Google   www kalachuvadu.com

தமிழ் வாழ்வில் காதல்: காதலின் படிநிலைகள்

காத்திருத்தல் எனும் துக்கம், துக்கம் தவிர்த்தல்

பெருந்தேவி

n ஞானக்கூத்தன்

n சுகுமாரன்

n சேரன்

n அசோகமித்திரன்

n அனிருத்தன் வாசுதேவன்

n பெருந்தேவி

முதலில் இரு கதைகள்: ஒன்று, நம் நிலப்பரப்பின் ஒரு தெய்வத்தினுடையது.

இமய மாது (பார்வதி) ஒரு கன்னியாகப் புட்பகாசை (புஷ்பஹாஸா) என்னும் பெயரோடு உருவெடுத்துச் சிவனை வழிபட்டுவந்தாள். சிவன் அவள் முன் தோன்றி என்ன வேண்டுமென்று கேட்டான். "பிரிவேயில்லாமல் உன்னுடன் நான் இருக்க வேண்டும்" என்றாள் அவள். அதற்கு அவன் "பிரம்மாவின் ஒரு நாள் நான்கு யுகங்களின் ஆயிரம் சுற்றுகளால் ஆனது; பத்துப் பிரம்மாக்களின் காலம் விஷ்ணுவின் வாழ்வின் ஒரு மணி நேரம்; பன்னிரெண்டு விஷ்ணுக்களின் வாழ்நாள் என் வாழ்வின் ஒரு நிமிடம்; அப்படியொரு நிமிடம் கழிந்த பின்னர் நான் ருத்ரன் என்னும் பெயர் சூட்டிக்கொண்டு உன்னை மணப்பேன். அதுவரை நீ கடற்கரையில் தவம் செய்ய வேண்டும். அதுவரை நானும் பூர்ணசபையில் (சுசீந்திரத்தில்) பிரம்மச்சாரியாக இருப்பேன்" என்றான். உடனே அவள் அதை ஏற்றுக்கொண்டு சிவன் குறிப்பிட்ட இடம் நோக்கிச் சென்றாள். எனவே அந்த இடம் கன்னிகையின் இடம் என்றே அழைக்கப்படுகிறது (டேவிட் ஷுல்மன் 146).

கன்னியாகுமரியின் கதைக்கு நேரெதிர்ப் புள்ளியில் முடிவதாக நம்மில் தொடங்குகிறது இரண்டாவது கதை. ஒரு சீனக் கனவான் ஆடலணங்கு ஒருத்தியின்பால் காதல் வயப்பட்டான். அவளோ "என் சன்னலுக்குக் கீழே, தோட்டத்தில், ஒரு முக்காலியில் அமர்ந்தபடி நூறு இரவுகளை நீ எனக்காகக் காத்திருந்து கழித்தாயானால் நான் உன்னுடையவள்" என்று சொல்லிவிட்டாள். ஆனால் தொண்ணூற்றொன்பதாம் இரவில் அந்தக் கனவான் எழுந்தான், முக்காலியைத் தன் கையில் இடுக்கிக்கொண்டான்; சென்றேவிட்டான் (ரோலான் பார்த் 40).

n

ரோலான் பார்த்தின் 'காதலர் சொல்லாடல்: சிதறல்கள்' புத்தகத்தில் காத்திருத்தல் (Attente) என்கிற தலைப்பிலான குறிப்பு காதலர் சம்பந்தமாகப் பல சமயங்களில் (சந்திப்பு, கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் அல்லது திரும்பிவருதல் போன்றவை) காத்துக் கிடக்கும் நேரம் கொந்தளித்து எழும்பும் பரிதவிப்பை, ஆற்றாமையை விரித்துச் சொல்லும் முகமாக விரிகிறது (37-40). எதற்காகக் காத்திருத்தல்? வருகைக்காக, மீண்டும் வருவதற்காக, ஒரு வாக்களிக்கப்பட்ட சான்றுக் குறிக்காக. இக்காத்திருத்தலின் முக்கியக் குணாம்சமாக ஒன்றைச் சொல்கிறார் பார்த். வீணாகவோ, ஏன், அளக்கவியலா அவலமாகவோ ஆகிவிடக்கூடிய இக்காத்திருத்தல் விகிதப் பொருத்தம் என்பதை அறியவே செய்யாது. உதாரணமாக, நள்ளிரவில் நடுக்காட்டில் காதலனுக்காக ஒரு பெண்ணின் காத்திருப்பும் தன் காதலியின் ஒரு தொலைபேசி அழைப்புக்காக வேறொருத்தனின் காத்திருப்பும் ஒன்றே போன்ற பதற்றத்தைக் காத்திருப்பவரிடத்தில் ஏற்படுத்துவன என்பதே இங்கு முக்கியம்.

