலட்சியக் கருத்தை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் எவ்வளவு அழகாக இரண்டே வரிகளில் சொல்லியிருக்கிறார் தெரியுமா?

இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் இடும்பைக்கு
இடும்பைப் படாஅ தவர்.

அதாவது, "ஒருவர் எந்தப் பணியில் ஈடுபட்டிருந்தாலும் அந்தப் பணியில் ஆங்காங்கே பிரச்சினைகள் எதிர்ப்படும். ஆனால் துன்பத்தைக் கண்டு துவளாதவர்கள், பிரச்சினைகள் தமக்குத் தலைமை தாங்கி வழிநடத்தவிடாமல், அந்தத் துன்பங்களுக்குத் துன்பம் கொடுத்து வாழ்வில் வெற்றியடைவர்.

இந்த அறிவுரை, அந்தத் திட்டத்தில் நான் கடுமையான உழைத்த ஏறக்குறைய ஏழாண்டுக் காலம் முழுவதும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டு ஒரு உறுதுணையாக அமைந்தது.

பாரதியாரின் கவிதைகள் புதுமைப்பித்தனின் கனவுகள், காலச்சுவடின் பணிகள் என இவை எல்லாவற்றையும் ஒன்றாக நாம் சிந்திக்கும்பொழுது இந்தப் பூமியில் உள்ள அறுநூறு கோடி மக்கள் சிறப்பாக நல்வாழ்வு காண வேண்டும். பூமியில் ஓர் அமைதியான, ஆக்கப்பூர்வமான ஒரு வாழ்வு வர வேண்டும். இதை வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையில் டெலிகான்பரன்ஸ் மூலமாகப் பேசும்பொழுது வலியுறுத்தினேன். பல நாடுகளிலிருந்து வந்திருக்கும் பல தமிழர்களும் தமிழன்பர்களும் கூடியிருக்கும் இந்த அவையிலும் திரும்பச் சொல்கிறேன். தமிழ் ஒரு பிரதேச மக்களின் மொழி மட்டுமில்லை. மனித வாழ்வை, உலகத் தரத்திலுள்ள எல்லா மனிதருடைய வாழ்வை மேம்படுத்தி இவ்வுலகத்தை, மனித சமுதாயத்தை, சிறப்புடன் மகிழவைக்கும் அறிவுக் களஞ்சியம். நீங்கள் இதை நினைவுகூர்ந்து உங்கள் படைப்புகளைச் செய்தால் உலகுக்கு மிகவும் நன்மை கிடைக்கும். நமக்கு பூமியில் கிடைத்திருக்கும் இந்த வாழ்வை உபயோகமாகப் பயன்படுத்த வேண்டும். அதை எப்படிச் செய்ய முடியும் என்று நினைக்கும்போது எனக்கு அவ்வையார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய கவிதை நினைவுக்கு வருகிறது. அந்த அற்புதமான பாடலை எனது நண்பர் திரு. ய.சு. ராஜன் அவர்களுடன் சேர்ந்து நானும் பாடப்போகிறேன்.

அரிது அரிது மானிடராதல் அரிது
     அதனினும் அரிது கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்தாலும்
     ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயத்த காலையும்
     தானமும் தவமும்தான் செய்தல் அரிது
தானமும் தவமும் தான் செய்தக் காலையில்
     வானகம் திறந்து வழிவிடுமே

உங்கள் எல்லோருக்கும் வானகம் திறந்து வழி விடட்டும். இந்தக் கவிதையின் கருத்துக்கள் நம் வாழ்வின் குறிக்கோளாக இருந்தால் பாரதியார் கண்ட கனவு நனவாகும். புதுமைப்பித்தனின் எண்ணங்களுக்கு ஒரு உருவகம் அமையும். காலச்சுவடுக்கு ஓர் இலக்கணம் அமையும். உங்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.

