நவீனத் தமிழ் வாழ்க்கையின் தரம்
உயர்ந்துகொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. இன்று சென்னையில் புதிதாய்த் திறக்கப்படும்
கடை, ஒன்று துணிக் கடையாய் இருக்கிறது அல்லது உணவகமாய் இருக்கிறது.
பாரதி காலத்தில், அவனுக்கு அடுத்த பத்தாண்டுகளில்... வெறும் சோற்றுக்கு வந்த
பஞ்சமும் நாட்டுத் துணிக்கே ஆலாய்ப் பறக்கும் அவலமும் இருந்தன. துணி, விரும்பி தேடி
காத்திருந்து பெறும் பொருளாகவே தமிழ்ச் சமூகத்தில் இருந்திருக்கிறது. இரண்டு நவீன
எழுத்தாளர்கள் பாரதியின் நூல் பதிப்பு குறித்த பேச்சில் துணி, அதுவும் பருத்தித்
துணி பற்றிய உதாரணங்களையே பயன்படுத்தியிருக்கின்றனர்.
'பாரதி பிரசுராலய'ப் பதிப்புகள் பற்றிய விமர்சனத்தில் பாரதி நூலைச் சிரத்தையுடன்
பதிப்பிக்க வேண்டும், அது வெறும் வியாபாரப் பண்டம் அல்ல என்று சொல்லவந்த
புதுமைப்பித்தன் (1937) பாரதியும் பருத்தித் துணியும் ஒன்றல்ல என்கிறார். இதே
காலத்தில் பாரதி பிரசுராலய நிர்வாகிகளுள் ஒருவரான பாரதியின் தம்பி சி. விசுவநாதய்யர்,
பாரதியின் நூலாக வெளிவராத கட்டுரைகளைத் தொகுத்துப் பதிப்பிக்க வ.ரா.வை அணுகுகிறார்;
இவ்வேண்டுகோளை மகிழ்ச்சியுடன் ஏற்கும் வ.ரா., பாரதியின் கட்டுரைகளைத் தானே தேடிப்
படித்து, திளைத்து, இப்படி ஒரு நூலாக்கும் எண்ணம் கொண்டிருந்த நேரத்தில், அதைச்
செய்ய ஒருவர் வந்து கேட்டுக்கொண்டதை "பருத்தி, புடவையாகக் (வேஷ்டியாகவும்) காய்த்த
சந்தோஷ சங்கதி" என்று வர்ணிக்கிறார். காரியம் சுலபமாய் ஆனதைக் குறிக்கும் பழமொழியாக
இருந்தாலும், உவமை பருத்தித் துணி பற்றியதாய் இருந்திருக்கிறது.
பருத்தி நன்கு விளையும் கரிசல் பூமியில் பிறந்த பாரதியின் தந்தையின் வாழ்வு பஞ்சாலை
வைத்து நைந்துபோனதற்கும், 'பஞ்சுப்பொதி போல் படர்ந்த திருவடிவம்' என்று குயில்
பாட்டில் வரும் (மாட்டின்) வர்ணனைக்கும் இந்த உதாரணங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.
பஞ்சாலை என்கிற நவீன எந்திரம் தமிழகத்துக்கு வந்து நிலைபெற்று அதன் தொடர்பில்
பருத்தித் துணிகள் பரவலாக வியாபாரத்திற்கும் புழக்கத்திற்கும் வந்து விட்டிருந்த
புதிய காலச் சூழலில் நவீனத் தமிழ் எழுத்தாளர் இருவருக்கு இந்த உதாரணம்
தோன்றியிருக்கிறது.
பாரதி நூல்களின் பதிப்பு முயற்சியைப் பாரதி காலம், பாரதிக்குப் பிறகு என்று
இரண்டாகப் பிரித்துப் பார்த்தாலும், இரண்டு காலத்திலும் முயற்சி செய்தவர்கள் இருவர்.
