4.11.06 அன்று தினமணியில் மரண தண்டனை குறித்து எஸ்.வி. ராஜதுரை
எழுதிய கட்டுரையை வாசித்த பிறகு ஏற்பட்ட மனச் சலனத்தோடு அன்றைய முற்பகல் நகர்ந்த
நிலையில் மாலை நடைபெற்ற கூட்டம் அந்தச் சலனத்தின் கனத்தைக் கூட்டுவதாக
அமைந்திருந்தது.
தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில் 'நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கு அஃப்சலுக்குக் கருணை
காட்டுக' என்னும் கோரிக்கையை முன்வைக்கும் கூட்டம் மரண தண்டனை ஒழிப்பு இயக்கத்தின்
சார்பில் (இதன் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்) நடை பெற்றது.
கூட்டத்திற்கு எஸ்.வி. ராஜதுரை தலைமையேற்றார். வ. கீதா, நீதிபதி சுரேஷ், மூத்த
இதழியலாளர் குல்தீப் நய்யார், கவிஞர் கனிமொழி, பெரியார் தி.க.வின் கொளத்தூர் மணி
ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
"நீதிமன்றம் விதித்த தண்டனையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படும் ஒவ்வொரு வைகறைப்
பொழுதிலும் மனித உரிமைக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கிறது" என்ற வி.ஆர்.
கிருஷ்ணய்யரின் வார்த்தைகளில் தொடங்கிய துண்டுப் பிரசுரங்கள், 'மரண தண்டனையை
ஒழிப்போம்' என்ற தலைப்போடு நிகழ்வுக்கு முன்பே அனைவரையும் வந்தடைந்தன.
நாடாளுமன்றத் தாக்குதல் தொடர்பாக அஃப்சலுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, நாடு
முழுவதும் அது குறித்த நாகரிகமான விவாதத்தை முன்வைக்கும் வாய்ப்பினைத்
தந்திருக்கிறது என்று தனது தலைமையுரையைத் தொடங்கினார் ராஜதுரை. அஃப்சலின் மரண
தண்டனையை நீக்கக் கோரிப் பேசுபவர்கள் சந்தோஷ் சிங்குக்காக வாதாடுவார்களா என்ற
எதிர்க் குரல் இச்சமயத்தில் எழுந் திருப்பதைச் சுட்டிய அவர், பொடா, தடா என்று
பயங்கரவாதத்திற்கு எதிராகச் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டதாலும் மரண தண்டனை
விதிக்கப்படுவதாலும் குற்றங்கள் குறைந்திருக்கின்றனவா என்ற கேள்வியையும் எழுப்பினார்.
மதத்தின் பெயரால் குஜராத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்படுவதற்குக்
காரணமான நரேந்திர மோடியையும் மதக் கலவரங்கள் உருவாகக் காரணமான பால் தாக்கரேவையும்
வழக்குகளும் தீர்ப்புகளும் தண்டனைக்குரியவர்களாக்குமா? அரசியல், சமூக, சமய,
பண்பாட்டு அடிப்படையில் குற்றங்கள் குறித்தும் அதற்கான தீர்ப்புகள் குறித்தும்
சிந்திக்க வேண்டும். நாட்டின் ஜனநாயகத்தன்மை மிக முக்கியமானது என்ற ராஜதுரை, கொலை
செய்ததற்காக இன்னொரு கொலையைச் சட்டத்தின் பெயரால் செய்வது மனிதாபிமானமா என்ற
கேள்வியோடு தன் தலைமையுரையை நிறைவுசெய்தார்.
மனித உரிமை ஆர்வலர்களின் தொடர்ச்சியான முயற்சியின் காரணமாக மரண தண்டனை குறித்த அறம்
சார்ந்த கேள்விகளைப் பலரும் கருத்தில் கொள்ளத் தொடங்கியிருக்கும் இத்தருணத்தில், வ.
கீதாவின் பேச்சு அதையொட்டி அமைந்திருந்தது.
