ந. முருகேச
பாண்டியன்
பிற மொழிகளிலிருந்து தமிழாக்கப்படும் இலக்கியப் படைப்புகளைத்
தமிழன்னையின் மகுடத்தில் சூட்டப்படும் 'வைரம்' என மகிழ்ந்திடும் நிலை இன்று தமிழில்
நிலவுகிறது. மொழிபெயர்ப்புப் படைப்புகள் தமிழுக்கு ஆதாரம், மொழியின் வளத்துக்கு மூல
ஊற்று என்பன போன்ற கருத்துக்கள் தொடர்ந்து முன்னிறுத்தப்படுகின்றன. மொழிபெயர்ப்பு
என்றாலே மேன்மையானது என்ற பொதுப் புத்தி நிலவும் தமிழ்ச் சூழலில் மொழி பெயர்ப்புப்
படைப்புகளைப் பெரிதும் விமர்சனமற்று ஏற்றுப் பரவசமடையும் வாசகர் எண்ணிக்கை
பெருகிக்கொண்டிருக்கிறது.
மொழிபெயர்ப்பு என்பது தமிழுக்கு மிகவும் பழைய விஷயம். இரண்டாயிரமாண்டுத் தமிழ்
இலக்கிய வரலாற்றை ஆராய்ந்தால் தொடர்ந்து மொழிபெயர்ப்புப் படைப்புகள் ஆதிக்கம்
செலுத்திவருவதை அவதானிக்க முடியும். சங்க இலக்கியப் படைப்புகளுக்குப் பிறகு,
சிலப்பதிகாரம், மணிமேகலை தவிரப் பெரும்பாலானவை தழுவல்களே. சமஸ்கிருதம் பண்டிதர்
மொழியாகத் தமிழகத்தில் செல்வாக்குச் செலுத்திய இடைக்காலத்தில், தமிழ்ப்
படைப்பாளர்கள் சமஸ்கிருதத்தில் எழுதுவதுதான் உயர்வானது என்று அம்மொழியில் படைப்பு
முயற்சியில் ஈடுபட்டனர். தமிழில் எழுதப்பட்ட பல ஸ்தல புராணங்களின் ஓலைச் சுவடிகளில்
சமஸ்கிருத மூலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது என்ற குறிப்புக் காணப்படுகிறது.
தேடிப் பார்த்தால் அப்படியொரு நூலே சமஸ்கிருதத்தில் இல்லை என்பதுதான் வேடிக்கை1. தமிழில் அசலாக எழுதப்பட்டது என்பதைவிட சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது
என்பது அன்றைய பண்டிதர் மத்தியில் மிகவும் மரியாதைக்குரியதாகக் கருதப்பட்டிருக்க
வேண்டும்.
இன்று ஆங்கிலத்தில் எழுதுவதும் பேசுவதும் மேன்மையானவை, நாகரிகமானவை என்ற கருத்து
மேல்தட்டினரான தமிழர்களிடம் ஆதிக்கம் செலுத்துவதைப் போல, அன்றைய காலகட்டத்தில்
சமஸ்கிருதம் முக்கிய இடம் வகித்தது. சோழப் பேரரசில் ஆட்சியாளர்களுக்கும்
சமஸ்கிருதத்திற்கும் ஏற்பட்ட நெருக்கம், பின்னர் நாயக்கர் ஆட்சியில் தேவபாஷையாக
உயர் மதிப்பீடு பெற்றது. ஆட்சியாளர்களின் மொழியைப் போற்றுவது என்பது, பரந்துபட்ட
மக்கள் நாளடைவில் கருத்தியல் ரீதியாக அடங்கியொடுங்கிட வழிவகுக்கும். தாய்மொழியைப்
புறக்கணித்திடும் நிலை, அடிமை வாழ்க்கையினை இயல்பாக்கிக்கொண்டதன் வெளிப்பாடு.
