அனிருத்தன்
வாசுதேவன்நூலகத்தில் எதையோ தேடப்போனதில் வேறொன்று அகப்பட்டது. நூலக
அலமாரியும் என் துணிமணி அலமாரியும் இவ்வாறு ஒத்துப்போனது எனக்குக் குழப்பமாக
இருந்தது. இது இவ்விரண்டின் சீரமைப்புப் பற்றியதா எனது குறிக்கோளற்ற தேடலைப்
பற்றியதா என்று தெரியாது. ழான் அரசநாயகத்தைக் கேட்டால் இவை இரண்டும், இவற்றிற்கு
இடையில் உள்ளவையும் என்பார். அவரது ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்பான
In the garden secretly (Penguin, 2000) என்ற தொகுப்புதான் நூலகக்
கஸீனோவில் என் அன்றைய வெற்றி. பர்கர் டச்சு வழியில் வந்த இந்தச் சிங்கள எழுத்தாளர்
இலங்கைத் தமிழர் ஒருவரை மணந்தவர். கண்டியிலிருந்தபடி ஆங்கிலத்தில் எழுதுகிறார்.
பின்காலனிய பின்நவீனத்துவ காலம் என்று கூறப்படும் ஒன்றின் வாசிகளான நாம் ஈரிணைகளை (binaries)
சந்தேகக் கண்ணோடு பார்க்கக் கற்றுக்கொண்டுவிட்டோம். தான்/மற்றது என்பதில் தொடங்கித்
தாழ்த்துவோர்/தாழ்த்தப்பட்டோர் வரையிலான கட்டமைப்புகள் தகர்க்கப்பட்டுள்ளன -
தத்துவ ரீதியாகவாவது. நவீனப் பெண்ணியம் மற்றும் ஓரினப் பாலீர்ப்பு பற்றிய
கருத்தாக்கங்களில் ஆண்/பெண் என்ற ஈரிணை கூடப் பிரச்சினைக்குள்ளாக்கப்பட்டுள்ளது.
ழான் அரசநாயகத்தின் சிறுகதைகளில் நன்மை/தீமை, உட்புறம்/வெளிப்புறம், கொள்கை/யதார்த்தம்
போன்ற ஈரிணைக் கட்டமைப்புகளில் செயல்பட முடியாத சந்தர்ப்பங்களில் உள்ளவர்களைப்
பார்க்கிறோம். இந்தக் கதைகள் உறுதியான நிலைப்பாடுகளுக்கு நடுவிலும் இடையிலும் உள்ள
இடங்களைப் பற்றியன. ஈரிணைகளின் இரு முனைகளின் தீவிரங்களிலிருந்து சற்று விலகி,
வழிப்படியில் சில நேரம் நிற்கலாமா; உள்ளும் புறமும், இங்கும் அங்கும் என்று
அங்கலாய்க்கும் முன் சுயவிசாரணை செய்துகொள்ளலாமா என்று யோசிக்கும்பொழுது நாம்
நமக்கென உண்டாக்கிக்கொள்ளும் இடங்கள் இவை.
தலைப்புக் கதை பகலும் இரவும் கலந்துரையாடும் பிரதோஷச் சமயத்தில் நடைபெறுகிறது.
இலங்கையின் வடபகுதிக்கு அனுப்பப்பட்டிருக்கும் காலாட்படை வீரனின் குரலில் கதை.
விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போராடுவது அவனது கேள்விக்குள்ளாகாத "நியாயமான"
கடமையாக இருக்க வேண்டும். ஆனால் அவன் அதன் நியாயத்தைப் பற்றி உறுதியாக இல்லை. "நாங்கள்
எங்களை விடுவிப்பவர்களாகப் பார்க்கிறோம். ஆனால் விடுவிக்கப்படுபவர்கள் எங்களை
அப்படிப் பார்க்கிறார்களா?" என்கிறான். எதிலிருந்து யாரை எங்கு விடுவிப்பது என்ற
பொருள் தெளிவின்மை இவ்வரிகளை மறக்க முடியாதவையாக்குகிறது. நாம் நமது அடையாளங்களை
எம்முறையில் வேண்டுமானாலும் அமைத்துக்கொள்ளலாம். ஆனால் மற்றவர்கள் நம்மைப்
பார்க்கும் விதத்தை நாம் பெரிதாக ஒன்றும் செய்ய இயலாது. அமார்த்யா சென் தனது
Identity and
Violence: The Illusion of Destiny (Allenlane, 2006) என்ற நூலில் இதை அழகாக
விவரித்துள்ளார்.