மரண தண்டனையை அறவியல் ரீதியாகப் புரிந்துகொள்வதா அரசியல் ரீதியாகப் புரிந்துகொள்வதா
என்ற கேள்வியோடு தொடங்கியது கீதாவின் உரை. குறிப்பிட்ட இனத்தின் மீது நாம்
கொண்டுள்ள அபிப்பிராயங்கள், கற்பிதங்கள், அவர்கள் குறித்து நம்மிடையே உலவும்
கட்டுக்கதைகள் இவையெல்லாம் தொடர்ந்து அவர்களைக் குற்றவாளிகளாகவும்
பயங்கரவாதிகளாகவும் அடையாளங்காணச் செய்கின்றன. தண்டனைகள் வழங்குவதன் நோக்கம் தவறு
செய்பவர்களுக்குத் தங்களது தவறு குறித்துச் சிந்திக்க வாய்ப்பளிப்பதும்
சீர்திருந்தும் மனோபாவத்தை வழங்குவதும்தானே தவிர பழிக்குப் பழி என்பதல்ல. இன்றைய
சமூகத்தில் போலீசாரும் இராணுவத்தினரும் புனிதர்களைப் போல் சித்தரிக்கப்படுவதும்
என்கவுன்டர் என்ற பெயரில் நடைபெறும் கொலைகள் நியாயப்படுத்தப்படுவதும்
நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. குற்றங்கள் இந்துத்துவக் கண்ணோட்டத்தில்
அணுகப்பட்டுவருகின்றன. அஃப்சலைத் தண்டிப்பது ஒரு சமூகத்தைப் பணியவைக்க முயலும்
அச்சுறுத்தல் போன்றதே என்ற கீதா, பல வழக்குகள் நியாயமற்ற முடிவுகளைச்
சந்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
மும்பையைச் சேர்ந்த நீதிபதி சுரேஷ் மனித நேய அடிப்படையில் மரண தண்டனையை நீக்குவது
குறித்துப் பேசினார். பல்வேறு உதாரணங்களோடு அமைந்த அவரது உரை ஆழ்ந்த அனுபவத்தை
வெளிப்படுத்தியது.
உயிரின் மீதான உரிமை யாருக்கும் இல்லை. பிரிட்டன் உள்பட 88 நாடுகள் தூக்குத்
தண்டனையை ஒழித்துவிட்டன. பட்சன் சிங் வழக்கில் தீர்ப்புக்காக ஆலோசித்த நீதிபதிகளுள்
ஒருவரான பி.என். பகவதி, மரண தண்டனை அரசமைப்புக்கு எதிரானதென்றும் இந்தத் தண்டனை
நிறைவேற்றப்பட்டால் மனித உரிமை குறித்த அத்தனை ஆவணங்களும் பயனற்றவையாகக்கூடும்
என்றும் தெரிவித்ததை அவர் நினைவுகூர்ந்தார். கொடிய கொலை, முக்கியப் பிரமுகர் கொலை
அல்லது அரிதிலும் அரிதான கொலை என்று மரண தண்டனையை விதிப்பதற்குக் காரணங்கள் சொல்லி
அதை உறுதிப்படுத்தலாம்; ஆனால் உயிரின் மீதான உரிமை முக்கியமானது. முடிவினை
இறுதிசெய்யும் அதிகாரம் அரசினுடையதல்ல. தீர்ப்புகளும் அதன் முடிவுகளும்
உணர்ச்சிகளின்பாற்பட்டதாக இருப்பது நல்லதல்ல என்று கூறித் தன் உரையை முடித்தார்
சுரேஷ்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட நாளிலிருந்து நிறைவேற்றப்படும் நாள் வரையிலான ஒரு
குற்றவாளியின் இருண்மை படிந்த மனநிலை, குற்றம் புரிவது, அதிலிருந்து விடுபடுவது
என்ற கட்டத்தைத் தாண்டிப் பாரபட்சங்கள் மலியும் சூழல், மனித அறம் என்று பல்வேறு
சிந்தனைகளை மதிப்பிடும் இன்றைய தருணத்தில் அடிப்படை மனிதநேயம் குறித்த கேள்விகள்
முக்கியமானவை. மரண தண்டனை குறித்த தனது கவிதையோடு பேச்சைத் தொடங்கிய கவிஞர்
கனிமொழியின் உரை இந்த உணர்வுகளைப் பிரதிபலித்தது.
போலித் தேசியத்தை முன்வைத்து அதன் பெயரால் வன்முறைகளும் பயங்கரவாதமும்
அரங்கேறிக்கொண்டிருக்கும் இச்சமயத்தில், கூலிக்காகக் குற்றங்கள் செய்வோரைத்
தண்டனைக்கு உரியவர்களாக்க முடியுமே தவிரக் குற்றம் புரியக் காரணமானவர்களைக்
கண்டறியவோ தண்டனைக்குள்ளாக்கவோ முடியாது என்ற யதார்த்தத்தைக் கனிமொழி
சுட்டிக்காட்டினார். மரண தண்டனை மட்டுமல்லாது விசாரணை என்ற பெயரில் நிகழும்
சித்திரவதைகளைப் பற்றியும் பேசிய அவர், அது குறித்த பி.பி.சி.யின் புள்ளிவிவரத்தை
முன்வைத்தார். சிலப்பதிகாரத்தில் நியாயமற்ற தீர்ப்பிற்காக மதுரையை எரித்த கண்ணகியின்
கோபத்தை நினைவுகூர்ந்து தன் உரையை நிறைவுசெய்தார்.