காதலிக்காக அல்லது காதலனுக்காகக் காத்துக் கொண்டிருப்பதைக் காட்சியாக நிகழ்த்துகிறது பார்த்தின் எழுத்து. காத்திருக்கும் நேரத்தில் நேசிக்கப்படுகிற பொருளுடைய இராமை அதன் அந்நேர இழப்பை நம்மில் நிரப்புகிறது. பார்த் 'சிறு இழவுத் துக்கம்' (minor mourning) என்று இதைக் குறிப்பிடுகிறார். இந்தத் துக்க நாடகத்தின் மூன்று கட்டங்கள் நமக்குப் பரிச்சயமானவையே. கட்டம் ஒன்று: கபே ஒன்றின் உள்ளே ஒருவன் காத்துக்கொண்டிருக்கிறான். முதல் காட்சியின் ஒரே நடிகன். தான் காதலிப்பவர் இதுவரை வந்து சேராதது உறுத்த ஆரம்பிக்கிறது அவனுக்கு. நேரத்தைக் கணக்கிடுகிறது மனம். காத்திருப்பின் சுமை கூடக்கூட அதை இறக்க முயற்சிக்கிறான். அவனது முதல் யூகம், நடந்த தொடர்புப் பரிமாற்றத்தில் ஏதாவது பிரச்சினை இருக்குமோ என்பதுதான். சந்திப்பை உறுதிகொண்ட கணத்தை நினைத்துப் பார்க்கிறான். முடிவுசெய்தபடி சரியான இடத்துக்குச் சரியான நேரத்தில்தானே வந்திருக்கிறோம்? அல்லது வேறு ஏதாவது இடமா? இந்த யோசிப்பின் கூர்மை, கட்டம் இரண்டில் கோபத்தை மையப்படுத்துவதாகிறது. மனதுக்குள் காதலிப்பவரைக் கண்டிக்கிறான். "எது எப்படியாக இருந்தாலும், அவன்(ள்) முயற்சி செய்திருக்கலாம்." "இப்போது இங்கே மட்டும் இருந்தால் எப்படிக் கோபத்தைக் கொட்டலாம்?" கட்டம் மூன்று ஆற்றாமையின் தூய தருணத்தை அடைவதாக அல்லது பெறுவதாக அமைகிறது. வராவிட்டால்? இது கைவிடப்படுதல் கவிழ்கின்ற ஆற்றாமை. கன்றிப்போகிறான். ஒரு கணத்தில் இராமை சாவாக மாறுகிறது - மற்றவள்(ன்) இறந்ததே போல் இருப்பதாக உணர்கிறான். இந்த நாடகம்/விளையாட்டு - play என்றே இதைக் குறிப்பிடுகிறார் பார்த் - மற்றவளி(னி)ன் வருகையால் முடிந்துவிடுகிறது.

