விஸ்வாமித்திரன்கர்நாடக இசையுலகின் இளம் மேதையான சஞ்சய் சுப்ரமணியன் குறித்த 'ஆரார்
ஆசைப்படார்' (Desired
Melody) எனும் ஆவணப்படம் தமிழின் மிக
முக்கியமான நாடகப் படைப்பாளர்களில் ஒருவரான ப்ரஸன்னா ராமஸ்வாமியின் தயாரிப்பு
மற்றும் இயக்கத்தில் வெளி வந்திருக்கிறது. இசை சார்ந்த ஆவணப்படத்தை இயக்குவது என்பது
அத்தனை எளிதான காரியமல்ல. மற்ற துறைகளைப் பற்றிப் படம் தயாரிக்கும்போது வெறும்
கேள்வி ஞானமே போதுமானது. ஆனால் இசை குறித்த படம் என வரும்போது. இசை குறித்த அறிதல்
ஞானம் மிகவும் அவசியம். 'ஆரார் ஆசைப்படார்' ஆவணப்படத்தில் அந்த அறிதல் ஞானத்தை நாம்
காண முடியும். ப்ரஸன்னாவின் இசை சார்ந்த உணர்வெழுச்சி படம் முழுக்க
வெளிப்பட்டிருக்கிறது.
சஞ்சயின் குரலிசையைக் கடந்து பத்து வருடங்களாகக் கேட்டுவருபவன் நான். 90களின்
இறுதியில் பிரபலமடைந்த எத்தனையோ இளம் சங்கீதக்காரர்களின் மத்தியில் சஞ்சயின் பாடல்
மொழி அலாதியானது. அவரது பாடல்களைக் கேட்டு அன்றைக்குத் தோன்றிய வியப்பு இன்றுவரை
சற்றும் குறையாமல் இருக்கிறது. தமிழிசைக்கு அவர் தரும் முக்கியத்துவம் இன்றுவரை
தொடர்ந்து கொண்டிருக்கும் ஓர் அர்ப்பணிப்பு. இன்று அவரது குரலின் மென்மையும்
தீர்க்கமும் கூடுதலான ஒலிவளம் அடைந்திருப்பதை அவரது ரசிகர்கள் உணர்வார்கள். தகுந்த
காலகட்டத்தில் இத்தகைய ஆவணப்படம் வந்திருப்பது மகிழ்விற்குரியது.
இந்தப் படம் தொடங்கி முடியும்வரை 85 நிமிடங்களும் சஞ்சயின் குரல் நதி, தென்படும்
வளைவுகளில் நளினமாகச் சுழித்தோடுகிறது. இசையின் மெய்மை சூழ நாமும் பின்தொடர்ந்து
நீந்திச் செல்பவர்கள் ஆகிவிடுகிறோம். படத்தில், சஞ்சய் கம்பீரமான இசைக் கலைஞராகவும்
குடும்பத்துடன் உறவாடும் எளிய மனிதராகவும் அணுகப்பட்டிருக்கிறார். குறிப்பாக, அவர்
தனக்குத் தெரிந்த பாடல்களைப் பற்றிக் கூறும் ஒரு உரையாடல் காட்சியில், அப்பொழுதுதான்
இசை கற்கத் துவங்கியிருக்கும் ஒரு சிறுவனின் உற்சாகத்தைப் பிரதிபலிப்பார்.
அக்காட்சியின் யதார்த்தம் நுண்மையானது. அடுத்து, தனது குழந்தைகளுக்கு அவர் கதை
சொல்லும் தருணம். கதை சொல்லும்போது அவரது குரலின் ஏற்ற இறக்கங்களில் மீண்டும்
குழந்தைமையை அடைந்த ஒரு தந்தையை நாம் காணவியலும். இவ்விதக் காட்சிகளால் இந்தப் படம்
தனது படைப்புத் தன்மையை விரிவுசெய்துகொள்கிறது.
