Google   www kalachuvadu.com

அஞ்சலி: தரம்பால் (1922-2006)

மறைந்த விருட்சம்

ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணன்

n  அஞ்சலி: தரம்பால்

n  அஞ்சலி: வல்லிக்கண்ணன்

தரம்பாலின் மறைவால் இந்தியாவின் முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவரை இழந்துள்ளோம். அவரது பங்களிப்பை நம் அறிவுலகம் சரியாகக் கணிக்கவில்லை என்பதால் அவரது மறைவு ஏற்படுத்தும் சோகம் கூடுகிறது. காலனிய இந்தியாவின் ஆவணங்களை அவரளவுக்கு வேறு யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். சுமார் இருபது ஆண்டுகளை இந்திய, இங்கிலாந்து ஆவணக் காப்பகங்களில் அவர் செலவழித்தார். ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு அவர் எழுதிய ஐந்து நூல்கள் வெளி வந்துள்ளன. ஆனால், மேலும் பல நூல்களுக்கான தகவல்களும் குறிப்புகளும் அவரிடமிருந்தன. அவர் தேர்ந்த ஆய்வாளர் என்பதைவிடத் தான் சேகரித்த தகவல்களை ஒரு பரந்த தளத்தில் வைத்துப் பார்த்ததுதான் சிறப்பு. பலருக்கு அவர் தந்துள்ள தகவல்களைவிட அத்தகவல்களின் அடிப்படையில் இந்திய நாகரிகம் பற்றிய அவரது முடிவுகள் கசப்பாக இருந்தன என்பது உண்மை. இந்திய நாகரிகம் மீண்டும் செயலூக்கம் பெறுவதற்கான வழிமுறைகள் பற்றியே ஓயாமல் சிந்தித்தும் பேசியும் வந்தார்.

1922இல் பிறந்த தரம்பால் இளைஞர்களுக்குக் காந்தி விடுத்த அழைப்பை ஏற்றுத் தன் பட்டப் படிப்பைப் பாதியில் விட்டு 1942 ஆகஸ்ட் போராட்டத்தில் சிறை சென்றார். காந்தியை ஓரிரு முறை பார்த்தும் பேசியுமிருந்தாலும் தரம்பால் காந்தியை நெருக்கமாக அறிந்தவரல்ல. காந்திக்கு நெருங்கிய நண்பராகயிருந்த சகோதரி மீராவுடன் 1950 வாக்கில் ரிஷகேஷத்திற்குச் சமீபத்தில் கூட்டுறவுமுறையில் இயங்கும் கிராமம் ஒன்றை நிர்மாணிக்கும் பணியில் ஈடுபட்டார். அதில் இந்தியப் பஞ்சாயத்து பரிஷத் மற்றும் தன்னார்வக் குழுக்களின் கிராமப் புனர்நிர்மாணப் பணிகளுக்கான அமைப்பு (AVARD) முதலியவற்றில் சில பொறுப்புகளை வகித்தார். 1965 வாக்கில் இந்திய வாழ்க்கையின் அடிப்படை களைச் சரியாக அறிந்துகொள்வதன் மூலமே இந்திய நாகரிகத்தை மீட்க முடியும் என்னும் திடமான நம்பிக்கையால் உந்தப்பட்டு ஆவணக் காப்பகங்களில் தகவல்களையும் விவரங்களையும் தேடிப்பிடித்து வாசித்தார்.

