அ. முத்துலிங்கம் எழுதிய 'ஆயிரம் பொன்' படித்ததிலிருந்து அலிஸ்
மன்றோவை அவர் விரைவில் சந்தித்து அளவளாவிட வேண்டுமென்று நெடு
நாளாய் நெட்டித் தள்ளிய என் விழைவு, 'காத்திராப்பிரகாரம்'
படித்தபின் நிறைவுபெற்றாலும், அலிஸ் குறித்து அவர் மேலும்
எழுதிட வேண்டுமெனும் ஏக்கமும் எழுகிறது.
அலிஸ் உடனான உரையாடலில், ஆறுமாத காலமாகப் பிரயத்தனப்பட்டு எழுதிய 70 பக்கச்
சிறுகதையை அடிநாதம் சரியில்லையென்று தூக்கி எறிந்துவிட்டதாகவும், அக்கதையை
நிராகரித்தபின்தான் தன்னால் ஆசுவாசப்பட முடிந்தது எனவும் அலிஸ் கூறியது குறித்து
எழுத்தாளர் பலரும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. எந்தவொரு எழுத்தாளரும் தமக்கான
அச்சிலேயே சுழல வேண்டும்; தன் போக்கில் எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும்
எழுதலாம் என்ற எண்ணம் கூடாது என்பதையும் அலிஸின் வார்த்தைகள் உணர்த்துகின்றன.
புனைவு இலக்கியம் குறித்த அலிஸின் பார்வை, பிற மொழிகளைப் போலவே தமிழ் இலக்கிய
உலகுக்கும் அவசியமான, அவசரமான தேவையும் கூட. அலிஸின் தேர்ந்த, பயனுள்ள நேர் காணலை
அழகாகத் தந்த முத்துலிங்கம், அவரது சிறுகதைகளையும் தமிழில் கொண்டுவர முயற்சித்தால்
தமிழ் வாசிப்பின் இலக்கியத் தரமிக்க பார்வை விரிவடையும்.
எம்.ஆர். இராஜேந்திரன்
காரைக்கால்
'தமிழ் வாழ்வில் காதல்' சிறப்புப் பகுதியை வாசித்தேன். காதலை மையப்படுத்தித் தமிழ்
இலக்கியங்களும் சமகால எழுத்தாளர்களும் தந்த விளக்கங்களைக் கண்டு வியந்தேன்.
மூன்றுநாள் தேசியக் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட அனுபவம் எமக்குக் கிட்டியது
என்பேன்.
காதல் என்றால் என்ன? அதை எவ்வாறு அன்று முதல் இன்றுவரை கடைப்பிடித்து வந்துள்ளனர்
என்ற காதல் வரலாற்றைத் திரைப்படங்கள் மூலம் அசோகமித்திரன் பதிவுசெய்த விதம் அவரது
பழுத்த அனுபவத்தைக் காட்டியது.
இன்றைய காதலர்களின் காத்திருப்புத் தன்மையைத் தமிழ் இலக்கியக் காட்சிகளோடு ரோலான்
பார்த்தின் படைப்பு மூலம் ஒப்பிட்டுக் காத்திருத்தலின் அவசியத்தையும்
அநாவசியத்தையும் விளக்கிப் பொம்மைகள் மூலம் இன்பம் துய்க்கும் அறிவியல்
செய்திகளையும் மிக அழகாக, தெளிவாக விளக்கிக் கூறியுள்ளார் பெருந்தேவி.
ஞானக்கூத்தன் சங்க இலக்கிய அகப் பாடலின் மூலம் தலைவியின் இருப்பு நிலையையும் அவளது
ஏக்கத்தையும் புதுமையான முறையில் பதிவுசெய்துள்ளார்.
துரை. மணிகண்டன்
பெரம்பலூர்
கான்ஷி ராம் அஞ்சலிக் கட்டுரையில் ரவிக்குமார் பல செய்திகளை முன்வைத்திருக்கிறார்.
தாழ்த்தப்பட்டோ ர் மட்டுமின்றி பிற ஒடுக்கப்பட்ட சாதி மக்களையும் ஒருங்கிணைத்த
கான்ஷி ராமின் ஆளுமை நன்றாக வெளிப்பட்டிருக்கிறது. தலித்துக்கள் அரசியல் அறிவு பெற
வேண்டும். அதிகாரத்தில் உரிய பங்கேற்க வேண்டும் என்பதற்கான அடையாளமாய்த் திகழ்ந்த
கான்ஷி ராமின் நினைவு போற்றத்தக்கது.
