டிசம்பர் இதழில் பாரதி 125 சிறப்புப பகுதி கண்டேன். பாரதியின்
படைப்புகளில் தீர ஆர்வம் கொண்ட கட்டுரையாளர்கள் பாரதியின் மீது கொண்ட காதலினால்
பகிர்ந்துகொண்ட இன்னல்களும் அவர்கள் இலட்சியத்தின் மீது வைத்திருக்கும்
வைராக்கியமும் பிரமிக்க வைத்தன. 'பருத்தி, புடவையாய்க் காய்க்காத கதை' மற்றும் 'தராசு'
ஆகியன எனக்கு பாரதி குறித்த புதிய அனுபவங்களைத் தந்தன.
மந்தணை பாரதிமைந்தன்
கோவை
பாரதியை என்னைப் போன்றவர்களுக்கும் அறிமுகப்படுத்திய முகப்பு அத்தியாயம் பாடப்
புத்தகங்களே. மெல்ல மெல்ல பாரதியின் எழுத்துக்களில் சரண் புகுந்த தருணங்கள் தவம்
போன்றவை. பெருமாள்முருகன் அவர்களின் கட்டுரை இன்றைய யதார்த்த மனிதர்களுக்குள்
பாரதியின் தரிசனம் நிகழ்ந்ததை இயல்பாகவே சுட்டிக் காட்டியிருக்கிறது. பாரதி
தமிழர்களின் வாழ்க்கையில் நிச்சயம் நிலைத்திருப்பார்.
முத்தம் செல்வக்குமார்
சேலம்
'பாரதி பாடல் மொழிபெயர்ப்பு: என் பட்டறிவு' என்ற ம.இலெ. தங்கப்பாவின் கட்டுரை என்னை
மிகவும் ஈர்த்தது. காரணம் கடந்த முப்பத்தேழு ஆண்டுகளாக அவர்தம் படைப்புகளை
உன்னிப்பாகக் கவனித்துவருபவன் நான். திட்டவட்டமானதோர் அறவியலை (ethics) தன்
மொழியாக்கங்களுக்கும் படைப்புகளுக்கும் இயல்பாக உருவாக்கிக்கொண்டு திடமாகச்
செயல்பட்டு வருபவர் அவர். பல்லாண்டுகளுக்கு முன்பே வள்ளலார் பாடல்களை
The Songs of Grace என்ற தலைப்பில் மொழி பெயர்த்தவர். வள்ளலாரின் பாடல்களை
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தேவைப்படும் வாழ்வியல் ஒழுங்கு அவருக்கிருப்பதைச்
சலபதியும் 1969ஆம் ஆண்டு முதலாகவே நானும் அறிவோம். வழிவகுத்த லிவிங்ஸ்தோனின்
வாழ்க்கை வரலாறு என்ற மிகவும் பழைமையான, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கான
மொழிபெயர்ப்பை என்னைப் படிக்கவைத்த தங்கப்பா, தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குப் பாரதி
பாடல்களையும் பாவேந்தர் பாடல்களையும் வாணிதாசன் பாடல்களையும் அதே தூய்மையுடனும்
ஒழுங்குடனும் மொழியாக்கம் செய்தார்.
பாரதிதாசன் பாடல்களின் (தங்கப்பா ஆக்கிய) ஆங்கில மொழியாக்கத்தைவிடவும் பாரதி
பாடல்களின் மொழியாக்கமே தனக்கு நிறைவு தருவனவாயிருக்கின்றன என்று சொல்வது வியப்பையே
தருகிறது. மொழியாக்கத்தை, அதிலும் இருவேறு தளங்களில் தன்னால் நிகழ்த்தப்பெற்றவற்றை,
எப்படி ஒன்றைக் குறைத்து இன்னொன்றை அவரால் உயர்த்த முடிகிறது? அவரை நெடுங்காலமாக
நோக்கி வருபவர் எவரும் இரண்டையும் ஒன்றாகவே கருதுவர். மொழியாக்கத்தில் ஆந்த்ரே
ழீதையும் ரசூல் கம்சதாவையும் பொறுத்தவரை அவரது 'transcreation' பலரால் போற்றப்பட்டது. பாரதி பாடல்களின் தங்கப்பா மொழியாக்கங்களைக் காலச்சுவடு
இதழ்களில் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிட்டீர்கள் என்றால் என்னைப் போன்ற தங்கப்பா
அன்பர்கள் மகிழ்வோம்.
