 |
பதிவு: ஃப்ராங்க்ஃபர்ட்
புத்தகக் கண்காட்சி 2006
பிரமிப்பு,
பெருமிதம், நெகிழ்ச்சி
சல்மா
ஜெர்மனியின் ஃப்ராங்க்ஃபர்ட் நகரில் விமரிசையாக
நடத்தப்படும் வருடாந்தரப் புத்தகக் கண்காட்சியில் இந்த ஆண்டின் சிறப்பு விருந்தினர்
இந்தியா. இந்த அழைப்பை ஏற்று என்.பி.டி. (நேஷனல் புக் டிரஸ்ட்) இந்திய
எழுத்தாளர்களில் 37 பேர் கொண்ட குழுவொன்றைத் தேர்ந்து அனுப்பிவைத்தது. குழுவில்
ஆங்கிலம் (சசி தரூர், விக்ரம் சேட், அமித் சவுத்ரி), ஹிந்தி, மலையாளம், தமிழ் (நான்
மட்டும்), தெலுங்கு எனப் பல்வேறு மொழிகளிலிருந்து படைப்பாளிகள்
தேர்வுசெய்யப்பட்டிருந்தார்கள். மஹாஸ்வேதா தேவி, யு.ஆர். அனந்தமூர்த்தி, கிரீஷ்
கர்னாட்,
சுர்ஜித் பட்டார், ஜாவேத் அக்தர், பால் சக்கரியா போன்ற மூத்த
படைப்பாளிகளோடு, நான், ஷாஜஹானா, அல்தாஃப் போன்ற இளம் படைப்பாளிகளும் என்.பி.டி.யால்
தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தோம். இதே கண்காட்சிக்கு சாகித்ய அகாதமி தன் சார்பாக ஆறு
படைப்பாளிகளைத் தேர்வுசெய்து அனுப்பிவைத்திருந்தது. அவர்களில் தமிழில் கவிஞர்
கனிமொழி தேர்வுசெய்யப்பட்டு வந்திருந்தார்.
'டுடேஸ் இந்தியா' என்னும் இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக அக்டோ பர் 2ஆம் தேதியன்று
ஃப்ராங்க்ஃபர்ட்டின் மேயர் அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காந்தி ஜெயந்தி
விழாவில் காந்தி பற்றிய விவரணப்படம் திரையிடப்பட்டது. இதில் மத்திய அமைச்சர்
அர்ஜுன் சிங்கும் ஃப்ராங்க்ஃபர்ட் மேயரும் கலந்துகொண்டார்கள். 3ஆம் தேதி மாலை நடந்த
மாபெரும் விழா இந்தியக் கலாச்சார நடனங்களுடன் கூடிய நிகழ்வாக இருந்தது. நடன
நிகழ்வுகளும் இசை நிகழ்வுகளும் இவ்விழாவுக்கெனவே பிரத்யேகமாகவும் புது
மாதிரியாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக அஸ்தாத் தேபுவின் அற்புதமான நடனம்
பிரமிப்பூட்டியது. அருணா சாய்ராமின் கம்பீரமான குரல், ரப்பி செர்கிலின் புது
மாதிரியான இசை முயற்சி என்று ஒவ்வொரு நிகழ்ச்சியும் புதுமையானதாக அமைந்து
அனைவரையும் கவர்ந்தது.
புத்தகக் கண்காட்சி ஐந்து நாள்களுக்குத்தான் என்றாலும் எங்களுக்கான நிகழ்வுகள் 12
நாள்களுக்கு ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன. அரங்கில் வாசித்தது போக, பள்ளிகள்,
கல்லூரிகள், அருகிலிருந்த நகரங்களில் இருந்த புத்தகக் கடைகள் ஆகிய இடங்களில் கவிதை
வாசிப்புகள் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் நாங்கள்
சென்ற புத்தகக் கடைகளில் எங்களுக்காக ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள்
காத்திருந்தார்கள். வாசிப்பும் கலந்துரையாடலும் முடிந்து கடும் குளிரில்
மகிழ்ச்சியுடன் எங்களிடமிருந்து விடைபெற்றுச் சென்றவர்களின் நினைவுகளுடன் நாங்கள்
விடுதிக்குத் திரும்பியது மிகவும் திருப்திகரமான அனுபவமாக இருந்தது.