ஒருவர் பரலி சு. நெல்லையப்பர்; மற்றவர் வ.ரா. என்கிற வ. ராமசாமி ஐயங்கார். இதில்
பாரதியின் சமகாலத்தவராக, அவரோடு நெருங்கிப் பழகி, பாரதியை மகாகவியாக நிலைநிறுத்தப்
பாடுபட்ட வ.ரா.வின் பாரதி நூல் பதிப்பு முயற்சிகளைப் பார்ப்பதே இக் கட்டுரையின்
நோக்கம்.
"திருப்பயணம் வி. ராமஸ்வாமி அய்யங்கார் என்னிடம் 'விநாயகர் ஸ்தோத்திரம்' (தமிழ் நூல்)
அச்சிட வாங்கிக்கொண்டுபோனார். இன்னும் அச்சிட்டனுப்பவில்லை... 'விநாயகர் ஸ்தோத்திரம்'
வேலையை விரைவில் முடித்துப் புஸ்தகங்களனுப்பும்படி சொல்லு..." என்று பாரதி
(3.8.1919இல்) சி. விசுவநாத ஐயருக்கு ஒரு கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் திருவையாற்றுக்கு அருகே உள்ள
திருப்பழனம், பாரதி எழுத்தில் திருப்பயணம் என்றாகியுள்ளது. அவ்வூரைச் சேர்ந்த இளைஞர்
வரதராஜன் ராமஸ்வாமி ஐயங்கார் (1889-1951) பாரதியோடு இரண்டரை ஆண்டுக் காலம்
புதுவையில் வாழ்ந்தவர். 'விநாயகர் ஸ்தோத்திரம்' என்று கடிதத்தில் பாரதி குறிப்பது,
பாரதி பாடல் தொகுப்பில் உள்ள விநாயகர் நான்மணிமாலைதானா என்பது உறுதிபடத் தெரியவில்லை.
இரண்டும் ஒன்றா வேறு வேறா என்பதைத் தெளிய நம்மிடம் போதுமான தகவல்கள் இல்லை. 'ஸரஸ்வதி
ஸ்தோத்திரம்', 'கலைமகளை வேண்டுதல்' என்றும், 'ஸ்ரீ கிருஷ்ண ஸ்தோத்திரம்', 'சுதந்திர
தாகம்' என்றும் பாரதியின் பாடல் தலைப்புகள் பின்னாளில் பெயர்மாறிப் பதிவாகி
இருக்கின்றன. இம்மாதிரி தலைப்பு மாறிய பாடல்களில் ஒன்றாக இதைக் கருதி விநாயகர்
ஸ்தோத்திரமே நான்மணிமாலை ஆகி இருக்கலாம் என்று கருத இடமுண்டு. விநாயகர் நான்மணிமாலை
பாரதி மறைந்த பிறகுதான் (1929) முதலில் வெளிவந்தது. வெண்பா, கட்டளைக் கலித்துறை,
ஆசிரிய விருத்தம், அகவல் என்று நான்கு யாப்பில் நிரல் அமைப்பும் அந்தாதித் தொடையும்
இயைய 40 பாடல்களும் கொண்டு 'நான்மணிமாலை' என்ற இலக்கணப்படி அமைந்துள்ளதால்
ஸ்தோத்திரம் நான்மணிமாலை என ஆகி இருக்கலாம்.
நமக்குத் தொழில் நாட்டிற்கு உழைத்தல்
இமைப் பொழுதும் சோராதிருத்தல்
அச்சமில்லை அமுங்குதல் இல்லை
நடுங்குதல் இல்லை. நாணுதல் இல்லை
பாவமில்லை... பதுங்குதல் இல்லை
பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
பொய்க்கும் கலியை நான் கொன்று
பூலோகத்தார் கண் முன்னே
மெய்க்கும் கிருத யுகத்தினையே
கொணர்வேன் - தெய்வ விதி இஃதே.
