அரசியலாலும் வன்முறைகளாலும் அலைக்கழிக்கப்படும் உலகம், காந்தியம்
குறித்த பரிசீலனைகளை முனைப்புடன் மேற்கொண்டிருக்கும் தருணம் இது. இச்சூழலில்,
காந்தியத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டுவிட்ட ஓர் இளம் பெண் தனது
உறவுகளுக்குள் நடத்தும் இடையறாத போராட்டங்களை நம்பகத்தன்மையோடு பதிவு செய்திருக்கும்
திரைப்படம் என ரேவதியின் இத்தொலைக்காட்சிப் படத்தைக் குறிப்பிடலாம்.
காந்தியவாதியான தனது தந்தையிடமிருந்து ஊக்கம் பெறும் யமுனா, தன்னுடன் ஆசிரமத்தில்
இருந்த துரையை உறவினர்களின் எதிர்ப்பை மீறித் திருமணம் செய்துகொண்டு பட்னாவில் வாழத்
தொடங்குகிறாள். வன்முறை தலைவிரித்தாடிய எழுபதுகள். வாழ்வு பற்றிய கண்ணோட்டங்களில்
பெரும் மாறுதல்கள் நிகழ்ந்துகொண்டிருந்த தருணம். சமூகத்தின் எல்லா மட்டங்களிலும்
பேராசையின் ஊற்றுக்கள் வெளிப்படத் தொடங்கியிருந்த சூழல். காந்தியத்தின் மீதான
பிடிப்போடு பணி நிமித்தமாக அந்நகருக்கு வந்த துரையின் வாழ்வியல் கண்ணோட்டங்கள் மிக
இயல்பான மாற்றங்களுக்குள்ளாவதையும் பேராசையின் கண்ணிகளுக்குள் சிக்கிக்கொண்ட கணவனோடு
தான் நம்பி ஏற்றுக்கொண்டிருக்கும் அறநெறிகளின் ஆதாரத்துடன் போராடும் யமுனாவின் வலி
மிகுந்த நாள்களையும் பற்றிப் பேசுகிறது இத்திரைப்படம்.
ஒரு பிரச்சாரப் படத்திற்குரிய கதைக் களனை, நுட்பமான இயக்கத்தின் மூலம் ஒரு நல்ல கலை
அனுபவமாக மாற்றியிருக்கிறார் ரேவதி. நல்ல திரைப்படங்களைக் குறித்து ஓயாமல்
பேசிக்கொண்டிருப்பவர்களில் பலர் இயக்குநராகும் வாய்ப்புக் கிடைத்த தருணங்களில்
மோசமான திரைப்படங்களைத் தந்துவிட்டுப் பிறகு வாயை மூடிக்கொண்டுவிடுவதே வழக்கமாக
நிகழ்ந்துவருவது. இதற்கு முன்னரே ஆங்கிலத்திலும் இந்தியிலும் இரண்டு கதைப் படங்களை
இயக்கியுள்ள ரேவதி, திரைப்படத் துறையில் இருபதாண்டுகளுக்கும் மேலாக ஒரு நடிகையாக
இருந்து தான் பெற்றுக்கொண்ட அனுபவங்களின் முதிர்வை இப்படத்தின் மூலம்
வெளிப்படுத்தியுள்ளார் எனக் கருதலாம். ரோகிணியின் திரைக்கதை, வசனம், பாம்பே
ஜெயஸ்ரீயின் பின்னணி இசை, ஒளிப்பதிவு, கலைத்தன்மையைச் சிதறவிடாத படத் தொகுப்பு
ஆகியவை படத்தின் தரத்தை வெகுவாக உயர்த்தியிருக்கின்றன.
குறியீடுகள் ஒரு படைப்பின் கலைத்தன்மையைச் சிதைப்பதற்கான அபாயங்கள் அதிகம்.
ரேவதியிடம்கூட யமுனாவை ஒரு குறியீடாகப் பயன்படுத்தி காந்தியத்தைக் கைவிட்டுவிட்ட
நமது சரிவுகளைக் கவனப்படுத்துவதற்கான முனைப்புத் தென்படுகிறது. எனினும் குடும்பம்
என்னும் வெளிக்குள் பதற்றமில்லாமல் மிக இயல்பாக நகர்ந்து செல்லும் திரைக்கதை, அந்த
அபாயத்திலிருந்து இந்தத் திரைப்படத்தைக் காப்பாற்றுகிறது. யமுனாவின் பாத்திர
உருவாக்கத்தில் தென்படும் முழுமை குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒன்று.