எங்களுக்குள் இருந்த எல்லா விதமான கற்பனைகளையும் உடைத்து எறியக்கூடியதாக
அப்புத்தகக் கண்காட்சி இருந்தது. புக்மெஸ்ஸே என்றழைக்கப்பட்ட கண்காட்சி
வளாகத்தினுள் 3 அல்லது 4 அடுக்குகளைக் கொண்ட எட்டுப் பெரிய கட்டிடங்களில் புத்தக
அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு தளத்திலும் பல நாடுகளிலிருந்து வந்திருந்த
நூற்றுக்கணக்கான பதிப்பகங்களின் அழகழகான அரங்கங்கள். முதல் 3 நாள்களில் பதிப்புத்
துறை, புத்தக வியாபாரிகள், அழைக்கப்பட்ட விருந்தினர்கள் ஆகியோருக்கு மட்டுமே உள்ளே
நுழைய அனுமதி. கடைசி இரண்டு நாள்கள் மட்டும் பொது மக்கள் வருகைக்கானவை. நுழைவுக்
கட்டணம் 21 யூரோக்கள். கடைசி இரண்டு நாள்களிலும் நல்ல கூட்டம்.
இந்தியா ஃபோரம், இந்தியா பெவிலியன் என்று இரண்டு அரங்குகளில் படைப்பாளிகள்
படைப்புகளை வாசிக்க ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. இந்தியா ஃபோரம் விசாலமான அரங்கு.
அரங்குகளின் சுவர்களில் 37 படைப்பாளிகளின் புகைப்படங்கள், அவர்களைப் பற்றி
ஆங்கிலத்திலும் ஜெர்மனிலும் எழுதப்பட்ட குறிப்புகள் ஆகியவை
ஒட்டிவைக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே இந்திய மொழிகளைப் பற்றிய விவரங்களைச் சொல்லும்
ஆடியோ பதிவுகள், விரும்புபவர்கள் காதுகளில் பொருத்திக்கொண்டு அம்மொழிகளின் ஓசைகளை
அறியும் விதமாக அமைக்கப்பட்டிருந்தன. இந்தியா பெவிலியன் சிறியதொரு அரங்கு. ஒவ்வொரு
வாசிப்பும் 1:30 மணி நேரம், மூன்று படைப்பாளிகள் எனத் திட்டமிடப்பட்டிருந்தது.
நாங்கள் எங்கள் தாய்மொழியில் வாசிக்க, ஏற்கனவே ஜெர்மனில் மொழியாக்கம்
செய்யப்பட்டிருந்த அப்பிரதிகள் ஜெர்மனில் வாசிக்கப்பட்டன. ஆங்கில மொழியாக்கம்
கோரியவர்களுக்கான ஏற்பாடும் இருந்தது.
ஒவ்வொரு வாசிப்புக்குமே மிகச் சிறப்பான வரவேற்பு இருந்தது. வாசிப்புகள் முடிந்த
பின் இந்திய இலக்கியங்கள், படைப்பு உருவான விதம், படைப்பாளியின் வாழ்க்கைச் சூழல்
படைப்பாளியாவதற்குத் தூண்டுகோலாக இருந்தது, நம் அரசியல் என வாசகர்களிடமிருந்து
பல்வேறு விதமான ஆழமான கேள்விகளை நாங்கள் எதிர்கொள்ள நேர்ந்தது. இக்கேள்விகளாலும்
பதில்களாலும் படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் இடையே ஆழமான உறவு உருப்பெற்றது
என்றே சொல்ல வேண்டும்.
நாங்கள் அங்கிருந்த நாள்களில் உணர்ந்து விவாதித்த ஒரு விஷயம், டிராம்களில் பயணம்
செய்யும்பொழுதோ ரெஸ்டாரன்ட்களிலோ சந்திக்க நேர்ந்த ஜெர்மானியர்களிடமிருந்து
சினேகமான பார்வைகளையோ புன்முறுவலையோ பெற முடியாததுதான். சிரிக்கத் தெரியாத
மற்றவர்களிடமிருந்து விலகி இருப்பதற்காகவே பிறந்தவர்கள் என்று எங்களை நம்பவைத்துச்
சலிப்பை ஏற்படுத்திய அதே ஜெர்மானியர்கள் நம் நாட்டின் இலக்கியங்களை
அறிந்துகொள்வதில் காட்டிய ஆர்வத்தின் தீவிரம் வியப்பூட்டியது.
