Google   www kalachuvadu.com

பதிவுகள்: கூடு ஆய்வுச் சந்திப்பு

கூடிவந்த தருணம்

நெய்தல் கிருஷ்ணன்

n கூடு ஆய்வுச் சந்திப்பு

n அற்றைத் திங்கள்

n சென்னை தின விழா

'கூடு' (ஆய்வுச் சந்திப்பு) கருத்தரங்க அழைப்பிதழைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரியமும் அதில் கலந்துகொள்ள வேண்டுமென்ற ஆர்வமும் ஏற்பட்டது. இரண்டுக்கும் காரணம், அழைப்பிதழில் இடம் பெற்றிருந்த கட்டுரையாளர்களில் ஒரு சிலரைத் தவிரப் பெரும்பாலானவர்கள் ஆய்வு மாணவர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள்.

கடந்த ஒரு வருடமாக நாமக்கல் நகரில் இயங்கிவரும் அமைப்பு 'கூடு'. ஒரு தலைப்பைத் தேர்வு செய்து மாணவர்களும் வாசகர்களும் கலந்து உரையாடும் நிகழ்வாகப் பெருமாள்முருகனின் முயற்சியில் அவரது இல்லத்தில் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. இரண்டாவது ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கும் முகமாக, இந்தக் கருத்தரங்கு நாமக்கல்லில் ஓய்வூதியர் சங்கக் கட்டடத்தில் 23.07.2006 அன்று நடைபெற்றது.

பெயர்ச் சொல்லாக வரும்பொழுது கூட்டைச் சுட்டுவதாகவும், வினைச் சொல்லாக வரும்பொழுது ஓர் இடத்தில் கூடுவதாகவும் பொருள்படுவதால் இந்த அமைப்பிற்குக் 'கூடு' என்று பெயர் வைத்திருப்பதாகப் பெருமாள்முருகன் தன் வரவேற்புரையில் தெரிவித்தார். எளிதில் தொடர்புகொண்டு புத்தகங்களைப் பெறக்கூடிய அளவில் காலச்சுவடு பதிப்பகத்தோடு தனக்குத் தொடர்பு இருப்பதால் முதலில் காலச்சுவடு பதிப்பக வெளியீடுகளில் பதினேழு நூல்களைத் தேர்வு செய்து விமர்சனம் செய்வதாகவும், பிற பதிப்பக நூல்களையும் தேர்வு செய்து தொடர்ந்து கருத்தரங்குகள் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கருத்தரங்கை நஞ்சுண்டன் தொடங்கிவைத்தார். கன்னட இலக்கியத்தில் அங்குள்ள பேராசிரியர்களின் பங்கும் முக்கியமானது. ஆனால் தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட சூழ்நிலை மிகவும் குறைவாகவே இருப்பது வருத்தமளிக்கிற விஷயம் என்று தன் துவக்கவுரையில் அவர் குறிப்பிட்டார்.

இன்றைய சூழல், வாழும் பிணங்களாக மனிதர்களைக் கருதுகிறது என்றார். தகவல் தொடர்புச் சாதனங்களால் வடிவமைக்கப்பட்ட இம்மனிதர்களிடமிருந்து வேறுபடுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. குறைவான பேர்களாக இருப்பினும் இவ்வாறு கூடுவதும் பேசுவதும்தான் நமக்குரிய அடையாளத்தை வழங்கும். நம்மை உயிர்ப்புள்ளவர்களாகக் காட்ட இத்தகைய கூட்டங்களே பயன்படும் எனத் தமது தலைமை உரையில் பொ. வேல்சாமி உணர்ச்சிகரமாகக் குறிப்பிட்டார்.

பொ. வேல்சாமியின் உரையோடு முதல் அமர்வு தொடங்கியது. இதில் விரிவுரையாளர்கள் மு. நடராசன், இரா. தங்கம், என். நல்லுசாமி ஆகியோர் முறையே முச்சந்தி இலக்கியம், உ.வே.சா: பன்முக ஆளுமையின் பேருருவம், கூகை ஆகிய நூல்களையும், எம்.ஃபில். ஆய்வு மாணவர் பெ. பாலசுப்பிரமணியன் ஒரு புளியமரத்தின் கதை நாவலையும் பற்றிக் கட்டுரைகள் வாசித்தனர்.

இரண்டாவது அமர்வில் பேராசிரியர் வ. கிருஷ்ணன் தலைமையில் தமிழாசிரியர் பி. எழிலரசி, எம்.ஃபில் ஆய்வாளர் த. சாவித்ரி, வழக்கறிஞர் மா. சு. சரவணன், விரிவுரையாளர் ஆ. சின்னத்துரை ஆகியோர் முறையே பெண் வழிகள், பாத யாத்திரை, பச்சைத் தேவதை, பதிவுகள் அழியும் காலம் ஆகிய நூல்களைப் பற்றிக் கட்டுரைகள் வாசித்தனர்.

