திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்துக்கு அருகில் இருக்கிறது 'பாபநாசம் குடிசை' என்ற
நிறுவனம். அதன் நிறுவனரும், என்னுடைய மூத்த சகோதரரும் நண்பருமான சந்நியாசிக்கு அதை
'ஆசிரமம்' என்ற மதச் சார்புள்ள பெயரில் அழைக்க விருப்பமில்லை. அவர் எந்த மதத்தையும்
பின்பற்றுகிறவரல்ல. மதமில்லாமலும் துறவியாக முடியுமே. அதுதான் அவர்.
மதம், 'புனித நூல்கள்', தீர்க்கதரிசிகள் போன்ற ஊன்றுகோல்கள் இல்லாமலும் ஆன்மீகம்
சாத்தியமாகுமே. அதுதான் அவருடைய ஆன்மீகம். நற்செயல்களுக்காக லாபத்தில் ஒரு
விகிதத்தைச் செலவழிக்கத் தயங்காத சிலர் கொண்ட ஓர் அறக்கட்டளைதான் பாபநாசம்
குடிசையின் செயல்பாடுகளுக்கு ஆதரவளிக்கிறது. குடிசையின் திட்டங்களுக்கும்
செயல்பாடுகளுக்கும் எதிர்காலத்துக்கும் சாமிதான் சாரதி.
கேரளத்திலிருந்து மேகங்கள் தலை நீட்டிப் பார்க்கும் சஹ்ய பர்வத சிகரங்களுக்கு
அடியில் ஒரு பள்ளத்தாக்கில்தான் குடிசையின் இருப்பிடம். கல்லும் முள்ளும் அடர்ந்து
வறண்டு கிடந்த அந்த மண், இன்று பயன்தரு மரங்கள் தழைத்து வளரும் வளமான தோட்டமாக
மாறியிருக்கிறது. அங்கே சிதறிக் கிடக்கும் அழகான கட்டிடங்களில் நூற்றுக் கணக்கான
குழந்தைகளும் இளைஞர்-இளைஞிகளும் கல், மரம், உலோகம் ஆகியவற்றில் சிற்பம் செதுக்கும்
வேலைகளை இலவசமாகக் கற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்கு இலவசமாக உணவும்
வழங்கப்படுகிறது. தூரத்திலிருந்து வருபவர்களுக்குத் தங்குமிட வசதியும்
அளிக்கப்படுகிறது. எல்லாம் சேர்ந்து சற்றே பெரியதொரு பொருளாதாரச் சுமையைக் குடிசை
தாங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், அந்த நெருக்கடிகள் வெளியே தென்படாத ஓர் அமைதி அங்கே
நிலவுகிறது.
அண்மையில் நான் குடிசைத் தோட்டத்தின் ஒரு மூலையிலிருக்கும் சிறிய வீட்டில்
எழுதுவதற்காகவும் படிப்பதற்காகவும் தங்கியிருந்தேன். தூய காற்று, மலைகள், பரந்த
தொடுவானங்களின் தழுவல். குடிசையின் தோட்டம் சுற்றுப்புறங்களிலுள்ள ஊர்களிலிருந்தும்
காடுகளிலிருந்தும் அடைக்கலம் தேடிவந்த உயிர்களின் புகலிடம். மயில் குடும்பங்கள்
ஒன்றையொன்று கூவி அழைத்துக்கொண்டு ஓடித் திரிகின்றன. காட்டுக் கோழி, முயல், அணில்,
நூற்றுக்கணக்கான பறவைகள், ஓணான்கள், கீரி, கணக்கற்ற வகைகளில் வண்ணத்துப் பூச்சிகள்
என்று போகிறது அங்குள்ள அகதிகளின் வரிசை. நாய்க் குடும்பங்களும் அங்குமிங்குமாகக்
குடியிருக்கின்றன. யாரும் யாரையும் அழைத்துவந்து குடியமர்த்தவில்லை.
வெளியுலகத்திலிருந்து துப்பாக்கிக்கும் கத்திக்கும் கற்களுக்கும் கம்புக்கும்
தப்பிப் பாதுகாப்புத் தேடி ஓடி வந்தவை அவை. என்னைப் போன்ற விருந்தாளிகளைத் தவிர
அவற்றை உற்றுப் பார்க்கக்கூட யாருமில்லை. எல்லா வகையிலும் அமைதி, ஒத்துழைப்பு,
இயற்கையழகு ஆகியவற்றின் தீவாக இருக்கிறது குடிசை.
