ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு குரல் உண்டு.
டெல்லி யாரையும் சண்டைக்கு அழைக்கும். இந்து அரசர்களையும் முகலாயச்
சக்கரவர்த்திகளையும் கண்ட நகரம் அது. அங்கு செல்லாத படைகளோ நிறைவேற்றப்படாத
தீர்மானங்களோ இல்லை. அரசு இன்றும் அமரும் கோட்டை என்று மிதப்பு அதற்கு உண்டு. மும்பை
வேறு மாதிரி. "நீயும் பிழைத்துக்கொள்; நானும் பிழைத்துக்கொள்கிறேன்" என்று சொல்லும்.
சரசரவென்று மேலேறும் திறமை நமக்கிருக்கிறதா என்பதை உற்றுப் பார்க்கும்.
வெற்றியடைந்த பிறகு ஒயிலாக வந்து கைகோர்த்துக்கொள்ளும்.
வெவ்வேறு நகரங்கள். வெவ்வேறு குரல்கள். "அட வாங்க, வந்து உக்காருங்க" "வெளிய போய்யா,
சும்மா வந்துக்கிட்டு..." "வந்து சில நாள் தங்குங்க, ஊர் சுத்திப் பாருங்க - அப்றம்
போயிறணும், என்ன?" "முன்னமே எங்க ஊர்ல இருந்துருக்கீங்களா?" "அந்தக் காலத்துல எங்களை
ஆண்ட ராஜாவெல்லாம்..." "ஐட்டி ஹப்பு தெரியுமா, எங்கூரு?" "ஹாய் ஹௌ ஆழ் யூவ்?" "ஒய்ய்ய்...
ஆரப் பாத்துப் பட்டுக்காடுன்னீய?"
சென்னையின் குரல் என்ன? மென்மையாக வரவேற்குமா? சகஜமாகத் தோளில் கை போடுமா? பட்டுக்
கொள்ளாமல் பேசுமா? ஐஸ் புன்னகையுடன் மௌனம் காக்குமா? தெரிந்துகொள்ளும் முயற்சியில்
இறங்கினேன். ஆண்ட்ரூ கோகன், ஃப்ரான்சிஸ் டே, பேரி திம்மப்பா, மூவரும் நாயக்கர்களிடம்
சேர்ந்து உடன்படிக்கை செய்துகொண்டு, 'மதராஸ்பட்டின'மாக உருவாக்கிய சென்னை மாநகரின்
368ஆம் பிறந்த தினத்தைவிட அதற்குச் சிறந்த சந்தர்ப்பம் அமைய முடியுமா?
என் தேடல் வேட்டையைத் தொடங்கினேன். என்னைப் போலவே சென்னையின் குரலைத் தேடித்தானோ
என்னவோ, ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை பல நிகழ்ச்சிகளைச்
சென்னையைச் சுற்றி எற்பாடு செய்திருந்தனர் வின்சென்ட் டிசௌசா, சசி நாயர், எஸ்.
முத்தையா ஆகியோர்.
சென்னையின் பிறந்த தினக் கொண்டாட்டம் நடனத்தில் ஆரம்பித்தது.
ஆகஸ்ட் 20ஆம் தேதி தமிழ்நாட்டின் பழங்கால நடன வகைகளைப் பற்றி, 'த பார்க்' ஓட்டலில்
இனிமையான மாலை வேளையில் திருமதி லஷ்மி வெங்கடேசன் பேசினார் (சென்னை தன் பிறந்த நாளை
22ஆம் தேதி கொண்டாடினாலும் விழா அதற்கு முன்பே களைகட்ட ஆரம்பித்துவிட்டது). நடனக்
கலைஞரான லஷ்மி, பரதத்தைப் பற்றி நுணுக்கமாகவும் சுவாரசியமாகவும் விவரித்தார். மேலும்
தெரிந்துகொள்ள வேண்டும் எனும் ஆர்வத்தைக் கிளறும் வகையில் இருந்தது அவரது உரை.
அடுத்த நாள், சேமியர்ஸ் என்னும் சிறிய புத்தகக் கடையில், ஆய்வாளர் ஆ.இரா.
