சபையோருக்கு வணக்கம்.
தமிழ்க் காதல் என்ற தலைப்பில் பேசச் சொன்னார்கள். காதலைப் பிராந்தியப்படுத்த இயலுமா
என்ற எண்ணம் தோன்றியது. பின், பிராந்திய அடையாளங்களைப் பலர் உரிமையுடன் கேட்டுப்
பெற வேண்டியுள்ளதையும் சிந்தித்துப் பார்த்தேன். அதாவது இது தமிழைச் சார்ந்ததல்ல,
நீ உண்மையான தமிழனல்ல, இது இந்திய கலாச்சாரம் அல்ல என்று உள்ளிருந்து எல்லைக்கோடுகள்
வரைபவர்கள் உள்ளவரை சில அடையாளங்களை வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. தமிழ்க் காதல்
என்பது போன்ற அடையாளங்களை.
அதிகாரபூர்வமான தமிழிலக்கியச் சான்றுகள் தேடி வழங்கலாமா என்று நினைத்தேன்.
பழக்கப்பட்ட கதைகளை, கற்பனைகளை உள்ளிருந்து தகர்க்கலாமா என்று யோசித்தேன். கடைசியில்
நான் வாழ்ந்த உண்மையை வழங்கலாமென்று எண்ணினேன். நான் பேசப்போவது என் காதலைப் பற்றி.
நான் தமிழன். அதாவது என்னுடைய பல அடையாளங்களுள் அதுவும் ஒன்று. நான் காதலிப்பதும்
உண்டு. அதுவும் எனது பல அடையாளங்களுள் ஒன்று. நான் இங்கு பேச இது போதுமான காரணம்
என்று நினைக்கிறேன்.
எதற்கும் மேற்கொண்டு கேட்கவும் சர்ச்சை செய்யவும் விமர்சிக்கவும் நிராகரிக்கவும்
ஏற்றுக்கொள்ளவும் நான் சொல்வதை முழுதும் கேட்டாக வேண்டும். இருக்கையோடு
இணைக்கப்பட்ட மேசை. இருத்தலும் ஆதலும் ஒன்று என்பது போன்றொரு அமைப்பு. இருவர்
அமரலாம். பின் வரிசையாயிருப்பின் நெருங்கி அமரலாம். சமயங்களில் கைகோர்த்தும் அமரலாம்.
அப்படித்தான் இன்றும் அமர்ந்திருந்தோம். ஆசிரியர் எழுதச் சொன்னவரை. அரை
ட்ரவுசரிலிருந்து முழுக் கால் சட்டைக்கு வந்த மாற்றம் விநோதமான எண்ணச் சூழல்களை
வெளியிட்டிருந்தது. மறைக்கச் சொன்னதனால் மறைக்கப்பட்ட பொருள் அழுத்தமாகக்
கவனத்திற்கு வந்தது: எங்களது முழங்கால்களும் அதற்குச் சற்று மேலும். இவை எங்கும்
தெரியத் தொடங்கின திடீரென்று.
இதுவரை அருகில் அமரும்போது உரசியிருப்பது இப்போது ஞாபகம் வந்தது. சொன்னபோது
சிரித்தான் - "நான் மட்டும்தான் இப்படி யோசிக்கறேன்னு நெனச்சேன்" என்றான்.
சிரித்தோம். ஒரு ரகசியப் பிணைப்பு ஏற்பட்டதைப் போல. மறைக்கப்பட்ட முழங்கால்களினால்.
"டேய் பொட்டை! பென்சில் கொடு" - பின்னாலிருந்து உடைந்துகொண்டிருக்கும் குரல் ஒன்று.
கோபமாய்ப் பதில் சொல்லத் திரும்பினேன். சில்லென்ற உள்ளங்கையால் முகத்தைத்
திருப்பினான் முன்பக்கம். "கண்டுக்காதே." இப்போது தோளில் தட்டியது
பின்னாலிருந்தவனின் கை. "ஒன்னத்தாண்டா. நேத்து போட்டில நல்லா பேசுன. ஆனா ஏன்டா
பொம்பள மாதிரி கைய ஆட்டுற?"