ஆனால் என்னுடைய கனவுலகம் நொறுங்கி விழப் பன்னிரண்டு மணிநேரம்கூடத் தேவையாக
இருக்கவில்லை. மாலையானதும் சுற்றுப்புறக் கிராமங்களிலிருந்து ஆகாயத் தாக்குதல்போலப்
பேரிரைச்சல் எழுந்தது. அமைதியின் உறைவிடமான அந்த மையம் ஒரே நிமிடத்தில் கொடூர
ஓசைகளின் நரகமாக மாறியது. கிறித்துவ தேவாலயங்கள்தாம் ஒவ்வொரு நாளும் இந்தப்
பயங்கரத்தைத் தொடங்கி வைத்தவை. அவர்களின் ஒலிபெருக்கிகள் சத்தத்தை வாந்தியெடுக்கத்
தொடங்கியதும் வெவ்வேறு பிரிவினரின் ஆலயங்கள் தமது ஒலிபெருக்கிகள் வழியாக ஒலிப்
பிரளயத்தைக் கட்டவிழ்த்துவிடும். பள்ளத்தாக்குக்குரிய அழகிய தொடுவானங்களின்
அமைதியான தியானத்தினூடே கீர்த்தனங்கள் என்ற பெயர் கொண்ட இந்த அபசுரங்கள் குளவிகளைப்
போல அலைந்தன.
இயற்கையின், ஆன்மாவின், கடவுளின் மௌன சௌந்தரியத்தை இந்தக் குளவிகள் கொட்டிக்
காயப்படுத்தின. வெவ்வேறான எட்டோ பத்தோ வழிபாட்டுத் தலங்களின் ஒலிபெருக்கிகள் வழியே
புறப்பட்ட கீர்த்தனங்கள் காற்றில் ஒன்றாகக் கலந்து குள்ள நரிகளின் ஊளை போன்றோ
பைத்தியக்காரர்களின் கூச்சல் போன்றோ ஒலிச் சீர்கேடாகமாறின. நான் காதைப்
பொத்திக்கொண்டு ஆச்சரியப்பட்டேன். கடவுளரின் காதுகள் இத்தனை பலவீனமானவையா? கத்தினால்
மட்டுமே அவருக்குக் கேட்குமா? அல்லது இறை நம்பிக்கையாளர்கள் இந்த அளவுக்குக்
கருங்கல் இதயம் படைத்தவர்களா? இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்தால் மட்டுமே அவர்களுடைய
பக்தி விழிப்படையுமா? அதிகாலை நான்கு மணி முதல் இந்த இரைச்சல் வெறி மீண்டும்
ஆரம்பமாகிறது.
இதைச் செய்பவர்களுக்குத் தாங்கள் ஒரு குற்றத்தில் ஈடுபடுகிறோம் என்று புரியவில்லையா?
படிக்க உட்கார்ந்திருக்கும் குழந்தைகள், நிசப்தமும் அமைதியும் தேவைப்படும் நோயாளிகள்,
சிந்திக்கவும் எழுதவும் ஓவியம் தீட்டவும் நிம்மதி தேவைப்படும் கலைஞர்கள், ஒருவேளை
மரணப் படுக்கையில் கிடப்பவர்கள் - இவர்களையெல்லாம் ஒலி பெருக்கியைக் கையாளுபவர்கள்,
கருணையில்லாமல் ஒலிச் சீர்கேட்டின் விஷப் பிரவாகத்தில் மூழ்கடிக்கிறார்கள். அவர்கள்
செய்வது தயையே இல்லாத மனித உரிமை மீறல். மௌனத்துக்கான என்னுடைய உரிமை, மூச்சுவிடவும்
நடமாடவுமுள்ள எனது உரிமைகளைப் போல அடிப் படையானது.
மதமும் சாதியும் ஒலிபெருக்கிகள் மூலம் நடத்தும் இந்தக் கீழான ஆக்கிரமிப்பின்
வழியாகத் தமது அதிகாரத்தைப் பிரகடனம் செய்கின்றன. மிகவும் உரக்கப் பிரார்த்தனை
செய்பவர்களைக் கொண்டதுதான் மிக அதிகாரமுள்ள மதம். அதிக ஓசையெழுப்பும் மதம்தான் அதி
உன்னதமான மதம். மிக அதிகமான பக்தி கேசட்டுகளுக்கு உடைமையாளர்களே பலமான சாதியினர்.