வேங்கடாசலபதியின் உரை - எதில் தெரியுமா? 'முச்சந்தி இலக்கியம்' பற்றி!
இலக்கியத்தில் உள்ள எத்தனையோ வகைகளைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு. ஆனால் முச்சந்தி
இலக்கியம் பற்றிக் கேட்டதில்லை. 1920களிலும் 1930களிலும் சென்னையின் தெருக்களில்
விற்கப்பட்ட காலணா பத்திரிகைகள்தான் முச்சந்தி இலக்கியமாக உருவெடுத்தன. இந்தப்
பத்திரிகைகளில் வெளிவராத நாட்டு நடப்பில்லை; உற்சாகமாகப் பாட்டெழுதப்படாத கோர்ட்
கேஸ் இல்லை. அமரர் கல்கி தன் நாவலான 'தியாக பூமி'யில், கதாநாயகி கோர்ட்டுக்குச்
செல்லும்போது, அது காலணா பத்திரிகையில் வெளிவருவதாகக் குறிப்பிடுகிறார். இன்னொரு
காலணா பத்திரிகையில் வந்த கோர்ட் கேஸுக்கு ஒரு டிரெய்லர் இதோ:
"அம்சவல்லி கேஸு, விலையோ ஆறு காசு ..."
கொஞ்சம் மட்டரகமாகக் கருதப்பட்ட 'குஜிலி' மார்க்கெட்டில்தான் இந்த வகைப் புத்தகங்கள்
அதிகம் விற்பனையாயின. 'குஜிலி' என்ற பெயர் எப்படி ஏற்பட்டிருக்கும் என்பதே சுவையான
ஆராய்ச்சி. பல வருடங்களுக்கு முன் அங்கு வந்து குடியேறிய குஜராத்தியர் (குச்சிலியார்)
சமூகத்தின் பெயர் மருவி இப்படி ஆகியிருக்கலாம். விந்தன் எழுதிய 'பாலும் பாவையும்'
கதையிலிருந்து அ. மாதவையா எழுதிய நாவல் வரை பலவற்றில் குஜிலி மார்க்கெட் பற்றிய
விவரங்கள் இருக்கின்றன. காலணா புத்தகங்களை விற்பவர்கள் அநேகமாகப் பெரிய எழுத்து
இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றைத்தான் எப்போதும் வெளியிட்டு விற்றனர். கூடவே,
அரசியல், சினிமா என்று அன்றைய சூடான செய்தியும். அப்போதெல்லாம் ஹிந்து இரண்டாயிரம்
பிரதிகளும் சுதேசமித்திரன் மூவாயிரம் பிரதிகளும் விற்றன என்பதை நினைவில் கொள்ள
வேண்டும்.
விற்கும் வழிகள் தெரிந்தவர்கள் இவர்கள். உதாரணத்திற்கு, முச்சந்தியில் நின்று
பாட்டுப் படித்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரைக் கவனிக்காமல் கடந்து சென்ற இளம்
பெண்ணைப் பார்த்து, "எங்க போற? மாமியார் செத்தா என்ன பாட்டு பாடுவ? இங்க வந்து
கத்துக்கிட்டுப் போ!" என்றாராம்!
இவ்வகைப் பத்திரிகைகளில் வெளி வந்த சில விஷயங்கள், அன்றைய பிரபலப்
பத்திரிகைகளில்கூட அதிக முக்கியத்துவம் பெறாதவை. 1921இல் நடந்த மாப்ளா கொடூரம் -
ஏறக்குறைய நூற்றிருபது பேர் மூச்சடைத்துப் பரிதாபமாக இறந்துபோன செய்தி - அந்த
வகையைச் சேர்ந்தது.
அன்றைய தேதியில் காங்கிரஸ் தலைவர்களும் அவர்களது நடவடிக்கைகளும் மிகப் பிரபலம்.