போர் என்பது மனங்களின் உட்பரப்புகளையும் பாதித்து மாற்றியமைக்க வல்லது என்பதை இந்த
வீரன் நன்கு அறிந்திருக்கிறான். "நாங்கள் அனைவரும் குருடர்களாய்க் காட்டில் திக்குத்
தெரியாமல் அலைகையில், இந்தப் போர் எங்களுக்குள் ஆழமாக, எங்களது மிகவும் உள்ளான
பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. நாங்களும் எங்களுக்குள் சிக்கலான பாதைகளை
அமைத்துக்கொள்கிறோம். எங்களது எண்ணங்களும் உணர்வுகளும் இச்சுரங்கங்களின் வழியே
செல்கின்றன. மறைத்தலும் வஞ்சித்தலும் பழக்கப்பட்டவையாகிவிட்டன. ரகசியப் பாதைகளை
அமைத்து ஒருபொழுதும் பகல் வெளிச்சத்திற்கு வராமல் அவற்றின் வழியே பயணிக்கிறோம்."
இங்கும் பல நிலைகளில் பொருள்கள். புறச் சேதங்களைக் கணக்கிட்டு இழப்பீடு செய்யும்
முயற்சியில் ஈடுபட்டிருக்கையில் அகச் சேதங்கள் ஆறாத புண்களாகவே இருந்துவிடுகின்றன.
'Just War', 'War on Terror' போன்ற நியாயங்கள் வழங்குகிற
காலத்தில் அரசுப் பணியில் உள்ள போர் வீரன் ஒருவன் இங்ஙனம் சிந்திப்பது அவனது
உட்போராட்டத்தைக் காட்டுகிறது. இதில் கருணையற்ற சுயவிமர்சனம் காணக் கிடைக்கிறது.
மற்றொரு நிலையில் போர் என்பதை ஒரு குறியீடாகப் பார்த்தால் இது பொதுவாக நம்மில் பலர்
வாழ்க்கையை வாழும் விதத்தின் வர்ணனையாகத் தெரிகிறது.
ஆனால் இது உண்மையான, உயிர்கள் மடியும், ஓலங்கள் கேட்கும், உடல்கள் சிதறும் போர்.
அவன் மேலும் கூறுகிறான்: "போர் கருப்பு வெள்ளையாகவோ, வீரமாகவோ, வீர காவியமாகவோ
இருப்பது தடுக்கப்படுகிறது. சாதாரணர்கள் அது அவ்வளவு எளிதாய் நடப்பதைத்
தடுக்கிறார்கள்." "சாதாரணர்" என்ற வார்த்தை 'துணைமையான சேதங்கள்' (collateral
damanges) என்பதிலிருந்து எவ்வளவு தள்ளி நிற்கிறது.
இப்படி அவன் எண்ணிக்கொண்டிருப்பது அவன் காட்டில் எதிர்கொண்ட பாழடைந்த வீட்டினுள்.
அங்கு இயேசு கிறிஸ்துவின் சிலையொன்று தென்படுகிறது. இது அவனது சுயவிசாரணையைத்
தீவிரப்படுத்துகிறது. "நாம் கிறிஸ்துவுடன் இணைக்கும் எல்லா மனக் காட்சிகளும்
பாதுகாப்புப் பற்றியன. ஆனால் நாம் பிரார்த்தனையில் வேண்டுவதும் நிஜத்தில் புரிவதும்
ஒன்றிற்கொன்று முரணானவை. எங்கள் பணியில் மரணம் என்பது பெரிதும் உட்பட்டது. நாங்கள்
எங்கள் எதிரிகளை அழிக்க முற்படுகிறோம். மன்னிக்க அல்ல." மற்ற நிலைகளில் வாழ்க்கையை
நிர்ணயிக்கும் ஆதாரமான நம்பிக்கைகள் இது போன்ற சமயங்களில் 'கடமை' என்பதை நிறை
வேற்றுவதைக் கடினப்படுத்துகின்றன. கொள்கை, யதார்த்தம் என்பவை சமாதானத்திற்கும்
ஒத்துப் போதலுக்கும் உட்படாத ஓர் ஈரிணை அமைப்போ என்று மெதுவாகக் கேள்வி
எழுப்புகிறார் ழான்.
அந்தக் கிறிஸ்து சிலையின் கை துண்டிக்கப்பட்டுள்ளது. இப்போது யாருக்கு யார் உதவ
வேண்டும் என்ற விந்தையான கேள்வியை இது நம் மனதில் எழுப்புகிறது. கிறிஸ்துவின்
மன்னிப்பும் உதவியும் அவனுக்குத் தேவையா அல்லது மனிதம் மறந்த இந்தக் காட்டிலிருந்து,
ஏற்கனவே புண்படுத்தப்பட்ட கிறிஸ்துவை எடுத்துச் செல்லும்
symbolicஆன உதவி
கிறிஸ்துவுக்குத் தேவையா என்று உள்ளூரக் கேட்கத் தோன்றுகிறது. ஆனால் இது போன்ற
கிளர்ச்சி தரும் திறந்த முடிவுகளை ழான் விரும்புவதில்லை. நாம் முடிவுகள் எடுத்து
அவற்றின் விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டியுள்ள நிஜத்தை ழான் அரசநாயகம் மறுப்பதில்லை.
எனவே இவரது கதையில் வீரன் இயேசுவின் சிலையைக் கவனமாகத் தன் முதுகுப் பையில்
எடுத்துக்கொண்டு துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டு செல்கிறான்.