அஃப்சலுக்கும் சதாம் ஹுசைனுக்கும் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைகள் மரண தண்டனைக்கு
எதிரான குரல்கள் மீண்டும் ஒலிப்பதற்குக் காரணமாகியுள்ளன. இந்தச் சேர்ந்திசையில்
மாநில முதல்வர்களின் குரல்களும் இணைந்துள்ளன. சதாம் ஹுசைனின் மரண தண்டனையை
பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர் உள்படப் பல நாடுகளின் தலைவர்களும்
கண்டித்துள்ளனர்.
இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அதே இடத்தில்
சுட்டுக் கொல்லப்பட்டனர். அதற்கான சதித் திட்டத்துக்கு உடந்தையாக
இருந்தாரென்பதுதான் அஃப்சல்மீதான குற்றச்சாட்டு. சதித் திட்டத்தின் மூளைகளாகச்
செயல்பட்டவர்களென போலீஸால் குறிப்பிடப்பட்ட மசூத் அஸார், காஸி பாபா, தாரிக் அகமது
ஆகிய மூன்று பேரையும் போலீஸ் இதுவரை கைதுசெய்யவில்லை. சுட்டுக் கொல்லப்பட்ட அந்த
ஐந்து பேரின் அடையாளங்களும்கூடக் கண்டறியப்படவில்லை. இதற்கிடையில் அஃப்சல் உள்ளிட்ட
நான்கு பேரை தில்லி போலீஸின் சிறப்புப் பிரிவு கைதுசெய்தது. வழக்கு விசாரணைக்கு
வந்தபோது அஃப்சல் உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டது தொடர்பாக போலீஸ் பொய்ச்
சாட்சிகளைத் தயாரித்திருந்ததும் கைது நடந்தது பற்றிய தேதி, இடம் ஆகியவற்றைக் கூடத்
தவறாகக் குறிப்பிட்டிருந்ததும் தெரியவந்தன. கைதுசெய்யப்பட்ட நான்கு பேரில் அஃப்சல்
தவிர மற்ற மூன்று பேர் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர். மரண தண்டனையை உறுதிசெய்தபோதுகூட
அஃப்சலுக்கு எதிரான நேரடி ஆதாரம் எதுவுமில்லை என்றுதான் உச்ச நீதிமன்றம்
தெரிவித்துள்ளது. அஃப்சல் எந்தவொரு பயங்கரவாத அமைப்பிலும் உறுப்பினராக இருந்ததாக
நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை. அரசுத் தரப்பு சாட்சியங்களாக விசாரிக்கப்பட்ட
எண்பது பேரில் ஒருவர்கூட அதை உறுதி செய்யவில்லை.
கீழ்க் கோர்ட்டில் நடந்த விசாரணையின்போது அஃப்சலுக்கு வழக்கறிஞர் எவரும்
அமர்த்தப்படவில்லை. தங்களையும் தேச விரோதிகள் என முத்திரை குத்திவிடுவார்களோ
என்னும் அச்சத்தில் எந்த வழக்கறிஞரும் அஃப்சலுக்கு உதவ முன்வரவில்லை. குற்றம்
சாட்டப்பட்ட நான்கு பேரில் ஒருவரான பேராசிரியர் ஜீலானிக்கு வாதாட முன்வந்ததற்காக
முன்னாள் சட்ட அமைச்சரும் பிரபல வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானியின் அலுவலகத்தை
சிவசேனைக் கட்சியினர் அடித்து நொறுக்கினார்கள். "விசாரணை முழுவதிலும் எந்தவொரு
சாட்சியையும் நானோ, எனது சார்பில் வழக்கறிஞரோ குறுக்கு விசாரணை செய்ய முடியவில்லை.
பல சாட்சிகளை முதன்முறையாக அப்போதுதான் நான் பார்த்தேன். அவர்கள் சொன்னவற்றை
நீதிமன்றம் எந்த விசாரணையுமின்றி ஒருதலைப்பட்சமாகப் பதிவுசெய்தது. நான்
நிர்க்கதியாக ஒரு பார்வையாளனைப் போல வாய்மூடி நின்றேன்" எனத் தனது வழக்கு விசாரணை
பற்றி அஃப்சல் குறிப்பிடுகிறார்.