நாற்பத்தொரு பெண் கவிஞர்கள் உள்பட நூற்றுக் கணக்கில் கவிஞர்கள் கவிதை எழுதிய சங்கக்
கவிதை மரபு காலப்போக்கில் சிதைந்துபோனது எப்படி என்பதுதான் நம் முன் உள்ள
முக்கியமான கேள்வி. தானிய வணிகர், அறுவை மருத்துவர் போன்றவர்களும் கவிதை எழுதிய
தமிழ் மரபு துண்டிக்கப்பட்டு, மொழியின் வழியே கவிதை என்பது மேல்தட்டினருக்கு
மட்டும் உரியது என்ற நிலை உருவாக்கப்பட்டது. சமய நெறியையும் அறத்தையும்
வலியுறுத்துவதன் மூலம், மொழியின் வழியே மூவேந்தரின் அதிகாரத்தினை மக்களிடையே
பரப்பிட, சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம் போன்ற மொழிகளிலிருந்து பெயர்க்கப்பட்ட
தமிழாக்கங்கள் பெரிதும் பயன்பட்டுள்ளன. அற்புதமான கவிதை வரிகளை எழுதிய கம்பன்
மட்டுமா அன்று இருந்திருக்கக்கூடும்? இன்னும் பலர் எழுதியிருக்க வாய்ப்புண்டு.
அசலான தமிழ்ப் படைப்புகள் கவனிப்பாரின்றிப் புறக்கணிக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற
சாத்தியக்கூறை நாம் மறுப்பதற்கில்லை.
மகாபாரதம், இராமாயணம், புராணங்கள், பகவத் கீதை, சமய சித்தாந்தங்கள் போன்றவற்றை
வாசித்து, விவாதிப்பதுதான் 'அறிவுலகினரின் கடமை' என்ற மனோபாவம் 18ஆம் நூற்றாண்டில்
பண்டிதரிடையே நிலவியது. மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வாழ்ந்த
காலகட்டத்திலும் (19ஆம் நூற்றாண்டு) அவரது மாணவரான உ.வே.சா. தமிழகம் எங்கும் ஓலைச்
சுவடிகளைத் தேடியலைந்தபோதும் சங்க இலக்கியம், ஐம்பெருங்காப்பியங்கள் பற்றிய
சொல்லாடல் கருத்துலகில் இல்லை என்பது முக்கியமானது.
ஆனால் மகாபாரதமும் இராமாயணமும் தமிழரின் நடைமுறை வாழ்க்கையில் ஆழமாகப்
பரவியிருந்தன. கி.பி. 7ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த சின்னமனூர்ச் செப்பேட்டில் சங்க
காலப் பாண்டியர் காலத்தில் மகாபாரதம் தமிழாக்கப்பட்டது என்ற குறிப்பு உள்ளது.
மகாபாரதக் கதையின் தமிழாக்கத்தினைத் தென்னார்க்காடு மாவட்டத்திலுள்ள திரௌபதி அம்மன்
கோவில்களில் கோடைக் காலத்தில் ஒரு மாதம் வாசிப்பது, கதை சொல்வது இன்றும்
வழக்கிலுள்ளது. கிராமத்தினர் கதை சொல்லியைச் சுற்றி அமர்ந்து பொறுமையுடன் கதையைக்
கேட்கின்றனர். இவ்வழக்கம் பல்லவர் தமிழகத்தை ஆண்டபோது தொடங்கப்பட்டுள்ளது2. விராட
பருவத்தில் வரும் மாடுபிடிச் சண்டையினை வாசிக்கும்போது, ஊரார்கள் மந்தையில் திரண்டு
மாடுபிடிச் சண்டையை நிகழ்த்துகின்றனர். இச்சண்டை கிராமத்து மக்களின் ஆழ்மனதில்
புதைந்துள்ள போராட்ட மனப்பான்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது. மகாபாரதம் புனிதமான
பிரதி என்ற புனைவைவிட, அக்கதையில் இடம்பெறும் போர்களும் பங்காளிச் சண்டைகளும்
மண்ணுக்காக மோதிக்கொள்ளும் நெருங்கிய உறவினர்களின் போராட்ட மனநிலையும்
கிராமத்தினருக்கு முக்கியமானவை. நாட்டினை யார் ஆண்டாலும் ஆளுகின்றவருக்காகப்
போர்களத்தில் புகுந்து வீரத்துடன் போராடி உயிரை விடுதல் 'போர் தர்மம்' எனவும்
'வீரம்' எனவும் பொதுக் கருத்தியலை உருவாக்க இத்தகைய வாசிப்புகள் பெரிதும்
பயன்பட்டிருக்கக்கூடும்.