என்பன போன்ற புகழ்பெற்ற தொடர்கள் எல்லாம் இந்த விநாயகர் வேண்டுதலில்தான்
இடம்பெற்றுள்ளன. புதுவை மணக்குள விநாயகர்மீது பாடப்பட்டதாகக் கருதப்படும் இந்நாற்பது
பாடலும் புதுவை மணக்குள விநாயகர் கோயில் உள்பிரகாரத்தில் சலவைக் கல்லில் இப்பொழுது
பொறிக்கப்பட்டுள்ளன. கோயில் சார்ந்த மனஅமைப்புக்கு முற்றிலும் எதிரான, மனித
முயற்சியைக் கொண்டாடும் தொடர்கள் பற்றிய பிரக்ஞை சிறிதுமின்றி மக்கள் வலம் வருவது,
பொய்க்கும் கலியை நினைவுக்குக் கொண்டுவருகிறது. தெய்வ விதி அது என அவர்கள்
நினைக்கலாம். சீர்திருத்த எழுத்தாளர் வ.ரா.வை இப்பாடல் வரிகள் கவர்ந்திருக்கும்
என்பதில் என்ன சந்தேகம்? எனவே அவர் இப்பாடலைப் பதிப்பித்து நூலாக்க எண்ணி
பாரதியிடமிருந்து வாங்கிப்போயிருக்கலாம். ஆனால் இந்த முதல் பதிப்பு முயற்சி
ஈடேறவில்லை. பாரதி பற்றிப் பின்னாளில் எவ்வளவோ எழுதிய வ.ரா. இம்முயற்சி பற்றி
எங்கும் குறிப்பிடவுமில்லை.
பாரதி செய்த கடுமையான முயற்சிகளால் அவர் வாழுங்காலத்தில் சில நூல்கள் பதிப்புக்
கண்டன. பாரதியின் நண்பர் பரலி சு. நெல்லையப்பர் இதற்கு உதவிசெய்தார். மறைவிற்குப்
பிறகு பாரதியின் மனைவி செல்லம்மா, பாரதி ஆச்ரமம் நிறுவி, அதன்வழி பெரும் கனவு கண்டு
சில பதிப்புகள் செய்தார். பின்னர் பாரதியின் தம்பி சி. விசுவநாத ஐயர், நடராஜன்,
ஹரிஹர சர்மா ஆகியோர் உதவியுடன் பாரதி பிரசுராலயம் மூலம் பாரதியின் படைப்புகளைப்
பெருமளவு கொண்டுவந்தார். பாரதியின் முன்னர் வெளிவந்த நூல்களையும் நூல்களாக வெளிவராத
பாரதியின் கையெழுத்துப் பிரதிகளையும் அவர்கள் வெளியிட்டனர். ஆனால் பாரதி எழுதிய
பத்திரிகைக் கட்டுரைகளைச் சேகரித்து, தொகுத்து வெளியிட அவர்களால் இயலவில்லை.
பாரதி வேலை செய்த சுதேசமித்திரன் இதழில் வெளிவந்த பாரதி எழுதிய கட்டுரைகளைத்
தொகுத்து வெளியிட வ.ரா. தானே விரும்பி முயன்றிருக்கிறார். இதுவே வ.ரா.வின்
இரண்டாவது பதிப்பு முயற்சி. சுதேசமித்திரனின் அப்போதைய ஆசிரியர் சி.ஆர். சீனிவாசன்
அவர்களிடம் அனுமதி பெற்று, வ.ரா. பழைய சுதேசமித்திரன் இதழ்களைப் பார்க்கத்
தொடங்கினார்.
... பாரதியாரின் அநேக எழுத்துகள் பிரசுரமாகாமலே போய்விடுமோ என்ற பயம் எனக்கு
உண்டாயிற்று. இந்த நிலைமையை என்னால் மனத்தில் எண்ணக்கூட முடியவில்லை. என்னைப் போலவே
பாரதியாரின் பக்தர்களான எங்கள் கோஷ்டிப் பத்திரிகாசிரியர்களுக்கெல்லாம் தாங்க
முடியாத துக்கம். எனக்கு ஒரு யோசனை தோன்றிற்று. 'கதா மாலிகை' முதலிய நூல்களில்
பிரசுரமானது போக பாக்கி சுதேசமித்திரனில் வந்த எழுத்துக்களை ஒன்று திரட்டி, நான்
ஏன் வெளியிடக் கூடாது என்று தோன்றிற்று. பல வருஷங்கள் பாரதியாரோடு புதுச்சேரியில்
வாழ்ந்த நான், அதுகூடச் செய்யாமற்போனால் அவருக்குத் துரோகம் செய்தவனாவேன் என்ற
எண்ணமும் ஏற்படவே சுதேசமித்திரன் ஆசிரியர் ஸ்ரீமான் ஸி.ஆர். சீனிவாசன் அவர்களை இது
விஷயமாகக் கேட்டேன். நான் கேட்டதுதான் தாமதம். கற்பனை செய்ய முடியாத
பெருந்தன்மையுடன் அவர் என் வேண்டுகோளுக்கு உடனே இசைந்தார்.