தேவமைந்தன்
புதுச்சேரி
கவிதைகளுக்காக ஏழு பக்கங்கள் ஒதுக்கியிருக்கிறீர்கள். நான் அவற்றைப் படித்துப்
பார்த்தேன். 'என் கடவுள்' கவிதையைத் தவிர மற்றவை புரியவில்லை. எனக்குப்
புரிந்துகொள்ளும் அளவிற்கு அறிவுக் கூர்மையோ பாண்டித்யமோ இல்லாமலும் இருக்கலாம்.
ஒருவேளை இப்போதைய கவிதை எழுதும் பாணி என்பது படிப்பவர்களுக்குப் புரியாதவாறு
எழுதுவதுதானோ.
திருமதி க.த. சாந்தி
உளுந்தூர்ப்பேட்டை
சுரேஷ்குமாரின் நேர்காணல் படித்தேன். நவீன இசை என்பது "ஏ.ஆர்.ஆரிடமிருந்து
தொடங்குவதாகச் சொல்வேன்" என்கிறார். நவீனம் என்பதற்கு அவர் என்ன அர்த்தம்
வைத்திருக்கிறார் என்று புரியவில்லை. நவீன இசை என்பது கே.வி. மகாதேவனிடமிருந்தே
தொடங்குகிறது. இளையராஜாவைக் கேட்ட பிறகுதான், கே.வி.எம். மற்றும்
விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோரின் இசையமைப்பையே புரிந்துகொள்ள முடிகிறது.
இளையராஜாவின் பாடல்களில் "ஆயிரத்தில் 10, 15 பாடல்கள்தான் சிறப்பானவை" என்கிறார்.
அநேகமாக அந்த 10, 15 பாடல்களும் கழித்துக்கட்டியவையாக இருக்கும் என்றே தோன்றுகிறது.
இளையராஜாவை வலுக்கட்டாயமாக, திட்டமிட்டே மறுத்த இசை என்பதால்தான் ரஹ்மானின் இசை
சிறப்பாக இருப்பதற்குக் காரணம். ஆனால் இளையராஜா, கே.வி. மகா தேவனையோ எம்.எஸ்.
விஸ்வநாதனையோ மறுக்கவில்லை. எட்டுத் திசைகளிலிருந்தும் கொண்டுவந்து சேர்த்தார்.
இன்றும்கூட இளையராஜாவின் ஒரு பாடலிலிருந்து குறைந்தபட்சம் 5 பாடல்களாவது உருவாக்க
முடியும். சிலர் உருவாக்கிக்கொண்டும் இருக்கிறார்கள். சில நேரங்களில் ரஹ்மானும்கூட.
இளையராஜாவின் இசை தமிழ் சினிமா இசை ரசிகனின் எல்லையை விரித்த போக்கு மிகவும்
நீளமானது. அது அன்னக்கிளியிலிருந்தே தொடங்குகிறது. எனக்கு ஒன்றுதான் ஆச்சரியமாக
இருக்கிறது. மணி அய்யரிடம் வசப்படும் ஒருவரால் எப்படி இளையராஜாவிடம் வசப்படாமல்
இருக்க முடியும்? கோளாறு ராஜாவிடம் இல்லை. இந்திரஜித்திடம்தான் இருக்கிறது.
குருசாமி மயில்வாகனம்
சிவகங்கை
இளையராஜா குறித்த சுரேஷ்குமார இந்திரஜித் கருத்துக்களைப் படித்ததும் ஒரு நிகழ்வு
நினைவுக்கு வருகிறது. ஒரு முறை நிருபர் ஒருவர் தற்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி
அவர்களிடம் இளையராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் உள்ள வித்தியாசம் பற்றிக் கேட்டபோது அவர்
கூறிய பதில் "ரஹ்மான் ஒரு நல்ல புத்தகம். . . இளையராஜா ஒரு நூலகம். . ."