குற்றவாளிகளை அழித்துவிடுவதால் குற்றங்கள் குறைந்துவிடமாட்டா என்கிறார்கள்.
குற்றங்கள் நிகழ, குற்றவாளிகள் உருவாக, சமூகமும் குறிப்பிட்ட பொறுப்புடையதாய்
இருக்கிறது. இதையெல்லாம் பொருட்படுத்தாது தனி மனிதனை மரண தண்டனைக்கு உள்ளாக்குவது
சரியானதா? முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இதழியலாளருமான குல்தீப் நய்யாரின்
பேச்சு இது போன்ற சிந்தனைகளை வெளிப்படுத்துவதாக இருந்தது. நாடாளுமன்றத்
தாக்குதலின்போது தானும் அங்கிருந்ததைக் குறிப்பிட்ட அவர், அந்தத் தாக்குதலுக்காக
மரண தண்டனை வழங்குவதைத் தான் விரும்பவில்லை என்பதைச் சொன்னார். இந்துக்களையும்
இஸ்லாமியர்களையும் இரண்டு கண்களாகக் கொண்டே அரசமைப்பு செயல்பட வேண்டும் என்ற அவர்,
கண்ணுக்குக் கண் என்று பழிவாங்கும் மனநிலைதான் கொலைக்குக் கொலை என்பதுவும் என்பதைச்
சுட்டிக்காட்டினார். பிரிவினையின்போது சியால்கோட் நகரில் மதத்தின் பெயரால் பத்து
லட்சம் பேர் கொல்லப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார். குற்றவாளியின் சமூக,
பொருளாதார, அரசியல், இன, உளவியல் ரீதியான நெருக்கடிகளையும் நாம் ஆராய வேண்டும்
என்றார் நய்யார்.
இறுதியாக, பெரியார் கட்சியைச் சேர்ந்த கொளத்தூர் மணி உரையாற்றினார். எத்தனையோ
வழக்குகள் வாதத் திறமை வாய்ந்த வழக்கறிஞர்களாலும் பொய் சாட்சியங்களாலும் பொருளாதார,
அரசியல் பலத்தாலும் நியாயமற்ற முடிவுகளை எட்டியிருக்கின்றன என்றார் அவர். மதானி,
ஸ்டெயின்ஸ் வழக்குகளை இதற்கு உதாரணங்களாகக் காட்டிய மணி, வீரப்பன் தேடுதலில்
நிகழ்ந்த வன்முறை, இழப்பு, சாட்சியங்கள், வழக்குகள், ராஜீவ் கொலை வழக்கில்
குற்றம்சாட்டப்பட்டவர்கள்மீதான வழக்குகள் என்று பாரபட்சமான சூழல் நிலவுவதை விரிவாக
எடுத்துக்காட்டினார்.
குல்தீப் நய்யாரும் நீதிபதி சுரேஷும் ஆங்கிலத்தில் பேசியதைத் தியாகு தமிழில்
மொழிபெயர்த்தார்.
உலக மனித உரிமைப் பிரகடனங்கள் எல்லாம் மரண தண்டனையை, மனிதனின் வாழ்வியல் உரிமையைப்
பறிக்கும் கொடூரம் என்று சொல்கின்றன. அரசமைப்பின் நீதியதிகாரம் மரண தண்டனையென்னும்
பெயரில் இதை மறுப்பது மனித நேயத்தினைப் புறந்தள்ளும் காரியம் என்னும் பார்வையே
இக்கூட்டத்தின் அடிநாதமாக அமைந்திருந்தது. குற்றங்களின் அரசியல், சமூக, பொருளாதார,
கலாச்சார, உளவியல் ரீதியான காரணங்களைப் பொருட்படுத்தாமல் உயிரைப் பறிக்கும் தண்டனையை
வழங்குவது அடிப்படையான மனித உரிமையை மறுதலிப்பதாகவே இருக்கும் என்பதால் இது போன்ற
கூட்டங்கள் மிக முக்கியமானவை.