Google   www kalachuvadu.com

விட்டு விடுதலை

பெருமாள்முருகன்

   'கொஞ்சமோ திசையின் வெள்ளம்'

   நேர்காணல் - ரா.அ. பத்மநாபன்

   நேர்காணல் - சீனி. விசுவநாதன்

   பாரதி பாடல் மொழிபெயர்ப்பு: என் பட்டறிவு

   'பருத்தி, புடவையாய்க் காய்க்காத கதை'

   பாரதி - பாரதிதாசன் சந்திப்பு நிகழ்ந்தது எப்போது?

   விட்டு விடுதல

   பாரதியின் பகவத் கீதை

   வள்ளலாரும் பாரதியும்

பாடத்திட்டம் மூலமாகத்தான் பள்ளியில் எனக்குப் பாரதியார் அறிமுகமானார். அவர் கவிதைகள் சிலவும் படிக்கக் கிடைத்தன. பாடத்திட்ட விளக்கங்கள் அவர் கவிதைகளுக்குரிய தனித்தன்மைகளை எனக்கு உணர்த்தவில்லை. வழக்கமான பாணியில் கேள்வி பதில்களாக அவற்றையும் படித்தேன். பாடத்தில் உள்ள செய்யுள் வடிவங்களின் ஓசையைப் பின்பற்றி அவற்றைப் போலிசெய்து கவிதைகள் எழுதும் பழக்கம் எனக்கிருந்ததால், பாரதியார் கவிதைகளையும் போலி செய்திருக்கிறேன். மற்றபடி, கனல் தெறிக்க விழிகளை விரித்திருக்கும் பாரதியாரைச் சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவராகக் கருதியிருந்தேன்.

1981ஆம் ஆண்டு பாரதியார் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின்போது நடைபெற்ற கவிதைப் போட்டியில், கல்வி மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு பெற்றேன். அப்போது பதினோராம் வகுப்பு மாணவன் நான். பரிசாகப் 'பாரதியார் கவிதைகள்' நூலைப் பெற்றேன். அப்போதிருந்து இன்றுவரை எனக்கு மிக விருப்பமான நூலாக அது இருந்து வருகிறது. மனம் களிகொள்ளும் நேரத்திலும் சஞ்சலம் மிகுந்து துயர்ப்படும் வேளைகளிலும் எடுத்துக் கைக்கு வரும் ஏதாவது ஒரு பக்கத்தைப் புரட்டி வாசிப்பேன். இந்தப் பக்கம் வேண்டாம், வேறொரு கவிதைக்குப் போகலாம் என்று ஒருபோதும் தோன்றியதில்லை.

அவர் கவிதைகளில் பெரும்பாலும் எனக்குப் பிடித்தவைதாம். ஆனால் ஒவ்வொரு சமயத்தில் ஏதாவது ஒரு கவிதை மிகவும் பிடித்திருக்கும். 'அந்திப் பொழுது' கவிதையைத் திரும்பத்திரும்ப வாசித்தபடி இருந்தேன் சிலகாலம். 'சின்னஞ் சிறிய குருவி-அது ஜிவ்வென்று விண்ணிடை ஊசலிட்டேகும்' என்னும் அடி பெருவியப்பாகத் தோன்றும். 'ஜிவ்வென்று' என்னும் ஒலிக்குறிப்பும் 'ஊசலிட்டு ஏகும்' என்பதும் குருவி பறப்பதைக் கண்ணால் கண்டு மனத்தினால் உணர்ந்த கவியுள்ளம் உருவாக்கியவை. 'ஜிவ்வென்று' என்பதைப் போலப் பாரதியார் பயன்படுத்தியுள்ள ஒலிக் குறிப்புச் சொற்கள் பலவும் அந்தந்த இடங்களில் கச்சிதமாகப் பொருந்துபவை மட்டுமல்ல, கவித்துவம் ஏறி நின்றிலங்குபவையாக மாற்றம் பெற்றுவிடும். தருமன் திரௌபதியைச் சூதில் வைத்திழந்ததும் கௌரவர் மகிழ்ச்சியைச் சொல்ல ஒலிக்குறிப்புகளைப் பாரதியார் பயன்படுத்துவார். 'தக்குத்தக்கென்றே அவர் குதித்தாடுவார்', 'கக்கக்கென்றே நகைப்பார்' என்பவற்றில் அந்த மகிழ்ச்சி பற்றிய கவிஞரின் பார்வையும் வெளிப்பட்டுவிடுகிறது. நல்ல செயலுக்கான மகிழ்ச்சியல்ல, நல்லவர்கள் கொள்ளும் மகிழ்ச்சியல்ல இது என்பதைத்தான் இவை வெளிப்படுத்துகின்றன. 'தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்', 'தீம்தரிகிட தீம்தரிகிட' 'சட்டச்சட சட்டச்சடடட்டா' ஆகிய தாள ஒலிக்குறிப்புகள் இடம்பெற்று அவர் கவிதைகளை மேலெடுத்துச் செல்லும் இடங்கள் பல உள்ளன.