தபசி
திருச்சி 13
தங்கள் உலகத் தமிழிலக்கியக் கருத்தரங்கம் என் போன்றவர்களைச் சங்கடப்படுத்திவிட்டது.
அது என்ன பாரதி 125 புதுமைப்பித்தன் 100 சுந்தர ராமசாமி 75? ஏழ்மையிலேயே உழன்ற
மாபெரும் மனிதர்கள் வரிசையில் தங்கள் தந்தையை வைத்துப் பார்க்க நீங்கள் ஆசை
கொள்ளலாம் மனத்துக்குள். அதை அரங்கேற்றுவது எந்த விதத்தில் நியாயம். புனேயிலிருந்து
ஒரு ரயில் பயணச் சீட்டிற்கு வழியில்லாமல் இருந்த புதுமைப்பித்தனோடும் ஒரு பத்திரிகை
நடத்த ஆசை கொண்டு வறுமையின் விளைவாகத் தோற்றுப்போன பாரதியோடும் வெளிநாட்டில் இருந்து
சடலமாகக்கூட விமானத்திலே வந்த தங்கள் தந்தையைச் சேர்க்க முற்பட்டிருப்பது எந்த
விதத்தில் நியாயம்.
ஏழையாகப் பிறந்து, ஏழையாகவே வாழ்ந்துகொண்டிருக்கின்ற இந்தியக் குடியரசுத் தலைவருக்கு
இந்த உண்மை சொல்லப்பட்டுள்ளதா?
'ஒரு புளியமரத்தின் கதை'யும் 'ஜே.ஜே.: சில குறிப்புக'ளும் 'ஆண்கள், பெண்கள்,
குழந்தைக'ளும் வேறு சில கவிதை, கட்டுரைத் தொகுப்புக்களும் உங்கள் தந்தையை
பாரதியோடும் புதுமைப்பித்தனோடும் இணையாக வைத்துப் பேசவைத்திருக்கின்ற கொடுமை என்னைப்
போல் பாரதியை, புதுமைப்பித்தனை உண்மையாக உணர்ந்து போற்றுகின்றவர்களுக்கு மிகுந்த
மனச் சங்கடத்தினை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை கண்ணன்
திருநெல்வேலி
"பாரதி 125, புதுமைப்பித்தன் 100, சுந்தர ராமசாமி 75" கருத்தரங்க அழைப்பிதழ்
கிடைத்தது. மகிழ்ச்சி. நாட்டின் குடியரசுத் தலைவர் கலந்து கொள்வது பெருமைப்பட
உகந்தது. நான் அறிந்தவரையில் ஒரு முறை தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய
நிகழ்ச்சியொன்றில் அப்போது குடியரசுத் தலைவராக இருந்த வி.வி. கிரி கலந்து
கொண்டிருக்கிறார். இப்போது உங்கள் நிகழ்ச்சி. வாழ்த்துக்கள்.
எஸ். செந்தில்நாதன்
சென்னை
மரண தண்டனைகள் குறித்த தலையங்கம் படித்தேன். மரண தண்டனைக்குக் காலச்சுவடு
எதிர்ப்புத் தெரிவிப்பது புதிய விசயமல்ல. 'எதிர்ப்பின் பரிமாணங்கள்' தலையங்கத்தை
வைத்தே மீன்டும் அஃப்சலின் தண்டனையை மறு விசாரணைக்குட்படுத்தலாம். ஆனால் தீர்ப்பை
எழுதும் நீதிபதிகள் தண்டனைக்கு உரியவர் தன்னை மறு பரிசீலனை செய்வதற்குரிய
செயலூக்கத்தைத் தூண்டும் காரணிகள் எவை என்பதை ஆராய்ந்து தம் பதிவுகளை முன்வைக்க
வேண்டும் என்பது அவசியம்.