என்று வ.ரா. தன் முயற்சியைக் குறிப்பிடுகிறார். இந்த முயற்சி 1934இன் முற்பகுதியில்
நிகழ்ந்ததாகத் தெரிகிறது (சுதந்திரச் சங்கு, 8.6.1934). இம்முயற்சி தொடர்ந்ததாகவோ
வெற்றி பெற்றதாகவோ தெரியவில்லை. இந்தச் சமயத்தில் பாரதி பிரசுராலயம் சார்பாக சி.
விசுவநாதன் வ.ரா.வைப் பதிப்புத் தொடர்பாக அணுகியிருக்கிறார். அது வ.ரா.வின்
மூன்றாவது முயற்சியாக உருவாகிறது.
சி. விசுவநாதன், வ.ரா.வைப் பதிப்புத் தொடர்பாக அணுகும்போது, பாரதியின் பதிப்புகள்
இருந்த நிலைமையைப் பார்க்கலாம். பாரதி காலத்தில் வந்தவை (19 நூல்கள்), பின்னால்
பாரதி ஆச்ரமம், பாரதி பிரசுராலயத்தார் வெளியிட்டவை (19 நூல்கள்) ஆகும். கீதங்கள்,
பகவத் கீதை, ஞானரதம், சந்திரிகையின் கதை முதலியன தவிர, சுதேசமித்திரன் தானே
வெளியிட்ட 'கதா மாலிகை' என்ற இவற்றைக் குறிப்பிட்டு வ.ரா இவ்வாறு கூறுகிறார்.
மேற்சொன்ன பிரசுரங்களோடு (பாரதியின் எழுத்துகள்) பூர்த்தி அடைந்துவிட்டதாக எவரும்
எண்ண வேண்டாம். புஸ்தக வடிவமாகப் பிரசுரமாகாத அபூர்வமான எழுத்துகள் எவ்வளவோ
பாக்கியிருக்கின்றன. பாரதியின் அகால மரண நஷ்டத்தோடு, இந்தப் பிரசுரமாகாத நஷ்டமும்
தமிழ்நாட்டுக்கு ஏற்படலாகாதே என்று நினைத்து, நினைத்து நான் ரொம்பவும்
வருத்தப்பட்டதுண்டு.
வ.ரா. தானே சுதேசமித்திரன் கட்டுரைகளை வெளியிட முயன்றுகொண்டிருக்கையில்தான் சி.
விசுவநாதய்யர் வ.ரா.வைச் சந்தித்து, பாரதியின் எழுத்துகள் அனைத்தையும்
பதிப்பிக்கும் வேலையைச் செய்து உதவும்படி கோருகிறார்.
பாரதியின் எழுத்துகள் அனைத்தையும் சோதித்து, பரிசீலனை செய்து, தொகுக்கவும்,
முகவுரை, விமர்சனம் முதலிய பொறுப்பை என்னிடம் தந்து பாரதியாரின் பெருமையைத்
தமிழ்நாட்டுக்கு நன்கு எடுத்துக் காண்பிக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டார். இது
எனக்கு, பருத்திப் புடவையாகக் (வேஷ்டியாகவும்) காய்த்த சந்தோஷ சங்கதி.
என்று வ.ரா. இதனைக் குறிப்பிடுகிறார் (சுதந்திரச் சங்கு, 8.6.34). இந்தக் குறிப்பு
வெளிவருவதற்கு ஏழு நாள்கள் முன்பு, புதுமைப்பித்தனுக்கு வ.ரா. எழுதிய கடிதம்
ஒன்றில் (1.6.1934) இப்பொறுப்பைப் பெற்ற செய்தியை மகிழ்ச்சியோடு
பகிர்ந்துகொள்கிறார்.