ஆங்கிலேயப் பெண்ணை மணந்துகொண்டதால் இங்கிலாந்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக வசித்தார். அங்கிருந்தபோதுதான் பிரிட்டிஷ் நூலகத்தில் தினமும் ஆவணங்களின் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஆவண ஆராய்ச்சிக்குத் தேவையான அடிப்படைப் படிப்பும் பயிற்சியும் இல்லாமலே அவர் ஆவணங்களைத் தேடிப் பிடித்தது ஒரு பெரும் சாதனை. தட்டச்சு செய்யத் தெரியாமலிருந்ததால் பல ஆயிரக்கணக்கான பக்கங்களைக்கையால் எழுதிப் பிரதி எடுத்தார். பிறகு ஆள்காட்டி விரலை மட்டுமே உபயோகித்துப் பல ஆயிரக்கணக்கான பக்கங்களைத் தட்டச்சு செய்தார். எந்த நிறுவன அமைப்பு உதவியுமின்றி நண்பர்களின் ஆதரவை மட்டுமே நம்பி நோய்வாய்ப்பட்ட மனைவியுடனும் மூன்று குழந்தைகளுடனும் இங்கிலாந்தில் தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். இந்தியாவில் அவசரநிலை பிரகடனமானபோது அதை எதிர்த்து இங்கிலாந்தில் கூட்டங்கள் நடத்தினார். அவசரநிலை முடிந்து தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் இந்தியாவுக்குத் திரும்பி வந்தார்.

இளைஞர்கள் பெரும்பங்கு வகித்த இயக்கமாகத் தொடங்கி இளைஞர்களின் பங்களிப்பால் ஜனதா ஆட்சி அமைந்தபோது இந்தியப் பிரமதருக்கான போட்டியில் மொரார்ஜி தேசாயும் ஜெகஜீவன்ராமும் மோதிக்கொண்டதும் முடிவில் ஜெயப்பிரகாஷ் நாராயண் முடிவுசெய்யட்டும் என்று அனைவரும் கூறியதும் ஜனதா இயக்கத்திலேயே அதிக வயதானவரான மொரார்ஜி தேசாய் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் தரம்பாலை அதிர்ச்சிக்குள்ளாக்கின. சற்று இளைஞராக இருந்த சந்திரசேகர் போன்றவர்களைத் தேர்வு செய்யாமல் ஜெ.பி., மொரார்ஜியைத் தேர்வுசெய்ததன் காரணம் புரியாமல் அவரிடமே கேட்டாராம் தரம்பால். அதற்கு ஜெ.பி. 'எனக்குத் தோன்றவேயில்லை' என்று பதிலளித்தாராம். இந்த நிகழ்ச்சியைப் பல முறை நண்பர்களிடம் நினைவுகூர்ந்தபடியே தரம்பால் சொல்வார்: 'மகாபாரதக் காலத்திலிருந்தே இந்த வயோதிகர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. இளைஞர்களிடம் பொறுப்புகளைக் கொடுக்க நம் தலைவர்கள் ஏனோ அஞ்சுகிறார்கள். பாண்டவர்களே பீஷ்மரிடம் சென்று அவரை எப்படிக் கொல்வது என்று வினயமாகக் கேட்க வில்லையா?'

1971இல் தரம்பாலின் 18ஆம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் என்னும் நூல் வெளி வந்தபோதும் 1981வரை அந்த நூலை இந்திய அறிஞர்களும் அறிவுலகமும் கண்டுகொள்ளவில்லை. இந்தியப் பத்திரிகைகளில் அதற்கு ஒரு மதிப்புரைகூட வரவில்லை. 1981இல்தான் சென்னையில் இருந்த PPST என்னும் அமைப்பு அந்த நூலை விரிவாக அறிமுகம் செய்யும் கட்டுரையொன்றை வெளியிட்டது. அன்று சூடான விவாதமாக இருந்த விஞ்ஞான மனோபாவம் குறித்த அஷிஸ் நந்தியின் விமர்சனங்களும் இந்தியாவின் வளர்ச்சிப் பாதை குறித்த விவாதங்களால் எழுந்த கேள்விகளும் PPST Bulletinஇல் வெளிவந்த கட்டுரைகளும் தரம்பாலின் சிந்தனைகளைக் கொஞ்சம் பரவலாக அறியத் துணைசெய்தன. க்ளோட் ஆல்வாரஸின் எழுத்துக்களும் (அவர்தான் சென்னையிலிருந்த PPST குழுவினருக்குத் தரம்பால் சென்னையில் எம்.எல்.ஏ விடுதியில் இருப்பதாகச் சொன்னார்) இந்திய மருத்துவம் குறித்து எழுந்த விவாதங்களும் தரம்பாலின் மற்ற எழுத்துக்களையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தன. தரம்பாலின் மற்றொரு நூலான ஒத்துழையாமை இயக்கமும் இந்திய மரபும், மேற் சொன்ன நூல் வெளிவந்த அதே ஆண்டில் (1971) வெளிவந்தது.