'தமிழ் வாழ்வில் காதல்' சிறப்புப் பகுதி, படைப்பாளர்களின் பன்முகத் தன்மையோடு
வெளிப்பட்டிருக்கிறது. சங்க காலக் காதல் வாழ்வு முதல் அகம், புறமெனப் பல்வேறு
அம்சங்களுடன் தற்காலச் சூழல்வரை காதல் படிமங்கள் வெளிப்பட்டுள்ளன. குறிப்பாய்
ஞானக்கூத்தன், சுகுமாரன், சேரன் கட்டுரைகள் எனப் படிக்கையில் 'தமிழ் வாழ்வில் காதல்'
அனுபவங்களும் ஆண்-பெண் உறவு நிலைகளின் பல்வேறு கூறுகளும் கட்டுரைகளில்
வெளிப்பட்டுள்ளன. என்றாலும் அடிநிலை மக்களின் காதலும் காதல் நிமித்தமான சூழல்களும்
இப்பதிவுகளில் எங்கும் வெளிப்படவில்லை.
விழி.பா. இதயவேந்தன்
விழுப்புரம்
'பறவைப் பூங்கா' இங்கு நடக்கும் கதைபோலவே இயல்பாக இருந்தது. நிர்மலா மனத்தில்
நிற்கிறாள். அலிஸ் மன்றோவின் நேர்காணல் சிறப்பாக இருந்தது. கடைசியில் முத்துலிங்கமே
மனத்தைத் தொட்டுவிட்டார். கட்டுரைகள், கவிதைகள் வழக்கம்போல் சிறப்பாக இருந்தன.
வளர்ச்சி தெரிகிறது. தமிழ் வாழ்வில் காதல் குறித்து அறிஞர்களிடம் கேட்டுத்
தொகுத்ததைப் பாராட்ட வேண்டும். இதை நூலாக்கலாமே.
கொ.மா. கோதண்டம்
இராஜபாளையம்
அலிஸ் மன்றோ பேட்டியைக் கண்டதும் சிலிர்த்துப்போனேன். அலிஸ் மன்றோவிடம் செவ்வி
எடுக்க முயன்று அது முடியாமலேயேபோகிறது என அ. முத்துலிங்கம் முன்பு
வேதனைப்பட்டிருந்தார். அவரது அந்த வேதனையே பேட்டியைப் படிக்கப் பேராசை கொள்ளச்
செய்தது. அந்தப் பேராசை இரண்டு மாதங்களிலேயே நிறைவேறிவிட்டதில் எனக்கு அளவில்லா
மகிழ்ச்சி. அவரது பேட்டி என்னைப் போன்ற வளரும் எழுத்தாளர்களைப் பக்குவப்படுத்துவதாய்
அமைந்திருந்தது.
ப. ராமகிருஷ்ணன்
புதுக்கோட்டை
'வாக்காளர்களைப் புறக்கணித்த தேர்தல்' வழியாக, உணர்வுபூர்வமாகவும் கோட்பாட்டு
அடிப்படையிலும் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை மெய்ப்பிக்கச் சொல்லியிருக்கிறீர்கள்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியை உங்களுடன் சேர்ந்துகொண்டு பாராட்டுகிறேன். "தார்மீக
மதிப்பீடுகள் வேகமாகச் சரிந்துவரும் சூழலில் சிறிதளவாவது நம்பிக்கையை ஊட்டும் செயல்
இது" என்பவை இத்தலையங்கத்துக்கு ஊட்டம் மிகுவிக்கும் அவசியமான வார்த்தைகள். 'பொய்
பரப்பும் கொசுக்கள்' துணைத் தலையங்கத்தின் தலைப்பு கவிதை வரிபோல் அமைந்துள்ளது.
கான்ஷி ராம் குறித்து இதுவரை வந்துள்ள சொல்லாடல்களில் ரவிக்குமாரின் 'அதிகாரத்தை
நோக்கிய பயணம்' சொல்லத்தக்க இலக்கை எட்டியிருக்கிறது.
