Google   www kalachuvadu.com

விவாதம்

'அவசரப்பட்டுவிட்டோம்'
நவீனக் காதல் கவிதைகளின் பன்முகங்கள்

ந. முருகேச பாண்டியன்

நவீனத் தமிழ்க் கவிதைகளில் காதல் பற்றி ஆராய்ந்திட்ட சுகுமாரன் தனது கட்டுரையி஢ல் ந. பிச்சமூர்த்தி, சி. மணி, பிரமிள், தேவதேவன் என்று ஆலாபனை செய்திருப்பது வேடிக்கையானது. 'நவீனம்' என்ற சொல்லுக்கு 'அண்மை' என்றுதான் பொருள். காதலில் காலாவதியாகிப்போன கவிஞர்களின் கவிதைகளை வைத்துக்கொண்டு நவீனத் தமிழ் வாழ்வில் காதலை மதிப்பிட முயலுவது பொருத்தமன்று.

நவீனத் தமிழ்க் காதல் கவிதை எண்பதுகளின் நடுவில் வெளியான கௌரி சங்கரின் 'மழை வரும் வரை' தொகுப்பிலிருந்து தொடங்குகின்றது. அப்புறம் கலாப்ரியாவைச் சொல்ல வேண்டும். முந்தைய தலைமுறைக் கவிஞர்கள் தாகூர், கலீல் ஜிப்ரான் போன்ற பிற மொழிக் கவிஞர்களின் காதல் கவிதைகளினால் தாக்கம் பெற்றவர்கள். இதனால் வெற்றுப் புனைவுகளில் மூழ்கிக் காதலைக் கவிதையாக்க முயன்றனர். இன்று 'காதல்' என்ற சொல்லின் பொருள் மாறிவிட்டது. காதலைப் பற்றி எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்; சில வேளைகளில் அது காதலையும் குறிக்கும். மௌனி கதைகளில் காதலுக்காக ஏங்கி அலைந்து கடைசியில் சுரம் வந்து மரிக்கும் இளைஞன் பற்றி இன்றைய இளைஞர்களின் மதிப்பீடு: "அவன் ஒரு லூஸ்... இதுக்குப் போய் இப்படியா?" ஆம்! அதுதான் உண்மை.

ஆண், பெண் பற்றிய சமூக மதிப்பீடுகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருக்கும்போது, 'காதல்' பற்றிய அவதானிப்பும் மாறியுள்ளது. ஊடகங்களின் பெருக்கத்தினால் எவ்விதமான புதிர்களும் இல்லாமல், இயல்பான உடலுறவுகூட மனம் சம்பந்தப்பட்டதாக மாற்றப்படும்போது, நவீன இளைஞனின் காதல் பற்றிய புரிதல்கள் வேறு தளத்தில் உள்ளன. புற நெருக்கடிகள் காரணமாக இயற்கையிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் அந்நியப்பட்டுக்கொண்டிருக்கும் புதிய தலைமுறையினருக்குக் காதல் பற்றிய கொண்டாட்டம் எதுவுமில்லை; அதற்கான துக்கமும் அவர்களுக்கில்லை.

இன்று காதலித்த பெண்ணைத் துறந்து செல்லும் இளைஞனுக்குச் சிறைத் தண்டனை காத்திருக்கிறது. ஏதோ முன்பின் அறியாத பெண்ணைக் காதலித்து, அதற்காக வீட்டை விட்டு வெளியேறிக் குடும்பச் சொத்தினை இழந்திட இளைஞர்கள் தயாராயில்லை. நவீன வாழ்க்கை வாழ்ந்திட - சொகுசான - பொருளாதாரம் தேவை என்று அறிந்திட்ட இளம் தலைமுறையினருக்கிடையில் தூய காதல் என்பது வெறும் புனைவுதான். சுருக்கமாகச் சொன்னால், திருமணம் ஆகும்வரை 'ஜாலியாகக் கம்பெனியடிக்கலாம்'. பிறகு வேறு யாருடனோ கல்யாணம். "எதுக்குத் தலைவா ரிஸ்க்" என்பது போன்ற பொதுப் புத்தி நிலவும் தமிழ்ச் சூழலில் காதல் பற்றிய கவிதைப் பதிவுகளும் பன்முகத் தன்மையுடனிருப்பது தவிர்க்கவியலாததது.