தானொடிந்த மூப்பாக, சட்டாம் பிள்ளைத்தனமாகத் தன் சுய (ஆசை) கொள்கைகளை அடுத்தவர்களின்
மீது திணிப்பது, குற்றம் செய்தவருக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் என்ற
கேலித்தனமான பார்வைக்கு இடமளிக்கக் கூடியதாகிவிடும். 129 நாடுகள் மரண தண்டனைக்கு
வணக்கம் சொல்லி அனுப்பியும் சமூக ஆர்வலர்கள் எத்தனை முறை உரக்கக் கூவியும் இந்த
நாடாளுமன்றக் குடியிருப்புவாதிகளுக்கு எப்போதுதான் கேட்கப்போகிறதோ.
ஆர். பாலமுருகன்
திண்டுக்கல்
செயல் மட்டுமே நம்மை மிருகத்திடமிருந்து வேறுபடுத்தி அதி தீவிர மிருகமாக்குகிறது.
சிரிக்கவைக்கும், அழவைக்கும் செயல்களையும் சேர்த்து. தெய்வமெனும் பொய், செயலுக்கு
மிக அவசியம். முடியுமா முடியாதா எனும் கேள்விகளின் உள்ளடக்கம் தெய்வம். முடிந்தாலும்
குற்றம் எனும் கோட்பாட்டுக்கு உட்பட்டு முடியாதுபோகும். இதற்கான மிகப் பெரிய பொய்,
ஊக்க மருந்து கலை. காதல், தெய்வம் போன்ற மகத்தான உண்மை. எனவே காதல்தான் கலைக்கான
கருவி. ரோலான் பார்த்தின் 99ஆம் நாள் ஓடிப்போகும் காதலனின் விளையாட்டில் இருக்கும்
காதல் எனும் வடிவம், ப்ரவாக சாத்தியப்பாடுகள் குன்றிய ஒன்று. வாழ்க்கை ஒரு
விளையாட்டு, பரிசோதனை எனில் காதல் அதற்கான மருந்து. குட்டிகள் உடலிலிருந்து நழுவிக்
குதித்துக் குதூகலித்தாலும் காதலைச் சடங்காகாமல் காப்பது சிரமம்தான்.
என் தெய்வத்தை இவ்வாறாக வர்ணிக்கலாம்: கோவா 1994 ஜுலை முதல் வாரம். புல் எனும் ஒரு
கேவலம் காலைச் சூரியனின் ஒளியை உட்கொண்டு அதுவரை காய்ந்த நிலத்தின் மேனியிலிருந்து
கிளம்பி, ஈரமான பச்சையை என் ஆன்மாவுக்குள் கடாசிற்று. கடுமையான மழைக் காலத்தின்
ஆரம்பம். கருத்த மரத்தின் மீது ஆர்வத்துடன் ஏறிய ஒரு கொடியின் வடிவம் ஒரு நொடியாக
மாறி என் மனதைப் புரட்டிப்போட்டது. கல்வி புகட்டிய பாடங்கள் அனைத்தும்
வீணாய்ப்போயின. அந்தக் கொடியின் சிறு இலைகளின் இசைவின் நெருக்கம் (tension
of symmetry) என்னை ஒரு
non-classicist-ஆக மாற்றியது. இது வரையிலும்
இனிமேலும் நான் அந்த நெருக்கத்தின் அழுத்தத்தில்தான் அழகைத் தேடுவேன். பேரழகி எனும்
வார்த்தைக்கு இணையான ஒலி ஆங்கிலத்தில் இல்லை. மோனாலிசாவின் அலுப்புத் தட்டும்
புன்னகை டா வின்சிக்குப் பேரழகு எனில் நான் பார்த்த கொடி தீர்மானித்த அந்நொடியில்
இருக்கிறது பேரழகு. காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலின் பின்புறம் உள்ள பார்வதியின்
வடிவமும் பாவமும் பார்க்கப் பார்க்க அலுப்புத் தட்டும் எனில், திகட்டுமெனில்,
காதலும் அப்படித்தான். இந்நொடி கிளப்பும் சூட்டில்தான் காதல் வீற்றிருக்கிறது. எனவே
நான் நாய் எனக் கூறுவது இந்நொடியைத் தேடும் நோக்கத்தைத்தான்.
நடேஷ்
சென்னை