கட்டம் ஒன்றில் அவன் காத்திருக்கும் மற்றவள்(ன்) வர அமைதியாகவே வரவேற்பு நடக்கிறது. கட்டம் இரண்டில் அவள்(ன்) வந்துசேர வரவேற்பு ஒரு (கோப?) நாடகீயமாக அரங்கேறுகிறது. எதிர்பார்த்த காதலி/காதலன் வருகைதந்துவிட்டால் கட்டம் மூன்றின் தன்மை கருணையுடையதாக, மற்றவளை(னை) அங்கீகரிக்கும் தருணமாக, வாய்ப்பாக மாறிவிடுகிறது. நிம்மதியின் ஆழ்மூச்சு, பாதாள அறைகளிலிருந்து மேலெழும்பி ரோஜா மணத்தின் வாழ்வை மீண்டும் கண்டுபிடித்தல் என்று இப்புத்துயிர்த் தருணத்தை விவரிக்கிறார் பார்த்.

n

தமிழின் அகத் திணை மரபு, முல்லை என்று வகைமைப்படுத்தப்பட்ட உரிப் பொருளை (காதல் அனுபவத்தை) காத்திருத்தல் சார்ந்து முன்வைக்கிறது. (சுருக்கமான பிரிவில்) காதலன் திரும்ப வரக் காத்திருத்தல் முல்லை உரிப் பொருளாக அகத் திணை மரபில் அழைக்கப்படுகிறது; என்றாலும், காத்திருத்தலின் வெவ்வேறு படிநிலைகளாக முல்லைக்கு அடுத்த சில அகத் திணைகள் சுட்டுகின்ற அனுபவங்களையும் பார்க்க முடியும் என்று நினைக்கிறேன்.

"குறுமுகை அவிழ்ந்த நறுமலர்ப் புறவின் வண்டுசூழ் மாலையும் வாரார்", "அவரோ வாரார் முல்லையும் பூத்தன", "முகை முற்றினவே முல்லை முல்லையொடு ... மாலை வந்தன்று என் மாணலங் குறித்தே" (குறுந்தொகை 220, 221, 188) என்று பிரிவாற்றாமையைப் பேசும் முல்லைத் திணைப் பாடல்கள் காத்திருப்பு என்பதைக் காலம்/காலமாற்றம் பற்றிய புலவுணர்வோடு அரங்கேற்றுகின்றன. காத்திருத்தலில் நேரம் சென்று கொண்டிருப்பதைப் பற்றிய கவனம், அவதானிப்பு இப்போது கூர்மைப்படுகிறது. எதிர்பார்த்த காதலன் இதுவரை வந்து சேராததன் உறுத்தல் பார்த் விவரிக்கின்ற காத்திருத்தல் நாடகத்தின் முதற்கட்டத்தின் தன்மையை ஒத்தது.

அடுத்து மருதச் சொல்லாடல்களில் காத்திருப்பு பெரும்பாலும் ஊடலும் சந்தேகமும், ஏன், சமயங்களில் சீற்றத்தோடும் சேர நெய்யப்பட்டதாக இருக்கிறது. பாணன் காதலனின் வருகையை அறிவிக்கும் சமயத்தில் கூடக் காதலி, "நீ கண்டனையோ கண்டார்க் கேட்டனையோ ... யார் வாய்க் கேட்டனை காதலர் வரவே" என்று கேட்கிறாள் (குறுந்தொகை 75). அழகிய சுனையிடத்து வெள்ளிய கொம்புகள் கொண்ட யானை உறைவதைப் போல மற்ற பெண்களோடும் சேரும் காதலன் குறித்த சந்தேகம் (குறுந்தொகை 75); வாயில்வழி நுழைய முயற்சிக்கும் காதலனிடம் "எப்பேர்ப்பட்ட அன்பு உன்னுடையது" என்றோ "உன்னைப் பிரிந்த எனக்கு உன் பாணன் பொய்யன், ஊரிலுள்ள பாணரெல்லாம் கள்வர்" என்றோ தோழி கூற்றாக எள்ளிச் சினந்து வாயில் மறுத்தல் (குறுந்தொகை 196, 127) மருதத்துக்கு உரித்தான நிகழ்வுகள் எனச் சொல்லலாம். பெரும்பாலான மருதத் திணைப் பாடல்கள் உள்ளுக்கும் வெளிக்கும் இடையே, புறத்திலிருந்து அகத்துக்குச் செல்லும் இயக்கப் போக்கில், புறத்தையும் அகத்தையும் தொடர்புறுத்தும் வாயிலில் நடிக்கப்படுகின்றன என்று எழுதுகிறார் ஏ.கே. ராமானுஜன். எதிர்நோக்கியிருந்தவர் வந்துசேர, காத்திருந்ததன் தவிப்பு சந்தேகமாக, ஊடலாக, சீற்றமாக உருக்கொள்ளும் மருதப் படிநிலை பார்த்தின் குறிப்பில் விரிக்கப்படும் கட்டம் இரண்டின் கோப நாடகீயம் போன்றது.