இதே வழக்கில் கைதுசெய்யப்பட்டுத் தற்போது விடுதலையாகியிருக்கும் பேராசிரியர்
ஜீலானிக்காக அமைக்கப்பட்ட போராட்டக் கமிட்டிக்கு அஃப்சல் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அது மட்டுமின்றி, தனக்காக இப்போது உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர் சுஷில்
குமாருக்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறார் அஃப்சல். அந்தக் கடிதங்களில் அவர்
குறிப்பிட்டுள்ள விஷயங்கள் முக்கியமானவை. எஸ்.எஸ்.பி.யாக இருந்த அஷாக் ஹுசைன்
என்பவரது மைத்துனர் அல்டாஃப் என்பவர் மூலமாக, டி.எஸ்.பி. யாக இருந்த திரவீந்தர்
சிங் என்பவருக்குத் தான் அறிமுகம் செய்துவைக்கப்பட்டு அந்த டி.எஸ்.பி. அனுப்பிய ஆள்
ஒருவரை டெல்லிக்கு அழைத்துவந்ததாகவும் அவரோடு சில நாட்கள் தில்லியில் தங்கிப்
பலரைச் சந்தித்ததாகவும், அப்போது திரவீந்தர் சிங்கும் காஷ்மீர் அதிரடிப் படை
(ஷிஜிதி) போலீஸ் அதிகாரிகளும் தம்மோடு பல முறை ஃபோனில் பேசிய தாகவும் அஃப்சல்
குறிப்பிட்டுள்ளார். அவர் சொல்வதை வைத்துப் பார்த்தால் நாடாளுமன்றத்தின் மீது
தாக்குதல் நடத்தியவர்களுக்கு எஸ்.டி.எஃப்.-உடன் தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. அது
மட்டுமின்றி இந்த வலைப்பின்னலுக்குள் அஃப்சல் திட்டமிட்டே சிக்கவைக்கப்பட்டுள்ளார்
எனவும் தெரிகிறது. இந்த விஷயத்தை நீதி மன்றத்தில் அஃப்சல் வலியுறுத்தியபோதும்
நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை.
அஃப்சலுக்கு மரண தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும் என பாரதீய ஜனதா கட்சி
கூக்குரலெழுப்புவதைப் பார்த்தால் இந்த வழக்கை இனிமேல் விசாரிக்க வேண்டாம் என அது
விரும்புவது போல் தெரிகிறது. செப்டம்பர் 11 சம்பவத்தையொட்டிச் சர்வதேச அளவில்
எழுந்த முஸ்லிம் எதிர்ப்பு மனநிலையைப் பயன்படுத்திக்கொண்டு அரசியல் லாபம்
அடைவதற்காக பா.ஜ.க. அரசே 'ஏற்பாடு' செய்ததுதான் அந்தச் சம்பவம் என அப்போது எழுந்த
விமர்சனத்துக்கு வலு சேர்ப்பதுபோலவே பா.ஜ.க.வின் இப்போதைய கூச்சல் இருக்கிறது.
சதாம் ஹுசைன் வழக்கு எப்படி நடத்தப்பட்டது என்பதை உலகம் அறியும். அவருக்காக வாதாடிய
மூன்று வழக்கறிஞர்கள் கொல்லப்பட்டனர். முதலில் விசாரித்த நீதிபதி பதவியை விட்டு
விலகிக்கொண்டார். அடுத்தவர் பதவியேற்கவேயில்லை. மூன்றாவதாக நியமிக்கப்பட்டவர்தான்
இப்போது தீர்ப்புச் சொல்லியிருக்கிறார். சதாம் அமெரிக்காவால் போர்க் கைதியாகப்
பிடிக்கப்பட்டவர். ஒரு போர்க் கைதிக்கான உரிமைகள் அவருக்கு வழங்கப்பட்டிருக்க
வேண்டும். இது குறித்து ஜெனீவா ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருப்பவற்றை அமெரிக்கா
மதித்து நடக்கவில்லை. ஈராக்கை ஆக்கிரமித்துள்ள அமெரிக்க ராணுவத்தால் கொல்லப்பட்ட
ஈராக்கியர்களின் எண்ணிக்கை சதாமால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட அதிகம்.