சரி, போகட்டும்! நவீனத் தமிழ்க் கவிஞர்களில் காதலைப் பற்றி எழுதியிருப்பவர்களில் ஸ்ரீபதி பத்மநாபா, கண்டராதித்தன், அப்பாஸ், லஷ்மி மணிவண்ணன், யூமா வாசுகி, யவனிகா ஸ்ரீராம், சங்கர ராமசுப்ரமணியன், மகாதேவன் போன்றோர் உடனடியாக எனது நினைவில் வருகின்றனர். இப்பட்டியல் முழுமையானது அன்று; இன்னும் நீளும்.

ஸ்ரீபதி பத்மநாபாவின் கவிதை மிகை நடப்பியல் பாணியில் காதலைச் சித்தரிக்கிறது.

"எறும்புதின்னிகள் மிகவும் சாதுவானவை ரொம்ப நல்லவை
... ... ...
எனக்கு உங்களைப் பிடித்திருக்கிறது என்றவளே!
என்னைப் போலவே ஒரு எறும்புதின்னியைப் பரிசாகத் தருகிறேன்
படுக்கைக்கருகில் வைத்துக்கொள்"

காதல் பற்றிய மயக்கம் சிதைந்த நிலையில், தன்னைக் காதலிக்கும் பெண்ணுக்குப் படுக்கையில் வைத்துக்கொள்ள எறும்புத் தின்னியைப் பதிலியாகப் பரிசு என்ற பெயரில் தருவது மேலோட்டமான நிலையில் விநோதமாக உள்ளது. மரபு வழிப்பட்ட ரொமன்டிசிச மனநிலையினைச் சிதைத்து அந்நியப்பட்டிருக்கும் இளைஞனின் மனப்பதிவு காதலின் இன்னொரு பக்கம்.

மரபு வழிப்பட்ட காதல் அர்த்தமிழந்து கொண்டிருக்கும் நவீன வாழ்க்கை முரணை அப்பாஸின் காதல் கவிதைகள் நுணுக்கமாகப் பதிவுசெய்துள்ளன.

"அடிக்கடி நாம் கூறிக்கொள்கிறோம்
அவசரப்பட்டுவிட்டோம்
இன்னும் யோசித்து இருக்கலாம்"

இங்குதான் நவீனக் காதல் கவிதையின் பிரச்சினையின் மூல ஊற்று தொடங்குகிறது. பழங்காலத்திய ஏக்கம் காதலில் இல்லை. எல்லாம் சரி; இருபக்கக் காதல்தான். ஆனால் ஏதோ ஒன்று தடையேற்படுத்திச் சலிப்பினை உருவாக்குகின்றது. ஒருவருக்கொருவர் நெருங்கிக் காதலிக்கத் தொடங்கியது நாளடைவில் எப்படித் துயரமானது என்பது முக்கியமான கேள்வி. 'அவசரப்பட்டுவிட்டோ ம்' என்று இருவரும் சேர்ந்து எதிர்மறையாக யோசிப்பது கவிதையினை வேறு தளத்திற்கு மாற்றுகிறது. இதுவும் நவீனக் காதல்தான். அப்பாஸின் கவிதைத் தொகுப்புகளில் ஆங்காங்கே காதல் கவிதைகள் பரவிக் கிடக்கின்றன. அவரது கவிதைகள் காதலை முன்னிறுத்தினாலும் அடியோட்டமாகச் சலிப்பும் கசப்பும் கொப்பளிக்கின்றன என்றுதான் கூற வேண்டியுள்ளது.