நாங்கள் அரங்குகளில் வாசித்து முடித்த பின் எங்களை வந்து சுற்றிக்கொண்டு புகைப்படம்
எடுத்துக்கொள்ளவும் கையெழுத்துகள் வாங்கிக்கொள்ளவும் அவர்கள் ஆர்வம் காட்டியது
நெகிழ்வைத் தந்தது. அதேபோல நம் படைப்புகளைத் தம் மொழிகளில் கொண்டுவர ஆர்வம் காட்டிய
பதிப்பாளர்கள் பலரும் 'உங்கள் ஏஜென்ட் யார் என்று சொல்லுங்கள், அவரிடம் பேசி முடிவு
செய்துகொள்கிறோம்' என்று கேட்டபடி இருந்தது வேடிக்கையாக இருந்தது (பாவப்பட்ட இந்திய
எழுத்தாளருக்கு ஏஜென்ட்டுக்கு ஏது வழி).
பாலிவுட் சினிமாவிற்கான அரங்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் திரையிடப்பட்டன.
புக்மெஸ்ஸேயின் நீண்ட தளங்களில் நடந்து களைத்தவர்கள், வெவ்வேறு அரங்குகளைத் தேடிச்
செல்ல வளாகத்தினுள்ளே இலவச மினி வேன்கள் உலவின. வளாகத்தில் அடுத்த வருடத்திற்காக
இன்னும் இரண்டு பிரம்மாண்டமான கட்டிடங்கள் உருவாகிக்கொண்டிருந்தன.
சர்வதேசப் புத்தக அரங்கில் இந்தியா மற்றும் பிற நாடுகளின் பிரபல பதிப்பாளர்களோடு
நிகழ்ந்துகொண்டிருந்த விவாதங்கள் ஒரு பக்கம் எனில், படைப்பாளிகள், வாசகர்கள்,
பதிப்பாளர்கள் ஆகியோர் சந்தித்துக்கொள்ள அரிய வாய்ப்பாகவும் இந்தக் கண்காட்சி
இருந்தது. நாங்கள் படைப்பாளிகள் என்பதில் பெருமிதம்கொள்ளக் கூடிய சந்தர்ப்பங்கள்
அதிகமிருந்தன.
இறுதி நாளன்று கேரளக் கலாச்சார மேளம் முழங்க 'ஹேண்ட் ஓவர்' செய்யும் விழா இருந்தது.
இந்தியர்களில் நானும் அடுத்த வருடத்திய சிறப்பு விருந்தினரான காடலோனிய (ஸ்பெயினின்
காடலோனியா பகுதிக்குரிய) பண்பாட்டைச் சேர்ந்த படைப்பாளிகள் இருவரும் எங்களது
படைப்புகளை வாசித்து முடித்த பிறகு ஃப்ராங்க்ஃபர்ட் புத்தகக் கண்காட்சியின்
இயக்குநர் முன்னிலையில் என்.பி.டி.யின் இயக்குநர் நுஸ்மத் ஹஸன் அடுத்த சிறப்பு
விருந்தினருக்கான 'தீணீtஷீஸீ'-ஐக் காடலோனியப் பண்பாட்டு ஆணைய இயக்குநர் ஃபெரன்
மாஸ்காரெலிடம் வழங்க, விழா சிறப்பாக முடிவுற்றது. அந்த அரிய விழாவில் கவிதை வாசிக்க
எனக்குக் கிடைத்த வாய்ப்பு மறக்கவியலாததும் கூட.
அங்கிருந்த நாள்களில் இரவு நேரங்களில் தங்கியிருந்த விடுதியின் லாபியை நமீதா கோகலே
கவிதை அரங்காக மாற்ற, லாபியின் ஒரு பக்கமாக இருந்த பாரில் பியானோ இசைத்தபடி
பாடிக்கொண்டிருந்த பெண்ணின் பாடல் எங்களின் கவிதை வாசிப்பைத் தொந்தரவு செய்வதாகச்
சொல்லி ரிசப்ஷனிஸ்ட்டிடம் (நியாயமேயின்றி) தங்களது கடும் எதிர்ப்பைக் காட்டி
விவாதித்த கிரீஷ் கர்னாடும் ஜாவேத் அக்தரும் அவ்விரவுகளுக்கு சுவாரஸ்யத்தைக்
கூட்டிக்கொண்டிருந்தனர் (அப்பெண்ணுக்கு ஒரு மணிநேரத்திற்கு 1500 யூரோக்கள் என்று
சொல்லி ரிசப்ஷனிஸ்ட் இவர்களைச் சமாளித்தது தனிக்கதை).