நொண்டிச் சிந்து, ஒயில் சிந்து போன்ற பாட்டு வகைகளை வைத்துப் பாடத் தெரிந்த இவர்கள்,
யாரேனும் தலைவர் இறந்தால், 'கொலைச் சிந்து' பாடுவார்களாம். தேச விடுதலைக்குப்
பாடுபட்ட பகத் சிங்கைப் பற்றிப் பாடப்பட்ட கொலைச் சிந்துகள் ஏராளம். பஞ்சாபைச்
சேர்ந்த இளைஞருக்குத் தமிழ் நாட்டில் எத்தனை மரியாதை, அன்பு! அவர் மேல்
எல்லோருக்கும் இருந்த விசுவாசம் ஒரு கட்டத்தில் காந்தியைக் கூட மிஞ்சியிருந்தது.
மதுரைப் புதுமண்டபத்தை மையமாகக் கொண்டு இயங்கிய முச்சந்தி இலக்கியம், இன்று
ஏறக்குறைய அழிந்தேவிட்டது என்று சொல்லலாம். என்றாலும், சில சமயம் பழைய மதராஸின்
வீதியோரங்களில் நின்று கவனித்தால் ஒரு பாடலோசை கேட்கவில்லை?
டாக்டர் சலபதியின் சுவாரசியமான உரையைக் கேட்டுவிட்டு அடுத்த நாள் தாஜ் கொரமண்டல்
ஓட்டலில் நுழைந்த எனக்கு, கிரிக்கெட் பற்றிய கலந்துரையாடல் காத்திருந்தது. தாஜின்
ஹேஸ்டிங்ஸ் அறையில் பேசியவர், கிரிக்கெட் மீது உயிரையே வைத்திருக்கும், இந்திய
கிரிக்கெட் அணியில் இடம்பெறுவதற்கான தகுதிகள் பெற்றிருந்த ராம் நாராயண். 1792இல்
சென்னை அணி முதன்முதலாக கிரிக்கெட் விளையாடியது; 1865இல் சேப்பாக்கத்திற்குச்
சென்றது; 188ஈல் புச்சி பாபு நாயுடு, பிரிட்டிஷ்காரர்களின் அவமானங்களைச் சகிக்க
முடியாமல் தென்னிந்தியர்களை வைத்துப் புதிய அணி ஒன்றை உருவாக்கியது என்று
சுவாரசியமான தகவல்களைச் சொல்லிக் கொண்டு வந்தவர், அதன் பிறகு தமிழ்நாடு மற்றும்
சென்னை அணிகள் பற்றிய விவரங்களைச் சொல்லத் தொடங்கினார். சென்னை கிரிக்கெட்டில்
நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களுக்கு அவை மிகவும் உபயோகமாக இருந்திருக்கும் என்பதில்
சந்தேகமில்லை. உரையின் சுவையை வெகுவாக அதிகரித்தது எஸ். முத்தையாவின் பழங்காலப்
புகைப்படங்கள். இன்றைய கோலா குடிக்கும் கிரிக்கெட் இளைஞர்களுக்கு நடுவே, அந்தக்
காலத்தின் புகைப்படங்களில், கறுப்பு வெள்ளையில் எட்டிப் பார்த்த அந்தச் சிரித்த
முகங்கள் வித்தியாசமானவை.
ராம்நாராயண் சொன்ன ஒரு விஷயம் மனதில் தைத்தது. சென்னை டெஸ்ட்டில் வெற்றி பெற்ற
வாசிம் அக்ரமும் மிக அதிகமாக ரன் சேகரித்த சயீத் அன்வரும் சொன்னது: "சென்னை
ரசிகர்கள் அற்புதமானவர்கள்!"
இலக்கியம், நடனம், கிரிக்கெட். பிறகு? இசைதான்.
ஆகஸ்ட் 23ஆம் தேதி, ரம்மியமான மாலைப் பொழுதொன்றில், தாஜ் கன்னிமரா ஓட்டலில்
நிகழ்ந்தது ஒரு மாறுபட்ட இசை நிகழ்ச்சி. இசை பற்றிய புத்தகத்தை விமர்சனம் செய்தவர்
வி. ஸ்ரீராம். சென்னைக்காரர். புத்தகத்தை எழுதி, ஒரு பதம் பாடியும் காட்டியவர்
மாத்யூ ஹார்ப் ஆலன். அமெரிக்கர்.
