சற்சதுரமான களப்புகளையும் கழனிகளையும் பார்த்துச் சலித்த விமானம் அம்ஸ்டர்டாம்
நகரில் இறங்கியபோது இரவு 10 மணி. ஒவ்வொரு தடையாகத்தாண்டி வரவேற்பறை வாயிலில் வர,
அதன் பெருங் கண்ணாடிக் கதவு தானாகவே திறந்துகொள்கிறது. அதற்கு நிற வேற்றுமை தெரியாது.
உள்ளே வர, முறுவல் முகத்தில் துளிர்க்கிறபோது கண்கள் சிறுத்துப்போனாலும் விரிந்த
கைகளை நீட்டுகிறான் புதிய நண்பன்.
எப்படி என்னை அடையாளம் கண்டாய் என்று நான் கேட்கவில்லை.
சிறகுகள் மடியப் பூவில் அமரும் வண்ணத்துப் பூச்சியைப் போல மடிக்கப்பட்ட சைக்கிள்
ஒன்று அவன் தோளில் குந்தியிருந்தது.
நகருக்குள் வருகிறோம். அதன் பெரு ரயில் நிலையத்தில் இறங்கியபோதும் விமானத்தின்
இரைச்சல் காதுக்குள் இடைவிடாது கேட்டுக்கொண்டிருந்தது. ரயில் நிலையத்தில்
பூக்கடைகளுக்கு அருகே மதுப் போத்தலை உடைத்து வீசி எறிந்தவனின் பின்னால் வாலைக்
குழைத்தபடி சென்ற நாய் எனக்கு உபாலியை நினைவூட்டியது. உபாலி எங்கள் வீட்டுக்கும் கலா
வீட்டுக்கும் பொதுவானர். இந்திய ராணுவத்தினரின் காலம். மேலதிகமாக இரண்டு கால்களும்
ஒரு வாலும் அளவற்ற அன்பும் நிறைந்தவர். இயக்கத்தைக் கண்டால் குரைக்கமாட்டார்.
இந்திய ராணுவத்தைக் கண்டால் மட்டுமே குரைக்கும் பேரறிவாளர். அந்தக்
காரணத்துக்காகத்தான் பின்னொரு நாள் உபாலியை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றுவிட்டது
என்று ரேச்சல் வீட்டில் ஒரு மாலை விருந்தின்போது 'இந்து' ராமுக்குச் சொன்னேன் (அவருக்கு
அரை வெறி; எனக்கு முக்கால்).
'ஐயோ, அப்படியா? இலங்கையில் சண்டை துவங்கியபோது ஒரு கையைப் பின்புறமாகக் கட்டியபடி
அல்லவா எமது படைவீரர் சண்டை போட்டனர். அதுதான் காரணம் என்று நான் நினைக்கிறேன்' -
இந்து ராம்.
'ஐயோ, அப்படியா?' என்று நான் கேட்க நேர்ந்தது.
'இப்படி இந்தக் கடைப் பக்கமாக நின்றுகொள். தொலைந்துபோகாதே. ஒரே சனக் கூட்டமாக
இருக்கிறது. ஹேக் நகரத்துக்குச் செல்லப் பயணச் சீட்டுகளை வாங்கி வருகிறேன்' என்றபடி
எட்டி முன்னே போகிறான் ஜான். அப்போதுதான் என்னையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த
இரண்டு பெரிய ஆண்களைக் கண்டேன். ஒருவன் சிரித்தான். அழகிய சிரிப்பு. மற்றவன் முகம்
இறுகிப்போயிருந்தது. செப்பு நிறம். நீண்ட கூந்தல். கண்களும் கண்களும் இன்னொரு முறை
வெட்டிக்கொள்ளும் முன்பாக வேறுபுறம் திரும்பினேன். எனினும் அவர்கள் என்னை நோக்கி
நகர்வதை உணர்ந்தேன். அவர்களுடைய நீளக் கால்களும் எட்டிய நடையும் அச்சத்தைக்
கிளப்பின.
சற்று விலகிச் செல்வோமே என்ற எண்ணம் எழவும் நகர்ந்தேன். அப்போது எனது இடது கையை
இறுகப் பற்றியது ஒரு கை. அவனுடைய விரல்கள் பீரங்கிக் குழல்கள்போல இருந்தன.
விசித்திரமான வாசம் ஒன்று அவனைச் சூழ எழுந்தது. பாறாங்கல்போல இருந்த அவனுடைய
மார்பில் பெரு நகங்கள் கொண்ட விலங்கின் படமொன்று அரைகுறையாக வெளியே தெரிந்தது.
மற்றவன் இடுப்பைத் தழுவினான்.
'வா, போகலாம். பயப்படாதே. கொஞ்சம் பியர். கொஞ்சம் புகை. நிறைந்த களிப்பை
அனுபவிப்பாய்' என்று சொல்லும்போதே அவனது கைகள் இடுப்பைவிட்டு முன்புறமாகக்
கீழிறங்கின. அதிர்ச்சியும் ஆச்சரியமும் அச்சமும் ஒன்றாக வெடிக்கத் திடீரெனக் கைகளை
இழுத்துக்கொள்கிறேன். முழங்கையால் மூர்க்கமாக அவனுடைய விலாவை இடிக்கிறேன். சிரிப்பு
மறையாத முகத்தோடு திருப்பியும் முன்னேறி வருகிறான் அவன். எவ்வித ஆச்சரியமும் அற்றுச்
சனக் கூட்டம் என்னைத் தள்ளி விரைகிறது.