கற்பனைக்கு எட்டாத அந்த மாபெரும் புத்தகக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராகக்
கலந்துகொள்ளக் கிடைத்த அரிய வாய்ப்பும் என் வாழ்நாளில் எனக்கு பிரமிப்பூட்டிய
அற்புதமான படைப்பாளிகளோடு அவர்களில் ஒருத்தியாக இருக்கக் கிடைத்த வாய்ப்பும் அமைந்த
அந்நாள்களை என் வாழ்நாளில் எளிதில் மறக்கவியலாது.
ஃப்ராங்க்ஃபர்ட்டிலிருந்து திரும்பிய நடு இரவில் மும்பை ஏர்போர்ட்டில் நான்
தவறவிட்ட பெட்டிக்காகக் கலங்கி நின்றபொழுது கூடவே இருந்து தேற்றிய கிரீஷ் கர்னாட்,
உதய் நாராயண் சிங் ஆகிய படைப்பாளிகள் குறித்த நெகிழ்வான நினைவுகளும் கூடவே
இருக்கின்றன.
படைப்பாளிக்கு முதல் மரியாதை
என்.பி.டி. செய்திருந்த ஏற்பாடுகள் குறித்து அவசியம் சொல்ல வேண்டியிருக்கிறது.
விசாவுக்காகச் சென்னையிலுள்ள ஜெர்மன் கான்சுலேட்டிற்கு நானும் ஆந்திராவிலிருந்து
வந்த ஷாஜஹானாவும் சிவா ரெட்டியும் அதி காலையிலேயே வந்து காத்திருந்தோம். எங்களது
விண்ணப்பப் படிவங்களைச் சரிபார்த்த ஜெர்மானியப் பெண்மணி, என்னிடமும் ஷாஜஹானாவிடமும்
நாங்கள் ஜெர்மனி செல்வதற்குத் தத்தம் கணவர்களிடமிருந்து அனுமதிக் கடிதம் வாங்கிவர
வேண்டுமென வெளியில் அனுப்பிவைத்தார். (சிவா ரெட்டியிடம் அவரது மனைவியிடம் அனுமதிக்
கடிதம் கேட்க அப்பெண்மணிக்கு ஏனோ தோன்றவில்லை!)
இவ்விஷயத்திற்கான எனது கண்டனத்தை நான் புத்தகக் கண்காட்சியின் இயக்குநரிடமும்
ஊடகங்களிடமும் தெளிவாகப் பதிவுசெய்தேன். அவர்களும் தங்களது வருத்தத்தைத்
தெரிவித்தார்கள். ஷாஜஹானா கணவரோடு வந்திருந்ததால் தப்பித்துக்கொண்டார். நண்பனோடு
சென்றிருந்த நான் என்ன செய்வது? அப்பெண் கேட்ட கடிதம் தந்தால்தானே நான் ஜெர்மனி
செல்ல முடியும். அவளை மனத்திற்குள் திட்டியபடியே என் நண்பனிடமிருந்து ஒரு கடிதத்தை
எழுதி வாங்கிக்கொண்டு சென்றேன் (ஆபத்திற்குப் பாவமில்லைதானே).
கடிதங்கள் கிடைத்த திருப்தியில் எங்களை இரண்டு நாள்கள் கழித்து வரச் சொன்னார்
அப்பெண். நாங்களும் அதன்படியே இரண்டு நாள்களுக்குப் பிறகு சென்றபொழுது 'எங்கள்
மூவருக்கும் விசா மறுக்கப்படுகிறது, காரணம் சொல்ல இயலாது' என்ற கடிதங்கள் கிடைத்தன.