இசையுலகின் ஒரு ஓரத்தைத் தொட்டுவிட்ட திருப்தியுடன், 'நம்ம சென்னை' என்று சந்தோஷமாக
அறிவித்த ஒரு ஷர்ட்டை வாங்கிக் கொண்டு, எழும்பூரின் தெருக்களில் நடந்து சென்றேன்.
இசையின் உச்சியிலிருந்து நிகழ் கால சினிமாவின் கரைகளுக்குக் கொண்டுவந்து சேர்த்தது
அடுத்த நாள்.
சேமியர்ஸ் கடையில் நடந்த நிகழ்ச்சி இது. காபி, பிஸ்கெட் எல்லாம் ருசித்துவிட்டு
ஆவலாக உட்கார்ந்திருந்தோம். ஒரு புன்னகையுடன் ஹரிஹரன் எழுந்து மைக் முன்னால்
நின்றார். "நான் படமெடுத்தால் எதுவும் புரியாது" என்று தன்னை அறிமுகம்
செய்துகொண்டார் ஹரிஹரன்.
[கூட்டத்தில் சிரிப்பலை பரவியது. கூடவே ஆச்சரியமும். என்னதான் தன்னடக்கம் என்றாலும்
...]
உடனே தொடர்ந்தார். "நான் மணி கவுலின் கலையுலக வாரிசு என்று ஒரு காலத்தில் பரவலாக
அறியப்பட்டவன். பெரிய இயக்குனர் என்று பாராட்டு பெற்றவர் அவர். அவருடைய படங்கள்
யாருக்கும் புரிந்ததில்லை. அதே போலத்தான் நான் எடுத்த படமும் யாருக்கும்
புரியவில்லை. 1977/78இல் 'காசிராம் கோட்வால்' என்று ஒரு படம் எடுத்தேன். அது
என்னென்னவோ ஃபிலிம் பெஸ்டிவலுக்கெல்லாம் சென்றது. அப்புறம் அவ்வளவுதான்.
"எனக்கோ படம் எடுக்க வேண்டும் என்று பயங்கர ஆசை. ஆனால், எப்படி, என்ன செய்வது என்று
புரியவில்லை. கையில் காசில்லை. அப்போதுதான், சி.பி.டி.யின் ஷாந்தாராம், "சென்னைக்கு
வருகிறாயா? குழந்தைகளுக்காகப் படம் எடுக்கிறாயா?" என்றார். எனக்கோ படம் எடுத்தால்
போதும் என்று இருந்தது. பம்பாயில் ஒரு கணம் கூட இருக்க முடியவில்லை. உடனே கிளம்பிச்
சென்னை வந்துவிட்டேன்."
[கொஞ்சம் அமைதி.]
"சென்னையைப் போல் சினிமா எடுப்பதற்கென்றே அமைந்த இடத்தை இதுவரை நான் பார்த்ததில்லை.
நான் வந்த காலத்தில் சென்னைதான் தென்னிந்திய சினிமாவுக்கே தலை நகரம் போல. ரொம்ப
ஆரம்பக் காலங்களில் புராணப் படங்களாக எடுத்துத் தள்ளினார்கள். அப்புறம் தேசப்
பற்றுப் படங்கள் வந்து குவிந்தன. அப்போதும் அதற்குப் பிறகும் சென்னைதான்
எல்லாவற்றுக்கும் செண்டர். தெலுங்கு, மலையாளம் என்று எல்லா மொழிப் படங்களுக்கும்
சென்னை டெக்னிஷியன்களைத்தான் நம்பினார்கள். இந்தியா மொத்தத்தில் எடுக்கப்பட்ட
படங்களுக்கு, 65% லேபர் தென்னிந்திய சினிமாவின் பங்களிப்பு. அந்த விஷயத்தை
நினைத்துப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
"நம்மூரில் கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்களாக இருந்தால் உடனே நண்பர்களாக
வரித்துக்கொண்டுவிடுவார்கள். இயக்குனர், இசையமைப்பாளரின் பார்ட்டியில் இருக்கும்
ஒருவரிடம், "இந்தப் பாட்டு ஹம்சத்வனி ராகம்தானே?" என்று கேட்டால், உடனே
மலர்ந்துபோய் இன்ஸ்டன்ட் ஃப்ரெண்டாகிவிடுவார். சென்னைக்காரர்களின் மனம் அப்படி.