காந்தியத்தின் முக்கியத்துவம் குறித்துத் தன் கணவனிடம் விவாதிக்கும் காட்சியில்
யமுனா பொறுமையிழந்து தனது கணவனைப் புண்படுத்திவிட்டுப் பிறகு அது குறித்த
சுயபரிசீலனையை மேற்கொள்ளும் தருணத்தையும் கணவனின் மதுப் புட்டிகளைத் தூக்கிக்
குப்பையில் போட்டுவிட்டு அவனுடைய ஆத்திரத்தை எதிர்கொள்ளும் தருணத்தையும்
உதாரணங்களாகக் குறிப்பிடலாம். வன்முறைப் பாதையில் நம்பிக்கை கொண்ட மார்க்சியவாதியான
சுதிருக்கும் யமுனாவுக்குமுள்ள உறவு மிகக் கவனமாகக் கலைப்படுத்தப்பட்டிருக்கிறது.
துரையுடனான தனது வாழ்வை ஒரு தோல்வியாகக் கருதும் யமுனா, சுதிரைக் கல்யாணம்
செய்துகொண்டிருந்திருக்கலாமோ என்னும் ஆதங்கம் வெளிப்பட யோசிப்பது முக்கியமானது.
திரைப்படத்தின் பலவீனங்களில் முக்கியமானது துரையின் பாத்திர உருவாக்கம். துரை தனது
தொடக்கக் காலத்திய தேடல்களிலிருந்து சரிந்துபோவதற்கான காரணங்கள் தர்க்க ரீதியில்
அவ்வளவு வலுவானவை அல்ல. துரை ஒரு காலை இழந்துவிடுவது போன்ற உச்சக் காட்சி மிக
வழக்கமான ஒன்று. எதிர்மறைக் குணங்கள் கொண்ட பாத்திரங்களை பலவீனப்படுத்தித் தவறை
உணரச் செய்வது அல்லது கதையாடல் வலியுறுத்தும் தர்க்கத்திற்கு நியாயம் செய்வது போன்ற
உத்திகள் கலாபூர்வமானவையாக இருக்க முடியாது. வடிவ ரீதியில் தமிழின் வெகுமக்கள்
திரைப்படத்திலிருந்து வேறுபடும் இத்திரைப்படம் கலைப்படங்களுக்கே உரிய
பலவீனங்களிலிருந்தும் விடுபட்டிருக்க வேண்டும். பாம்பே ஜெயஸ்ரீயின் பின்னணி இசை
படத்தின் தொனியை நுட்பமாக எதிரொலிக்கும் அதே தருணத்தில் சில இடங்களில் மிகையான
சப்தங்களை எழுப்புகிறது. இறுக்கமும் வலியும் நிரம்பிய தருணங்களை ஓலங்களைக் கொண்டு
நிரப்புவதைத் தவிர்த்திருக்கலாம். ஒளியமைப்பும் காமிராவின் அசைவுகளும் யமுனாவின்
உணர்வுகளை ஆழமாகப் பிரதிபலிக்கும் விதத்தில் கச்சிதமாக அமைந்திருக்கும் நிலையில்
மிகையான பின்னணி இசை அந்தக் காட்சிகளின் அழுத்தத்தை வெகுவாகப் பாதிக்கிறது.
பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்த யமுனா அசாதாரணமான மன உறுதியை வெளிப்படுத்தித் தனது
நம்பிக்கைகளைக் காப்பாற்றிக்கொள்வதும் பிற்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த துரை
சுயநலமியாகச் சரிந்துபோவதுமான கதையாடல் பொதுப் புத்தியில் எதிர்மறையான புரிதலை
உருவாக்கக்கூடும். கதையாடலின் அடியோட்டத்தில் ஓர் உயர்சாதி மனோபாவம் இயங்குவதாகப்
புரிந்துகொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. காந்தியம் குறித்த விவாதங்களை
உருவாக்குவதே இன்றைய தேவை. மாறாகப் படம் காந்தியத்தைப் பரிந்துரை செய்கிறது.
காந்தியம் எப்படி இன்றைய நெருக்கடிகளுக்கான மாற்றாக இருக்க முடியும் என்பதற்கான
தர்க்கங்களை ஆராயாமல் பரிந்துரை செய்வதும் ஒரு வகையான பிரச்சாரம்தான்.
எழுத்து, இசை, படத் தொகுப்பு, பின்னணி இசை உள்படப் படத்தின் முக்கியப் பொறுப்புகளைப்
பெண் கலைஞர்களே ஏற்றிருக்கிறார்கள். இந்த ரீதியிலும் இது முக்கியமான திரைப்படம்தான்.
கருத்துலகில் பெண் படைப்புகளுக்கு வழக்கமாக அளிக்கப்பட்டுவரும் சலுகைகள் எதையும்
கோராமலே தரம் சார்ந்து முக்கியமானதாக உருவாகியிருக்கிறது இத்திரைப்படம். இது போன்ற
படங்களின் வருகை தமிழ்த் திரைப்படத்தின் கௌரவத்தை உயர்த்தக் கூடியது என்பதில்
சந்தேகமிருக்க முடியாது.