பள்ளி நாள்களிலேயே எனக்கு என்னையறியாமல் பாரதி பேரில் மோகம். பத்தாம் வகுப்பில்
படித்துக்கொண்டிருந்த சமயத்திலேயே நான் வாங்கிய புத்தகம் கல்கி எழுதிய 'பாரதி
பிறந்தார்'. என்னுள் பாரதி சக்தியைப் பாய்ச்சிய முதல் நூல் அது. அன்றைய தினமுதல்
எனக்குப் பாரதி நூல்களைப் படிக்க வேண்டும் என்ற தாகம் உண்டானது. பள்ளி
நூலகத்தினின்றும் பொது நூலகங்களிலிருந்தும் பாரதி நூல்களை எடுத்துப் படிக்க
ஆரம்பித்தேன்.
ஆரம்ப காலங்களில் பாரதி படிப்பாளனாக இருந்த நான், 1962ஆம் ஆண்டில் பாரதி நூல்
பதிப்பாளனாக மாறிவிட்டேன்.
1962 டிசம்பர் 11ஆம் நாளை மகாகவி பாரதியின் 81ஆவது பிறந்தநாள் விழாவாகக் கொண்டாட
அன்றைய தமிழக அரசு முடிவு செய்தது. அந்தச் சமயத்தில் என் அளவில் பாரதி இயலுக்கு
ஏதேனும் பங்களிப்பைச் செய்ய வேண்டும் என்ற ஆசை பிறந்தது. அதன் காரணமாகப் பாரதியின்
அருமை பெருமைகளை விளக்கிப் பல்வேறு காலங்களில் பல்வேறு அறிஞர் பெருமக்கள் எழுதிய
படைப்புகளைத் திரட்டி, தொகுத்துத் தமிழகம் தந்த மகாகவி என்னும் தலைப்பில் நூலாக
வெளியிட்டேன்.
இதன்பின், கோவை மெர்க்குரி புத்தக கம்பெனிக்காக 1969ஆம் ஆண்டு என் தேடலில் கிடைத்த
பழைய - அரிய பாரதி நூல்களை ஆதாரமாகக் கொண்டு, தேவையான பாட பேதங்களை அடிக்
குறிப்புகளாக இட்டுப் பாரதியார் கவிதைகள் தொகுதியைத் தயாரித்து அளித்தேன். இத்தொகுதி
பின்பு விரிவாக்கம் செய்யப்பட்டது.
1977-1979க்குமான இடைப்பட்ட காலப் பகுதிகளில் ஏற்கனவே வெளிவந்திருந்த பாரதியார்
கட்டுரைகளினின்றும் சிலவற்றைத் தெரிந்தெடுத்துச் சிறுசிறு நூல்களாக வெளியிட்டேன்;
நண்பர் திரு. டி.வி.எஸ். மணி அவர்களுக்காகவும் பாரதி நூல்களைத் தொகுத்துத் தந்தேன்.
1979இலிருந்துதான் முறையாகத் திட்டமிட்டு, பாரதி நூல்களைப் பதிப்பிக்கும்
முயற்சிகளிலும் பாரதி தொடர்பான இதழ்களையும் நூல்களையும் ஆவணங்களையும் ஆதாரங்களையும்
தேடிப்பெறும் வேட்டையிலும் ஈடுபட்டேன். இந்தச் சந்தர்ப்பத்தில்தான் எனக்குப்
பாரதியின் இளவல் சி. விசுவநாத அய்யரின் பரிச்சயமும் கிட்டியது.
தேடல் முயற்சிகளில் ஈடுபட்டபோது, நான் பாரதி தொடர்பான நூல்களையும் பழைய
பத்திரிகைகளையும் படிக்க முற்பட்டேன். குறிப்பாக, ஏ.கே. செட்டியாரின் குமரிமல'ரிலும்,
தாமரை இதழில் ரகுநாதன் எழுதிய கட்டுரைகளிலும் பாரதி ஆசிரியராக இருந்த மாதப்
பத்திரிகையான சக்ரவர்த்தினி பற்றிய செய்திகளைப் படித்தேன். பத்திரிகையின் ஒரு சில
இதழ்களே கிடைக்கப் பெற்றுள்ளன என்பதாகவும் அறிந்துகொண்டேன். ஆக, சக்ரவர்த்தினி
இதழ்ப் பிரதிகள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியவை என்பதை அறிந்த நான், அதற்கான
முயற்சியில் ஈடுபட்டேன். பழைய பேப்பர் கடைக்காரர்களிலிருந்து மூர்மார்க்கெட் புத்தக
வியாபாரிகள்வரை எல்லோரிடமும் சொல்லிவைத்தேன்.