ஸ்ரீ புதுமைப்பித்தனுக்கு,
நமஸ்காரம். புதுமைப்பித்தனுக்கு, கசங்கின, பழைய காகிதத்தில் எழுதுவது தவறு
என்றாலும் பழைய சாராயம், பழைய மனைவி முதலியவை உயர்ந்தவை என்று சொல்லுகிறார்கள்.
நான் கலியாணமாகாதவன்* என்ற சேதி உங்களுக்குத் தெரியுமோ? தெரியாதோ?
ஆனால் பழைய காகிதங்களிலே எனக்குப் பித்து அதிகம். இப்பொழுது, சிறிது காலமாக
சுதேசமித்திரன் பழைய பயிலைப் புரட்டிக்கொண்டிருக்கிறேன். பாரதியாருக்காக.
பாரதியாரின் எழுத்துக்களை எடிட் செய்து வெளியிடும் பாக்கியம் எனக்குக்
கிடைத்திருக்கிறது."
பாரதியின் பாடல் தொகுப்புக்கு மற்றவர் முகவுரை, முன்னுரை எழுதும் வழக்கம், பாரதி
வாழ்ந்த காலத்திலேயே தொடங்கிவிட்டது. 'முரசு', 'பாப்பா பாட்டு' ஆகியவற்றுக்குப்
பரலி. சு. நெல்லையப்பர் முகவுரை எழுதுகிறார். (1917, 1918). 'கண்ணன் பாட்டு'க்கு
(1919) வ.வே.சு. ஐயர் எழுதுகிறார். பாரதி மறைவிற்குப் பிறகு பாரதி ஆச்ரமம், பாரதி
பிரசுராலய முயற்சிகளில் செல்லம்மா, நாவலர் சோமசுந்தர பாரதியார், எஸ். சீனிவாச
ஐயங்கார் (1922), சர்க்கரைச் செட்டியார் (1927) ஆகியோர் முன்னுரை எழுதி, பாரதியைத்
தமிழ்ச் சமுதாயத்தினருக்கு இனம் காட்டினர். இந்த வரிசையில் பாரதியோடு நெருங்கிப்
பழகியிருந்த வ.ரா.வைப் பிரசுராலயத்தினர் அணுகுகின்றனர். இலக்கியப் படைப்பாளி
என்பதனால் எடிட் செய்யவும் கேட்டுக்கொள்கின்றனர்.
இம்மூன்றாவது முயற்சியும் எந்தப் பயனையும் அளித்ததாகத் தெரியவில்லை. பதினாறு
ஆண்டுகளில் வெளியான சுதேசமித்திரனின் தினசரிப் பத்திரிகை, வாரம் மும்முறை ஆகியவற்றை
எழுத்தாளர் பெ. தூரன் பார்த்து, எடுத்து பாரதி தமிழாக (1953) வெளியிடும்போது வ.ரா.
மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன.
இதுவரை பேசியவற்றைத் தொகுத்துப் பார்க்கலாம்.
பாரதியின் நூல்களைப் பதிப்பிக்க வ.ரா. எடுத்துக் கொண்ட முயற்சிகள் நமக்குத்
தெரிந்து மூன்று. பாரதி வாழ்கையில்-1910களில்-ஒன்று. பாரதி மறைந்த பிறகு 30களில்
இரண்டு. முதல் முயற்சி பற்றி வ.ரா.வின் வார்த்தைகளில் நமக்குத் தகவல்கள் இல்லை.
இரண்டாவது முயற்சி வ.ரா. தானே மேற்கொண்டது. மூன்றாவது, பாரதியின் தம்பி
கேட்டுக்கொண்டதன் பேரில் தொடர்ந்தது.