"இங்கேயிருப்பவர்களின் அசாதாரண தைரியம் இன்னொரு விஷயம். கோடிக்கணக்கான ரூபாய்
மதிப்புள்ள பேனாவிஷன் கேமராவை இறக்குமதி செய்வார்கள். "இத்தனை செலவு
உங்களுக்கெப்படிக் கட்டுபடி ஆகும்?" என்று விசாரித்தால், "எல்லாம் ரெகவர்
பண்ணிக்கலாம் சார்" என்று அசால்ட்டாக பதில் வரும். ஜெர்மனியிலிருந்து வரும்
விலைமதிப்பில்லாத சமாச்சாரமெல்லாம் அங்கே எப்படி உபயோகப்படுத்துகிறார்கள் என்று
தெரியாது ... ஆனால் அவை இங்கே மாற்றி மாற்றி கன்னாபின்னாவென்று ஷிஃப்ட் ஓடும்.
ஜெர்மானிய மெஷினின் உண்மையான சோதனை இங்கே சென்னையில்தான் நடக்கிறது!"
ஹரிஹரன் சொன்ன செய்திகளைக் கேட்டுக் கொஞ்சம் சிரித்து, நிறைய சிந்தித்து, பிறகு
நான் சென்றது அக்கார்ட் ஓட்டலில் நடந்த கல்பனாவின் உரைக்கு. சமீபத்தில்
புதுப்பிக்கப்பட்ட சென்னைப் பல்கலைக்கழகம் இப்பொழுது பளபளவென்று, முதன்முதலில்
1800இல் கட்டப்பட்டதுபோல் ஜொலிக்கிறது என்றால், அதற்குக் கல்பனாதான் காரணம்.
அவர்தான் அந்தப் பணியை ஏற்று நடத்திய கட்டிடக் கலைஞர்.
"எவ்வளவு கஷ்டப்பட்டோ ம் என்று எங்களுக்குத்தான் தெரியும்" என்று சிரித்தார்
கல்பனா. "முதலில் கூரையெல்லாம் பிரித்தோம். செனட் இல்லத்தில் பயன்படுத்தப்பட்ட
சுண்ணாம்புக் கலவை அந்தக் காலத்தில் மெட்ராஸ் ப்ளாஸ்டர் என்று அறியப்பட்டது.
வேறொன்றுமில்லை, செட்டிநாட்டு ப்ளாஸ்டர்தான் அது. அப்போதைய பிரிட்டிஷ்
பத்திரிகைகளில் மிக விரிவாக எழுதப்பட்ட அது, உலகத்தில் வேறெங்கும் கிடையாது.
அரும்பாடுபட்டு அந்தக் கலவையை மீண்டும் உருவாக்கினோம். அப்புறம் சுவருக்கு எப்படி
பெயின்ட் அடிப்பது என்று தெரியவில்லை. சுவரின் சுண்ணாம்பில் பெயின்ட் கலந்தால்
அதைச் சுண்ணாம்பு அரித்துவிடும். அதனால் எர்த் ஆக்சைடு என்ற ஒன்றைத் தேடி
அலைந்தோம். மதுரையில் இருந்த ஒரு மர வியாபாரிதான் கடைசியில் அது எங்கே கிடைக்கிறது
என்ற ரகசியத்தைச் சொன்னார்."
அவரும் அவரது குழுவும் பெயின்ட் அடித்தது, நான்கு டவர்களின் மேல் நின்று உச்சியைச்
சரிபார்த்தது, சாரக் கம்பங்களின் மேல் நடந்து வேலை செய்தது என்று சுவை குன்றாமல்
விவரித்த அவர், "சென்னையின் புராதனக் கட்டிடங்கள் இனி வரும் வருடங்களில்
பாதுகாக்கப்படுவது நம் கையில்தான் இருக்கிறது" என்று முடித்தார்.