எதிர்பாராத விதமாக, குளித்தலையில் தமிழ்க் கா.சு. நினைவு நூலக நிறுவனர் இளமுருகு
பொற்செல்வி அவர்களிடம் அவை இருப்பதாகத் தெரியவந்தது. முன்பின் அறிமுகம் இல்லாத
அவரைத் தொடர்புகொண்டேன். அவரும் மனமுவந்து இதழ்ப் பிரதிகளை அளித்தார்.
அப்பத்திரிகையில் பாரதி எழுதியவற்றைப் பதிப்பித்து வெளியிட்டேன்.
பாரதியார் ஆசிரியர் ஸ்தானத்தில் இருந்த பத்திரிகையைப் பெற்றதிலிருந்து, இனியும்
தொடர்ந்து இயன்றவரை நூலாக்கம் பெறாத - எளிதில் பார்வைக்குக் கிடைக்காத - பாரதி
எழுத்துக்களைத் தேடிக் கண்டறிவது என்கிற சங்கற்பத்தைச் செய்துகொண்டேன்.
பாரதி முன்னோடிகளில் பலரும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்று சொன்னவற்றையும் வேறு
பலவற்றையும் தேடிக் கண்டுபிடித்து நூலாக்கம் செய்ய வேண்டும் என்கிற ஆர்வத்துடன்
தேடல் முயற்சியில் ஈடுபட்டேன்.
இளமைக்கால முதலாகப் பாரதி பேரில் நான் கொண்ட 'மாறாத' பக்தியும் மோகமும்தான்
என்னுடைய பாரதி தேடலின் தொடக்கப் புள்ளி என்பேன்.
காலவரிசையில் பாரதி படைப்புகளை வெளியிடும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?
1981 பாரதியின் நூற்றாண்டுத் தொடக்க விழா ஆண்டு. இந்த விழாவையொட்டி, புதிய வழியில்
நூல் ஒன்றை வெளியிடவேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
என் தேவைக்காகப் பல சமயங்களில் தமிழ் நூல்கள் விவர அட்டவணைத் தொகுதிகளைப்
பயன்படுத்திவந்தவன் நான். இதை முன்மாதிரியாகக் கொண்டு, பாரதி நூல்களுக்கான விவர
அட்டவணையைத் தயாரிக்க வேண்டும் என்று கருதினேன்.
இது ஆரம்பத்தில் சுலபமாகப்பட்டது. ஆனால், செயலில் ஈடுபட்ட போதுதான் அதன் தன்மை
எனக்குப் புலப்பட்டது; மிகக் கடுமையான உழைப்பு தேவைப்பட்டது. நூல் பிரதிகளைத் தேடி
விவரங்களை அறியப் படாதபாடுபட நேர்ந்தது. பல இடங்களுக்கும் தொடர்ந்தாற்போல் விரிவான
சுற்றுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருந்தது. சம்பந்தப்பட்ட பதிப்பாளர்களுடனும்
நூலாசிரியர்களுடனும் கடிதத் தொடர்பு கொள்ள நேர்ந்தது.
இந்த வகையில் எனக்கு ஒரு சிலருடைய ஒத்துழைப்புதான் கிடைத்தது. பாரதி நூல்கள்
பதிப்பித்தவர்களிடமிருந்து நான் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை. என்றாலும் நான்
மேற்கொண்ட பணியில் சோர்வு கொள்ளாமல் மேற்கொண்ட உழைப்புக்குப் பயன் கிடைத்தது.
இயன்றவரை பெரும்பாலான நூல்களையும் அவற்றிற்கான விவரங்களையும் பெற முடிந்தது.
ஒரு வழியாக விவரங்களை ஒழுங்குபடுத்தி 1981இல் 'மகாகவி பாரதி நூற்பெயர்க்கோவை' என்ற
பெயரில் நூலாக வெளியிட்டேன்.
நூற்பெயர்க்கோவை நூலைத் தொகுத்துவந்தபோது, பாரதியைக் காலவரிசையில் ஆராய்ந்து
பதிப்பிக்க வேண்டுவது அவசியம் என்பதாக உணர்ந்தேன்.
நான் படிக்க நேர்ந்த பாரதி நூல்கள் பலவற்றுள்ளும் காலக் கணக்குக் குழப்பங்களும்
ஆதாரங்கள் தெரிவிக்கப்படாமல் எழுதப்பட்ட குறிப்புகளும் முரண்பட்ட தகவல்களும்
ஆராய்ச்சி என்ற பெயரில் பாரதியின் படைப்புக்களைத் தங்கள் கருத்துக்கேற்ப மேற்கோள்கள்
காட்டிய சமத்காரமான வாதங்களும் என்னைச் சிந்திக்க வைத்தன.