அந்தக் கொலைகளுக்கு ஜார்ஜ் புஷ்தான் பொறுப்பேற்க வேண்டும். அப்போது சதாமுக்குக்
கொடுத்ததைப் போலப் பத்து மடங்கு தண்டனையை புஷ்ஷுக்குக் கொடுக்க வேண்டியிருக்கும்.
புஷ்ஷின் ஈராக் கொள்கையை அமெரிக்க மக்கள் அங்கீகரிக்கவில்லை என்பதைச் சமீபத்திய
அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் காட்டிவிட்டன.
மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்பதே உலகில் பெரும்பாலான நாடுகளின் கருத்து.
தற்போது 129 நாடுகள் மரண தண்டனை விதிப்பதில்லை. 'உயிருக்கு உயிர்' என்பது நாகரிக
சமூகத்தின் சட்டமாக இருக்க முடியாது; எனவே அந்தத் தண்டனை முறையை நீக்கிவிட வேண்டும்
என்பதே நமது கோரிக்கை. இந்தக் கோரிக்கையை இப்போது பலரும் எழுப்புவது வரவேற்கப்பட
வேண்டியதே. ஆனால் இப்போது மரண தண்டனையை எதிர்க்கும் இஸ்லாமிய அமைப்புகள் இதற்கு
முன் இப்படிக் குரலெழுப்பியதில்லை. ராஜீவ் கொலை வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை
விதிக்கப்பட்டபோது இவர்கள் மௌனம் காத்தனர். இப்போதும்கூடப் பல்வேறு இஸ்லாமிய
நாடுகளில் நடைமுறையில் இருக்கும் மிக மோசமான தண்டனை முறைகளை இவர்கள்
கண்டிப்பதில்லை. அதுபோலவே ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனையை எதிர்த்தவர்கள் பலர்
இப்போது அஃப்சலுக்காகக் குரலெழுப்பவில்லை. ஈழத்தில் இயக்கங்கள் கைக்கொள்ளும் தண்டனை
முறைகளையும் அவர்கள் விமரிசிப்பதில்லை.
அஃப்சல் மற்றும் சதாம் வழக்குகளில் மரண தண்டனையை எதிர்ப்பது சுலபம். ஆனால் இப்போது
பிரியதர்ஷினி மட்டூ கொலை வழக்கில் சந்தோஷ் குமார் சிங் என்பவருக்கு தில்லி உயர்
நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. அதை இஸ்லாமிய அமைப்புகளோ தமிழ்த்
தேசியவாதிகளோ இதுவரை கண்டிக்கவில்லை. மனித உரிமை குறித்த அவர்களின் கரிசனத்தின்
எல்லை அதுதான்.
அஃப்சலுக்கும் சதாமுக்கும் வழங்கப்பட்டுள்ள மரண தண்டனைகள் இந்தியாவில் மட்டுமல்ல,
உலக அளவிலும்கூட நீதி அமைப்புகளின் நிலை என்னவாக இருக்கிறது என்பதைத்தான் நமக்கு
எடுத்துக் காட்டுகின்றன. இவ்வளவு மோசமான நீதி அமைப்பை வைத்துக்கொண்டு ஒருவரின்
உயிரைப் பறிக்கும் தண்டனை முறையைப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. மனித
குலத்தின்மீது மதிப்புக் கொண்டவர்கள் அனைவரும் மரண தண்டனைக்கு எதிராக ஒருமித்துக்
குரல் எழுப்புவோம்.
உள்ளடக்கம்