நெய்தல் படிநிலைக்கு உதாரணமாக இந்தப் பாடல்:

நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே
இமைதீய்ப் பன்ன கண்ணீர் தாங்கி
அமைதற் கமைந்த நங்காதலர்
அமைவில ராகுதல் நோமென் நெஞ்சே.

(குறுந்தொகை 4)

மூன்று முறை நெஞ்சம் நோதலை அழுத்திச் சொல்லும் நெய்தற்பாடல். திரும்பத் திரும்பக் கூறல், ஆற்றாமை மிகுதியின் அறிவிப்பாகிறது. விழி தாங்குவதாகச் சொல்லப்பட்டிருக்கும் இமையைக்கூடத் தீய்க்கும் கண்ணீரின் கனம் இம்மிகுதியைக் குறிக்கும் ஒரு சுட்டி (வீஸீபீமீஜ்). சேர்ந்து இன்பம் அனுபவிக்க அமையப் பெறாத, இன்னும் வாராத காதலன் பற்றிய அவளது துக்கமும் பரிதவிப்பும் அவள் விழிகளில் அமையப்பெற்ற நீர்களோடு, இரங்கலின் மனம் திரிந்து பாலையின் கடுமையும் வறட்சியும் ஆட்கொள்ளும் முன்பான நிலை என்பதுபோலக் காத்திருப்பதன் அவலம் தோன்றுகிறது இங்கே.

காதலிக்காக அல்லது காதலனுக்காகக் காத்திருப்பதன் காலப்பிரக்ஞையை அப்படியொரு பிரக்ஞை எழும்பும் முன்னரே புதைத்துவிடும் ஆற்றல்பெற்ற இன்பத் துய்ப்பு குறித்த ஞாபகங்கள், கற்பனைகள்; இவற்றை அடிக்கோடிடும் குறிஞ்சி உற்சாகம் ஒரு புறம். நீண்ட நிச்சயமான பிரிவின் துயரம் குறித்த தயாரிப்பை, அத் துயரத்துடனான ஒருவித இசைவை உள்ளீடாகக்கொண்டிருக்கும் பாலையின் கவிதையியல் சட்டகம் மறுபுறம். இரண்டுக்குமிடையே முல்லை, மருதம், நெய்தல் சுட்டும் அனுபவங்களில் காத்திருத்தல் தன்னை வரையும் காலம் பற்றிய பிரக்ஞையிலிருந்து தொடங்கி, உணர்ச்சி முனைப்புகளை முன்நிறுத்தும் தனி நிகழ்த்துதல்களின் (private performances) சாத்தியங்கள் வழியே, ஆற்றாமைப் பெருக்கின் தாங்கவியலாத விளிம்புக்குத் தன்னைத் தள்ளிச் செல்கிறது.