பாரதியின் இலக்கியச் செல்வங்களையெல்லாம் ஒருங்கு திரட்டி, அவற்றைக்
காலவரிசைப்படுத்தினால் பல வித பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம் என்பதாக
எனக்குப் பட்டது.
காலவரிசையில் பாரதியின் படைப்புகள் வெளிவர வேண்டும் என்கிற எண்ணம் எனக்குள்
ஏற்பட்டது 1981இல்தான் என்றாலும் அந்த எண்ணம் நிறைவேற நான் சுமார் 17 ஆண்டுகள்
காத்துக் கிடந்தேன்.
நான் கொண்டிருந்த ஆசை எண்ணத்தின் தன்மையைப் புரிந்துகொண்டு, பூர்த்தி செய்ய
முன்வந்தவர் டாக்டர் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்களேயாவார். அவரைத் தொடர்ந்து
நியூஜெர்சி டாக்டர் என். முருகானந்தம், திரு. பி.கே. சிவகுமார், திரு. ஆர்.
கபாலீஸ்வரன், லண்டன் விமல் ஆகியவர்களும் என் பணிக்கு உதவிட முன்வந்தனர்.
1998இல் முதல் தொகுதியை வெளியிட்ட நான் 2005ஆம் ஆண்டு முடிய ஆறு தொகுதிகளை
வெளியிட்டுவிட்டேன். 2006 டிசம்பர் 11ஆம் தேதி ஏழாம் தொகுதியை வெளியிடுவதற்கான
பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளேன்.
இந்த முயற்சியில் தாங்கள் எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகள் என்ன?
இந்த முயற்சியில் நான் ஈடுபட்டபோது எதிர் கொண்ட இடர்ப்பாடுகள் கொஞ்ச நஞ்சம் இல்லை.
தனி நூலே எழுதலாம்.
பாரதி மறைந்து சுமார் 85 ஆண்டுகள் உருண்டோ டிவிட்டன. இந்த நிலையில், பாரதியின்
படைப்புகளை முறையாகத் தேடுவது என்பதும் தேடிப் பெறுவது என்பதும் அவ்வளவு சுலபமான
காரியமில்லை. மிகமிக மிகக் கடுமையான பணி. இது தவிர, கடின உழைப்பு, போதிய ஒத்துழைப்பு,
சோர்வு கொள்ளாமை, தக்க பணபலம் - இவையெலாம் தேவை.
பாரதி படைப்புகளில் தேடல் பணி என்பது ஒரு காலகட்டத்தோடு முடிந்துவிடக்கூடிய பணியும்
அன்று. தொடர்பணி, விடாமுயற்சியுடன் ஊக்கம் கொண்டு உழைக்கும் மனப்பான்மை கூடுதலாகத்
தேவை. எல்லாவற்றுக்கும் மேலாக நம்பிக்கையும் பொறுமையும் தேவை. இந்த உண்மைகளை என்
தேடல் அனுபவத்தில் தெரிந்துகொண்டேன்.
பாரதி தொடர்பான நூல்களையோ - இதழ்ப் பிரதிகளையோ - வேறு ஆவணங்களையோ வைத்திருந்தவர்களை
நான் அணுகியபோது, அவை அவ்வளவு சுலபத்தில் கிடைத்துவிடவில்லை, அவகாசம் இல்லை என்று
சொன்னவர்கள் உண்டு; தருவதற்கு இல்லை என்று சொன்னவர்கள் பலர்; 'இன்றைக்கு வா;
நாளைக்கு வா' என்று என்னை அலைக்கழித்தவர்களும் உண்டு. பழுதடைந்த நிலையில் உள்ளதால்,
பார்ப்பதற்கு மட்டும் அனுமதி தந்தவர்களும் உண்டு. இப்படி எல்லாவற்றையும்
தாங்கிக்கொண்டுதான் மிகுந்த பொறுமையோடு தேடல் பணியை மேற்கொண்டேன்.
அரசின் ஆவணக் காப்பாகங்கள், அருங்காட்சியகங்கள், தனியார் நூலகங்கள், தனிப்பட்ட நபர்
சேமிப்புகள், தேசிய நூலகங்கள் என நான் தொடர்புகொண்ட அமைப்புகளுக்கும் கணக்கில்லை;
வெளிநாட்டு நூலகங்களோடும் கடிதத் தொடர்பு கொண்டேன். தமிழ்நாடு, வெளிமாநில
நூலகங்களுக்கு நேரடியாகவும் சென்று வந்தேன். இம்மாதிரியான முயற்சிகளை நான் மேற்
கொண்டதால் கணிசமான அளவுக்குப் பாரதி படைப்புகள் கிடைத்தன.
