1933இல் முதன்முதலாக ஒரு பாரதி கவிதை நூல் என்வசம் வந்தது. 1928ஆம் ஆண்டுப்
பதிப்பு. அதிலுள்ள கவிதைகள் எனக்கு மிகுந்த உற்சாகம் தந்தன; பாடி மகிழ்ந்தேன்.
அக்காலத்தில் முறையான பாரதி வாழ்க்கை வரலாறு இல்லை. பாரதி ஏன் புதுச்சேரிக்குப்
போனார்? கைதுக்குப் பயந்தா? என்ற சந்தேகம் எழும்படி இருந்தது. அருமையான, வீராவேசம்
தூண்டும் பாடல்களைப் பாடிய கவிஞர் கைதுக்குப் பயந்தவரா? இராது என நினைத்தேன்.
அச்சமயம், பாரதி சீடர் வ.ரா., 'காந்தி' மாத இதழில் பாரதி வாழ்க்கை வரலாற்றை
எழுதலானார். அவர்கூடப் பல சம்பவங்களின் தேதி விவரங்கள் சரிவர நினைவில் இல்லை என்று
குறிப்பிட்டிருந்தார்.
இச்சமயம், ஓர் உறவினர் திருமணத்துக்காக நான் புதுவை செல்ல நேர்ந்தது. அங்கே
பாரதியைக் கண்காணித்த பிரெஞ்சு இந்தியப் போலீஸ் அதிகாரியைச் சந்திக்கலாயிற்று. அவர்
பாரதியைச் சிலாகித்துப் பேசினார்.
சில ஆண்டுகள் கழித்து, ஹிந்துஸ்தான் என்ற தமிழ் வார இதழில் பணிபுரிய நேர்ந்த சமயம்
நானும் ஒரு சிறந்த புகைப்படக்காரரும் புதுவை சென்று பாரதி இருந்த இடங்களைப்
படமெடுத்தோம்; பாரதியை அறிந்தவர்களையெல்லாம் சந்தித்தோம். இதன் பலனாக ஹிந்துஸ்தான்
1938, 1939, 1940, 1941 ஆகிய ஆண்டுகளில் பாரதி மலர்கள் வெளியிட்டது. பாரதி
அன்பர்கள் பாராட்டினார்கள். பின்னர், பாரதி சம்பந்தமான புகைப்படங்களைக்
கண்காட்சியாக வைக்க ஏற்பாடாயிற்று. கண்காட்சியைக் கண்ட அமுத நிலையம் நிர்வாகி,
அவற்றை நூலாக்கலாம் என்றார். அதன் பேரில் எட்டயபுரம், கடயம் முதலிய ஊர்களுக்குச்
சென்று, மேலும் பல படங்களும் தகவல்களும் சேர்த்து, 1957 பாரதி நினைவு நாளில்
சித்திர பாரதி என்ற பாரதி வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டோ ம். பாரதியார் சங்கம்
நூலுக்குத் தங்க மெடல் அளித்துக் கௌரவித்தது.
1982 பாரதி நூற்றாண்டு விழாவில் (முதல் பதிப்பு வந்து 25 ஆண்டுகள் கழித்து) சித்திர
பாரதியின் இரண்டாம் பதிப்பு வந்தது. இதைப் பாரதி நூற்றாண்டு விழா வெளியீடாக
வெளியிட்டோ ம்.
மேலும் 25 ஆண்டுகளுக்குப் பின் இப்போது, மூன்றாம் பதிப்பு வரவுள்ளது. இதற்காக
நூலில் உள்ள படங்களை நவீன முறையில் 'ஸ்கேன்' செய்து சேர்த்துள்ளோம். நூல் மேலும்
சிறப்பாக அமைய எல்லா முயற்சிகளையும் செய்கிறோம். காலச்சுவடு பதிப்பகம் நூலைச்
சிறப்பான வகையில் கொண்டுவர எல்லா ஏற்பாடுகளையும் சிரத்தையுடன் செய்திருக்கிறது.
எழுபதாண்டுகளுக்கும் மேலான தேடலில் உங்களுடைய மிக முக்கியமான கண்டுபிடிப்பு, சாதனை
என்று கருதுவது எது?
பாரதியின் சமகாலத்தவர்களைப் பேட்டி கண்டு விவரம் சேர்த்ததும், அக்காலப்
புகைப்படங்களைக் கண்டுபிடித்து நூலில் சேர்த்துள்ளதுமே மிக முக்கியமான சாதனை எனக்
கருதுகிறேன். இந்தவகையில் சித்திர பாரதி மிக முக்கியமான பங்களிப்பாகும். பாரதி
கையெழுத்துக் கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள் முதலியவற்றைக் கண்டுபிடித்துப்
பாதுகாக்க முடிந்ததும் சாதனையே.
பாரதி எழுத்துக்களை அடையாளம் காண நீங்கள் கைக்கொண்ட முறை என்ன?
பாரதி புதையல் என்ற தலைப்பில், பாரதியின் வெளிவராத பல துண்டுத் துக்கடா
எழுத்துக்களைச் சேகரித்து வெளியிட்டு வந்தேன். பாரதியாரின் தம்பி, பாரதியார் மனைவி,
மக்கள் முதலானோரும் பாரதி நண்பர்கள் பலரும் (சோமசுந்தர பாரதி, ஹரிஹர சர்மா
முதலானோர்) பாரதி எழுத்துக்களை அடையாளம் காட்ட உதவினார்கள்.
பாரதியின் எழுத்துக்கள் இனிமேலும் கிடைக்கும் வாய்ப்புள்ளதா?
எனக்குத் தெரிந்தவரையில் இல்லை என்று சொல்லவே தோன்றுகிறது. இருந்தபோதிலும்கூட
எச்சரிக்கையாக, ஏதாவது கிடைக்காதா என்று பார்த்துக்கொண்டேயிருப்பது சிறந்தது என
நினைக்கிறேன்.