கட்டிடம் முடிந்தால், மீண்டும் ... சினிமா. இம்முறை பழங்கால சினிமா.
பெண்ணாத்தூர் சுப்ரமணியம் ஹைஸ்கூலில் மாலை மணி ஏழு. ஸ்கூலின் கடைசிப் பகுதியில்
இருந்த தக்ஷிணா மூர்த்தி ஹால். வெளியே சடசட வென்று மழை வந்துவிட்டது. அதன்
சப்தத்துடன் போட்டியிட்டு எழுந்தது ராண்டார் கய்யின் கரகரப்பான குரல்.
"க்ளிப்பெல்லாம் சரியா இருக்கா?" என்று விசாரித்துக்கொண்டார். "அன்றைய சினிமாவில்
மதராஸ்பட்டினத்தைப் பார்க்கலாமா?" என்றார். உற்சாகமாக எல்லோரும் தலையசைக்க, தமிழ்
சினிமா சரித்திரத்தின் பக்கங்கள் பின்னோக்கிப் புரட்டப்பட்டன.
அன்றைய மதராஸ் பட்டினத்தில், அவுட்டோ ர் ஷூட்டிங் எடுப்பதற்கென்று பரவலாக
அறியப்பட்ட இடம் அடையாறு. மரங்கள் சூழ்ந்த பகுதி. வெயில் வந்தால்தான் ஷூட்டிங்.
ஏனென்றால் லைட்டிங்கிற்கெல்லாம் வசதியில்லை. மேகம் வரும்போதெல்லாம் உட்கார இடம்
தேடி, சாப்பாட்டுக் கடையை முடித்து, இப்படியே சமாளித்திருக்கிறார்கள். சாப்பிட்ட
பருக்கையையெல்லாம் காடுபோல் வளர்ந்திருந்த பகுதியில் எல்லோரும் வீசியெறிய, அதைக்
கொத்தித் தின்னக் காக்கைக் கூட்டம் வந்துவிடும். 'கா, கா' என்று அவை கத்தி
அமர்க்களப்படுத்துவது ஷூட்டிங்கை பாதிக்கவே, அவற்றை விரட்டுவதற்காகவே தனியாக ஓர்
ஆங்கிலோ இந்தியரை ஏற்பாடு செய்தார்கள். படம் வெளிவரும்போது
'Crow-shooter Joe' என்று டைட்டிலில் தெரியுமாம்.
அதோடு ராண்டார் கய்யின் பேச்சு முடிந்தது. அப்புறம் திரைப்பட க்ளிப்களை ஓடவிட்டு,
அதனுடன் சேர்ந்து பேச ஆரம்பித்தார். பழைய மதராஸைக் காட்டும் சில படங்களைப்
பார்த்தோம். முக்கியமாக 'என் மனைவி'. மதராஸ் தெருக்களெல்லாம்
ஈயோட்டிக்கொண்டிருக்கின்றன. எனக்கு இதில் மிகப் பிடித்த வசனம்:
சாரங்கபாணி: நாங்க இப்போ ஊரை விட்டு ரொம்ப தொலவு குடி போயிட்டோ ம்.
வந்தவர்: அப்படியா? மின்னே மைலாப்பூர்ல இருந்தேளே? இப்போ எங்கே?
சா (சோகத்துடன்): கோடம்பாக்கம்.
வந்தவர்: அடப் பாவமே!
ரொம்ப நேரம் சிரித்துக்கொண்டிருந்தேன். கோடம்பாக்கம் வெகு தொலைவாமே!
'காதலிக்க நேரமில்லை' படத்தின் கடற்கரைப் பாட்டுடன் நிகழ்ச்சி முடிவடைந்தது.
கொட்டும் மழை நின்றிருந்தது. சிறு தூறலை ரசித்தவாறு மைலாப்பூர் தெருக்களில்
நடந்தேன். பழைய சென்னையின் வாசத்தில் மிதந்தவாறு வீடு வந்து சேர்ந்தேன்.