'குயில்' பாட்டைக் கொஞ்ச காலம் திரும்பத்திரும்ப வாசித்தபடி இருந்தேன். அதன் வேதாந்தப் பொருள், மேலோட்டப் பொருள் ஆகியவை பற்றி எனக்கு அவ்வளவு ஈடுபாடில்லை. ஓரிடத்திலும் இடறல் இல்லாமல் ஆற்றொழுக்காய் ஓடிக்கொண்டேயிருக்கும் அப்பாடல் வரிகள் மிகுந்த ஈர்ப்புத் தருபவை. அதில் உள்ள சொற் சேர்க்கைகள் எண்ணுந்தோறும் இன்பம் பயப்பவை. மின்னற்சுவை, கவிதைவெறி, நாதக்கனல், மோகனப் பாட்டு, சோதித்திருவிழி, மோனஒளி, இன்பக்களி எனப் பட்டியலிட்டால் நீண்டு செல்லும் சொற்சேர்க்கைகள் பல. பிற பாடல்களிலும் அக்கினிக் குஞ்சு, எரிதழல் என்பனபோல ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. புதிய புதிய சொற்சேர்க்கைகள் சில சமயம் கவிஞர்களைச் சொல் மோகத்திற்குள் கொண்டு தள்ளிவிடும். ஆனால் பாரதியார் கவிதைகளில் அபத்தமான சொற் சேர்க்கைகளை ஓரிடத்திலும் காண முடியாது. 'மின்னற்சுவை' என்னும் ஒரு சொற்சேர்க்கை வாசிப்பவரை மயக்கத்தில் ஆழ்த்தி எங்கோ கண்காணாத இடத்திற்குத் தூக்கிச் செல்லும் சுகத்தைப் பொதிந்துவைத்திருக்கிறது. இதனை விரித்துச் சொல்வார்: 'மின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய் வந்து பரவுதல் போல்.' குயிலின் இன்னிசைத் தீம்பாடலினை விளக்குவதற்கு இப்படி ஓர் உவமை. மின்னல் மெலிதாகவும் மிக இனிதாகவும் பரவும் அழகைச் சுவையென்று உணர மேன்மைச் சித்தம் அமையப்பெற வேண்டும். இத்தகைய சொற்சேர்க்கைகள் மூலம் அவர் உருவாக்கும் காட்சிப் படிமங்கள் எல்லையற்று விரிந்து செல்லக்கூடியவை.

அவருடைய கவிதைகளில் நிரந்தரமாக என்னைக் கவர்ந்தது, 'விடுதலை - சிட்டுக்குருவி' என்பதாகும். பாரதியார், சொற்களை மிகவும் உணர்வுபூர்வமாகப் பயன்படுத்தும் வல்லமை பெற்றவர். சுதந்திரம், விடுதலை ஆகிய இரண்டு சொற்களையும் அவர் கையாண்டிருக்கிறார். இன்று, சுதந்திரம் என்பது வடசொல் என்றும் அதற்கு நிகரான தமிழ்ச் சொல் விடுதலை என்றும் கருதப்படுகிறது. விடுதலை என்னும் சொல்லை உருவாக்கியவர் பாரதியாகத்தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன். சுதந்திரம், விடுதலை ஆகிய இரண்டையும் வெவ்வேறு பொருள்களில் பாரதியார் பயன்படுத்துகிறார். சுதந்திரம் என்பது ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா பெற வேண்டியதாகும். விடுதலை என்பதற்கு அப்படி ஒரு குறிப்பான பொருளைத் தர முடியாது. தனிமனிதன் அல்லது சமூகம், தன்னைப் பிணித்திருக்கும் தளைகளிலிருந்து விடுபட்டு மீள்தல் விடுதலை என்று கொள்ளலாம்.