தமிழகத்தில் பக்தி இயக்கக் காலகட்டத்திற்குப் பின்னர், வைதீக சமயம்
ஆட்சியாளர்களிடம் நெருக்கமானது. இதனால் வைதீக சமயக் கடவுள்கள் பற்றிய கதைகள்,
புராணச் செய்திகள் விரிவாகத் தமிழாக்கப்பட்டுள்ளன. இத்தகைய கடவுள்களுக்கும் தமிழ்
நிலப்பரப்பில் செல்வாக்குடன் இருந்த கடவுள்களுக்கும் இடையில் குடும்ப உறவு
கற்பிக்கப்பட்டது. குறிஞ்சி நிலக் கடவுளான முருகன் ஸ்கந்தனாக்கப்பட்டுச் சிவனுக்கு
மகனாக மாற்றப்பட்டார். பாலை நிலக் கடவுளான கொற்றவை சிவனுக்கு மனைவியாக்கப்பட்டுப்
பார்வதி என்ற புதிய பெயர் பெற்றார். முருகன் பார்வதிக்கு மகனாக ஆனார். இப்படிப்பட்ட
புனைவுகளுக்கு மூலமாக சமஸ்கிருத புராணங்கள் எழுதப்பட்டன. சோழப் பேரரசின் ஆட்சியில்
வெளிநாட்டுப் படையெடுப்புகள், உள்நாட்டுப் போர்கள், பிரம்மாண்டமான கோயில்கள்
கட்டுதல் போன்றவற்றால் உழவர்கள் கசக்கிப் பிழியப்பட்டனர். அடித்தட்டு மக்கள் தங்களை
மடங்களுக்கு அடிமைகளாகவும் கோயில்களுக்குத் தேவரடியாராகவும் விற்றுக்கொள்ளும் அவல
நிலை ஏற்பட்டது3. சோழமன்னர்களின் சிறப்பினைச் சொல்லும் மெய்க்கீர்த்திகள் மன்னரின்
பூர்வீக வரலாற்றை வைதீக சமயக் கடவுளுடன் தொடர்புப்படுத்தின. சாதிய ஏற்றத்
தாழ்வுகளும் பொருளாதார வேறுபாடுகளும் மக்களின் வாழ்நிலையில் முரண்பாட்டினை
ஏற்படுத்தியபோது, ஆட்சியாளரைக் கடவுளின் அவதாரமாகக் கருதி, அதிகாரத்தினை
விமர்சனமற்று ஏற்கும் போக்கினை உருவாக்கிட வாய்மொழி மூலம் பரப்பப்பட்ட புராணக்
கதைகளின் மொழிபெயர்ப்புகள் பயன்பட்டுள்ளன.
இராமன் புனிதமான கடவுள் என்ற கருத்தியலை உயர்த்திப் பிடித்த இராமாயணத்தின்
மொழிபெயர்ப்பு, கிராமங்கள்தோறும் வாசிக்கப்பட்டது. இன்றளவும் புதுக்கோட்டை
மாவட்டத்திலுள்ள கச்சேரிக் கூடங்களில் புரட்டாசி மாதம் முழுக்க இராமாயணம்
வாசிக்கப்படுகிறது. இத்தகைய மொழிபெயர்ப்புகள் செவ்வியல் வடிவத்தில் மட்டுமின்றி,
நாட்டுப்புறக் கூத்துகளிலும் கிளைக் கதை அளவில் பெரிய அளவில் இடம்பெற்றுள்ளன. சங்க
காலத் தமிழரின் தெய்வங்கள் புறக்கணிக்கப்பட்டு, இராமனும் கிருஷ்ணனும்
முதன்மைப்படும் நிலை இன்றுவரை நீடித்திருப்பது தற்செயலானதல்ல. வைதீக சமயத்தின்
மேலாதிக்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ள இத்தகைய மொழிபெயர்ப்புகள் கணிசமாக
உதவியுள்ளன.