 

கருத்தரங்க அமர்வுகள்

பெ. முத்துசாமி

தமிழ் இலக்கியச் சூழலில் ஆக்கபூர்வமான அதிர்வலைகளை உருவாக்கும் நிகழ்வுகளை ஒழுங்குசெய்துவரும் காலச்சுவடு அறக்கட்டளை கோவையில் டிசம்பர் 18-20 தேதிகளில் ஏற்பாடு செய்திருந்த 'பாரதி 125, புதுமைப்பித்தன் 100, சுந்தர ராமசாமி 75' கருத்தரங்கம் அதன் பயணத்தில் இன்னொரு மைல்கல். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், ஸ்ரீராம் சிட்ஸ், மா ஃபா ஆகிய நிறுவனங்கள் இந்த முயற்சிக்குத் தோள் கொடுத்து இதைச் சாத்தியமாக்கின.

கோவை ஆர்.எஸ். புரம் மாநகராட்சிக் கலையரங்கில் டிசம்பர் 18, 2006 அன்று மாலை மேதகு இந்தியக் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் உரையுடன் தொடங்கிய இந்தக் கருத்தரங்கில், புதுமைப்பித்தன் நூற்றாண்டு நினைவுச் சிறுகதை, கவிதை போட்டிகளில் முதல், இரண்டாம் பரிசு பெற்ற பெண் படைப்பாளிகளான சிவஸ்ரீ, சந்திரா, கவிதா, சுகிர்தராணி, இளம்பிறை ஆகியோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பாரதி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி ஆகியோரின் படைப்புகள் வெளியாவதில் அரும் பங்காற்றிய அறிஞர்கள் ரா.அ. பத்மநாபன், சீனி. விசுவநாதன், ஆ.இரா. வேங்கடாசலபதி, ராஜமார்த்தாண்டன், எம். சிவசுப்பிரமணியன் (எம்.எஸ்) ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

அடுத்த இரு நாட்களில் நடைபெற்ற கருத்தரங்கம், மூன்று படைப்பாளிகளின் வாழ்வையும் அவர்களது ஆக்கங்களையும் பற்றிய ஆழமான அலசல்களை மேற்கொண்டது. உலகெங்குமிருந்து தமிழ்ப் படைப்பாளிகள் கலந்துகொண்டனர். எழுத்தாளர்கள், கவிஞர்கள், விமர்சகர்கள், பேராளர்கள், வாசகர்கள், ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள், மாணவர்கள் என 350க்கும் மேற்பட்டோர் இரு நாள் கருத்தரங்கிலும் கலந்துகொண்டனர்.

சுந்தர ராமசாமியின் மகள் தங்கு ராம் பாடிய பாரதியார் பாடல், ப்ரஸன்னா ராமஸ்வாமியின் இயக்கத்தில் உருவான நிகழ்த்து கலை ஆகியவற்றுடன் தொடங்கிய கருத்தரங்க நிகழ்வின் முதல் அமர்வில் எம்.ஏ. நுஃமான் (இலங்கை), விஞ்ஞானி ய.சு. ராஜன், சக்கரியா ஆகியோர் உரையாற்றினர். சுகுமாரன், பி.ஏ. கிருஷ்ணன், ஞானக்கூத்தன், உபேந்திரகுமார் (இந்திக் கவிஞர்), செ. யோகராசா (இலங்கை), டாக்டர் குமரன் (மலே சியா), டாக்டர் கிருஷ்ணன் மணியம் (மலேசியா), கே.சி. நாராயணன் (கேரளம்), வி.பி. தாரகேஷ்வர் (கர்நாடகம்), தியடோ ர் பாஸ்கரன் எனப் பலர் உரை நிகழ்த்தினார்கள். அம்ஷன் குமார், அ. சாரங்கன், ஆர்.வி. ரமணி ஆகியோர் இயக்கிய பாரதி, பு.பி., சு.ரா. பற்றிய ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. இடையிடையே நூல் வெளியீடுகளும் நடந்தன. அமர்வுகளை ஆ.இரா. வேங்கடாசலபதி, பழ. அதியமான், அய்யனார், நெய்தல் கிருஷ்ணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

(கருத்தரங்கக் கட்டுரைகளும் விரிவான செய்திகளும் வரும் இதழ்களில் வெளியாகும்)

உள்ளடக்கம்

Google Ads.....


Google