'மறைந்துகொள்கின்ற எனக்கான பெண்' என்று தேடியலையும் லஷ்மி மணிவண்ணனின் காதல் ஏக்கம் தனித்துவமானது. காதல் வயப்பட்ட கனவுலகவாசியின் குறிப்புகளாக விரியும் வரிகளில் இழப்பின் வேதனை படர்ந்துள்ளது.

"எனது பெண்ணை
கண்டுபிடிக்க முடிவதில்லை
அவள் எல்லா பேருந்து நிலையங்களிலும்
என் கண்களில் படாமல் ஒளிந்துகொள்கிறாள்.
அவளைத் தேடிச் சலித்த கண்களில்
முலைகளும் பிருஷ்டங்களுமே
படுகின்றன"

முலைகளையும் பிருஷ்டங்களையும் தாண்டிய பெண்ணின் மீதான கவிஞரின் விருப்பம் தூய ஆன்மாவினை வெளியெங்கும் தேடி அலைகிறது. அவருடைய காதல் வேட்கை தூய உருப்பளிங்கு போன்றது; கபடமற்றது. நிரந்தரமாக ஒளிந்துகொண்ட பெண்ணை விடாமல் தேடிக்கொண்டிருக்கும் கவிஞர், காதலின் வழியே வேறு எதையோ வேண்டுகின்றாரோ என்று தோன்றுகின்றது. இதுவும் தமிழ்க் காதல்தான்.

மகாதேவனின் காதல் கவிதைகள் தமிழ்ப் பண்பாட்டில் முக்கியமானவை. இரண்டாயிரமாண்டுத் தமிழ்க் கவிதையில் படிந்துள்ள பொறுக்குகளை அப்புறப்படுத்திவிட்டுக் காதலின் முக்கியக் கூறுகளை அவை பதிவுசெய்துள்ளன.

"தலைவாரி பூச்சூடி மையிட்டு

நீ
காத்திருப்பது உன் கணவனுக்குத்தான் என்றாலும்
மெல்ல மெல்லப் படியேறி வரும்
என்னைக் கண்டும் சிலிர்க்கிறாய்"
"... ... ...
உள்ளாடைக்குள் பணத்தை வைத்துக்கொண்டு
மேலாடையைச் சரிசெய்தபடி
கதவு திறந்து புறப்பட்ட நீ
திரும்பி வந்து தந்த முத்தத்தை
நான் மறக்க மாட்டேன்"

மலரினும் மெல்லியது காதல் என்ற பழம் வரிகளுக்கு எடுத்துக்காட்டான இக்கவிதைகள் மனித மனத்தினை ஆழமான விசாரணைக்குட்படுத்துகின்றன. கணவனுக்காகக் காத்திருக்கும் பெண், காசுக்காக உடலைத் தரும் பெண் என மகாதேவன் சித்தரிக்கும் பெண்களின் உலகில் காதல் அற்புதமான அனுபவமாகின்றது. மரபு வழிப்பட்ட காதலின் புனைவைச் சிதைத்து எந்தவொரு சூழலிலும் உறவின் நெருக்கத்தில் மலர்ந்திடும் காதல் அபூர்வமானதுதான். இவை பொறுக்கித்தனமான கவிதைகள் என்று யாராவது கொதித்தெழுந்தால் ஒரு வாரத்தின் 'தினத்தந்தி' செய்திகளைத் தொகுத்து வாசிக்க வேண்டுகிறேன். பக்கந்தோறும் பதிவாகியிருக்கும் 'கள்ளக் காதல்' விவகாரங்களில் ஈடுபட்டிருக்கும் தமிழர்களின் வன்முறைகளையும் கணக்கிலெடுக்க வேண்டும். காதல் தெரியும் நமக்கு. அதென்ன கள்ளக் காதல்? ஆண்-பெண் உறவில் எந்தவொரு கணத்திலும் எப்படியோ வெளிப்படும் காதலைச் சொல்லிடும் மகாதேவனின் வரிகள் முக்கியமானவை.