கி.பி. 16ஆம் நூற்றாண்டில் தமிழகத்திற்குள் வந்த ஐரோப்பியர், தமிழ் மொழியைக்
கற்றதுடன் தமிழுக்கு இலக்கணமும் அகராதிகளும் தயாரித்தனர். தமிழின் முதல் அச்சுப்
புத்தகமான கிறிஸ்தவ வேதோபதேசம் (Flas
Sanctorum), வைப்புக்கோட்டை என்ற
ஊரில் கி.பி. 1577இல் அச்சடிக்கப்பட்டது. இப்புத்தகம் லத்தீன் மொழியினை மூலமாகக்
கொண்டது. தமிழகத்திற்கு அச்சு இயந்திரம் கொண்டுவரப்பட்டாலும், அசலான தமிழ்ப்
புத்தகங்கள் அச்சடிக்கப்படாத நிலையே இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலவியது.
தமிழ்ப் புத்தகங்களை அச்சடிக்கும் உரிமை கி.பி. 1835ஆம் ஆண்டுவரை கிழக்கிந்தியக்
கம்பெனியிடமும் கிறிஸ்தவச் சமய குருமார்களிடம் மட்டுமே இருந்தது. பின்னர் தமிழர்கள்
தமிழில் புத்தகங்கள் வெளியிட்டாலும் காலனிய அரசு, அச்சக உரிமையாளர்களைத் தீவிரமாகக்
கண்காணித்தது. தமிழை வாசிக்க அறிந்த தமிழர்கள் எதை வாசிக்க வேண்டும் என்பதைத்
தீர்மானிக்கும் சக்தி மிக்கதாக ஆங்கிலேய அரசு விளங்கியது.
காலனிய ஆட்சிக் காலத்தில் தமிழில் அச்சு வடிவம் பெற்ற பெரும்பாலான புத்தகங்கள்
கிறிஸ்தவ சமயக் கருத்துக்களின் தழுவல்களே. அவை பொதுப் புத்தி சார்ந்த நிலையில்,
ஐரோப்பிய நாடுகளின் காலனிய ஆட்சிக்குத் தளம் அமைத்துத் தந்தன. அன்றைய கால
கட்டத்தில் ஐரோப்பா எல்லாவற்றுக்கும் முதன்மையாகத் தன்னைக் கருதிக்கொண்டது. எல்லா
இயற்கை வளங்களும் பாரம்பரியமும் மிக்க ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைக்
காட்டுமிராண்டிகளாகக் கருதியது. காலனிய ஆதிக்கத்திற்குட்பட்ட நாடுகளை அதனுடைய
நகலாகக் கருதியது. காலனிய மக்கள் ஐரோப்பியப் பண்பாட்டில் கரைந்துகொண்டு
ஐரோப்பியரைப் போல ஆக வேண்டும். ஆனால் அதே நேரத்தில் ஒப்பீட்டளவில் காலனிய மக்கள்
தாழ்ந்தவர்கள். மெக்காலே இந்தியாவிற்குக்கொண்டுவந்த கல்வித் திட்டத்தின்
நோக்கத்தில் இத்தன்மை உள்ளது.
