ஒரு நூற்றாண்டுக்கும் முன்னர் மறைந்துபோன பரிதிமாற் கலைஞரின் படைப்புகளை அண்மையில்
தமிழக அரசு நாட்டுடைமையாக்கியுள்ளது. ஐம்பதாண்டுகளுக்கும் முன்பே உரிமை
தீர்ந்துவிட்ட படைப்புகளை நாட்டுடைமையாக்கும் விந்தையை எவரேனும் விளக்கினால் நன்றாக
இருக்கும். விழுமிய நோக்கத்தோடு உருவான நாட்டுடைமையாக்கம் என்னும் செயல்
கேலிக்கூத்தாகவும் துன்பியல் நாடகமாகவும் மாறி வருகிறதோ என்ற எண்ணத்தைத் தவிர்க்க
இயலவில்லை.
1949இல் பாரதி படைப்புகளின் உரிமையை விலைக்கு வாங்கிய தமிழக அரசு, 1963இல் அந்த
உரிமையை முழுமையாக விட்டுக்கொடுத்தது. தமிழ்ப் பண்பாட்டில் தவிர்க்க முடியாததும்
பரவலானதுமான பாரதி படைப்புகளைத் தடையின்றிப் பயன்படுத்துவதற்கு பாரதியின்
படைப்புகள்-அவருடைய குடும்பத்தினர் அல்லாத - சில தனிநபர்களின் உரிமையாக இருந்த
நிலையில், தமிழக அரசு அதை வாங்கி மக்களுக்கு வழங்கியது. இது முன்னுதாரணமே அற்ற ஒரு
நடவடிக்கை. தாகூரின் படைப்புகளுக்கு இயல்பாக 1991இல் உரிமை தீர்ந்திருக்க வேண்டிய
நிலையில், மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டுவந்து, காப்புரிமையை மேலும்
பத்தாண்டுகளுக்கு நீட்டித்த பிற்போக்கு நடவடிக்கையோடு ஒப்பிட்டால் பாரதி
படைப்புகளின் நாட்டுடைமையாக்கத்தின் புதுமையும் புரட்சியும் தெளிவாகப் புலப்படும்.
காந்தி, நேரு, பிரேம்சந்த் என்று எந்த இந்திய ஆளுமைக்கும் இத்தகைய ஒரு கௌரவம்
கிடைத்ததில்லை. தனியுரிமை கோலோச்சும் மேலைப் பண்பாடுகளில் இத்தகைய நடவடிக்கையை
எண்ணிப்பார்க்கவே முடியாது.
அடிப்படையில் நாட்டுடைமையாக்கம் என்பது பணம் சம்பந்தப்பட்டதல்ல; மாறாக ஒரு
ஆளுமைக்குக் கிடைக்கும் சமூக ஏற்பும் கௌரவமுமேயாகும். பாரதி படைப்புகளின்
நாட்டுடைமையாக்கம் ஒரு பெரும் பண்பாட்டு இயக்கப் பிரசாரத்தின் வழியே ஏற்பட்டதாகும்.
பாரதியைப் போல் பாரதிதாசன் படைப்புகளும் நாட்டுடைமை ஆக்கப்பட வேண்டும் என்ற
கோரிக்கை தமிழ் ஆர்வலர்களிடையே நெடுங்காலம் இருந்தது. பாரதிதாசன் நூற்றாண்டையொட்டி
இது ஈடேறியது. பின்னர் அண்ணாவின் படைப்புகள் ஒரு பெருந்தொகை கொடுக்கப்பட்டு
நாட்டுடைமையானது. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தொடர்ந்தார்.
மடை திறந்தது என்னுமளவுக்கு அடுத்தடுத்து முப்பது அறிஞர்கள் என நாட்டுடைமையாக்கம்
என்ற உயர் கௌரவம் 1990களில் கட்டெறும்பாய்த் தேய்ந்தது. தன்னேரில்லாத ஆளுமைகளுக்கே
கிடைத்திருக்க வேண்டிய கௌரவம் சராசரித்தனத்திற்குச் சரிந்தது. மறைந்த
எழுத்தாளர்களின் குடும்பத்தினர் பலரும் எப்படியேனும் நாட்டுடைமையாக்கம்
செய்துவிடலாமென விண்ணப்பங்களுடன் தலைமைச் செயலகத்தில் காத்துக்கிடக்கலாயினர்.
நாட்டுடைமையாக்கம் என்பது ஒரு சமூகச் செயல். ஒரு எழுத்தாளர் புதையல் தோண்டிக்
கட்டித் தங்கம் எடுக்கலாம். அரியானா குலுக்கலில் பத்து லட்சம் தட்டிக்கொண்டு
போகலாம். இவற்றுக்கும் நாட்டுடைமையாவதற்கும் கொஞ்சம் வேறுபாடு உண்டு.
நாட்டுடைமையாக்கத்தினால் கிடைக்கும் தொகை ஒரு குறியீடு, அவ்வளவே.
தமிழக அரசு நாட்டுடைமையாக்கத்தில் சீரான, தகுதியான, நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை.
புதுமைப்பித்தனும் கு.ப. சேது அம்மாளும் ஒன்றாக நாட்டுடைமையாயினர்.
புதுமைப்பித்தனுக்கும் ஐந்து லட்சம், படைப்பாளரே அல்லாத சக்தி கோவிந்தனுக்கும் 5
லட்சம். புலவரான ந.மு. வேங்கடசாமி நாட்டாருக்கும் 5 லட்சம், மொழிபெயர்ப்பாளர் த.நா.
குமாரசாமிக்கும் 5 லட்சம். 'சிலம்புச் செல்வ'ருக்கு 20 லட்சம். புலவர் குழந்தைக்கு
10 லட்சம், கவிஞர் முடியரசனுக்கு 10 லட்சம்.
சென்ற பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள புத்தக வெளியீட்டுப் பெருக்கம்
நாட்டுடைமையாக்கத்தினால் விடுவிக்கப்பட்ட படைப்புகளின் மீது கொழுத்துள்ளது.
தாறுமாறான பதிப்புகளுக்கு அளவில்லை. 'உயிர் பெற்ற தமிழர் பாட்டு' இல்லாமல் பாரதி
பாடல் தொகுப்புகள் உலவுகின்றன. கல்கி பாடல் பதிப்புகள் கத்தரிக்காய் வியாபாரத்தைவிட
மலிந்துவிட்டன. எந்த எழுத்தாளர் மறைந்தாலும் உடனே அவர் படைப்புகள் நாட்டுடைமையாக
வேண்டும் என்று 'ஆசிரியருக்குக் கடித'ங்கள் அனுப்பப்படுகின்றன; தீர்மானங்கள்
இயற்றப்படுகின்றன.
இந்த நிலைக்கு எதிராகத் தமிழுலகம் குரல் கொடுக்க வேண்டும். வறுமையில் வாடும்
எழுத்தாளர் குடும்பங்களுக்கு நிதி உதவி, நல்கை, ஓய்வூதியம், வேலை வாய்ப்பு முதலான
உதவிகளை அரசு தாராளமாகச் செய்ய வேண்டும். நாட்டுடைமையாக்கம் இதற்கு உகந்த வழியல்ல.