கைபட்டால் நொறுங்கிப்போகும் மிகப் பழமையான பத்திரிகைப் பிரதிகளைக் கவனமாகக் கையாள
வேண்டியிருந்தது; பிரதி எடுத்துக்கொள்வதில் எச்சரிக்கை உணர்வு தேவைப்பட்டது;
சிறியசிறிய எழுத்துகள், சிதைந்துபோன நிலையில் காணப்பட்ட எழுத்துகள் - இவற்றைக்
கண்டறிவதில் கவனமும் எச்சரிக்கையும் தேவைப்பட்டன. அந்தக் காலப் பத்திரிகைகள்
என்றதால் வார்த்தைகள் பிரிவுபட்டுக் காணப்பட்டன. அவற்றுக்குப் பொருள் காண்பதில்
சிக்கல்கள் எழுந்தன. கையால் எழுதிய பிரதியைச் சரிபார்ப்பதிலும் மைக்ரோபிலிம்களைப்
பார்ப்பதிலும் ஏற்பட்ட சிரமங்களைச் சொல்லி மாளாது. சில சமயங்களில் நான் தேடிச்
சென்ற பத்திரிகைப் பிரதிகள் கிடைத்தன; ஆனால், அவற்றில் பக்கங்கள் தொடர்ச்சியாக
இல்லாமல் இருந்தன. ஒருசில பக்கங்கள் கிழிந்த நிலையிலும் இருந்தன.
பாரதியின் புனைபெயர்களை நிர்ணயம் செய்ய வேண்டி நேர்ந்ததால் அவற்றிக்கான மூல
ஆதாரங்களைத் தேடி அலைய வேண்டிவந்தது.
நான் குறிப்பிட்டவை யாவும் இயற்கை இடர்ப்பாடுகளாகும். மறைமுக எதிர்ப்புகளும் உண்டு.
இத்திட்டம் முடிவுற இன்னும் எவ்வளவு காலம் ஆகும்?
அதைத் தற்போது நிர்ணயம்செய்து கூறுவது சிரமம். காரணம், என் கைவசம் இருக்கும் பாரதி
படைப்புகளில் பல எந்தெந்தக் காலப் பகுதிகளில், எந்தெந்தப் பத்திரிகைகளில்
பிரசுரமாகியுள்ளன என்கிற விவரங்களைச் சரிவர அறிய முடியவில்லை. இவற்றிற்கான
ஆதாரபூர்வ மான விவரங்களைக் கண்டறிவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன்.
இதுநாள்வரை நான் தகுந்த ஆதாரங்களைக் கொண்டும் மூலப்பிரதிகளைப் பார்வையிட்டும் பாரதி
படைப்புகளைப் பதிப்பித்துவருகிறேன். இந்நிலைப்பாட்டையே நான் தொடர்ந்து மேற்கொள்ள
உறுதி கொண்டுள்ளேன்.
குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் பாரதியின் திருவருளால் நான்
மேற்கொண்டுள்ள திட்டத்தை நிறைவு செய்ய முடியும் என்று நம்புகிறேன்.
இயற்கை இடர்ப்பாடுகளோடு மறைமுக எதிர்ப்புகளையும் சமாளிக்க வேண்டிய சூழ்நிலையில்
என்னுடைய பணி தொடர்கிறது என்பதை மட்டும் இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவிக்க நான்
கடமைப் பட்டிருக்கிறேன். இந்தத் தகவலையும் பாரதீய உலகம் நினைவில் கொள்ளும் என்று
நினைக்கிறேன்.
பாரதி ஆய்வில் இனிச் செய்ய வேண்டியது என்ன?
பாரதி ஆய்வில் இனியும் செய்ய வேண்டியவை நிறையவே உள்ளன. என்றாலும், உடனடியாக
செயல்படுத்த வேண்டிய யோசனைகளைத் தெரிவிக்கிறேன்.
1. இதுவரை வெளிவந்துள்ள பாரதி நூல் தொகுதிகளில் சேராமல், தேடிக் கண்டறிய வேண்டிய
எழுத்துக்களைத் தேடிப்பெறும் முனைவுகளில் ஈடுபட வேண்டும்.
2. பாரதி படைப்புகளைப் போலவே காலவரிசையில், காலந்தோறும் வெளிவந்துள்ள பாரதி பற்றிய
படைப்புகளையும் பதிப்பிக்க வேண்டும்.
3. பாரதி படைப்புகளுக்கு முறையான சொல்லடைவு நூல் ஒன்று வெளிக்கொணர வேண்டும்.
4. நவீன ஆராய்ச்சி நெறிமுறைகளுக்கு உதவும் வகையிலான பாரதி நூல்களுக்கான விவரணத்
தொகுதிகளை முழுமைப்படுத்த வேண்டும்.