மறுநாள், தியடோ ர் பாஸ்கரன் சேமியர்ஸ் புத்தகக் கடையில் ரோஜா முத்தையா நூலகத்தைப்
பற்றிப் பேசினார். ரோஜா முத்தையா என்னும் புத்தகப் பிரியரால் பல வருடங்கள்
சேகரிக்கப்பட்ட புத்தகங்களுடன், இன்று அழியாப் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டுவரும்
நூலகம் இது. உரை மிக சுவாரசியமாக இருந்தது. ரோஜா முத்தையா நூலகத்தை நேரிலேயே சென்று
பார்த்துவரும் அளவுக்கு ஆவலைத் தூண்டுவதாக இருந்தது.
இறுதி நாள். ஆகஸ்ட் 27ஆம் தேதி, சென்னை தின விழாவையொட்டிப் பல புதிய நிகழ்ச்சிகள்
நடந்தன. பி.எஸ். ஹைஸ்கூலில் விநாடி வினா நிகழ்ச்சிகள். காலையில் நகரைச் சுற்றிப் பல
'ஹெரிடேஜ் வாக்'குகள். சென்னையின் தொன்மையையும் அதன் சரித்திர முக்கியத்துவத்தையும்
ரசித்து அனுபவிக்கவென்றே ஏற்பட்ட நடைப் பயணங்கள் இவை. விக்டோ ரியா மெமொரியல் ஹால்,
சென்ட்ரல் ரயில் நிலையம், மயிலாப்பூர் போன்ற இடங்களைச் சுற்றி நடந்தன.
மாலையில் கவிஞர் கனிமொழியின் உரை, சென்னையில் கவிதைகள் பற்றி. திருக்குறளிலிருந்து
தொடங்கி, மெல்ல மெல்ல மனுஷ்யபுத்திரன், அய்யனார், இளம்பிறை ஆகிய கவிஞர்களின் சென்னை
பற்றிய கவிதைகளைப் படித்துக் காண்பித்தார். அதிலும் அய்யனாரின் 'கொம்புகள்' என்ற
கவிதை - முதல் முறையாக நகரத்திற்கு வரும் மனிதன் ஒருவன் அங்கு எல்லோரும்
கொம்புகளோடு இருப்பதைப் பார்த்து, பிறகு தானும் கொம்புகளை அடைவது - தன்னை மிகவும்
கவர்ந்ததாகச் சொன்னார். "அய்யனாரின் கண்களில் எப்போதும் ஒரு மிரட்சி இருந்துகொண்டே
இருக்கும். நகரத்தைப் பற்றிய உணர்வுதானோ அது என்று எனக்குத் தோன்றும்" என்று
கனிமொழி புன்னகையுடன் சொன்னார்.
"என்னைப் பொறுத்தவரை, கானா பாட்டுக்கள்தான் சென்னையை மிக அழகாகப் பாடுகின்றன.
அவற்றில் தொனிக்கின்ற உண்மை, எதற்கும் மன்னிப்புக் கோராத குணம், இவற்றை வேறெங்காவது
காண முடியுமா?" என்றார் அவர்.
"சென்னையில் எல்லாம் உண்டு. அதன் கசகசப்பிலும் நெரிசலிலும்கூடக் கவிதை உண்டு"
என்றவர், சென்னையைப் பற்றித் தான் எழுதிய கவிதை ஒன்றை வாசித்துத் தன் உரையை
முடித்துக்கொண்டார்.
மெட்ராஸ் பட்டினப் பிறந்த தினக் கொண்டாட்டங்கள் முடிந்த ஞாயிற்றுக்கிழமை மெரீனா
கடற்கரையில் உட்கார்ந்திருந்தேன். என்னைச் சுற்றி மனித வெள்ளம். சுனாமி அலையடித்த
இடமா இது? தூரத்தில் அலைச் சத்தம். கேட்டுக்கொண்டு அமர்ந்திருந்தேன். மெல்ல
சத்தங்கள் மறைந்தன. அமைதி பரவுவது போல் இருந்தது. வெளியே அல்ல.
இதுதான் சென்னையின் குரல் என்பதைப் புரிந்துகொண்டேன்.