ஆனால் ஒரு சிறந்த கலைஞருக்கு இருக்கும் அநேகப் பக்கங்கள் சஞ்சயிடமும் இருப்பது
சாத்தியமானதுதான். அவருடன் ஒரு முறை நான் உரையாடியபோது, தான் சூழ்ந்திருக்கும்
இசைக்கு அப்பாற்பட்டும் அவரிடம் தேடல்கள் இருப்பதை உணர்ந்தேன். இசையின் மாற்று
வடிவங்களில் அவருக்கு விருப்பம் இருக்கிறது. மேலும் இசையின் தேர்ந்த பாதையில் அவர்
பயணப்பட்டதால் தன்னுள்ளேயே இறைமையைத் தேடிப் பார்க்கும் ஒரு விழைவையும் அவரிடம்
கண்டேன். பேதமற்று எல்லோரிடமும் இன்முகம் காட்டி மதிப்புடன் அணுகும் அவரது பண்பும்
உயரியது. இவை குறித்த சித்தரிப்புகளையும் படம் வழங்கியிருந்தால் இன்னும் கூர்மையுடன்
இருந்திருக்கும்.
மேலும் திரைப்படம் அல்லது ஆவணப்படம் என்று வரும்போது அதற்கான கட்டுமானங்கள் பல
வகைகளிலாயினும், காட்சிக் கோர்ப்பில் ஒருவித பொதுத் தன்மையையே கொண்டிருக்கின்றன.
பரிசோதனைப் படங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. விளக்கமாகக் கூற வேண்டுமானால் ஒரு
படத்தில் உள்ளோடும் காலத்திற்கும் படத்தின் ஓட்ட காலத்திற்கும் நிச்சயமான
தொடர்புண்டு. படத்தின் உள்காலத்தை மிகத் துல்லியமாக வடிவமைப்பதில் படத்தின் ஓட்ட
காலத்திற்கும் இன்றியமையாத பங்களிப்பு இருக்கிறது. உலகின் மிகச் சிறந்த
திரைப்படங்களிலோ ஆவணப்படங்களிலோ நாம் கூடுதலான காட்சிகளை உணர்வது கடினம்.
ப்ரஸன்னாவின் இப்படத்தில் சில காட்சிகள் - அதன் தேவையையும் தாண்டி - அதிக நீளத்திலோ
தேவைக்குட்படாத மிகைநிலையிலோ உள்ளன. அவற்றைக் குறைத்தால் படம் இன்னும் பலமடையும்.
உதாரணத்திற்கு, சஞ்சயின் துணைவியார் சமையலறையில் நின்று தோசை சுடும் காட்சியின்
நீளம். இயக்குநர் விரும்பியிருக்கக்கூடிய யதார்த்தப் பிரதிபலிப்பையும் மீறி சஞ்சய்
வெளியறையில் பாடிக்கொண்டிருக்கும்போது அவரது துணைவியார் சமையலறையில் சிக்குண்டு
இருப்பது போன்ற அர்த்தத்தையும் இக்காட்சி ஏற்றிவிடுகிறது. ஒருவேளை இயக்குநர் அவ்வித
விமர்சனத்தை வைக்க முயன்றிருந்தாலும் படத்தின் நகர்வுத் தேவைப்பாட்டில் அது
பொருந்தவில்லை. சஞ்சயின் இசையுணர்வுமீது அவரது துணைவியார் வைத்துள்ள பார்வையை
உரையாடலின் வழியோ மௌனமான தருணங்களின் வழியோ வெளிக்கொணர்ந் திருக்கலாம். அதேபோல
மாளவிகா சருக்கை மற்றும் அகிலாவின் நடனங்கள் படத்திற்கு வெளியே தேங்கிவிடுகின்றன.