பாரதியார் 'சுதந்திரப் பள்ளு' பாடியிருக்கிறார் அதில் வரும் 'ஆனந்த சுதந்திரம்', 'நாமிருக்கும் நாடு நமக்கே உரிமை' ஆவதைக் குறிக்கும். பரங்கியரை எதிர்த்துப் போராடிப் பெற்ற வெற்றி அது. அதனால்தான் 'சங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே' எனப் பாரதியார் பாடுகிறார். பாரதியார் 'விடுதலை வெண்பா'வும் பாடியிருக்கிறார். அதில் நாட்டுக்குப் பெற வேண்டிய சுதந்திரம் குறித்துப் பேச்சே கிடையாது. முக்திநிலை, வீடுபேறு, சுகம் ஆகியவை பற்றிப் பேசும் அப்பாடலில் 'வேலைப் பணிந்தால் விடுதலையாம்' என்பார்.

நாட்டுக்காகப் போராடும் வீரரைப் பார்த்து வெள்ளைத் துரை கேட்பது, 'தொண்டு செய்யும் அடிமை-உனக்குச் சுதந்திர நினைவோடா?' என்று. ஆனால், பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் வேண்டியது விடுதலை. சுதந்திரம், உடனடி வேலைத் திட்டத்தால் பெற வேண்டிய ஓர் உரிமை. விடுதலையோ நீண்டகாலத் திட்டத்தால் அடையப்போகும் கட்டறுத்தல். 'சிட்டுக்குருவி' பாடலின் பல்லவி,

விட்டு விடுதலை யாகிநிற்பாய் இந்தச்
சிட்டுக் குருவியைப் போலே

என்று தொடங்குகிறது. முன்னிலையில் உள்ள ஒருவரைப் பார்த்துக் கவிஞர் சொல்வதாகப் பாடல் அமைப்பு உள்ளது. விட்டு விடுதலை ஆகி நிற்பாய் என்று கட்டளை இடும் கவிஞர், அது எப்படி என்பதற்கு ஓர் உவமை சொல்கிறார். 'இந்தச் சிட்டுக் குருவியைப் போலே' என்பது உவமை. சிட்டுக்குருவி எவ்வாறு விடுதலை ஆகி நிற்கிறது என்னும் கேள்வி நமக்கு எழுகிறது. பொருளை விளக்குவதற்கு உவமை பயன்படும். ஆனால் இங்கே உவமையே புரிபடாமல் இருக்கும்போது பொருளை எப்படிப் புரிந்துகொள்வது? ஆகவே கவிஞர் உவமையை விளக்கும் விதமாகப் பாடல் முழுவதையும் அமைத்திருக்கிறார். பல்லவியை அடுத்து வரும் மூன்று சரணங்களும் உவமையாகிய சிட்டுக்குருவியின் இயல்பை விளக்குகின்றன. அத்துடன் அதைப் பின்பற்றச் சொல்லி முன்னிலைக்கு விடுக்கும் கட்டளை வினைச்சொல்லும் இணைந்துகொள்கிறது.

எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு

எட்டுத் திசையும் பறந்து திரியும் இயல்புடையது சிட்டுக் குருவி. அதற்கு எல்லைகள் இல்லை. வரம்பு கட்டி வாழ்தல் அற்ற நிலையைக் குறிக்கிறது முதலடி. 'ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை' என்னும் அடியில் காற்றில் ஏறுதல் என்பது சிறப்புடையது. காற்றில் ஏறி அவ்விண்ணையும் சாடுவோம் என்பதும் பாரதியின் அடிதான். மிகுதி, உயரம் ஆகிய பொருள்களைக் கொண்ட ஏறுதல் காற்றின் வேகத்திற்குப் பொருத்தமான சொல். குருவி போன்ற பறவைகளுக்கு அவ்வாறு காற்றில் ஏறிப் பறத்தல் வெகு சுலபம். இன்னும் சொன்னால் அப்போது பறத்தல் இல்லை. இறக்கைகளை அசைக்காமல் விரித்தபடி காற்றின் திசைக்கேற்ப அனாயாசமாகப் பறக்கும் வான்குருவியின் வெளி நீச்சல் நமக்குக் காட்சியாகின்றது. காற்றுக்கேற்ப மிதந்து செல்லும் குருவி, இயற்கைப் போக்கிற்கேற்ப இயைந்து செல்லும் மன நிலையைக் குறிக்கிறதல்லவா?