வ.ரா.வின் இப்பதிப்பு முயற்சிகள் தமிழ்ப் பதிப்பு வரலாற்றில் மையம் கொள்வதாக
மதிப்பிடலாம். பதிப்புப் பணி என்பது தமிழகத்தில் தொழிலாக மாறாத காலகட்டத்தில்
இம்முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. கல்வி வளர்ச்சியும் படிப்போர் சதவீதமும் மிகக்
குறைந்த காலகட்டத்தில் இவை நடந்து முடிந்திருக்கின்றன. பதிப்பாளர்கள்,
ஆசிரியர்களைத் தேடும் இன்றைய சூழலில், பாரதியாரின் பதிப்பு முயற்சிகள் ஒரு பக்கம்
வேடிக்கையாகவும் மற்றொரு பக்கம் வேதனையாகவும் தோன்றுகின்றன.
பதிப்புத் தொழில் நன்றாக வளர்ந்த நாடுகளில் ஆசிரியர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும்
இடையில் முகவர்கள் உண்டு. 'ஏஜெண்ட்' என்ற சொல் தமிழ்ச் சூழலில் இழிவழக்காக உள்ளது.
அயல்நாடுகளில் அப்படி இல்லை. ஏஜெண்டுகள், பல்துறை ஞானம் உள்ளவர்களாக இருப்பார்கள்.
மக்களின் நாடி தெரிந்தவர்களாக, புத்தக உள்ளடக்கம், அதன் தாரதம்மியம், விற்பனை
முதலிய எல்லா அம்சங்கள் பற்றிய அறிவுமுடையவர்களாக இருப்பார்கள். ஆசிரியர்க்கும்
பதிப்பாளர்க்கும் பாலமாகத் திகழ்வார்கள். பதிப்பாளர்க்கு என்ன தலைப்புகளில் நூல்
வெளியிடலாம் என்ற ஆலோசனை தரும் நிலையில் இருப்பார்கள். ஆசிரியர்க்கும் இது
விஷயத்தில் உதவுவார்கள்.
'விநாயகர் ஸ்தோத்திரம்' பதிப்பு முயற்சியில் வ.ரா.வின் பங்கை இந்த வகை முகவர்
வேலையாகத்தான் கருத வேண்டும். பதிப்பாளர் என்ற இனம் தோன்றாத பதிப்புலகச் சூழலில்,
பதிப்புச் செலவுக்கு நண்பர்களை அவர் நம்பி இருந்திருக்கலாம். அரவிந்தருக்குத் தன்
வழியாகப் பணவுதவி செய்த கொடியாலம் ரங்கசாமி ஐயங்காரை நம்பி இருந்திருக்கலாம்;
தன்னுடைய சுந்தரி நாவல் பிரசுரத்திற்கு உதவிய டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜனின் உதவியைக்
கோரியிருந்திருக்கலாம். எப்படியோ நிறைவேற்றிவிடலாம் என்று நம்பி வாங்கிய
கையெழுத்துப் பிரதியை அவரால் அச்சிட இயலவில்லை. இதே காலத்தில் இவ்வகை முகவர்
பணியைச் செய்த பரலி சு. நெல்லையப்பர் வெற்றி பெற்றார்.
இரண்டாவது முயற்சி, சுதேசமித்திரன் கட்டுரைகளைத் தேடியெடுத்துத் தொகுத்து,
வெளியிடும் தொகுப்பாளர் பணி. இது ஆசிரியர் பணிக்குரிய அறிவையும் ஆராய்ச்சிப்
பணிக்குரிய உழைப்பையும், பெரிய பரப்பில் இயங்குவதற்குரிய தகவல் அறிவையும்,
மேலதிகமாகப் பொறுமையையும் வேண்டுவது. இதன் முதல் பகுதி அச்சுக்குரிய பிரதி
தயாரிப்பது. இரண்டாவது பகுதி, அச்சிடுவது. இதைப் பார்த்துக்கொள்ள பாரதி பிரசுராலய
சி. விசுவநாதன் முன்வந்துவிட்டார். இந்த முதல் பகுதி கடுமையானது.
வ.ரா. பதிப்பாசிரிய இயல்பு கொண்டவரேயல்லர். ஆவேசம் மிக்க படைப்பாளி அவர்.