தமிழகத்தில் காலனியாதிக்கம் செலுத்திவந்த ஐரோப்பியர்களாகச் சமய குருமார்கள்
பள்ளிக்கூடங்கள் நடத்தினர். பின்னர் மொழியியலாளராகவும் மானிடவியலாளராகவும்
வரலாற்றாசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் செயலாற்றினர். இவை யாவும்
காலனியாதிக்கம் வலுவாகக் காலூன்றிட அடிப்படையான திட்டங்களைத் தொகுத்து
விதிப்படுத்தி, தமிழர்கள்மீது திணிப்பதற்கான முயற்சிகள். இம்முயற்சியில் மொழியானது
தகவல் தொடர்பில் முக்கிய இடம் வகிப்பதால், மொழிபெயர்ப்பானது கருத்தியல் ரீதியில்
ஆதிக்கவாதிகள் சார்பாக அழுத்தமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. தமிழகத்தில் காலனிய
ஆட்சி பரவிட அடிப்படையான காரணிகளில் மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழில் கவிதை வடிவம் மட்டும் செல்வாக்குச் செலுத்திய காலகட்டத்தில்,
மொழிபெயர்ப்புகள் உரைநடை இலக்கியத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்தன. ஜான் பன்யன்
எழுதிய 'பில்கிரிம்ஸ் ப்ராகிரஸ்', 1793ஆம் ஆண்டில் 'ஒரு பரதேசி இந்த லோகத்தை விட்டு
மறுமைக்கு நடந்தேறினது சொற்பணம்' என்ற பெயரில் தமிழில் வெளியானது. டேனியல்
டிஃபோவின் நாவலான 'ராபின்சன் குரூசோ' (1850), ஷேக்ஸ்பியரின் 'வெனீஸ் வர்த்தகன்'
(1870) போன்றன தொடக்கக்கால மொழி பெயர்ப்புப் படைப்புகளில் சில. பின்னர்
ரெய்னால்ட்ஸ், கானன் டாயில் போன்றோர் எழுதிய கொலை, கொள்ளை, துப்பறியும் மர்மக்
கதைகள் அதிக அளவில் தமிழாக்கப்பட்டன. இத்தகைய நாவல்களைத் தழுவி வடுவூர் துரைசாமி
ஐயங்கார், ஆரணி குப்புச்சாமி முதலியார், ஜே.ஆர். ரெங்கராஜு போன்றோர் மட்டமான
தன்மையில் தமிழில் எழுதிக் குவித்தவை ஏராளம். இதனால் தமிழ் வாசகரின் வாசிப்பு
மனநிலை மழுங்கடிக்கப்பட்டது; சுயமாகத் தமிழில் நாவல் எழுதுவோரின் முயற்சிகளுக்குப்
பெரிய ஆதரவு இல்லாத சூழல் நிலவியது. மேலைநாட்டுப் பொழுதுபோக்கு நாவல்கள்
தமிழாக்கப்பட்டதும் அவை பரந்துபட்ட நிலையில் வெகுஜன ஆதரவைப் பெற்றதும் சாதாரண
விஷயங்கள் அல்ல. காலனிய இந்தியாவில் வாழும் பூர்விகக் குடிகளான தமிழர்களின்
பாரம்பரிய இலக்கிய ஆளுமையைப் புறக்கணிப்பதுடன் நவீன இலக்கியத்தையும் மலினமாக்குவது
என்பது தமிழ் அடையாளத்தினைச் சிதைப்பதாகும்.
மொழிபெயர்ப்புப் படைப்புகள் இலக்கிய ரீதியில் தமிழுக்கு வளம் சேர்த்தது 1950க்குப்
பின்னர்தான் என்று சொல்ல முடியும். உலக இலக்கியப் பரப்பினைத் தமிழர் அறிந்துகொள்ள
வேண்டுமென்ற லட்சிய நோக்க முடைய மொழிபெயர்ப்பாளர்களின் தன்னலமற்ற சேவையினால் பிற
நாட்டுப் படைப்புகள் நூற்றுக்கணக்கில் தமிழாக்கப்பட்டன. நாட்டின் விடுதலைக்குப்
பின்னர் தொடக்கக் கல்விக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் காரணமாக விளிம்பு நிலை
மக்களும் பெரிய அளவில் கல்வி கற்றனர். இக்காலகட்டத்தில் அசலான தமிழ்ப் படைப்புகள்
அதிக அளவில் தமிழில் வெளியாயின. நவீனத் தமிழ் இலக்கியம் குறித்த விமர்சனமும்
மதிப்பிடுதலும் சரியான திசைவழியில் சென்றன. மொழி பெயர்ப்புப் படைப்புகளை மக்கள்
விரும்பி வாசித்தனர். எனினும் தமிழ்ப் படைப்புகளின் தனித்துவத்திற்கு
முக்கியத்துவம் தரப்பட்டது. எழுத்தாளர்களும் தங்கள் சமகாலத்தில் வெளியான பிறரின்
படைப்புகளை ஆவலுடன் வாசித்து விருப்பு வெறுப்பற்ற அபிப்ராயங்களை முன்வைத்தனர்.