வெளியெங்கும் நிறைந்திருக்கும் கதிரொளியை 'மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்கும் வானொளி' என்கிறார் பாரதியார். அதுமட்டுமல்ல. வானொளி என்பது சுவையான மதுவாகிறது. மட்டுப்படாமல் இருப்பது மதுவின் இயல்பு. ஒளியை மதுவாக்கிச் சுவை நுகருதல் என்பதைக் கற்பனை செய்துகொள்ள மனவிரிவு தேவைப்படுகிறது. சிட்டுக்குருவி வானில் பறப்பது, தூரத்தைக் கடப்பதற்காக மட்டுமல்ல, ஒளிமதுவை உறிஞ்சிக் குடிக்கவும்தான். எல்லை அமைத்து வாழ்வோர்க்கு இந்த அனுபவம் கிடைப்பதேது?

அடுத்த சரணம்:

பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
பீடையி லாததொர் கூடுகட்டிக் கொண்டு
முட்டை தருங்குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த உணவு கொடுத்தன்பு செய்திங்கு

இவ்வுலக உயிர்களின் தன்னினம் பெருக்கும் இயல்பை இதில் கூறுகிறார். பாரதியார், ஆணாக இருப்பதால் ஆண் சிட்டுக்குருவியைச் சொல்கிறார் எனக் கொள்ளலாம். அதனால்தான் பெட்டையினோடு பேசுதல் பற்றிக் குறிப்பிடுகின்றார். பெட்டையினோடு இன்பம் பேசிக் களிப்புறுதல் என்பதைக் குருவிகளின் வாழ்வைக் கூர்ந்து கவனித்தால் அறியலாம். மனிதர்களில் கணவன், மனைவியோடு பேசுவதற்கும் அளவு வைத்திருக்கிறான். இன்னின்ன விஷயங்களைப் பற்றி மட்டும் பேசலாம் எனக் கட்டுப்பாடு எப்படியோ வந்திருக்கிறது. அப்புறம், இன்பம் பேசுதலோ இன்பமாய்ப் பேசுதலோ அதனால் கிடைக்கும் களிப்போ எவ்விதம் வரும்?

அடுத்த அடியில் 'பீடையிலாத தொர் கூடு கட்டிக் கொண்டு' என்கிறார். கூடு சரி. அது என்ன பீடையிலாத கூடு? பறவைகள் எல்லாக் காலங்களிலும் கூட்டில் வாழ்வதில்லை. இனப்பெருக்கப் பருவத்தில் மட்டும் முட்டையிடவும் குஞ்சுகளைப் பாதுகாத்து வளர்க்கவும் கூடு கட்டுகின்றன. மற்ற சமயங்களில் மரங்கள் உள்ளிட்ட இயற்கை வழங்கிய இடங்களில் வசிக்கின்றன. ஆனால் மனித வாழ்வில் வீடு என்பது மிகப்பெரும் இலட்சியமாக இருக்கிறது. 'இடம்பட வீடு எடேல்' என்று ஔவையார் சொல்லியிருக்கிறார். ஆனால் ஏக்கர் கணக்கில் வளைத்து வீடு கட்டும் ஆசை கொண்ட மனிதர்கள் ஏராளம். இயற்கைத் தேவைக்காகக் கட்டும் கூடு, பீடை இல்லாததாக அமையும். நுகர்வுக்காகக் கட்டும் வீட்டில் பீடை புகுந்துகொள்வது சாதாரணம். பேசிக் களிப்புறாத வீடுகளில் பீடையின் ஆட்சியே நிலவும். குருவிக்கு வாய்த்திருக்கும் 'பீடையிலாத கூடு' மனிதனுக்குக் கனவுதான். பீடையிலாத கூட்டில் கருக்கொள்வதும் குஞ்சுகளைக் காப்பதும் மகிழ்வான விஷயம். அவற்றால் மகிழ்ச்சியை எய்த முடியும். பசிக்கு முந்தியே உணவு கொடுத்துக் குஞ்சுகளைப் புரக்க இயலும் என்றால் அன்பு செய்வதற்கு எந்தத் தடையுமில்லை. பீடை வீடும் குழந்தை வளர்ப்பைக் கடனே எனக் கொள்வதுமான மனித வாழ்வில் சக மனிதர்கள் மீதல்ல, சக உறவுகள்மீதே அன்பு செய்தல் அருகிப்போய்விட்டது. உறவுகள் முறுக்கிக்கொள்வதும் பகையாவதும் சகஜமாக நடக்கிறது. குருவியின் வாழ்வில் அன்புக்குப் பஞ்சமேது?