தமிழ்நாட்டுடன் எனக்குள்ள குறைவான அறிமுகத்தின் வெளிச்சத்தில் சொன்னால் பகிரங்கமான
ஒலிச் சீர்கேடு -அதாவது ஒலியையும் இசையையும் ஒலிபெருக்கிகள் மூலம் துஷ்பிரயோகம்
செய்வது - தமிழ்நாட்டைப் போலப் பரவலாகவும் கொடூரமாகவும் வேறு இந்தியக் கலாச்சாரங்கள்
எதிலும் நிகழ்வதில்லை. ஒலிச் சீர்கேடு கேரளத்திலும் உண்டு. ஆனால் இந்த அளவிலும்
இதுபோல நிரந்தரமாகவும் நிகழ்வது அபூர்வம். உலகில் கலாச்சார விழிப்புள்ள எந்தச்
சமூகத்திலும் ஒலிச் சீர்கேடு சாத்தியமில்லை. பகிரங்கமான ஒலிச் சீர்கேடு கொலையைப்
போன்றும் வன்முறை போன்றும் குற்றமாகவே கருதப்படுகிறது.
இங்கே மதங்கள் ஓசைகளால் நடத்தும் கைகலப்புகளின் வேர் படர்ந்து கிடப்பது
அரசியலில்தான். ஒலிச் சீர்கேட்டின் முதல் குத்தகைக்காரன் அரசியல்வாதிதான். தனது
திருட்டுத்தனங்களை மக்கள்மீது திணிக்க ஒலியின் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தத்
தொடங்கியவன் அவனே. இன்றும் அவனே சத்தத்தின் சாத்தான். மதங்கள் உண்டாக்கும் ஒலிச்
சீர்கேட்டைச் சட்டம் இயற்றித் தடுக்க அவன் மறுப்பதன் காரணம் வேறு எதுவும் அல்ல -
அந்தத் தடை முதலில் பாதிப்பது அவனைத்தான்.
தமிழ்க் கலாச்சாரத்துக்கு நேர்ந்துள்ள மிகப் பெரிய அச்சுறுத்தல் ஒருவேளை, இந்த
முடிவற்ற, கொடூரமான இரைச்சல் போட்டியாக இருக்கக்கூடும். கர்ண கொடூரமான, கடினமான
ஓசைச் சிறையில்தான் தமிழ்க் குடிமக்கள் வாழ்கிறார்கள். சிந்தனை, மௌனமான உள்முகத்
தியானம், கற்பனை, படைப்பாற்றல் எல்லாம் அவர்களைச் சூழ்ந்து பொங்கிப் புரளும் ஓசைக்
கடலில் மூழ்குகின்றன.
சராசரித் தமிழ்க் குடிமகன் மௌனத்தின் அமைதிக்குப் பயப்படுபவனாகக்கூடும். சுற்றுச்
சூழலின் மௌனமும் இயற்கையின் மௌனமும் அவனால் பொறுத்துக்கொள்ள முடியாத ஒன்றாகக்கூடும்.
அசலான படைப்புத் திறனுக்கு - அது கலையோ அறிவியலோ ஆன்மீகமோ எதுவாக வேண்டுமானாலும்
இருக்கட்டும் - உள்ளும் புறமும் அமைதி நிலவுவது ஓரளவுவரை அவசியமானது. கலாச்சாரத்தின்
அந்த அஸ்திவாரத்தைத்தான் தேவாலயங்கள், கோவில்கள் ஆகியவற்றின் இதயமற்ற அலறல்கள்
இடித்து நொறுக்குகின்றன. அரசியலின் ஒலிபெருக்கிகளும் மதங்களின் ஒலி பெருக்கிகளும்
எதிர்காலக் குடிமக்களின் காதுகளில் தமது விஷத்தை உருக்கி ஊற்றுகின்றன. கலைஞரைப்
போன்ற மகத்தான கலை வல்லுநரான ஓர் அரசியல் தலைவரால்கூட இதற்கு எதிராக வினையாற்ற
முடியாமல்போவது தமிழ் மக்களின் அவலமே.
தமிழில்: சுகுமாரன்