கர்நாடக இசை என்பது உருவ வழிபாட்டு இசையை மையமாகக் கொண்டதெனினும் பாடுபவரின்
சிந்தனைக்கேற்ப மாறக்கூடியதும்கூட. சஞ்சயின் குரலிசையின் பேரோசை இப்புவியில் சக
நேயம் காற்றென விரவிச் செல்ல வேண்டிய விருப்பத்தையும் உட்கொண்டது. இது எனது தனித்த
பார்வை என ஒதுக்கவியலாது. அவரது இசையுள் ஆழ்ந்தவர்களுக்கு இந்த நிதர்சனமான உண்மை
புலப்படும். எனவே வெறும் பக்தி வகைப்பட்ட இசையுடன் மட்டுமே அவரைப் பொருத்திப்
பார்ப்பது ஏற்புடையதல்ல. படத்தில் ஒரு இந்துக் கோவில் விழாவும் கடவுளின் வலமும்
விரிவாகக் காட்டப்பட்டுள்ளன. பின்னணியில் சஞ்சயின் அளப்பரிய குரல் ஒலிக்கிறது. அது
தேவையற்றது; மேலும் அவரது இசையின் பரப்பை குறுக்கிவிடும் அபாயத்தை அது
ஏற்படுத்திவிடுகிறது. எந்த ஒரு மகா கலைஞனும் தான் ஓரிடத்தில் சிக்கியிருப்பினும்
தனது படைப்புக் குரலை உலகம் முழுவதற்கும் விட்டுச் செல்லவே விரும்புகிறான் என்பது
நாமறிந்த உண்மை. உதாரணத்திற்கு சஞ்சயின் ஆலாபனை இனம், மொழி தாண்டி, உலகளாவிய தன்மையை
உள்ளடக்கி ஒலிப்பது.
படத்தில் நடிகர் ஆனந்த்சாமி சஞ்சயைப் பின்தொடரும் சாட்சியாக, ஒரு ஒளிப்பதிவு
ஆன்மாவாக வருகிறார். ஆனந்த், நவீன உலகில் பிரபலமடைந்துவருபவர். தமிழில் வந்த
மாமல்லனின் 'இடைவெளி', முத்துக்குமாரின் 'பிறந்த நாள்' போன்ற குறும்படங்களில் தனது
சிரத்தையான நடிப்பை வழங்கியிருப்பவர். அவரது தோற்றம் இந்த ஆவணப்படத்தை ஒரு கதைப்படத்
தன்மைக்கு நகர்த்திச் செல்கிறது. சஞ்சயும் அவரும் அருகருகே இருந்தாலும்
பேசிக்கொள்வதில்லை. இருவருக்குமிடையே ஒரு மாய நட்பு உலவுகிறது. படத்தின்
காட்சியோட்டம் இருவரது பிம்பங்களையும் கைகோர்த்து நடக்கும் பட்சத்திலும் படத்தின்
இறுதியில் இருவருக்குமான பிணைப்பின் உள்கதியை உறுதிப்படுத்தும் ஒரு இணைவுக் காட்சி
தேவைப்படுகிறது. அந்தக் காட்சியை முன்வைத்துத்தான் இப்படம் தான் உருவகித்துக் கொண்ட
கதைத் தன்மையில் முழுமையடைய இயலும்.
தமிழ்ப் படைப்பாளர்கள் குறித்த ஆவணப்படங்கள் மிகவும் குறைவு. எடுக்கப்பட்டவற்றில்
பெரும்பாலும் அக்கறையையும் அர்ப்பணிப்பையும் தொலைத்துவிட்டவை. அவற்றிலிருந்து
வெகுவாக விலகி, இப்படம் ஓர் இசைக் கலைஞருக்கு அவரது ரசிகர் வழங்க வேண்டிய முழுமையான
நேசப் பரிமாற்றத்தை உவகையுடன் வழங்கியிருக்கிறது. சஞ்சயின் பாடல்களை உளப்பூர்வமாக
ரசித்து உள்வாங்கித் திரையில் விரவவிட்டிருக்கிறார் ப்ரஸன்னா. நம்முடன்
வாழ்ந்துகொண்டிருக்கும் ஓர் இளம் மேதை பற்றியது என்ற கோணத்திலும் போற்றுதலுக்குரியது
இந்தப் படம்.
ஒளிப்பதிவை ஆர்.வி. ரமணியும் எம்.ஜி. ராதா கிருஷ்ணனும் கையாண்டிருக்கிறார்கள்.
சஞ்சய் தனது குடும்பத்தாருடன் பயணப்படும் மழைநேரக் காட்சிகள் மனத்தைத் தொடுபவை. படத்
தொகுப்பை விஜய் சங்கர் செய்திருக்கிறார். உலகளாவிய சங்கீத இசை ரசிகர்களுக்கு இப்படம்
நினைவுகொள்ளத்தக்க ஓர் அன்பளிப்பு என்பதில் சந்தேகமில்லை.