தனிப்பட்ட ரீதியில் படைப்பாளிகளை மட்டம் தட்டும் போக்கு பெரிய அளவில் இல்லை;
படைப்புகளுக்குத்தான் முன்னுரிமை தரப்பட்டது. மொழிபெயர்ப்புப் படைப்புகளிலிருந்து
ஊக்கம் பெற்ற தமிழ்ப் படைப்பாளர்கள், தமிழ்ச் சூழலை மையப்படுத்திப் படைப்புகளை
எழுதினர். பிற மொழிப் படைப்புகளை வாசித்துத் தன்னுடைய எழுத்துத் திறனைத்
தாழ்த்திக்கொள்ளும் போக்கு அன்றைய எழுத்தாளர்களிடம் பெரிய அளவில் இல்லை. காலனிய
ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட மனநிலை அவர்களுக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும்
தந்திருக்க வேண்டும்.
1980களின் பிற்பகுதியில் மொழிபெயர்ப்புகள் மீண்டும் ஒரு புதிய சிக்கலுக்குள்
மாட்டிக்கொண்டன. கண்ணில் பட்ட மேலை இலக்கியப் படைப்புகளை மனம்போன போக்கில்
தமிழாக்கும் போக்கு மெல்ல அறிமுகமானது. கையில் காசிருந்தால் யார் வேண்டுமானாலும்
சிறுபத்திரிகை வெளியிடலாம் என்ற நிலை ஏற்பட்டவுடன், அவ்வப்போது சிறுபத்திரிகைகள்
தோன்றி மறைந்து கொண்டிருந்தன. இத்தகைய சிறுபத்திரிகை ஆசிரியர்களின் குறுங்குழு
வாதத்தினாலும் குழுச் சண்டைகளாலும் விஷய வறட்சியாலும் எதையாவது மொழிபெயர்த்துப்
பக்கங்களை நிரப்பும் நிலை ஏற்பட்டது.
போர்த்துகீசிய நாட்டின்
X-ஐ மொழிபெயர்ப்பதன் மூலம் உலக இலக்கியம் அறிந்த
மொழிபெயர்ப்பாளர் என்ற பிம்பம் சிறுபத்திரிகை உலகில் ஏற்படும் என்ற நப்பாசை வேறு
சிலரைத் தூண்டியது. இத்தகைய சூழலில் 'மொழிபெயர்ப்பு' என்பது நவீன மோஸ்தருடன்
தொடர்புடையதாக, அறிவுஜீவித்தனமாக மாறியது. பிற நாட்டு இலக்கியப் படைப்புகளிலிருந்து
எதை மொழிபெயர்க்க வேண்டும், தமிழுக்கு இது தேவைதானா என்பன போன்ற அடிப்படைக்
கேள்விகள் எதுவுமில்லாமல் தான்தோன்றித்தனமாகச் செயல்படும் போக்கு வலுவடைந்தது.
எண்பதுகளில் சர்வதேச ரீதியில் இன்னொரு பெரிய மாற்றம் நிகழ்ந்தது. சமூக வாழ்க்கையின்
மீது நம்பிக்கை கொள்ளச் சொன்ன மார்க்சியத் தத்துவம் நடைமுறையில் கேள்விக்குள்ளானது.