என்னுடைய முழுப் பலத்தையும் திரட்டி அவனுடைய முகத்தில் ஓங்கி அறைவதே பொருத்தமான வழி
என்று திட்டமிட்டேன். இரண்டடி பின்னால் எடுத்து வைக்கிறபோதுதான் ஜான் வருவதைக்
கண்டேன். எனக்குப் புரியாத மொழியில் உரத்த குரலில் ஜானும் அவர்களும்
பேசிக்கொண்டார்கள். கோபத்துடன் ஜான் முறைத்த பிற்பாடும் புன்முறுவலுடன் என்னைப்
பார்த்துக் கண் சிமிட்டினார்கள் அவர்கள். ஆண்களைக் காமுறும் இருவர் மத்தியில்
பெண்ணாய் உணர்ந்தேன்.
n
திரை மூடிய இரவைத் தாங்கி
முன் வந்தேன்
பின்னும் முன்னும்
யாரோ எழுப்பிய காலடி ஒலியில்
கவனம் பிசகிற்று
யாரடி என்றேன்
நினைவைத் திருப்பாமலேயே
திரும்பிச் சிரித்தாள்
திரை விலக்கி ஒளியை அழைக்கிறேன்
ஏழு நிறங்களில் மூன்று மொழிகளில்
ஒரே பாடல்
n
என்னுடைய புதிய நகரத்துக்கு வந்து மூன்று நாட்களாயிற்று. திசையும் இயற்கையும்
நாட்களும் துலங்கித் தெரிய ஆரம்பித்தன. பழைய அனுபவங்களோடு புதிய நகரத்துக்கு
வந்தவர்களையும் புதிய கற்பனையோடு பழைய வீடுகளுக்குத் திரும்பியவர்களையும் வளாகத்தில்
சந்தித்தேன். 'வீடுவரை நடந்து போவோமா என்று சஸ்கியா கேட்டால், இல்லை, நீ நடந்து போ.
நான் பின்னால் சைக்கிளில் வருகிறேன் என்று சொல்லிவிடாதே' என்றான் ஜான். 'வீட்டருகே
வந்ததும் மேலே வருகிறாயா என்று அவள் கேட்டால் அடுத்த முறை பார்ப்போம் என்று சொல்'
என்றான் யூடோ . முதல் தரம் அவளுடைய அறைக்குப் போகும்போது வெறுங்கையுடன் போகாதே
என்றாள் மரிஷா. 'நிறைவேறிய எதிர்பார்ப்பை எவ்வாறு கவர்ச்சி குன்றாமல்
தக்கவைத்துக்கொள்வது என்னும் உன் கேள்விக்கு அம்ஸ்டர்டாமில் விடை கிடைக்காது' என்ற
மேலான ஆலோசனை ரேச்சலிடமிருந்து கிடைத்தது. சஸ்கியாவுக்கு வாங்கிச் சென்ற
பூங்கொத்தின் மீதும் எனது ஆடைகள்மீதும் வெள்ளத்தை வாரி இறைத்துச் சென்றான் ஒருவன்.
n
மருத்துவமனை.
அடுத்தடுத்து விரியும் பெருங்கூடங்கள்.
கூடத்து ஒளியில் தனித்திருக்கிறது
ஒரு குப்பைத் தொட்டி
இருபுறமும்
காலற்ற இருக்கைகள்
ஆளற்றுக் கிடந்தன
கண்ணாடி வெளி.
வெளியே
காத்திருப்பவர்களின் சிகரெட் புகை இல்லை.
உடல் கிழித்து உயிர் திருத்தி
மூடித் தைத்தபின் வெளியே அனுப்புகிற
அறை ஒரு புறம்
உடல் பிளந்து உயிர் விளையும்
அறை மறுபுறம்
நடுவே தனித்து நிற்கிறேன்
இந்த நொடிப்பொழுது
பிறந்த எல்லாக் குழந்தைகளுமே
இறந்துவிட்டன என்ற அறிவிப்பு
கனவில் ஒரு கனவுபோல
மிதந்து வருகிறது
மூன்று குழந்தைகள் கருவில்
எதனைத் தெரிவாய்
எனக் கேட்கிறான்
அறம் அறப் படித்த மருத்துவ ஆலோசகன்
பைபிளைக் கேள் என்கிறான்
வெள்ளை நகரின் மெக்சிகோ மருத்துவன்
சிந்தனையை இடை முறித்தது
அலறி விரைகின்ற தீயணைக்கும் வண்டித்
தொடர்
n
-யார்?-
-நான்-
-...-
-ஏன் வந்தாய்?-
-தெரியாது-
-...-
-உள்ளே யார் உன்னோடு?-
-காற்றும்...?-
-உள்ளே வரலாமா?-
-.../இல்லை-
-ஏன்?-
-காதல், வரலாற்றை அழித்துவிடுகிறது-
n
பறக்காத பறவையைக் கண்டேன்
மலையேறத் தெரியாத குதிரையைக் கண்டேன்
கனவு காணாத கவிஞனைக் கண்டேன்
தவிலும் மத்தளமும் துணை சேராத
பாடலைக் கேட்டேன்
உள்ளொளி மரித்த
அவள் குரலையும் கேட்டேன்
ஆண்டுகளாகத் தத்தளித்த காதல்
முற்றுப் பெற்றது.
n
இரண்டு காதல்களுக்கிடையே
கிடைத்த சிறு இடைவெளி
அதில் நடந்தேன்
கனவற்ற ஒரு பகல்
மழையற்ற பெருநிலம்
முறையற்ற சிறு காமம்
துடக்கி எறிய ஒரு பறவையின்
துடவி இறகா அது
நனைத்துச் சுமக்கிறேன்
பெருவாழ்வை
இறந்தும் எழுகிறேன்
தரை தெரியாத பறவையாய்.