சங்க காலம் முதல் மணிக்கொடி காலம் வரை பல
முக்கியமான தமிழ் இலக்கியப் படைப்புகளைச் 'சென்னை நூலக'த்தில்
(http://www.chennailibrary.com/ebooks/ebooks.html) படிக்கலாம்.
தமிழ்ப் படைப்புகளை மின்னூல்களாக வழங்குவதில் முன்னோடி, மதுரைத் திட்டம்தான்
(www.tamil.net/projectmadurai). மதுரைத் திட்டத்தில் இதைவிட அதிகப் படைப்புகள்
இருக்கின்றன. ஆனால் அவை PDF கோப்புகளாகக் கணினியில் சேமித்துக்கொள்ள வேண்டியவை.
சென்னை நூலகத்தின் புத்தகங்கள் யூனிகோடில் வலைப் பக்கங்களாகத் தரப்படுகின்றன.
இவற்றை இணைய உலாவியிலும் படிக்கலாம், வலைப்பக்கங்களாகவும் (html, doc கோப்புகளாக)
சேமித்துக்கொள்ளலாம்.
எட்டுத் தொகையில் நான்கு நூல்கள், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு,
ஐம்பெருங்காப்பியங்களில் மூன்று, நீதி நூல்கள், இலக்கணம், பக்தி இலக்கியங்கள் போன்ற
படைப்புகளும் பாரதியார், பாரதிதாசன், புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, கல்கி
ஆகியோரின் படைப்புகளும் சென்னை நூலகத்தின் வலையகத்தில் உள்ளன.
புதுமைப்பித்தனின் 108 சிறுகதைகளையும் 49 மொழிபெயர்ப்புக் கதைகளையும்
இவ்வலையகத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாகக் கூறலாம். காஃப்கா, லுயிஜி பிரண்டெலோ,
வில்லியம் சரோயன், இவான் துர்கேனிவ், ஆர்.எல். ஸ்டீவன்சன் என்று பல விதமான
எழுத்தாளர்களின் சிறுகதைகளைப் புதுமைப்பித்தன் மொழிபெயர்த்திருக்கிறார்.
புதுமைப்பித்தனின் கதைகள் வேறு எந்த வலையகத்திலும் இல்லை.
இந்த வலையகம் யூனிகோடில் அமைந்திருப்பதால் கணினியில் எழுத்துரு எதையும்
சேமித்துக்கொள்ளத் தேவை இல்லை.
பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட இந்த நூல் தொகுப்பிற்கு மிகத் தீவிரமான, நீண்ட கால
உழைப்பு தேவைப்பட்டிருக்கும். இந்நூலகத்தை அமைத்த சென்னை நெட்வொர்க் நிறுவனம்
பாராட்டுக்குரியது.