உணர்ச்சிகளின் திசை காட்டலில் பயணம் செய்பவரால் நிதானம் தேவைப்படும் பதிப்புப்
பணியை எப்படிச் செய்ய முடியும்? பதிப்புப் பணி பொறுமையைக் கோருவது, உழைப்பை
வேண்டுவது, தேடலை அவாவுவது, சள்ளை பிடித்தது, கவனம் சிதறாத ஒருமையை வேண்டுவது,
தொடர்ச்சியைப் பரவுவது. வ.ரா. உணர்ச்சி ஆவேசம் பிடித்துந்த சொல் விரித்தாடிய
பொங்கும் கடல். ஆகவே இரண்டாவது முயற்சியும் விளைவேதுமின்றிக் கழிந்தது.
மூன்றாவது முயற்சி, பாரதியின் வெளிவராத கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட பாரதி
பிரசுராலயம் கேட்டுக்கொண்டதை நிறைவேற்றும் முயற்சி. இது ஆசிரியப் பணி போன்றது.
கூடவே எடிட்டர் என்றும் சேர்த்துக்கொள்ளலாம். தொகுப்பாளர் என்பதைவிட இது மேலான
வேலை. பதிப்பகங்களில் செயல்படும் தொழில்முறை எடிட்டர்கள், பல சமயம்
ஆசிரியர்களைவிடவும் திறமை வாய்ந்தவர்களாக விளங்குவார்கள். அந்த எடிட்டர் வேலை அல்ல
இது; அதற்கும் மேலானது. அவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உணர்வுபூர்வமான ஈடுபாடு
எதுவும் இருக்காது. அதனால் சார்பின்றி இருப்பார்கள். அதனால் ஒரு வகையில் பணி,
வாசகரை நோக்கியதாகக் கூர்மை அடையும். ஆனால் இங்கே என்னதான் வாசகரைக்
கவர்ந்திழுக்கும் வசன நடை கைவந்த வல்லாளராக வ.ரா. இருந்தாலும் எடிட் செய்பவருக்கு
எழுத உரிமை இல்லையே. அதோடு பாரதியிடம் வ.ரா.வுக்கிருந்த உணர்வுபூர்வமான ஈடுபாடும்
வ.ரா.வைச் செயல்படாது அடித்திருக்கலாம்.
"சுதேசமித்திரன் பழைய பயிலை நான் புரட்டிப் பார்க்கையில் எனக்கும் பசி, தாகம்
ஒன்றுமே எடுக்கவில்லை. எழுத்துக்கள் அவ்வளவு ஸ்வாரஸ்யமாயிருக்கின்றன" என்று வ.ரா.
குறிப்பிடுகிறார். இப்படி இருக்கிற உற்சாகம், ஈடுபாடு தேவைதான். ஆனால் அது பலசமயம்
வேலை முடிவதைத் தடுத்துவிடும்; அப்படித்தான் இங்கு நடந்திருக்கக்கூடும்.
உ.வே.சா.வும் பதிப்பித்தார்; ஆனால் அவருக்கு நூல்கள் மண்ணெண்ணெய், தீப்பெட்டி போல
எல்லோர்க்கும் எளிதாய்க் கிடைக்க வேண்டும், வெளிநாட்டு நூல்கள் போல அழகாகவும்
இருக்க வேண்டும் என்றெல்லாம் நூல் விலை, நூல் தரம், நூல் விற்பனை ஆகியன பற்றி
பாரதிக்கு இருந்ததுபோலக் கனவுகள் கிடையாது. உ.வே.சா. லௌகீகம் தெரிந்தவர். அதனால்
அவர் நூல்கள் சிரமத்துக்கிடையிலும் பதிப்புகள் பல கண்டன. பதிப்பு தொழிலாக மாறாத
காலத்தில், தொழில் மூலமாகக் கிடைக்கும் உச்சபட்ச விளைவைக் கனவு மூலமாக பாரதி
கண்டார். அது பருத்திச் செடி, பருத்தித் துணியாகக் காய்ப்பதை எதிர்பார்ப்பது.
உள்ளங்கையில் தண்ணீரை ஏந்தும் முயற்சி. ஏந்தலாம்; அதற்குத் தண்ணீர் பனிக்கட்டியாக
ஆகும் காலம்வரை காத்திருக்க வேண்டும். பஞ்சிலிருந்துதான் துணி நெய்ய முடியும்.
பருத்திச் செடியிலிருந்து அல்ல.