அறிவுலகில் கருத்து ரீதியில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பச் சோகை பிடித்த
தத்துவங்கள் முயன்றன. கோட்பாட்டாளர்கள் புதிது புதிதாக உருவாக்கிக்கொண்டிருந்த
கோட்பாட்டு நெறிகளின் பின் படைப்பாளர்களும் செல்லும் நிலை ஏற்பட்டது. படைப்பை விட
விமர்சகன் செல்வாக்கு மிக்ககவனாக மாறும் நிலை ஏற்பட்டது. இன்னொரு நிலையில் எல்லாப்
படைப்பாளர்களும் விமர்சனம் செய்யும் மனநிலைக்கு உறுமாறினர். பின்நவீனத்துவ
விமர்சனப் போக்குக் காரணமாகப் படைப்பாளியின் மதிப்பு தனது படைப்பினை மதிப்பீடு
செய்வதைவிடச் சக படைப்பாளிகளை நிராகரிக்கும்போது வலுவடைந்தது. இதனால் விமர்சனம்
என்பது ஒன்றை வரி அபிப்ராயங்களாக வடிவெடுத்தது. ஒரு கையில் தன் படைப்புப் பற்றிய
கொடியை ஏற்றிக்கொண்டு, மறு கையில் வாளை ஏந்திச் சக படைப்பாளிகளின் கொடிகளைச்
சகட்டுமேனிக்கு வெட்டி எறிந்து சுயதிருப்தி அடையும் அற்ப மனநிலை பரவத் தொடங்கியது.
இதனால் சுயமோகிகளாகத் தனது படைப்புகளைப் பற்றிப் பலரும் பிரகடனம் வெளியிடத்
தொடங்கினர். "தமிழில் ஒரு நாவல் மட்டும்தான் உள்ளது", "பின்நவீனத்துவம்
வலியுறுத்தும்
textual pleasure என் நாவலில் மட்டும்தான் உள்ளது".
"பாலிம் செஸ்ட் நாவல் எழுத்துக்கு எனது
X நாவல் மட்டும்தான் எடுத்துக்காட்டு",
"வாழ்வை விசாரிக்கும் கவிதையின் சூட்சும மொழி என்னிலிருந்து பிறக்கிறது" ... இப்படி
முண்டா தட்டும் சொற்கள் தமிழில் பல்கிப் பெருகுகின்றன.
இத்தகைய போக்குகளின் போலித்தனத்தால் குழம்பிய வாசகன் சரியான மதிப்பீட்டிற்கு
வரவியலாமல் குழம்ப நேரிடுகிறது. ஒட்டுமொத்தப் படைப்புச் சூழல் சிதிலமடைவதால் நல்ல
படைப்பினை அடையாளங்காண்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால் மேலை இலக்கியப்
படைப்புகளைக் கூடுதலாக அறிமுகப்படுத்துவதுடன் அவற்றைப் போற்றிப் பாராட்டும் நிலை
பரவலாக ஏற்பட்டது. தொழில்நுட்பம், அறிவியல் துறைகளில் மேலைநாடுகளைச்
சார்ந்திருக்கும் நிலை தமிழிலக்கியத்திற்கும் ஏற்படுவதுதான் கொடுமை.
மேலை இலக்கியப் படைப்புகளை விமர்சனமற்று மொழிபெயர்த்து வெளியிடும் போக்கு
பெருகியதால் தமிழ்ப் படைப்பாக்கம் ஒரு வித நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளது.
அதிலும் லத்தீன் அமெரிக்க இலக்கியத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை என்ற முழக்கத்துடன்
தமிழாக்கப்பட்ட படைப்புகள் தமிழ்ப் படைப்பாளர்களுக்குக் 'கிலி' ஏற்படுத்துகின்றன.
மார்க்கஸ், போர்ஹஸ், கால்வினோ போன்ற இலக்கிய ஆளுமைகளின் படைப்புகளுக்குத் தொடர்ந்து
அர்ச்சனை செய்திடும் பூசாரிகளின் எண்ணிக்கை பெருகியது. தும்மினால்கூட மார்க்கஸ்
எப்படித் தும்முவார் என்பது போன்ற புனைவின் உச்சம் சிலரைப் பிடித்து ஆட்டியது.