நெய்தலின் இரங்கலை "வெப்பத்தால் வெண்ணெய் உருகும் உருக்கம் போல உருகும் நிலை" என்று வர்ணிக்கிறார் இரா. இளங்குமரன் (33). மீளதிகப் பரிதவிப்பில், ஆற்றாமையில் தான் என்கின்ற சுயம் கரைந்துகொண்டே போதல் என்று சொல்லலாம் இதனை. தனித்திருக்கும் அவலநிலையைக் காட்டிலும் உயிர் போவதே சிறந்தது (குறுந்தொகை 57), கைவிடப்படுவோம் எனில் உயிரன்றி வேறென்ன இழப்பது (குறுந்தொகை 334) என்பது போன்ற இரங்கல் மொழிதல்கள் இறப்புக்கு வெகு அருகாமையில் காத்திருப்பின் ஆற்றாமையை வைத்துப் பார்க்கின்றன. பார்த்தின் குறிப்பில் காத்திருத்தலின் மூன்றாம் கட்டத்தை இப்போது நினைவில் கொள்ளலாம். தாங்கவியலாத நிச்சயமின்மையாகக் காத்திருத்தலை உணரும்போது கைவிடப்படுதலின் அச்சமாகவே சுயம் ஆகிவிடுகிறது. சாவொத்த தானற்றுப்போதல் மாத்திரமே இத்தகையதொரு துயர்தரும் நிச்சயமின்மைக்கு ஈடானதாக, அதற்குச் சரியான பதிலாக, ஒத்த பதிலீடாகத் தோன்றும் போலும். தானற்றுப்போதலில் தான் காதலிக்கும் மற்றவன்(ள்) அற்றுப்போதலும் உறுதியளிக்கப்படுகிறது அல்லவா? அது எப்பேர்ப்பட்ட ஆறுதல் தரும் முடிவு? தவிரவும், காத்திருத்தல் நீள நீளக் காயமாகவே நம்முள் ஆழப்படும் காலத்தை வேறெப்படித்தான் நம்மிலிருந்து அந்நியப்படுத்த முடியும் நாம்?

II

இணையத்தில் மேகன் லாஸ்லாகி தந்திருக்கும் கட்டுரையில் வழங்கப்பட்டிருக்கும் நேர்காணல்களில் டேவ்கேட் என்பவர் ஷிடோ ரேயிடம் அவரைக் கவர்ந்தது எவையென்று கூறுகிறார்: "அவள் அழகானவள், நம்பிக்கைக்கு உரியவள், கூர்ந்து செவிசாய்ப்பதில் மிகச் சிறந்தவள்." ஷிடோ ரேயோடு அவர் உறவு கொள்கையில் ஆணுறையை அணிவதாக அவர் கூறுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஷி-ஸான் என்று அவரால் செல்லமாக அழைக்கப்படும் ஷிடோ ரே பாதி பிரிட்டிஷ், பாதி ஜப்பானியர்.

பொருத்தமான ஆடைகளோடு கெல்லி ஸூ ஒரு பக்கத்திலும் ஜிஞ்சர் புரூக்ஸ் ஒரு பக்கத்திலுமாகப் பெரிய நாற்காலி ஒன்றில் தான் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை இணையத்தில் நம்மோடு பகிர்ந்துகொள்ளும் கார்டன் க்ரிக்ஸ் என்பவர், எந்த ஆண்தான் தன் தோழிகளின் ஆடைகளற்ற புகைப்படத்தை மற்ற ஆண்கள் பார்க்க விரும்புவான் என்று வினவுகிறார்.

எவர்ஹார்ட் ஒரு மோசமான நிகழ்ச்சியை நினைவுகூர்கிறார்: "கேரலினின் பின்புறம் உடைந்துவிட்டது என்றே நினைக்கிறேன். இன்று காலையில் நான் அவளைப் படுக்கையிலிருந்து தூக்கும்போது ... முதல் அறிகுறி தெரிந்தது ... சற்றுப் பின்னோக்கி யோசிக்கையில், இன்று காலை படுக்கையில் நான் அவளோடு உடலுறவு கொண்டபோது இது நேர்ந்திருக்கும் என்று நிச்சயமாக என்னால் சொல்ல முடியும்."

