இணைய காமிக்ஸ் கலைஞர் சார்லி பார்க்கரின்
வலைப்பதிவு 'லைன்ஸ் அண்ட்
கலர்ஸ்' (www.linesandcolors.com). இதன் பதிவுகள் ஒரு கலைஞரின், கலை ரசிகரின் பார்வையில்
படங்களுடன்
எழுதப்படுகின்றன.
கலையின் போக்குகளை மாற்றிய மகத்தான படைப்பாளிகளின் ஆக்கங்கள் மட்டுமின்றி,
கார்ட்டூன்கள்,
காமிக்ஸ், பத்திரிகைகளுக்கான படங்கள் போன்றவற்றிலும் சிறந்த படைப்புகளைப் பற்றி
எழுதுகிறார்
சார்லி பார்க்கர். இது முழுக்க முழுக்கக் கலைஞர்கள், அவர்களது படைப்புகள், உத்திகள்
ஆகியவை
குறித்த வலையகம். நாம் கேள்விப்பட வாய்ப்பில்லாத, மிகத் திறமையான சமகாலக்
கலைஞர்களையும் இங்கு
தெரிந்துகொள்ளலாம்.
அறிவியல் புனைவுகளுக்கான ஓவியங்கள், நிலப் பரப்பு ஓவியங்கள், பாரம்பரிய சீன ஒவியக்
கலை,
விளம்பரச் சித்திரங்கள், கணினி (ஃபோட்டோ ஷாப்) ஓவியங்கள் என சார்லி பார்க்கரின்
பரந்த ரசனை
அவரது வலைப்பதிவிற்குச் செறிவூட்டுகிறது. இங்கு லியனார்டோ டா வின்சியின்
குறிப்பேடுகள்,
19ஆம் நூற்றாண்டு பிரெஞ்சு ஓவியரான குஸ்தாவ் கூர்பேயின் ஓவியங்கள் ஆகியவை பற்றிய
வர்ணனைகளைப் படிக்கலாம்; அதே சமயம் இன்றைய அமெரிக்க கார்ட்டூனிஸ்ட் கேரி ட்ரூடோவின்
படக் கதைகள் (comic strips), மிகுபுனைவுக் கலைஞர் ஹெச்.ஆர். கிகரின் ஓவியங்கள்
குறித்தும்
அறியலாம்.
இவ்வலைப்பதிவில் கலை தொடர்பான பல வலையகங்களுக்கு இணைப்புகள் தரப்பட்டிருக்கின்றன.
கலை
ஆர்வலர்களுக்கும் கலைஞர்களுக்கும் பயனுள்ள வலைப்பதிவு இது.