இன்னும் சிலர் தங்கள் தாயகத்தை லத்தீன் அமெரிக்காவிற்கு மாற்றிக்கொள்ளத்
துடித்தனர். பாவம், விமான டிக்கட்டும் விசாவும்தான் கிடைக்கவில்லை. லத்தீன்
அமெரிக்க 'உச்சாடனம்' முற்றிய நிலையில் தமிழில் வெளியாகியிருப்பது யாவும் 'குப்பை'
என்பதுபோல் பேசவும் எழுதவும் தொடங்கினர். இதில் வேடிக்கை என்னவென்றால், இத்தகையோர்
இலக்கிய அந்தஸ்து பெறத் தமிழில் எழுத வேண்டிய துர்பாக்கிய நிலை இருந்ததுதான்.
இத்தகைய போக்கின் உச்சகட்டமாகச் சிலருக்கு 'இலக்கிய நிஹிலிசம்' என்ற புதிய வகையான
நோய் ஏற்பட்டு, அல்லும்பகலும் தமிழ்ப் படைப்புகளை வெறுத்து ஒதுக்கும் அவஸ்தைக்கு
உள்ளாயினர்; எனினும் தொடர்ந்து மொழிபெயர்ப்பின் மூலம் பிற மொழிப் படைப்புகளைத்
தமிழாக்கிடும் திருப்பணியை மட்டும் நிறுத்தவேயில்லை.
இத்தகைய போக்குகளால் இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழில் வெளியான படைப்புகளைப்
புறக்கணிப்பது இயல்பாக நடந்தேறியது; மேலும் சமகாலத்தில் தமிழில் வெளியாகும்
படைப்புகள் பற்றிய தாழ்வான அபிப்ராயமும் பலருக்கு ஏற்பட்டது. இந்நிலை ஏதோ ஒரு
சிலரால் திட்டமிட்டுத் தமிழில் ஏற்படுத்தப்பட்டது அல்ல. பின்காலனிய சூழலில் வளரும்
நாடுகளில் மொழியின் வழியே கருத்தியல் ரீதியில் ஆதிக்கம் செலுத்தத் திட்டமிட்டதன்
விளைவுதான் இது. ஒரு பண்பாட்டின் மீது இன்னொரு ஆதிக்கப் பண்பாட்டைத் திணிப்பது
அல்லது இலக்கிய இடைவெளியில் மாற்றியமைப்பது என்பது இன்றைய மொழிபெயர்ப்புகளின்
முக்கியமான பணியாக உள்ளது. இப்போக்குத் தொடரும்போது தமிழ்ப் படைப்புகள்
ஒதுக்கப்படும் நிலை ஏற்படும்.
இன்னொரு புறம் இந்திய மொழிகளிலிருந்து நூற்றுக் கணக்கில் இலக்கியப் புத்தகங்கள்
தமிழில் வெளியிடப்படுகின்றன. இவற்றில் பல சாதாரண தரத்திலானவை. ஏற்கனவே கணினிமயமான
அச்சுத் தொழில் வசதி காரணமாகத் தமிழில் புத்தகங்கள் வெள்ளம்போலப்
பெருகிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சராசரியான புத்தகங்களைத் 'தலையணை' அளவில்
தமிழாக்குவது வெட்டிவேலை. இதனால் சராசரி வாசகருக்குக் குழப்பமும் பிரமிப்பும்தான்
மிஞ்சும். இவையல்லாமல், தமிழ் வாசகனை மிரட்டுவதுபோலச் செய்யப்படும்
download சமாச்சாரங்கள் வேறு குவிந்துகொண்டிருக்கின்றன. உங்கள் கணினியில்
இணையத் தொடர்பு இருந்தால் போதும், புகுந்து விளையாடலாம். இதனால் ஏதோவொரு கண்காணாத
தேசத்தில் வாழும்
X எழுத்தாளரின் வாழ்க்கை, படைப்புகள் பற்றி இணையத்திலிருந்து
தகவல்களை எடுத்து, பிரமிப்புத் தரும் நடையில் தழுவியெழுதுதலும் சுறுசுறுப்பாக
நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இத்தகைய மொழிபெயர்ப்பாளர்கள் சாதிக்க விரும்புவதுதான்
என்ன? அடேயப்பா,
X எழுத்தாளரின் 19 நாவல்களில் 11