ஷிடோரே, கெல்லி, ஜிஞ்சர், கேரலின் இன்னும் இதைப் போன்ற பல(ர்) சிலிக்கானாலான நிஜப் பொம்மைகள் (Real Dolls). தற்போது மேற்கிலும் ஜப்பானிலும் பிரபலமாகிவரும் இப்பொம்மைகள் வடிவமைப்பில் பார்பி பொம்மைகளிலிருந்து வேறுபட்டவை. இந்த "பிளாஸ்டிக் சகோதரிகள்" நிஜமான பெண்களின் பரிமாணங்களில், 'முக்கியமாக' பின்புறங்களோடும் மார்பகங்களோடும் ஓட்டைகளோடும். இவற்றின், இவர்களின் சிலிக்கான் சதை, இணக்கமான வெப்பத்தில், இளக்கத்தில். இவற்றை, இவர்களை, நம்மோடு சாப்பாட்டு மேசையில், வரவேற்பறையில், காரில் அருகமர்த்தலாம். பிடித்த ஆடை அணிகலன்கள் அணிவித்து அழகு பார்க்கலாம், அலங்கரிக்கலாம். முக்கியமாக, இவற்றின், இவர்களின் உடலை, உறவுக்கு எப்படி வேண்டுமென்றாலும் பயன்படுத்திக்கொள்ளலாம் (நிஜமான பெண்களோடுகூட உடலுறவில் இந்த அளவுக்கு உச்சம் அடைந்ததில்லை என்று ஒருவரின் பாலியல் சான்றளிப்புக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது). ஆறாயிரத்து ஐநூறு டாலர்களுக்கு இந்த நிஜப் பொம்மைகளை விற்கும் வலையகத்தில் ஒன்பது விதமான உடலமைப்புகள், பதினான்கு வகை முக அமைப்புகள், ஆறு கண் வண்ணங்கள், மூன்று விதமான யோனி முடிப் பாணிகள், மற்றும் விதவிதமான விக்குகள், அலங்காரங்களில் பிடித்ததைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

இந்நிஜப் பொம்மைகளை வாங்கியிருப்பவர்களின் காரணங்கள் கவனிக்கத்தக்கவை. உதாரணமாக நிஜப் பெண்கள் தனக்கிழைத்த அநீதிகளை க்ரிக்ஸ் பட்டியலிடுகிறார்: இசை விருந்தொன்றில் தன்னை விட்டுச் சென்றது, தன் குழந்தையை அவரைப் பார்த்துக்கொள்ள வைத்துவிட்டு வேறொரு நபரோடு சென்றது, தன் தட்டுமுட்டுப் பொருட்களை நகர்த்த அவரைப் பயன்படுத்திக்கொண்டது போன்றவை. மனிதத் தொடர்பைக் குறைத்துக்கொள்ள விரும்பும் க்ரிக்ஸ் இந்த நிஜப் பொம்மைகளோடான உறவில் தான் மிகவும் பத்திரமாக, பாதுகாப்பாக (safe and secure) உணர்வதாகக் கூறுகிறார். குழந்தைகளையே பெறக்கூடாத சிலருக்கு, ஜீன்பூல்களில் (மரபணுத் தொகுதிகள்) தன் ஜீன்களைத் தர வேண்டாதவர்களுக்கு இந்நிஜப் பொம்மைகள் பெரிய வரம் என்று வேறொருவர் கருதுகிறார்.

காத்திருத்தல் பற்றிய ரோலான் பார்த்தின் ஆய்வுச் சட்டகம், தமிழ்க் கவிதையியலின் உதவியால் நமக்குக் கிடைத்திருக்கும் புரிதல்கள், இவற்றின் அடிப்படையில், நிஜப் பொம்மைகள் வந்துவிட்டிருக்கிற நம் உலகத்தில் இன்று காத்திருத்தலின் பரிமாணங்கள் எப்படி வடிவம் கொண்டிருக்கும் என்றும் "பத்திரமாக, பாதுகாப்பாக" காதல் உறவுகளில் உணர்வது குறித்தும் யோசிக்கலாம். காதலில் காத்திருத்தலின் மூன்று படிநிலைகளில் நேரம் செல்லுதல் பற்றிய பிரக்ஞை, காதலிப்பவர் நமக்குத் தருகிற முன்னுரிமை அல்லது அவருக்குச் சாத்தியமாகியிருக்கக்கூடிய வேறு காதல் வாய்ப்புகள் பற்றிச் சந்தேகம், கோபம், நேரம் செல்லச் செல்ல நாம் கைவிடப்படுகிறோமோ என்கிற அச்சம் - இவை அடுக்கடுக்காகக் காத்திருப்பவரிடத்தில் படிவது பற்றிப் பார்த்தோம். நிஜப் பொம்மைகளுடனான உறவில் இம்மூன்று படிநிலைகளில் எதற்குமே இடமில்லை. இப்பொம்மைகள் நம் நேரத்தில், நமக்காக, நம்மோடு இருப்பவை.