ஜெயப்பிரகாஷ் நாராயணின் நீண்ட முன்னுரையுடன் தரம்பால் தொகுத்துள்ள ஆவணங்கள் 1801 ஆண்டுவாக்கில் பிரட்டிஷ் அரசு விதித்த வீட்டு வரியை எதிர்த்துப் போராட்டங்கள் வெடித்ததைக் காட்டுகின்றன. காந்தியின் சத்தியாகிரகப் போராட்டங்களைப் பற்றிய விவரங்களைப் படிக்கிறோமோ என்று சந்தேகப்படும் அளவுக்கு அந்தப் போராட்டங்கள் 1920களில் நடந்த காந்தியின் சத்தியாகிரகப் போராட்டங்களை ஒத்திருக்கின்றன. காந்தியின் அகிம்சை வழிப் போராட்டங்களின் வேர்கள் இந்திய மரபில் இருப்பதை அவை அழகாகக் காட்டுகின்றன.

1983இல் தரம்பாலின் மற்றொரு நூலான அழகிய விருட்சம் வெளிவந்தது. 1822 வாக்கில் பாரம்பரியக் கல்வி முறைகளைப் பற்றிச் சென்னை மாகாணத்தில் நடந்த ஒரு கணக்கெடுப்பு குறித்த ஆவணங்களை இந்த நூலில் காணலாம். அதில் கிடைத்த விவரங்களைக் காணும் எவரும் நாம் கடந்த 50-60 ஆண்டுகளாகக் கூறிவரும் பல கருத்துகளை மறுபரிசீலனைக்கு ஆட்படுத்த வேண்டியிருக்கும். குறிப்பாகக் கல்வி என்பது மேல் ஜாதியினருக்கு மட்டுமே இருந்த சொகுசு; சூத்திரர்கள் ஆடு மாடுகள்போல நடத்தப்பட்டனர்; கல்வியும் எழுத்தறிவும் அவர்களுக்குக் கிடைத்தது ஆங்கிலேய ஆட்சியில்தான் என்பன போன்ற பல முடிவுகளைத் தகர்க்கும் ஆவணங்களைக் கொண்டது இந்த நூல்.

ஏதாவது முத்திரை குத்த வேண்டும் என்னும் கட்டாயம் எழுந்தால் தரம்பாலை ஒரு காந்தியவாதி என்று சொல்லலாம். அவர் காந்தியைப் போன நூற்றாண்டின் மாபெரும் தலைவராகக் கருதினார். காந்தி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நடத்திய போராட்டம் பல நாடுகளுக்கும் வழிகாட்டியாக இருந்தது என்று தரம்பால் கருதினார். காந்தியை ஓர் ஒப்பற்ற தளபதியாக, மகாபாரதத்தில் கண்ணனின் பாத்திரத்திற்கு ஒத்தவராகக் கண்டார் தரம்பால். காந்தியின் வியூகத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பல முறை மாட்டிக்கொண்டு விழி பிதுங்கியதை உற்சாகத்துடன் விவரிப்பார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களைவிடக் காந்தி எப்போதும் பல படிகள் முந்தியிருந்தார் எனவும் இந்த நிலை 1940 வாக்கில் மாறத் தொடங்கிக் காந்தியின் பின்னடைவு ஆரம்பித்தது எனவும் கூறுவார். அரசியல் சதுரங்கத்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் கை ஓங்கிவிட்டதைக் காந்தி அறிந்திருந்தார் என்று பரபரப்பான அந்த நாள்களை விவரிப்பார் தரம்பால்.