"நானாவது பேசுனேன்ல. நீ என்ன கிழிச்சியாம்?" - வெடுக்கென்று சொன்னேன். முழங்காலில்
அவன் கை இறுகியது. மேற்கொண்டு பேசாமல் திரும்பி அமர்ந்தேன். "வா சாப்பிடப் போலாம்."
"ஏன்டா உர்ர்ன்னு இருக்க? அவன் சொன்னதையே நெனச்சுட்டிருக்கியா?" "ம்ம். அவன்
மட்டுமில்ல. நேத்து ரிக்ஷால வரும்போது அசோக் அண்ணனும் சொன்னாரு. நடையா இது நடையான்னு
பாடினாரு. எல்லாரும் சிரிச்சாங்க." "கவலப்படாதடா! அடுத்த தடவ சொல்லு. ரெண்டு அறை
அறைஞ்சா சரியாயிடும். சாப்பிடு." தூரப் பார்த்துக்கொண்டு கலங்கிய கண்களிலிருந்து ஒரு
சொட்டு, கண்ணோரமாய் வழிந்தது. உதட்டின் ஓரம் வந்ததும் விரல்களால் துடைத்தான்.
புன்னகைத்தான். பின் அதே விரல்கள் என் காதை வருடின. பிறகு தலைக்குப் பின் சென்று
முன்னாலிழுத்தன. தலையோடு தலைமுட்டிப் புன்னகைத்தான். "லூசு! நா இருக்கேன்ல!"
அவன் இருந்தான். ஆண்மை என்கிற புரியாக் கருத்தாக்கம் என்னை வாட்டி வதைத்த காலம் வரை
உடனிருந்தான் (இப்போது நான் அதை வாட்டி வதைக்கிறேன்). காதலித்தோம். காதல் செய்தோம்.
இந்த இரண்டாவது முக்கியமாயிற்று. யாரும் அறியாமல் புதிதாய் ஏதோ ஒன்றை உண்டாக்குவது
போன்ற ஒரு கிளர்ச்சி. கூடவே பயமும். வழக்கில் உள்ள மெய்ப்பாடுகளுக்கு அப்பால்
இருக்கிறோம் என்ற உணர்வு. அறைந்து சாத்தப்பட்ட கதவுகளுக்கு வெளியே நிற்கிற உணர்வு
அது. அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கு வரும் விற்பனையாளர்கள் நன்கறிந்த உணர்வு. ஒரு
உதாரணத்திற்குச் சொன்னேன். அப்போது பெண்ணியம் தெரியாது. இருந்தாலும் ஆண், பெண் என்ற
அடையாளங்களும், ஆண்மை, பெண்மை என்ற வேற்றுமைகளும் நிலையற்றவையோ என்று தோன்றியதுண்டு.
ஆனால் பிடிபடவில்லை இன்றுவரை. எனக்கு இந்த அடையாளங்கள் பிடிபடவில்லை. இந்த
அடையாளங்களுக்கு நான் பிடிபடவில்லை. இது பிடிபடும்வரை என்னுடன் இருந்தான்.
மொத்தத்தில் ஏதோ ஒன்று பிடிபட்டது. இது அங்கீகாரம் வேண்டி நிற்காத காதல் என்ற உண்மை.
கண்டிப்பாக எதையுமே நிரந்தரமாக மறைக்க இயலாது. முழங்கால்கள் உட்பட. காதலும்
அப்படித்தான். திடீரென்று கண்களில் ஒரு நிரந்தரப் புன்னகை வரும்போது, திடீரென்று பல
விஷயங்களுக்கும் நபர்களுக்கும் நம்மிடம் நேரம் இல்லாமல் போகும்போது புலப்படுகிறோம்.
காதல் நம்மை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது பலருக்கு. சற்றே விளக்கை அவர்கள்மேல்
திருப்பிவிட்டுத் தொடர்வது பழக்கமாயிற்று.
தொடரும்.
என் பேச்சல்ல. . . என் காதல். . . காதல்கள். . .