'தமிழ் வாழ்வில் காதல்: நவீனத் தமிழ்க் கவிதைக'ளில் ஞானக்கூத்தனின் நேர்த்தியான
காதல் கவிதையை (ப. 53) இனங்காட்டிய சுகுமாரன், 55ஆம் பக்கத்தில் குட்டி ரேவதியின் "கவிதைத்
தொனி"யை மிகவும் பாராட்டியிருப்பது நிஜத்தைச் சொல்வதாக இல்லை. பிரம்மராஜன் போல்,
பெண் என்பதால் 'விமரிசன மெலிவு' (க.நா.சு. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு
வந்தபொழுது பயன்படுத்திய தொடர்) கொள்வதாக உள்ளது. 'காலம்' இதழ் ஒருமுறை ஈழத்துக்
கவிஞர் மைதிலி தொடக்கமாக வைத்த பெண் கவிஞர்களின் புரிதலுடன் கூடிய (காதல் உள்ளிட்ட)
கவிதைப் படைப்புக்களின் நோக்குகளைக் குறித்துச் செறிவானதொரு கட்டுரையை வெளியிட்டது.
நண்பர் அதைப் படிக்கவில்லையோ? இது போன்ற வாய்ப்புகளின்போது ஆழமானவர்களை வேண்டுமென்றே
விட்டுவிட்டு, மேலோட்டமானவர்களை ஆழமானவர்கள் என்று பிரகடனப்படுத்துவது, ஒரு கவிஞர்
என்ற நிலையிலிருந்து 'பெண் கவிஞர்' என்று குறிப்பிட்டுத் தாழ்த்துவதைவிடவும்
மோசமானது.
இந்த வேதனை அசோகமித்திரனின் கட்டுரையால் அகன்றுபோனது. தனது கட்டுரையில் தமிழ்த்
திரைப்படத்தின் வாழ்வில் காதல் பிடித்திருக்கிற இடத்தை விவேகமாகவும் 'இலேசாக'வும்
சொல்லிக்கொண்டுபோகிறார். அவர் நடை முதுமையின் பக்குவம் கொண்டிருக்கிறது. முடிபு
கூறும்போதுதான் (ப. 83) சலிப்புக் கொண்டு, காதல் நழுவிக்கொண்டு போகும்
இயல்புடையதுதான் என்ற ஒரு 'க்ளிஷே'வை (நீறீவீநீலீங) சொல்லி, "நடைமுறை வாழ்க்கையில்
சமரசமும் பொறுத்துக்கொண்டுபோவதும் காதலாகிவிடுகின்றன" என்று வேதாந்தம் பகர்ந்து (இவ்வாறு
செய்வது முதியோர் காதல் அல்லவா?), 'மகத்தான காதல் வெளிப்பாடு என்று தனித்துக்
கூறும்படியாக இருக்காது என்றே தோன்றுகிறது" என்ற அவநம்பிக்கையில் முடிக்கிறார்.
பெருந்தேவியின் கட்டுரை முடிபும் அது போன்றதே. ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக,
உம்பர்ட்டோ ஈக்கோவைச் சார்ந்து முடிந்திருக்கிறது.
தேவமைந்தன்
புதுச்சேரி
அனிருத்தன் வாசுதேவனின் கட்டுரை ஆழமானது. மூன்றாம் பாலியல் குறித்த மதிப்புள்ளோரின்
நிலைக்கு ஆறுதல் தருவது. அவர் குறிப்பிட்ட திரைப்படத்தைப் பார்த்தவர்கள் அரவாணிகள்
பற்றிய அவலக் காட்சியில் எந்த அளவு வேதனை கொண்டிருப்பார்கள் என்பதைப் புரிந்துகொள்ள
முடிகிறது. இந்த அறிவுஜீவிகளின் நுனிப்புல் மேதா விலாசங்களை அகன்ற திரையில்
வெளிச்சமிட்டுக் காட்டும் காட்சியில், அவர்கள் ஓட்டும் குறுக்குச் சால்களை ரசிகன்
கவனிக்காமலும் இல்லை. படைப்பாளிக்குச் சமூகக் கடமை உள்ளது என்பதை எவரும் மறக்கக்
கூடாது.
ஆர். பாலமுருகன்
நாகர்கோவில்