அரங்கில் மதிய உணவு வழங்கப்பட்டது. பின்னர் மூன்றாவது அமர்வு பேராசிரியர் க. காசிமாரியப்பன் தலைமையில் தொடர்ந்தது. விரிவுரையாளர்கள் இரா. வெங்கடாசலம், மலை செந்தில்குமார், இரா. வெங்கடேசன், தமிழாசிரியர் நா. அருள்முருகன் ஆகியோர் முறையே தலித்திய விமர்சனக் கட்டுரைகள், தந்தையின் நினைவுக் குறிப்புகள், தோட்டியின் மகன், பிள்ளை விளையாட்டு ஆகிய புத்தகங்களைப் பற்றிக் கட்டுரைகள் வாசித்தனர்.

பேரா. மா. வெங்கடேசன் தலைமையில் நடந்த நான்காவது அமர்வில் தமிழாசிரியர் சி. சந்திரன், கவிஞர் சு. வேதாராமன், விரிவுரையாளர்கள் பி. இராஜேஸ்கண்ணன், வை. தர்ம லிங்கம், ஆய்வாளர் பெ. முத்துசாமி ஆகியோர் முறையே தமிழகத்தில் அடிமைமுறை, கிழவனும் கடலும், பாரதியின் கடிதங்கள், வாடிவாசல், கனவுப் புத்தகம் ஆகிய நூல்களைப் பற்றிக் கட்டுரைகள் வாசித்தனர். பேரா. மு. நடராசன் நன்றி கூறினார்.

அமர்வுகளைத் தலைமை ஏற்று நடத்திய பேராசிரியர்கள் அந்தந்த அமர்வுகளிலுள்ள கட்டுரையாளர்களின் கட்டுரைகள் பற்றிக் கருத்துகள் கூறியதிலிருந்து, கட்டுரைகளை அவர்கள் தொடர்ந்து கவனித்து வந்ததும், குறிப்பாக அந்தப் புத்தகங்களைப் படித்திருந்ததும் தெரிந்தன.

கருத்தரங்கில் பங்கேற்ற அனைவரும் கட்டுரைகளை எழுதி வாசித்தது, அவர்களுடைய சிரத்தையும் உழைப்பையும் வெளிப்படுத்தியது. வாசித்த கட்டுரைகளில் ஒரு சிலவற்றில் மட்டும் விமர்சனப் பார்வை தென்பட்டது. மற்ற கட்டுரைகளில் விமர்சனப்பார்வை இல்லாவிட்டாலும், அவர்கள் அந்தப் புத்தகங்களைப் படித்து நன்கு புரிந்துகொண்டிருந்தது தெரிந்தது. புத்தகங்களைப் படிக்காமல் - பார்க்காமலே - அதைப் பற்றிக் கருத்துச் சொல்லும் மேதைகள் மலிந்துவிட்ட இன்றைய சூழலில் புத்தகத்தைப் படித்து, அதைப் புரிந்துகொண்டு அதன் சாரம்சத்தை வெளிப்படுத்தியது முக்கியமான ஒன்றாகும். நாளை இவர்கள் விமர்சனக் கட்டுரைகளை எழுதுவார்கள் என்று நம்பிக்கை கொள்ளலாம்.

கருத்தரங்க நிகழ்வினைத் தொகுத்துப் பேசுவதற்காக நான் அழைக்கப்பட்டேன். இந்தக் கருத்தரங்கில் சுமார் நூற்றி ஐம்பது மாணவ-மாணவிகள் கலந்துகொண்டது மிகுந்த ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. காரணம், நான் கலந்துகொண்ட கல்லூரி விழாக்களிலும் பல்கலைக்கழக விழாக்களிலும் கலந்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயத்தின் காரணமாகவே அவ்விழாக்களில் மாணவ-மாணவிகள் அமர்ந்திருந்தனர். ஆனால் கல்லூரிக்கு வெளியே, பல்கலைக்கழகத்திற்கு வெளியே எந்த நிறுவனங்களின் ஆதரவுமின்றி சுமார் நூற்றி ஐம்பது மாணவ-மாணவிகள் பங்கேற்றதுதான் இந்தக் கருத்தரங்கின் முக்கிய சிறப்பம்சமாக எனக்குத் தெரிகிறது என்றேன்.

கட்டுரை வாசித்த பேராசிரியர்கள் தவிர, பார்வையாளர்களாகப் பேராசிரியர்களும் ஆசிரியர்களும் கலந்து கொள்ளாதது தொடக்கவுரையில் நஞ்சுண்டன் குறிப்பிட்ட கருத்தை உறுதிப்படுத்தியது.

இக்கருத்தரங்கு, பல ஆண்டுகளாகப் பெருமாள்முருகன் மேற்கொண்டுவரும் உழைப்பின் வெளிப்பாடு. பெருமாள்முருகன் கல்லூரியில் பணி புரிவதும் எழுதுவதும் முக்கியமானவைதான். அதைவிட முக்கியமானதாக நான் கருதுவது நல்ல கட்டுரையாளர்களை உருவாக்கும் அவரது இதுபோன்ற முயற்சிகளைத்தான்.

உள்ளடக்கம்

Google Ads.....


Google