மூன்றாம் சரணம்:

முற்றத்தி லேயுங் கழனி வெளியிலு
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று

முந்தைய சரணத்தில் 'முந்த உணவு கொடுத்து' என்றார். உணவு எங்கிருந்து கிடைக்கும்? 'உழைத்தால் உணவு கிடைக்கும்' என்பதாக மனித விடை இருக்கும். ஆனால் முற்றத்திலும் கழனிப் பரப்பிலும் இரைந்து கிடக்கும் தானியங்களே குருவிகளுக்கு உணவாகும். விடுதலை பற்றிய இன்னொரு பாடலில், 'ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்' என்பார் பாரதியார். வயிற்றுப்பாட்டுக்காக நாளெல்லாம் உழைத்துக் களைக்கும் மனிதருக்கு 'உணவு இயற்கை கொடுக்கும்' என்பது எந்த அளவு புரியும்? உணவைப் பெறுதற்குக் குறைந்த நேரம் போதும். மற்ற நேரங்களில் என்ன செய்வது? கதை சொல்லியும் தூங்கியும் இன்பமாய்க் கழிக்க வேண்டியதுதான். கதை சொல்லவும் கேட்கவுமான மகிழ்ச்சியான மனநிலை அமைந்தால் நல்ல தூக்கம் வரும். வைகறை ஆகுமுன் பாடலோடு விழித்து மறுநாளைச் சந்தோசமாய் எதிர்கொள்ளலாம். கதையும் பாட்டுமாய்க் கழியும் வாழ்க்கை குருவிக்கு வாய்த்திருக்கிறது. வைகறையில் எழும் பலவித ஒலிகளைக் காது கொடுத்துக் கேட்கும் நிலையில்கூட மனிதன் இல்லை.

குருவி இயற்கையோடு இயைந்து தன் வாழ்வை மகிழ்வாக்கிக்கொள்கிறது. அதுதான் விடுதலை. 'விட்டு விடுதலை ஆகி நிற்பாய்' என்கிறார். எதை விட்டு? மனிதனைப் பிணித்திருக்கும் பல விதமான புறக் கட்டுகள் அகக் கட்டுகள் எல்லாவற்றையும் விட்டொழித்து என்று பொருள். இந்தக் கட்டுகள் எல்லாம் எங்கிருந்து உருவாகியுள்ளன? மனிதன் தன் வாழ்க்கையில் ஏற்படுத்திவைத்துள்ள விழுமியங்கள் மூலம். 'கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதுமில்லை' என்று விழுமியம் கொண்டிருக்கும் மனிதன், 'மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும் வரம்பு கட்டா விடினும் நீர் பாய்ச்சாவிடினும் வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்களும் வகைவகையாக நெற்களும் புற்களும் மலிந்திருக்கும். ஆகவே, பாடுபடல் வேண்டா' என்று உழைப்பை ஒதுக்கும் பாரதியின் சிட்டுக்குருவி விளக் கத்தை ஏற்றுக்கொள்ள முடியுமா? ஆகவே வாழ்வியல் விழுமியங்கள் என்று மனிதன் வகுத்துக்கொண்டிருக்கும் பலவற்றை, அவற்றால் உருவாகியுள்ள பேத சமூகத்தை, குறுகிய மனத்தை என்று அனைத்தையும் 'விட்டு விடுதலை ஆகி நிற்பாய்' என்கிறார் பாரதியார்.

இயற்கையில் இணையும் மன விரிவைக் குருவியைக் கொண்டு உணர்த்துகிறது பாரதியின் இந்தக் கவிதை. குருவியாய்த் திரிதல் கனவாகலாம். கனவிலேனும் மகிழ்வெய்தி அன்பு செய்து வாழலாம்.

உள்ளடக்கம்

Google Ads.....


Google