யவனிகா ஸ்ரீராமின் இக்காதல் கவிதையைக் காதல் வயப்பட்ட ஆணின் மொழி என்ற ரீதியில் வாசிக்கலாம்.

".... .... ....
ஒரு பெண்ணைச் சேர்த்துக்கொண்டு
திரிகிற துக்கம் தாளவில்லை எனக்கு
..... ..... .....
என் விதைப்பையைச் சிதைப்பதற்கு
அல்லது உறங்கும் போது தலையில்
கல்லை வீசிவிட்டுப் போக
அவளுக்கு முகாந்திரங்களுண்டு"

சேர்த்துக்கொண்டு பெண்ணுடன் திரிய இயலாத நிலையில் இருப்பு குறித்து அச்சம் தோன்றுகிறது. இயற்கை எல்லா விதமான தந்திரங்களையும் கபடுகளையும் செய்து ஆணையும் பெண்ணையும் ஒருங்கிணைத்துப் புணரச்செய்து மறு உற்பத்தியில் ஈடுபடவைத்துத் தனது நோக்கத்தினை இரக்கமில்லாமல் நிறைவேற்றிக்கொள்கிறது. பரஸ்பர உடல் ஈர்ப்பின் காரணமாகக் காலந்தோறும் ஆணும் பெண்ணும்படும் அவஸ்தைகளும் அதையொட்டிய வன்முறைகளும் பேரிலக்கியப் படைப்புகளும் கணக்கில் அடங்காதவை. காதல் என்ற சூழலில் மாட்டிக்கொண்ட ஆணின் பயங்களும் காதலின் நீட்சிதான். யவனிகாவின் வெளிப்படையான இக் கவிதை, தமிழ்க் காதல் மரபில் புதிய தடம் வகுத்துள்ளது.

"நீ பிராயத்தைக் கரைய விட்ட
அதே நதியின் கரையில்தான்
உன் மகளும் அமர்ந்திருக்கிறாள்
அமைதியாய்"

சங்கர ராமசுப்ரமணியனுக்குக் காதல் குறித்து எந்தவிதமான பிராதும் இல்லை. ஓடிக்கொண்டிருக்கும் பேராற்று வெள்ளம்போல, உடல் வழியே கடந்துபோகும் காதலைச் சொல்லியுள்ளார். இதுவும் தமிழ்க் காதல்தான்.

நவீனத் தமிழ்ச் சூழலில் நவீனக் கவிதை மூலம் காதல் பற்றிய புதிய பதிவுகளை உருவாக்கிய கவிஞர்கள் பற்றி நிரம்பச் சொல்லலாம். சுகுமாரனின் கட்டுரை, காதலின் புதிய போக்குகளைப் பற்றிக் குறிப்பிடாமல்போனதால்தான் நவீனக் கவிஞர்களின் காதல் கவிதைகளை உதாரணங்களுடன் குறிப்பிட்டுள்ளேன்.

இறுதியாகச் சில வரிகள்:

காதல் என்றால் கிளுகிளுப்பு, சந்தோஷம் என்று சராசரி இளைஞர்கள் சிந்தித்த வேளையில் சோகம், அவலம், ஏக்கம் என்று புனைவுகளில் சிக்கிக்கொண்டிருந்த போன தலைமுறைக் கவிஞர்களுடன் ஒப்பிடும்போது தொண்ணூறுகளுக்குப் பிந்திய நவீனத் தமிழ்க் கவிஞர்களின் காதல் கவிதைகள் பன்முகத் தன்மையுடையனவாக உள்ளன. அவை இன்னொரு நிலையில் மனத்தடைகள் அற்று இளைய தலை முறையினரின் மனப் பதிவுகளாகவும் விளங்குகின்றன.

l

உள்ளடக்கம்

Google Ads.....


Google