பா.ஜ.க கூட்டணி ஆட்சியின்போது கால்நடைகள் பற்றிய ஓர் ஆய்வுக் குழுவுக்கு தரம்பாலைத் தலைவராக நியமித்தனர். பசுவதையைத் தடுப்பதற்கான வழிமுறைகளைப் பரிந்துரைக்குமாறு அந்தக் குழு கேட்டுக்கொள்ளப்பட்டது. தரம்பால் பழைய ஆவணங்களிலிருந்து பசு வதை பற்றிய தகவல்களைத் தொகுத்துப் பெரிய நூல் வடிவம் தந்தார். பிரிட்டிஷ் ராணுவத்திற்காகத்தான் இந்தியாவில் பசு வதை பெரிய அளவில் தொடங்கியது என்பதை ஆதாரங்களுடன் தருகிறது அவரது நூல். இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் பசு வதைத் தடுப்பை ஆதரிக்க முடியும் என்றும் அதற்கான சரித்திர முன்னுதாரணங்கள் உண்டு என்றும் அடிக்கடி சொல்வார் தரம்பால்.

தமிழ்நாட்டையும், குறிப்பாகச் சென்னையையும் தரம்பால் மிகவும் நேசித்தார். கடந்த 30 ஆண்டுகளில் வார்தாவிலுள்ள காந்தி ஆசிரமம் தவிர்த்து அவர் அதிகமாக வாழ்ந்த இடம் சென்னை. PPST அமைப்பின் தலைவராகச் சிறிது காலம் இருந்ததோடு அதைச் சார்ந்த இளைஞர்களை வழிநடத்துபவராக, விமரிசிப்பவராக, நண்பராகச் சென்னைக்கு அடிக்கடி வந்து செல்வார். தமிழ்நாட்டுக் கோயில்கள் அவரைப் பெரிதும் கவர்ந்தன. காஞ்சிபுரத்தருகே உள்ள கைலாசநாதர் கோவிலையும் கங்கை கொண்ட சோழபுரத்தின் கோயிலையும் வெகுவாகப் பாராட்டிப் பேசுவார். காஞ்சிபுரம் சென்று சங்கராச்சாரியாரைக் கண்டு வரும் ஒவ்வொரு முறையும் கைலாசநாதர் கோயிலில் சிறிது நேரம் அமர்ந்து அதன் அழகையும் அமைதியையும் சிலாகித்துப் பேசாமல் இருக்க மாட்டார். இந்தியாவில் இந்து அரசர்கள் தாங்கள் வாழப் பெரிய மாளிகைகள் கட்டவில்லை. ஆனால், பிரம்மாண்டமான கோயில்கள்தான் கட்டப்பட்டன என்று அடிக்கடி கூறுவார். ஒரு முறை ஜாதியமைப்பு பற்றிக் கேள்வி எழுந்தபோது இந்திய அரசர்களில் பெரும்பகுதி (சுமார் 80 சதவிகிதம்) சூத்திர வர்ணத்தினர் என்று ஒரே ஒரு வரியில் குறிப்பிட்டு மௌனமாக அமர்ந்தார்.

தமிழ்நாட்டுக் கோயில்களைப் போலவே அவருக்கு மிகவும் பிடித்தது தமிழ்நாட்டின் உணவு, குறிப்பாகச் சிற்றுண்டி வகைகள். செட்டிநாட்டில் ஒரு முறை பயணம் செய்தபோது அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட காலைப் பலகார வகைகளைப் புகழ்ந்து பல முறை கூறியுள்ளார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தார். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் தூக்கமின்மையால் அவதிப்பட்டவர். ஆனால் புதிய அமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும், இந்தியப் பெருங்கடல் சார்ந்த நாடுகளையும் அவர்களுக்கிடையே நிலவிய 1500 ஆண்டுகளுக்கு முந்தைய உறவுகளையும் பற்றிய ஆவணங்களைத் தேட வேண்டும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் உலகமயமாதலுக்கும் மாற்றாக ஆசிய நாகரிகங்கள் இணைந்த அமைப்பு உருவாக வேண்டும் என்றெல்லாம் பேசியும் எழுதியும் வந்தார்.

உள்ளடக்கம்

Google Ads.....


Google