சிவா ரெட்டி, ஷாஜஹானா இருவரும் ஹைதராபாத் திரும்பிச் சென்றுவிட, நான்
என்.பி.டி.யின் சுபீர் தத்தாவையும் குமார் விக்ரமையும் உடனடியாகத் தொலைபேசியில்
தொடர்புகொண்டு விஷயத்தைச் சொல்லிவிட்டு ஊர் திரும்பத் தயாரானேன். அடுத்த ஓரிரு மணி
நேரங்களில் தொலை பேசியில் அழைத்த சுபீர் தத்தா, நான் சென்னையிலேயே இருக்க
வேண்டுமென்றும் அன்றிரவே என்.பி.டி. ஊழியர்கள் விமானத்தில் வந்து சேர்வார்கள்
என்றும் சொன்னார். சிவா ரெட்டியும் ஷாஜஹானாவும் விமானத்தில்
வந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் சொன்னார் அவர்.
மறுநாள் காலை தில்லியிலிருந்து வந்த என்.பி.டி. ஊழியருடன் ஜெர்மன் கான்சுலேட்
சென்றோம். முதல் நாள் ஜெர்மனியில் இருந்த இந்தியத் தூதரக அதிகாரி மீராவிடம்
பேசினார். பிறகு அவர் தில்லியில் இருந்த தூதரக அதிகாரியைத் தொடர்புகொண்டு பேசி
அவர்களைச் சென்னையைத் தொடர்புகொள்ளச்செய்தார்கள். கூடவே சிங் தன்னோடு
கொண்டுவந்திருந்த அதிகாரபூர்வ அழைப்புக் கடிதம், என்.பி.டி. புத்தகக் கண்காட்சியில்
விநியோகிக்கவெனப் பதிப்பித்திருந்த புத்தகம், அதில் அச்சிடப்பட்டிருந்த எங்களது
புகைப்படத்துடன் கூடிய விபரங்கள், இவற்றையெல்லாம் காட்டி, நாங்கள் 'இஸ்லாமியத்
தீவிரவாதிகள்' அல்ல என்பதை நிரூபித்த பின்பே எங்களுக்கு விசா கிடைத்தது. எங்களுக்கு
விசா கிடைப்பதற்காக என்.பி.டி. அதிகபட்ச முயற்சி எடுத்துக்கொண்டது. நாங்கள் அதை
எதிர்பார்க்கவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அதேபோல என்.பி.டி. எங்கள் ஒவ்வொருக்குமே ஓர் உதவியாளரையும் அங்கு
ஏற்பாடுசெய்திருந்தது. நாங்கள் அங்கிருந்த எல்லா நாள்களிலும் நாங்கள் எங்கெங்கு
செல்ல வேண்டும் என்பதிலிருந்து எங்களை அங்கு அழைத்துச் சென்றுவருவது, எங்களது
தேவைகளை கவனித்துப் பூர்த்திசெய்வது என்று அத்தனை விதமான வேலைகளுக்கும் அவர்களே
பொறுப்பெடுத்துக்கொண்டார்கள். எனக்கு ஆங்கிலம் சரியாகத் தெரியாது என்பதால்
ஜெர்மனியில் வசிக்கும் தமிழ்ப் பெண் ஒருவரை எனக்காக என்.பி.டி. தேர்வு
செய்ததிலிருந்தே எங்களது சௌகரியத்தில் அதற்கிருந்த அக்கறையைப் புரிந்துகொள்ள
முடிந்தது.
வாசிப்பு நிகழ்ந்த அரங்கின் வாயிலில் எங்கள் 37 பேருடைய சிறிய மற்றும் பெரிய அளவுப்
புகைப்படங்கள், வாசகர்கள் எங்களிடம் கையெழுத்துப் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாக
விநியோகிக்கப்பட்டன.
கூடவே எங்களைப் பற்றிய குறிப்புகளைக் கொண்ட கனத்த புத்தகங்களும் ஐந்து நாள்களும்
நடைபெற்ற வாசிப்புகள் குறித்த விவரங்கள் அடங்கிய கையேடுகள், அனைத்துமே இலவசமாக
விநியோகிக்கப்பட்டன.
தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகள் எங்கள் ஒவ்வொருவரையும் பேட்டி காண
ஏற்பாடுசெய்திருந்தன. விழாவின் நாயகியான மஹாஸ்வேதா தேவியின் வாழ்க்கைக் குறிப்புப்
புத்தகம், திரும்பிய திசையெங்கும் இந்திய எழுத்துக்களை உள்ளடக்கிய டிஸ்பிளேக்கள்,
பேனர்கள் என என்.பி.டி.யின் ஒவ்வொரு ஏற்பாடுமே மிகச் சிறப்பாகத்
திட்டமிடப்பட்டிருந்தது.
உள்ளடக்கம் |
|