காதலனை அல்லது காதலியைப் பிரிந்து காத்திருப்பது இருக்கட்டும்; சேர்ந்திருக்கும்போது நாம் உணர்கிற சிறு காத்திருத்தல்கள் நம் முன்னே நிறுத்துகிற நிச்சயமின்மைகளைக்கூட இவற்றின் உதவியோடு அழித்துவிட முடியும். உதாரணமாக, உரையாடல்களில் இவை "கூர்ந்து செவிசாய்ப்பவராக" மட்டுமே இருக்கும்; இவற்றின் பதில்களையோ விமரிசனங்களையோ விவாதங்களையோ கேள்விகளையோ கேட்க/பெற நாம் காத்திருக்கவேண்டாம். உடல்களாக எப்போதும் தயாராக இருக்கும் இவற்றுடனான உடலுறவில் இவற்றின் சம்மதத்துக்காகவும் சமிக்ஞைக்காகவும்கூட.

காத்திருத்தலின் பரிதவிப்பை, ஆற்றாமையை அழிக்க முயலும்போது, அதாவது உறவுகளில் "பத்திரமாக, பாதுகாப்பாக" இருப்பதே நமது இலக்காகும்போது, "சிறு இழவுத் துக்கத்தின்" அபாய நேர்வை நாம் எதிர்கொள்ள மறுக்கும்போது, இன்பத் துய்ப்பு என்பது உடனடியானதான (instantaneous) உருவம் கொள்கிறது. நாம் நினைத்தாலேயன்றி இன்பம் தள்ளிப்போகாது அல்லது நமக்கு மறுக்கப்படாதுதானே? "நாம் சந்தோஷமாக இருக்க சபிக்கப்பட்டிருக்கிறோம்" என்று உம் பர்ட்டோ ஈக்கோ வேறொரு கட்டுரைச் சூழலில் எழுதியிருப்பதை மட்டுமே இங்கே சொல்லி என் கட்டுரையை முடிக்கத் தோன்றுகிறது.

உதவிய நூல்கள், கட்டுரைகள்:

1. "பொருளதிகார வாழ்வியல் விளக்கம்." தொல்காப்பியம்: பொருளதிகாரம், இளம்பூரணம். தொகுதி 1. இரா. இளங்குமரன். சென்னை: தமிழ்மண் பதிப்பகம், 2003.
2. குறுந்தொகை: மூலமும் உரையும். உரை: தி. சௌ. அரங்கசாமி. சென்னை: பாரி நிலையம், 2000.
3. குறுந்தொகை நயவுரை. டாக்டர் மு. கோவிந்தசாமி, சிதம்பரம், வாசுகி பதிப்பகம், 2000.
4. A Lover's Discourse: Fragments. Roland Barthes. Trans. Richard Howard. New York: Farrar, Straus and Giroux, 1978.
5. Just like a Woman. Laslocky, Meghan. http://dir.salon.com/story/mwt/feature/2005/10/11/real_dolls
6. Tamil Temple Myths: Sacrifice and Divine Marriage in the South Indian Saiva Tradition. Shulman, David Dean. New Jersey: Princeton University Press, 1980.

உள்ளடக்கம்

Google Ads.....


Google